வழமைக்கு மாறாக தமிழர் தரப்பினால் கையாளப்படும் ஜெனீவாஅரங்கம்




வழமைக்குமாறாக 2018 இல் ஜெனீவாஅரங்கம் தமிழ் தரப்பினால் கையாளப்படுகின்றது என்ற அபிப்பிராயம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 2009 க்கு பின்பு தமிழர் உதிரிகளாக இருப்பது போலவும் இலங்கை அரசாங்கத்தின் கால நீடிப்பு கோரிக்கைக்கு எல்லாம் செவிசாய்ப்பது போலவும் அமைந்திருந்தது. அடிபணிதலும் நம்பிக்கைகளுக்காக விட்டுக் கொடுப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் ஜெனிவாவில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தனித்து அரசாங்கத்தை எதிர்த்தும்இ தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாயும் இருந்தன. இந்தியா இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தியது. அமெரிக்கா தமிழர் தரப்புடன் நிற்பது போலக் காட்டிக் கொண்டது. இருப்பினும் இறுதியில் அரசாங்கத்துக்கு சார்பாகன முடிவுகளையும் கால அவகாசத்தையும் ஜெனீவா அரங்குக்கு அமெரிக்கா பரிந்துரைக்க செய்தது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஜெனீவாக்களம் ஏன் வித்தியாசமாக உள்ளது என்பதை தேடுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஜெனீவாஅரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கான காரணம் யாது? முதலில் தமிழர் தரப்புக்கு ஜெனீவாஅரங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினை அவதானிப்போம். பூகோள அரசியல் மீளாய்வின் அடிப்படையில் தமிழர் தரப்பு பக்க அரங்குகளை பயன்படுத்தி பல்வேறு உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகளையும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும்  சந்தித்து வருகின்றது. தமிழ் கட்சித்தலைவர்கள், மாகாணசபைஉறுப்பினர்கள், புலம்பெயர் நாடுகளின் அமைப்புக்களும் அவற்றின் பிரதிநிதிகளும், நாடுகடந்த அரசாங்கம் என்பன எல்லாம் தனித்து இயங்கினாலும் தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள்.

அந்தவகையில் இது மிகச் சிறந்த முன்னேற்றகரமான விடயமாகும். இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சரியான வரைபுக்குள் இயங்குவார்களனால் முடிவுகளுக்கும் தீர்வுகளுக்கும் விரைந்து செல்லலாம். சர்வதேசத்தின் பங்களிப்பின்றி உலகிலுள்ள எந்ததேசிய இனமும் சுபீட்சமாக தனித்துவமாக வாழமுடியாது என்ற பூகோள அரசியலுக்குள் தேசிய இனங்கள் அகப்பட்டுள்ளன. அதனை உணர்ந்து செயற்படும் காலமாகஇருபத்தியோராம்  நூற்றாண்டு உள்ளது.

அவ்வாறே மாற்று வழிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமெரிக்காவிடம் முழுமையாக ஒப்படைக்காது செயல்பட்டிருந்தால் நன்றாக அமைந்திருக்கும். அதனையும் தமிழ் தரப்பு முன்மொழிதல் கட்டாயமானது. வேண்டுமாயின் அழுத்தத்தினை அமெரிக்கா பிரயோகிக்கலாம். ஆனால் முன்மொழிவு நம்முடையாதாக இருக்கவேண்டும்.  அது மட்டுமன்றி அமெரிக்காவுடன் வெளிப்படையாக உரையாடுவது அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை அணிதிரட்டுவதாக அமைந்துவிடும். அது இலங்கைத் தரப்பினை பலப்படுத்துவதாக அமையும். ஆகவே இப்படியான தந்திர நகர்வுகளை இரகசியமாக வைத்துக்கொள்வது அவசியமானது. இவ்வாறான விடயங்களை மிக இரகசியமாகவும்இ நாசூக்காகவும் கையாளுதல் வேண்டும்.

 இக்கூட்டத்தின் அறிக்கையில் 40 ஆவது உறுப்பு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகிறது. அச் செய்தியானது இலங்கை அரசின் நீதித்துறை மீது பெரிதும் அவநம்பிக்கையை வெளியிடுகிறது. போர்க்குற்றங்கள் பற்றி இலங்கை அரசு நீதி தேடும் நடவடிக்கையில் முன்னேறம் காட்டவில்லை என்று கண்டிக்கிறது. அதற்கான விருப்பத்தையோஇ செயல் பாட்டையோ இலங்கை அரசு கொண்டிருக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட  கால அவகாசத்திற்குள் அது நீதிகாணும் நடவடிக்கையில் வெற்றிபெறுவது சந்தேகத்திற்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முன் முயற்சிகள் எதுவும் இதுவரை இலங்கை அரசு செய்யவில்லை என்றும் மேலும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.எனவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சர்வதேச பொறிமுறையை ஆதரிப்பதனை உணரமுடிகிறது. இதனை தமிழ் அரசியல் வாதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழர் தரப்புக்கள் சர்வதேச நிறுவனங்களையும் அவற்றின் அரசியலையும் கையாள ஆரம்பித்துள்ளன. இந்தமுன்னேற்றத்திற்கு என்னகாரணம்? முதலாவதுஇ நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தந்த பாடம். குறிப்பாக சர்வதேசநிறுவனங்கள் நம்பிக்கை வைத்த தென் இலங்கை தேசியஅரசாங்கம் பின்வாங்கிவிட்டது. அதன் குழப்பமும் தீவிர தேசியவாதிகளின் எழுச்சியும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிட்டன. அவ்வாறே வடக்கு கிழக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்கள் பக்கம் தான் என கர்வமடைந்திருந்த தரப்புக்கு பதிலீடு ஏற்படஆரம்பித்துள்ளது என்ற எச்சரிக்கை மிகப் பிரதான காரணமாகும். ஏன் பின்னடைவு எனஆய்வு செய்யுமளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஜெனீவாவில் முகாமிட்டிருப்பதுவும் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவது பற்றி முன்மொழிவுகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. இதனால் தான் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் உருவச்சிலை திறப்பு விழாவில் இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் உள்ளகச் சுயநிர்ணய உரிமையின் கீழ் தமிழரின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் முடியுமென்ற கருத்தினை முன்வைத்தார். அதேபோன்றே ஜெனீவாவில் தங்கியிருக்கும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பினை தமிழர் மத்தியில் நிகழ்த்துமாறு ஐ.நா விடம் கோரியிருந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

 இரண்டாவது மிக முக்கியமான விடயம், கண்டிக்கலவரம். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிகழ்ந்த வன்முறையினால் இலங்கை அரசாங்கம் மீது இஸ்லாமிய நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பியநாடுகளும் அதிருப்தியிலுள்ளன. இதனால் 30/1இ 34/1 தீர்மானங்கள் மீதான களஆய்வுப் பொறுப்புக் கூறுதலையும்இ நடைமுறையாக்கத்தையும் இந்நாடுகள் அதிகம் கோரியுள்ளன. இதனால் ஜெனீவாகளம் ஒரு பாரிய மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றது.

மூன்றாவது, தேசியஅரசாங்கத்தின் சீன சார்பான கொள்கைகளும் சீனாவுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பும் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியாவின் நடைமுறையைத் தான் விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கின்றது. ஒரேயணிக்குள் இருந்து கொண்டே அமெரிக்கா இந்தியா ஆகிய இரு நாடுகளும் தமிழ்த் தரப்பையும் அரச தரப்பையும் கையாளும் போக்கு காணப்படுகின்றது. அமெரிக்கா தமிழர் தரப்புடனும் இந்தியா இலங்கை தரப்புடனும் பயணிப்பது வேறு அரசுகளின் தலையீட்டை தவிர்க்கும் என அவைகருதுகின்றன.  அத்துடன் இலங்கைஅரசை  தமது வழிக்குக் கொண்டுவரலாமெனவும் கருதுகின்றன.

 ஒட்டுமொத்தமாக ஜெனீவாஅரங்கத்தினைதமிழர் தரப்பு மிகமிக சிறியளவிலேனும் கையாள ஆரம்பித்திருப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இதற்கு தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் மேற்கொண்ட முடிவும் ஒரு பிரதான காரணமாகும். எனவே தமிழ் மக்கள் சரியான முடிவுகளை நோக்கி செயல்பட்டால் அரசியல் தலைமைகளை அசைக்க முடியும். இத்தகைய இயல்பு தமிழர்களிடம் இருப்பது எதிர்காலத்திற்கும் தேவையான ஒன்றாகும். இரு தரப்புகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தமிழர் கையாளவேண்டிய பிரதான உத்தி தேர்தல் முடிவுகளில் காட்டும் வெளிப்படாகும். இதனை தொடர்வது தமிழரது அரசியலுக்கு ஆரோக்கியமானதாகும்.

கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம்
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.