கல்முனை மாநகர சபை ஆட்சியமைப்பின் புதிய திருப்பம்




நடந்து முடிந்த இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது பொதுவாக நாடு முழுவதும் பல விசித்திரமான அனுபவங்களைத் தந்துள்ளது. தேர்தல் முறை தொடர்பான விடயங்கள் ஒருபுறமிருக்க உள்ளூராட்சி அதிகார சபைகளில் ஆட்சி அமைப்பதிலும் பல எதிர்பாராத புது அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆட்சியமைப்பும் கல்முனை வரலாற்றில் ஒரு புதுவித திருப்பத்தை தந்துள்ளது. அத்துடன் இது பலவித வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2 இல் நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  41வருடங்களின் பின் ஒரு புதிய திருப்பமாக எதிர்பாராதவாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியல் உறுப்பினரான திரு.காத்தமுத்து கணேஸ் அவர்கள் பிரதிமேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 72வீதமான பெரும்பான்மை முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள கல்முனையில் 28வீதமான வாக்காளர்களைக் கொண்டுள்ள தமிழர்கள் பிரதிமேயரைப் பெற்றுள்ளமை ஒரு விசேட நிகழ்வாக விமர்சிக்கப்படுகின்றது. தமிழர் ஒருவர் பிரதிமேயராக வந்துள்ளமை தொடர்பாக இப்பிரதேச தமிழர்களுக்கிடையே சாதக பாதக வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதி மேயர் பதவியை பறிகொடுத்தது தொடர்பாக சில முஸ்லிம் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

41 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) 12 ஆசனங்களையும், சாய்ந்தமருது சுயேச்சைக் குழு (இல 3) 9 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும், ஏனைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ், சுயேச்சைக் குழுக்கள் 1, 2 என்பன தலா ஒவ்வொரு ஆசனங்ளையும் பெற்றிருந்தன.

முன்கூட்டியே ஆட்சியமைப்புக்கான முஸ்தீபுகளில் கட்சிகள் ஈடுபட்டிருந்தபோது முஸ்லிம் காங்கிரசும் அ.இ.ம.காங்கிரசும் விட்டுக் கொடுக்காதளவு எதிர்த் துருவங்களாக விளங்கின. மேயர் பதவியைப் பெறுவதற்காக தனித்தனியே நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சாய்ந்தமருது பிரதிநிதிகள் 10 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என ஏலவே உறுதியாகக் கூறிவிட்டனர். எனவே தமிழ்க் கட்சிகள் இங்கு முக்கியத்துவம் பெற்றன. முஸ்லிம் காங்கிரசும் த.தே.கூட்டமைப்பும் மேல்மட்டங்களில் மேயர் மற்றும்பிரதி மேயருக்கான பேரம்பேசலில் உடன்பாடு கண்டன. இருந்த போதிலும் கல்முனையில் திரு.ஹென்றி மகேந்திரன் (ரெலோவின் உப தலைவர்) அவர்களின் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு ஒத்துழைக்க வேண்டுமாயின் தமிழரைப் பாதிக்கும் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தை கைவிடல், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒத்துழைத்தல் மற்றும் கல்முனை தமிழ் நகர சபையை உருவாக்க ஒத்துழைத்தல் முதலியவற்றுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை விதித்தனர். ஆனால் அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லை.

இந்தச் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த த.வி.கூட்டணி எதுவித நிபந்தனையும் விதிக்காமல் மேயர் பதவிக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஒத்துழைத்து அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதி மேயர் பதவியைப் பெற்றுக் கொண்டனர்.

தற்போது த.தே.கூட்டமைப்பு ஆதரவாளர்களாலும், இன்னும் சில தமிழர்களாலும் பிரதி மேயரான காத்தமுத்து கணேஸ் அவர்கள் 'தமிழ்த் துரோகி' என கடுமையாக விமர்சிக்கப்பகின்றார். ஆனால் த.வி.கூட்டணி ஆதரவாளர்களாலும், வேறு சில தமிழர்களாலும் அவரின் முடிவு நியாயப்படுத்தப்படுகின்றது. த.தே.கூட்டமைப்பு செய்தால் தியாகம், நாங்கள் செய்தால் துரோகமா என அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர். ஏனெனில் பல சபைகளில் த.தே.கூட்டமைப்பு தமிழர் விரும்பாத சக்திகளுடனும் கட்சிகளுடனும் ஒன்றிணைந்திருப்பதே இதற்கான காரணமாகும்.

பொதுவாக நடுநிலையுடன் நின்று யதார்த்தமாக நோக்கும் போது தற்போதைய சூழ்நிலையில் கல்முனைத் தமிழர்களுக்கு வாய்ப்பாக அமைந்த இந்த அரிய சந்தர்ப்பமானது சிறப்பானதாகும். கலப்புத் தேர்தல் முறையினால் ஏற்பட்ட இந்த வாய்ப்பை நழுவ விடுவது சரியானதாகப் படவில்லை. பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் வந்திருந்தால் தமிழரால் ஒன்றும் செய்திருக்க முடியாது. முன்பு ஒரு காலத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கல்முனையானது நன்கு திட்டமிட்ட வகையில் போராட்ட சூழலைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல கையகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த உண்மையாகும். தற்போதாயினும் 21000 தமிழ் வாக்காளர்களைக் கொண்ட கல்முனை நகரப்பகுதி பிரிய வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் உள்ளூர் பிரதேச அபிவிருத்தி என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகும். த.தே.கூட்டமைப்பு முன்வைத்த நிபந்தனைகள் முக்கியமானவைதான். எனினும் அது மேல்மட்ட அரசியலுடன் தொடர்புபட்டதாகும்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்முனை நகர அபிவிருத்திக்கு 250 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு த.தே.கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது. மேலும் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. கல்முனை தமிழ் நகர சபை அமைப்பதற்கான முயற்சிகளிலும் சரியாக ஈடுபடவில்லை. எனவே பிரச்சனை தீர்க்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு ஒரு சிறிய குட்டிச் சபை அதிகாரப் பகிர்வில் தமது அதிகாரத்தைக் காட்டுவது புத்திசாலித்தனமல்ல.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை  தரமுயர்த்தவும் கல்முனை தமிழ் நகர சபையை அமைக்கவும் தீவிர முயற்சிகளைக் கைவிடாமல் தொடரும் அதேவேளை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்காகக் கிடைக்கும் வாய்ப்புக்களை கல்முனைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்யாமல் மற்றும் சோரம் போகாமல் பொதுச் சேவைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிடின் அடுத்த தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

வை.சுந்தரராஜா - அரசியல் விஞ்ஞான ஆசிரியர் 
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.