பெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை




ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கல்வியின் பங்களிப்பென்பது  அத்தியாவசியமான ஒன்றாகும். இன்று எம் தேசத்திலுள்ள கல்வி முறைகளை எடுத்துக் கொண்டால் ஆரம்பக் கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11ம் வகுப்பு) வரையான  பொதுக்கல்வி, பல்கலைக்கழக கல்வி, தொழிநுட்ப கல்வி, தொடர் கல்வி என பலவற்றை இணங்காணலாம். இவற்றுள் முறை சார்ந்த கல்வியின் பிரதான நிலைகளாக ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி என்பன அடையாளப்படுத்தப்படுகின்றன.

கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி என்பார்கள். கல்வி சமூக மாற்றத்தின் அச்சாணியாகவும் விளங்குகின்றது. கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஆகவே கல்வியில் எழுச்சி பெறாத சமூகங்கள் அபிவிருத்தி இலக்குகளை அடைத்துக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை.

சமூக அபிவிருத்தி என்பது ஆண் மற்றும் பெண் இருவரினதும்  கைகளிலும் தங்கியிருக்கிறது. எனவே கல்வி துறையிலும் இருபாலார்களினதும் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மலையகக் கல்வி குறித்து நாம் நோக்குகின்ற போது பெண்களின் நிலைமைகள் குறித்து நாம் விஷேடமாக நோக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு பெண்களின் கல்வியில் விஷேட அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பெண்கள் சமூகத்தின் கண்கள் என்கிறார்கள், ஆனால் மலையகப் பெண்கள் எந்தளவிற்க்கு கண்களாக மதிக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு மலையகப் பெண்கள் வாயில்லாப் பூச்சிகளாக மௌனித்து கிடப்பதையே காணக்கூடியதாக உள்ளது. சகல துறைகளிலும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் வெறுமனே உழைக்கும் இயந்திரங்களாக இப் பெண்கள் உருமாறிப் போய் இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.

காரணம் இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கை ஆரம்பித்த காலம் தொட்டு வரலாற்று ரீதியாக பெருந்தோட்ட பிள்ளைகளுக்கான கல்வி பொறுப்பு பெருந்தோட்ட முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1977ம் ஆண்டு வரை பெருந்தோட்டப் பாடசாலைகள் பெருந்தோட்ட உரிமையாளர்களால் முகாமைத்தவம் செய்யப்பட்டு வந்தன.  அரசாங்க மானியங்களும் பெருந்தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் இப் பாடசாலைக்கான வசதிகளையும் கல்வி தராதரங்களையும் மேம்படுத்துவதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தவில்லை.

1947இல் நாடு சுதந்திரம் பெற்றதும் குடியேற்றஆட்சிக்கல்வி முறையின் குறைகளை அகற்றி ஒரு தேசியக்கல்வி முறையை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெருந்தோட்ட பாடசாலைகள் இவ்வாறான தேசியக் கல்வி முறைமைக்கு பிறம்பாக குறைந்த வசதிகளுடன் மிகச் சாதாரணமான பாட ஏற்பாட்டை கொண்டும் தனித்தும் இயங்கி வந்தன.

சுதந்திர கால இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பிரதான அம்சம் கல்வி நிலையை மேம்படுத்துவதாகும்.  1940 களின் பிற்பகுதிகளில் கிராமப்புறங்களில் இடைநிலைக் கல்வி வழங்கும் மத்திய பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இலவசக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் பாடசாலைகளையும், கிறிஸ்தவ மிஷனரிமாரின் பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. இவ்வாறான நடவடிக்கைகள் பல்வேறு பின்தங்கிய பிரிவினரின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டவையாக அமைந்தன. இம்முறையானது  இலங்கையை கல்வியில் முன்னேறிய நாடாக அடையாளப்படுத்தியது. ஆனால் தேசிய ரீதியில் ஏற்பட்ட மாற்றம் மிக அண்மைக்காலம் வரை பெருந்தோட்ட இந்திய வம்சாவழி மக்களை சென்றடையவில்லை. பிரதான கல்வி நீரோட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்கள் இணைக்கப்பட்டமையானது 1980களில் தான் நடந்தது. அவர்களுடைய கல்வி அடைவில் இன்றுவரை பல பற்றாக்குறைகள் நிலவ இதுவே காரணமாயிற்று.

எழுத்தறிவு வீதங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தற்போதும் ஒரு இடைவெளியை காணமுடிகின்றது.  தேசிய எழுத்தறிவு வீதம் 94.15ம%. பெருந்தோட்ட ஆண்களின் எழுத்தறிவு வீதம் 88.3%. பெருந்தோட்ட பெண்களின் எழுத்தறிவு வீதம் 60.6ம% ஆக குறைந்து காணப்படுகிறது. கல்வி அடைவிலும் இவ்வாறான இடைவெளியை காணமுடியும். 26% பெருந்தோட்ட பெண்கள் பாடசாலைக் கல்வியை பெறாதவர்கள், எனவே பெருந்தோட்ட மக்களின் 44% ஆனோர் ஆரம்பக் கல்வித் தகுதிகளை மட்டுமே பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ம் ஆண்டின் அரசாங்க புள்ளிவிபரங்களின்படி பெருந்தோட்ட பகுதிகளில் 17.5% ஆனோர் பாடசாலை செல்லாதவர்கள் (No Schooling). பெருந்தோட்ட மக்களில் 12ஆம் 13ஆம் தரங்கள் வரை அல்லது உயர்க் கல்வி பெற்றவர்கள் 3.7% மட்டுமே. ஆகவே இலங்கையில் ஏனைய இனக்குழுமத்தினரை விட அதிகளவான பின்தங்கிய நிலையில் பெருந்தோட்ட மக்கள் உள்ளதை அறியக்கூடியதாயுள்ளது. எனவே பெருந்தோட்ட பெண்களை பொறுத்தமட்டில் பாடசாலைக் கல்வியை முழுமையாக பெற்று அதன் வாயிலாக கிட்டும் நன்மைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அரிதாகவே காணப்படுகின்றது. கல்வி ரீதியான உயர்சியை அடைந்து கொள்ள முடியாதவர்களாயுள்ளனர்.

மலையகப் பெண்களின் கல்வி நிலை குறித்து நோக்குவதற்கு முன்பதாக மலையக கல்வி குறித்து நோக்குகின்ற போது தேசிய கல்வி மட்டத்தை காட்டினும் மலையகக் கல்வி மட்டம் தொடர்ச்சியாக பின்னடைவைக் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இதற்கான பிரதான காரணம், தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருப்பவர்கள் கல்வி கற்று ஏனைய தொழிலுக்கு சென்று விட்டால் தோட்டங்களில் தொழில் புரியத் தேவையான தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற  கவலை தோட்ட நிர்வாகத்தினருக்கு இருக்கின்றது. இதனால் மலையக இளைஞர்கள் கல்வியில் முன்னேறுவது ஊக்குவிக்கப்படவில்லை.
இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பெருந்தோட்ட பெண்களில் 36%  ஆரம்பநிலைக்கல்வியையும் 24% சதவீதத்தினர் இரண்டாம் நிலைக் கல்வியையும் 40% சதவீதத்தினர் சாதரணதரக்கல்வியையும் பெற்றுள்ளனர். இப்புள்ளி விபரம் பெருந்தோட்ட பெண்களின் கல்வி நிலமைகள் பின்னடைவு நிலையிலுள்ளதை அடையாளப்படுத்துகின்றது. இதற்கான காரணம் உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் தோட்டங்களுக்கு வெளியில் காணப்டுவதனால் பெண் பிள்ளைகளை தூர  இடங்களுக்கு அனுப்பிக் கல்வி வழங்குவதில் பெற்றோர் நாட்டம் கொள்வதில்லை.
 
போக்குவரத்து வசதிகள் இல்லாதமையும் சில போக்குவரத்து வழிகள் காடுகள் நிறைந்ததாக இருப்பதும் பெருந்தோட்ட பெண்களின் கல்வி மேலும் வளர தடையாக உள்ளன. இதனால் கல்வி கற்பதை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். சில குடும்பங்களில் பொருளாதார வருமானங்கள் குறைவாக இருப்பது கல்வியைப் பெற்றுக் கொள்ள தடையாக உள்ளது. மேலும் கலாசாரக் கட்டுப்பாடுகளும்பெண்கள் வெளியில் சென்று கல்வி கற்பதற்கு தடையான காரணிகளாக காணப்படுகின்றன.

குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் பெண்பிள்ளைகள் பருவமடையும் போது அவர்களை மூன்று மாதத்திற்கும் மேல்  வீட்டிலேயே தடுத்து வைத்திருப்பர். இதனால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இது தொடர்ந்தும் பிரச்சினைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இருந்தும் பெற்றோர் கூட்டங்கள் மற்றும் பல்வேறு விதமான வைபவங்களின் போது பெண் பிள்ளைகள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அர்த்தமற்ற பாரம்பரிய சடங்குகளானவை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பெற்றோர்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.  இதனால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் நிலமை பொதுவாக பெரிதும் மாற்றமடைந்து விட்டதாக கூற முடியவில்லை. விசேடமாக விழிப்புணர்வூட்டப்படாத பெற்றோர் வாழும் பெரும்பாலான பகுதிகளில் இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.  பழமைவாதக் கலாச்சாரப் பண்பாடுகளில் மூழ்கி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் பிள்ளைகளின் கல்வியைப் பாழாக்குவது, அல்லது அவர்களின் கல்வி முன்னேற்றத்தை தாமதப்படுத்துவது என்பது பெண் பிள்ளைகளுக்குச் செய்யப்படும் ஒரு பாரிய சமூக அநீதியாகும்.

பெருந்தோட்டங்களில் உள்ள குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளை ஆண்பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது பெண்பிள்ளைகளின் கல்வியே பாதிக்கப்படுகின்றது. மேலும் வீடுகளில் மற்றவர்களின் சுகவீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, கோவில் திருவிழாக்கள் என்பவற்றின் போது சம்மந்தப்பட்டவர்களைக் கவனிப்பதற்காக பெண்பிள்ளைகள் பாடசாலை செல்வதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு பெண்பிள்ளைகள் வற்புறுத்தப்படுவதால் வீடுகளில் பாடங்களைப் படிக்க நேரம் கிடைக்காமை  அவர்களின் கல்வியை பாதிக்கின்ற விடயமாக இருந்து வருகின்றது.

அதேவேளை மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலும் பெண் கல்வியானது முன்னைய நிலையில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது என்றே கூறவேண்டும். தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைபவர்களில் பெருந்தோட்ட பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பொதுவான கருத்து நிலவுகின்றது. இது உண்மையில் உற்சாகம் தருகின்ற செய்தியாக காணப்படுகின்றது.

மேலும் பல்கலைக்கழக கல்வி, ஏனைய உயர் கல்வி வாய்ப்பினை இன்றைக்கு பெருந்தோட்டப் பெண்கள் பெறுகின்ற நிலையானது ஆரம்ப காலங்களை விட சற்று அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதேபோல பல்கலைக்கழகங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மலையகப் பெண்கள் விரிவுரையாளர்களாக உள்ளனர். விசேடமாக கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவப்பீடத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்த கலாநிதி திருமதி. சேனாதிராஜா இருந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும். வரலாற்றில் முதல் முறையாக மலையகப் பெண் இவ் உயர் பதவிக்கு வந்திருக்கின்றமையானது வரவேற்கத்தக்கதோர் அம்சமாகும். அதே போல் அநேகமான பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெண் பிள்ளைகள் ஆசிரியர்களாக, முகாமைத்துவ உதவியாளர்களாக இருக்கின்றனர். இந்நிலை பாராட்டத்தக்கதாகும்.

ஆனால் மறுபுறம் பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வியில் பெண் பிள்ளைகளுக்கு சமத்துவமான நிலமை கிடைத்துவிட்டதாக எவரும் திருப்திப்பட முடியாது. பெருந்தோட்டப் பெண்களின் இத்தகைய கல்விசார் பின்னடைவுகளை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் நிச்சயம் மலையக சமூகம் தனது வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.

புளோரிடா சிமியோன்,
யாழ் பல்கலைக்கழகம்,
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.