தொழிற்கல்வியும் இளைஞர்களும்



தொழிற்கல்வியானது பாடசாலையைவிட்டு இடைவிலகிய மற்றும் உயர்கல்வி தொடர்வதற்கான வாய்ப்பினை வெட்டுப்புள்ளியினால் இழந்த மாணர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டது. திறன் மிக்கவர்களை உருவாக்கி நாட்டினை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்துடன் மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப் பட்டுவருகிறது.  இது தொழிற்பயிற்சியை முன்னிறுத்தும் ஒரு கல்விமுறையாகும்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை அரசினால் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சிக் கல்வி நிலையமாகும். இது திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். யாழ் மாவட்டத்தில் ஒரு மாவட்டக் காரியாலயம் (இல12/4, வீரசிங்கமண்டபம் கே.கே.ஸ் வீதி, யாழ்ப்பாணம்) மற்றும் எட்டு தொழிற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றைக் கொண்டு இயங்குகின்றது. எமது தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தமாக 50 தொழிற்பயிற்சி கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி நெறிகள் NVQ  அடைவுமட்டத்தில் 6 மாதம் மற்றும் 1 வருடகாலத்தினை கொண்டதாக அமைந்துள்ளன.

 NVQ  என்பதன் விரிவாக்கம் National Vacational Qualification என்பதாகும்,  அதாவது தேசிய தொழில் தகைமை முறை என்பதாகும். பாடசாலைக் கல்விப்பாட திட்டத்தில் மாணவர்களின் தகைமை மட்டம் O/L,A/L  என்றும் உயர்கல்வியில் B.A, B.SC, B,Com, B.Tech என்றும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தொழிற்பயிற்சித்துறையிலும் மாணவர்களின் திறன் அடைவுமட்டத்தினையும்   NVQ  தகைமைகளைக் கொண்டு வகைப்படுத்த முடியும். அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும்  நாடுகள் பலவும் இவ்வாறான  NVQ   தகைமைப் படிமுறைக்கேற்ப வாழ்க்கை தொழில்திறன்களை வகைப்படுத்தியுள்ளன. இவ்வாறான கல்விமுறைகளைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துள்ளளன.

பாடசாலைக் கல்வியில் மாணவர்களின் அடைவுமட்டம் O/L,A/L  பட்டப்படிப்புகள் என படிப்படியாக உயர்ந்து செல்வது போல தொழிற்துறையிலும் NVQ  சான்றிதழ் ஆனது பட்டதாரி மட்டம்வரை காணப்படுகிறது.  இக்கல்விமுறை தொழில்சார் பயிற்சிகளுக்கும் பயிற்சிநெறிகளுக்கும் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பாடவிதானத்தைப் பின்பற்றுகிறது.

 NVQ தேசிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட  7 படிநிலைகளை கொண்டு மாணவர்களின் திறன்களை அளவீடு செய்கின்றது. இளைஞர் யுவதிகள் எமது பயிற்சி நிலையங்களில் இவற்றுள் ஏதாவது ஒரு படிநிலையைப் பூர்த்தி செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வெளியேற முடியும்.  இச்சான்றிதழ்கள் பல்வேறுபட்ட துறைரீதியாக வழங்கப் படும். மாணவர்கள் டிப்ளோமா மட்டம் (NVQ 5)இ உயர்டிப்ளோமா ( NVQ6) அதனைத் தொடர்ந்து பட்டதாரி மட்டம் (NVQ7) வரை தமது தகைமையை வளர்த்துக் கொள்ளலாம் தொழில்பயிற்சி அதிகாரசபை சான்றிதழ் மட்டத்தை பூர்த்தி செய்த மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புக்களைப் பெறுகிறார்கள். இதன் மூலம் தமது வாழ்க்கைத் தடத்தினை சீராக்கிக் கொள்கிறார்கள்.

தற்போது நாட்டில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதேவேளை பல்வேறு தொழிற்துறைகளில் வேலையாட்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.  இதற்குக் காரணம் அத்தொழிற்துறைகளைக் கையாளக்கூடிய தகைமைகச் சான்றிதழ்களைக் கொண்ட வேலையாட்கள் இல்லாமையே. ஒருபுறம் வேலையற்ற பட்டதாரிகள்இ மறுபுறம் வேலையாட்கள் பற்றாக்குறை. ஆகவே அன்பான எமது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எமது இளைஞர் யுவதிகளே உங்களுக்குள் திறமை ஆற்றல் அறிவு புதைந்துள்ளது. எனவே உங்களுக்கு விருப்பமானதும், பொருத்தமானதும் அதேவேளை வேலைவாய்ப்பை வழங்கக் கூடியதுமான பயிற்சிநெறிகளினை தெரிவுசெய்யுங்கள். பயிற்சியை பூர்த்தி செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களினைப் பெற்று உமது வாழ்க்கையினை திறம்பட அமைத்துக்கொள்ளுங்கள்.

வழமையான பல்கலைக்கல்வியில் பட்டம்பெற்றவர்கள் பலர் வேலைவாய்ப்பு வளங்கப்படாமல் பல போராட்டங்களை நடாத்தி வருவது யாவரும் அறிவீர்கள். ஆனால் தொழில்கல்வியில் சாதாரண சான்றிதழ் மட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் மிக இலகுவாக நிரந்தர வேலையில் ஈடுபட்டுவருவதை எம்மால் யாழ்மாவட்டத்திலேயே கண்டுகொள்ளமுடியும்.எனவே மாவட்டத்தின் தொழில் வல்லுனராக மாற யாழ் மாவட்ட இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது எப்போதும் உங்களை வரவேற்கிறது.

 இவ் அங்கீகரிக்கப்பட்ட தொழில்கல்வியை எங்கும் பெற்றுகொள்ள முடியாது. அதாவது எமக்கு முறைசார்ந்த கல்விமுறைமையில்  O/L,A/L சான்றிதழை பெற்றுக்கொள்ள அரசால் அங்கீகரிக்கப் பட்ட பாடசாலைகள் உள்ளன. அதே போல தொழில்கல்வியையும் மூன்றாம் நிலை தொழில்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிநிலையங்களில் மாத்திரமே மேற்கொள்ளல் மிக முக்கியமானது. அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில் அங்கீகாரமுடைய சான்றிதழையோ அல்லது முறையான பயிற்சியையோ பெறமுடியாது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமே இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (Vacational Training Authority of Srilanka  ) VTAஆகும்.

இந்த அரச இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை தற்போது அனைத்து பாடநெறிகளையும் இலவசமாக நடாத்தி வருவது இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

மேலும் பாடசாலை கல்வித்தகைமையை பெறத்தவறியவர்களையும் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தவர்களையும் தொழிற்பயிற்சி அதிகாரசபை தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது. பல்வேறு தொழிற்துறைகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வளங்குகிறது. அவர்களுடைய கல்விமட்டத்தை முறைசார் கல்விக்கு ஈடானதாக தொழில்தருணர்கள் உறுதிப்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.


த.சுரேஸ்குமார்,
இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபை
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.