இந்தியத்துக்கு எதிராக திரண்டு எழும் தமிழ்த் தேசியம்



காவேரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ் நாட்டில் மீண்டும் கொந்தளிப்புக்கள் தொடங்கியுள்ளன.  காவேரி நடுவண் மையம் அமைக்கப்படும் வரை மத்திய அரசுக்கு நெடுஞ்சாலை வரி கொடுக்க மாட்டோம் என வேல்முருகன் தலைமையிலான  தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தைத் தொடங்கியது.  இது வரை காலமும் கறுப்புக்கொடி காட்டல், சாலை மறியல் உண்ணாவிரதம், ஊர்வலம் என தமது எதிர்ப்புக்களைக் காட்டிய மக்கள் மத்திய அரசின் பொருளாதார வருவாய்களை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.  இதனையடுத்து மக்கள் மீது பொலிசாரை ஏவிவிட்டு தடியடி நடத்தப்பட்டது.  ஆனால் முன்னெப்போதும்  இல்லாத அளவுக்கு மக்கள் இந்த தடியடிகளுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

அதனையடுத்து ஓர் அணியில் திரண்ட தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் இந்தியன் பிரிமியர் லீக் எனும் நிறுவனத்தால் சென்னையில் நடக்கவிருந்த கிரிக்கட் போட்டிக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  இவ்வெதிர்ப்பின் உக்கிரம் தாங்காமல் இப்போட்டித்தொடர் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.  கிரிக்கெட் கவர்ச்சியில் இதுவரை மூழ்கியிருந்த தமிழ் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் கவர்ச்சியையும் மீறி தமிழ்த் தேசியத்துக்கு குரல் கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடப் படவேண்டியது. 
தமிழ்நாட்டில் இன்று திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு பெருமளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது.  எம். ஜீ. ஆர், ஜெயலலிதாஇ கருணாநிதி போன்ற கவர்ச்சிகரமான அரசியல் தலைவர்கள் திராவிட இயக்கத்தில் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.  அதேவேளை தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு வளர்ந்து வருகிறது.

மெரினா கடற்கரையில் தமிழ் இளைஞர்கள் ஜ‍ல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2017 தை மாதம் நடத்திய மாபெரும் போராட்டம் இதற்கு ஊக்கியாக அமைந்தது.  அதுவரை பரந்து பட்ட தமிழ் மக்கள் மத்திய அரசுமீதும் திராவிடக் கட்சிகளின் மீதும் வைத்திருந்த அபிமானம் சிறிதளவுக்கு மட்டுமே ஆட்டம் கண்டிருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னர் இந்த மாயைகளின் உடைவு விரைவு படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கும் இந்தியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் இவை பெரும் கவலையைக் கொடுத்துள்ளன. இதன் வெளிப்பாடே வரும் ஆனால் வராது என்றிருந்த ரஜனிக்காந்தின் கட்சியின் தோற்றம்.  அது எதிர்பார்த்த அளவுக்கு இந்தியத்தைத் தாங்கிப் பிடிக்கவில்லை.  அதனையடுத்து திராவிடத்தின் பெரியாரை முன்னிறுத்தி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் எனும் பித்தலாட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.  இவை இரண்டுமே தமக்கென ஒரு புரட்சிகரமான கொள்கையை முன் வைத்து ஆரம்பிக்கப் பட்டவையல்ல.  திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சியை அடுத்து உருவாகப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இந்தியத்தால் உருவாக்கப்பட்ட கட்சிகளே இவை.

ஆனால் திராவிடத்தினதும் இந்தியத்தினதும் ஏமாற்றுக்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி.  ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஒரு முகப்பட்டு போராடினால் மட்டுமே சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகள் தமிழ் தேசத்தின் நலன்களை தமது சுயநலன்களுக்காகப் பலியிடுவதைத் தடுக்க முடியும். அதன் மூலமே எமது இனத்தின் பொருளாதார, அரசியல், சமூக விடுதலையை அடைவது சாத்தியமாகும்.

நிமிர்வு  சித்திரை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.