ஆயுதப் போராளியான தமிழ் பெண்கள்



பெண் என்றாலே மென்மையானவள், மிகுந்த பயமுடையவள், பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தைப் பராமரிக்கவே ஏற்றவள் என்று கருதுவது எமது சமுதாயத்தில் வழக்கம். ஆனால் பிரித்தானியர் ஆட்சிக்கு பின்னரான காலகட்டத்தில் (சுதந்திரத்திற்கு பின்) பெண்கள் கற்றவர்களாகவும், சமுததாயத்தில் தமக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர்களாகவும் விளங்கினர். இம்மாற்றமானது இலங்கை இனப்பிரச்சினையோடு தோற்றம் பெற்ற தமிழ் ஆயுதக்குழுக்ககுள்ளும் உள்வாங்கப் பட்டன. உண்மையில் தமிழ்பெண்கள் கடந்து வந்த பாதையில் 'ஆயுதப்போராளியாக' அவர்கள் மாறி நின்ற தருணத்தை எவராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. ஆரம்பத்தில் குடும்பம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த தமிழ்ப்பெண்கள், பின்னர் சமூகம் பற்றியும்  தமிழ் இனம் பற்றியும் சிந்தித்து அதற்கு தம் அளப்பரிய சேவையை வழங்க முன்வந்தமை மிகுந்த ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகும்.

அந்த வகையில் 1980 அளவுகளில்  தோற்றம் பெற்ற ஆயுதக்குழுக்கள் 'தமிழ மக்களுக்கென தனியானதொரு ஆட்சியை ஸ்தாயிபிக்க வேண்டி போராட்டம் நடத்தினர்' இப்போராட்டத்தில் தமிழ் பெண்களை இணைத்துக் கொள்ள விரும்பினர். இதற்கென மகளிர் பிரிவும் அவர்களுக்கான பயிற்சி முகாமும் 1985 ஆவணி 18ஆம் திகதி அன்று வன்னிமாவட்டத்தில் கொடியேற்றி அதிகார பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. ஆயுதப்போராளி என்றால் சாதாரணமான  விடயம் அல்ல அதற்காக கடுமையான பயிற்சிகள், கடுமையான சோதனைகள் எல்லாம் வழங்கப்பட்டது. அதன்படி தரைப்படை, கடற்படை, தமிழீழநீதித்துறை, தமிழீழ காவல்துறை  என ஆண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற துறைகள் அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்டு தமது தனித்துவத்தை வெளிக்கொணர்ந்தனர்.

ஆரம்பத்தில் பயிற்சிகள் பெறும்போது ' பெண்கள் இவர்களால் என்ன செய்ய முடியும், கடினமான வேலைகளை இவர்கள் செய்வார்களா' என கேலி செய்த பலரிற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு பல சாதனைகளை பெண்போராளிகள் நிகழ்தினர். குறிப்பாக எந்நேரமும்  ஆயுதத்துடன் தமது களப்பணியில் ஈடுபட்டனர். வெய்யிலோ, மழையோ அது எக்கால நிலையாக இருந்தாலும் சரி தமது கடமைகளை திறம்பட நிறைவேற்றினர். தனித்து நின்று எதிரிகளை வெல்லும் அளவிற்கு தனித்துவமானோராக தம்மை வளர்த்துக் கொண்டனர். இம்முயற்சியின் பயனால் 120 அ.அ கனரக பீரங்கியை தண்ணீருக்குள் இருந்து உபயோகிக்கும் அளவிற்கு சவால்களை எதிர்கொண்டனர். 1995.04.19 அன்று அதிகாலை திருமலை துறைமுகத்தினுள் நடைபெற்ற கடலடி தாக்குதலில் அதிகளவு பெண்போராளிகள் பங்குபற்றி வெற்றி பெற்றமையும் இங்கு குறிப்பிடவேண்டும்.


இப்போராட்ட வெற்றி தொடர்பில் அப்போது வெளிவந்த பத்திரிகைகள் வியந்து பல தகவல்களை வெளியிட்டன.  அந்தளவிற்கு பெண்கள் (எமது தமிழ் பெண்கள்) சாதித்த விடயங்கள் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தம் வரை வரலாற்று பொக்கிஷங்களாக போற்றும் அளவிற்கு காணப்பட்டன. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்தத்தினால் தமிழ்பெண்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டியவர்களாக்கப்பட்டு, ஏனைய சாதாரண பெண்களைப் போல சமுதாயத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஆயுதப்போராளி  ஒருவருடன் கலந்துரையாடிய வேளையில் அவரிடம் சில கேள்விகளை கேட்டேன். அப்போது அவர் பின்வருமாறு தனது பதிலை குறிப்பிட்டார்.

கேள்வி : ஆயுதப்போராளியாக இருந்த போது நீங்கள் சாதித்தவை யாது?

பதில் : ஆயுதப்போராளியாக இருந்த போது நாம் சாதித்தவை ஒன்றுஇ இரண்டு அல்ல பல! என்னைப் போன்று பல பெண்களை நான் அவதானித்தேன். அவர்களைப் பார்க்கும் போது முகத்திலே தனியானதொரு களை, வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கை எப்போதுமே காணப்பட்டிருந்தது. சாதித்த விடயங்கள் என்றால் உண்மையாவே, சாதாரண பெண்கள் என்றால் மாதவிடாய் ஏற்படுகின்ற நேரம் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும், ஆனால் ஆயுதப் போராளியாக மாறிய வேளை எமது இலக்கு ஒன்று மட்டுமே எமது கண்ணிற்கு தெரிந்தது. அதனால் எவ்வளவு கடினமான வேலை என்றாலும் தனித்தோ இல்லை குழுவாகவோ செய்து முடித்தோம். அதுவரை காலமும் பெண்கள் தொடர்பாக எம் சமூகத்தில் இருந்த குறுகிய மனப்பான்மைகளை உடைத்து எறிந்தோம்.  உண்மையில் அவ்வேளையில் சாதனைகள் நிகழ்வதற்காக பிறந்தோம் என பல தடவை நினைத்து பெருமையடைந்தோம்.

கேள்வி : ஆயுதப் போராளி என்ற நிலையை இழந்து தற்போது உள்ள சமூகத்தில் சாதாரண பெண்ணாக உங்களை இணைத்து கொள்ள முடிகின்றதா?

பதில்:  இல்லை!  2009ஆம் ஆண்டு  நடைபெற்ற இறுதியுத்தத்தில் பல இன்னல்களை அடையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். உணவின்றிஇ மாற்றுவதற்கு உடை இன்றி, பாதுகாப்பு இன்றி, எங்களால் இனிவாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். அவ்வேளை 'ஆயுதப்போராளியாக மாறி இதையா சாதிக்க போராடினோம்' என்று எண்ணி வேதனை அடைந்தோம். அன்று போராளியாக நிமிர்ந்து வலம் வந்த சமூகத்தில் இன்று தலைகுனிவோடு எப்படி வாழப்போகின்றோம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றேன். இன்று, 9 வருடங்களைக் கடந்தும் கூட மகிழ்ச்சியான வாழ்வை முன்னெடுக்க முடியாமல் உள்ளேன்.

உண்மையில் ஆயுதப்போராளியாக இருக்கும் போது தமிழ்பெண்கள் முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தை எடுத்து தம்முடைய சமூகத்திலும் அக்கறை உடையவர்களாயினர். ஆனால் இந்நிலை தற்போது இல்லாத நிலையில் சமூகத்தில் சாதாரண பெண்ணாக வாழவேண்டி உள்ளது. ஆனால் முன்னாள் போராளிகளை ஓர் அச்ச உணர்வோடு  இன்றும் எமது தமிழ் சமுதாயம் பார்க்கின்றது. திருமணவாழ்க்கை என்ற விடயமும் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் இப்போது வாழக்கூட பிடிப்பு இல்லாத நிலையில் உள்ளேன். சாதாரணமாக கூலித்தொழில் செய்து உழைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னைப் போல பல வடஇலங்கை பெண்கள் இதே துர்ப்பாக்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆயுதப் போராட்டத்தால் வந்த இம்மாற்றம் தமிழ்பெண்களுக்கு வரமா, சாபமா? ஏனெனில் போராட்டக் காலத்தில் மாறிவரும் சமுதாயத்திற்கு ஏற்ப அவர்களும் மாறிக்கொண்டனர். ஆனால் அந்த மாற்றம் அவர்களின் வாழ்க்கையில் நிரந்தரமான முன்னேற்றமாக அமையாமல் போனது துரதிர்ஷ்டமே. தமது வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக போராடி போராடி வெற்றிகளைக் கண்ட பெண்கள் இன்று மறுபடியும் பிற்போக்கான சமூக நியதிகளுக்குள் கட்டுப்பட வேண்டியவர்களாக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெண்போராளிகளை கண்டு வியந்த அதே சமூகம் இன்று ஆதரவு தரவோ அல்லதுஅவர்களைப் பற்றி சிந்திக்கவோ நேரமில்லாதவர்களை போல் திரிகின்றது. விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் போராடுபவர்களாகவே காணப்படுகின்றனர். அத்துடன்  அச்ச உணர்வின் காரணமாக தமது முன்னைய நிலையை வெளிப்படுத்தவும் தயங்குகின்றனர். உண்மையிலே ஆயுதப் போராட்டத்தின் தோல்வியால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது பெண்போராளிகள் தான். மாற்றமடைந்த தமிழ் சமூகத்தோடு சேர்ந்து தாமும் மாறிய குற்றத்திற்காக இத்தண்டனை அவர்களுக்கு கிடைத்துள்ளதா?

தமிழ் சமுதாயமே  சற்று சிந்தியுங்கள்! முன்னாள் போராளிகள் பற்றியும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் சற்று சிந்தியுங்கள். அவர்கள் சமூகத்துடன் இணைந்து கொள்ள அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தகுந்த நிவாரணத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுங்கள். சந்தேகத்தின் பெயரில் பலர் இன்று சிறையில் உள்ளார்கள். அவர்களை பற்றி எவருமே சிந்திப்பதில்லை. ஏன் எமது தமிழ் சமுதாயம் இவ்வளவு சுயநலமாக போய்கொண்டு இருக்கின்றது?

இப்படி பல பெண் போராளிகள் தமது வாழ்வதற்காக தினம் தினம் போராடுகின்றனர். அவர்களை இனம்கண்டு அவர்களுக்கான உரிய உதவிகளை வழங்க வேண்டும். இது ஒவ்வொரு ஊடகத்தின் பெரும் பொறுப்பாகும். அத்துடன் அவர்களை 'முன்னாள் போராளி' என்ற அடையாளத்துடன் பார்க்காமல் நம்மில் ஒருவராக பார்த்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது இக்கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு ஆகும்.

இலங்கையில் இன்று வறுமையான  மாவட்டங்களாக வடஇலங்கையை சேர்ந்த கிளிநொச்சிஇ முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களும் முன்னிலையில் உள்ளன. இத்தகைய வறுமை நிலையை அரசாங்கம் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.  அரசாங்கம், அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராளிகளின் குடும்பங்களை இயல்பு  நிலைக்கு திருப்புங்கள். அவர்களின் கண்ணீரைத் துடைக்க ஒரு சிறு உதவியாவது செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

செல்வி டினோஷா இராஜேந்திரன் 
உதவி விரிவுரையாளர் - வரலாற்றுத் துறை,
யாழ். பல்கலைக்கழகம் 
நிமிர்வு  சித்திரை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.