இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்?




உலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்நாமில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து சிறுமியொருவர் நிர்வாணமாக ஓடிவரும் புகைப்படம் தான் 19 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த வியட்னாம் போரையே முடிவுக்கு கொண்டுவந்தது. அதே போல் இன்று சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரிலும் குழந்தைகள் கொல்லப்படும் பல புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில், ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன.

அதே போல் ஈழத்தின் முள்ளிவாய்க்காலிலும் சாட்சியமற்ற போரை இலங்கை அரசு நடாத்தியதன் பின்னர் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகிய படங்கள் சர்வதேச அளவில் புயலைக் கிளப்பியது. அது இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் வரை  எமது பிரச்சினையை கொண்டு செல்ல காரணமாகவும் அமைந்தது.


இன்று தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளின் பிரச்சினையும், அரசியல் கைதிகளின் பிரச்சினையும் முடிவுறாப் பிரச்சினையாக இருந்து வருகின்றன.   அண்மையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மனைவியின் இறப்பை அடுத்து இரு குழந்தைகள் அனாதரவாக்கப்பட்டுள்ள விடயம் கிளிநொச்சி ஊடகவியலாளரான முருகையா தமிழ்ச்செல்வனினால் தான் வெளியுலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவர் எடுத்த படங்கள் தான் தமிழ்மக்கள் வாழுமிடமெங்கும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் வைகாசி மாதம்  "அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம்’’எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர்  அருட்தந்தை சக்திவேல் நிமிர்வு இதழுக்கு வழங்கிய பேட்டியில் சொல்லிய கருத்துக்கள் முக்கியமானவை,
“நல்லிணக்கம் பற்றி இந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் கதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நல்லிணக்கத்தின் அடையாளமாக முதலாவது செய்யவேண்டியது என்னவென்றால் தமிழ் மக்களின் அரசியலோடு நேரடியாக தொடர்புபட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே. சர்வதேச வெசாக் தினத்தை கொண்டாடும் அரசாங்கம் ஒரு அரசியல் தீர்மானத்தை அரசியல் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நலன் சார்ந்து எடுக்க வேண்டும். ஆனால் அப்படியொரு அரசியல் தீர்மானத்தை அதிரடியாக எடுக்கும் நிலைப்பாட்டில் மைத்திரியின் நல்லாட்சி அரசும் இல்லை.


 அரசியல் கைதிகளின் குடும்பங்களின் நிலை படுமோசமான நிலையில் உள்ளது. அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த தமிழ்ச் சமூகம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்புக் கொடுக்க முடியாது போனால் தமிழினத்தின் அடுத்த நகர்வுக்கு இளம் சந்ததியின் பங்களிப்பை எதிர்பார்க்க முடியாது. எங்களுக்காக போராடிய அரசியல் கைதிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அங்கீகரிக்கவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் வரும் இளம் சந்ததி தமிழ் மக்களுக்காக அரசியலுக்கு இறங்க நிறைய யோசிப்பார்கள். இறுதியில் அது நடக்காமலே போய்விடும்.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் விடுதலைக்காகவே அரசியல் கைதிகள் செயற்பட்டனர்.  ஆனால் அவர்களின் குடும்பங்கள் இன்று தனித்திருக்கிறார்கள். இந்தக் குடும்பங்களுக்கிடையே ஒரு தொடர்புகளும் இல்லை. இந்த குடும்பங்களுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலோ சிவில் சமூகங்களுக்கு இடையிலோ கூட தொடர்பு இல்லாதுள்ளது.   இது எமது எதிர்கால அரசியல் நகர்வுகளை பெரும் பாதிப்புக்குள் தள்ளப் போகின்றது. ஒரு பாதாளத்துக்குள் தள்ளப் போகின்றது.  அரசியல் கைதிகளின் குடும்பங்களை ஒரு தொடர்பாடல் வலைப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இந்தவலைப்பாட்டில் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.


அருட்தந்தையின் இந்தக் கருத்துக்களை தமிழ்ச் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகள் விவகாரத்தை கண்டு கொள்ளாத தன்மையே இன்றும் உள்ளது. அரசியல் கைதிகளது குடும்பங்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு தமிழ்ச் சமூகம் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டாமா?

நிமிர்வு  பங்குனி2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.