பரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்கைதடியில்  சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் சந்திரலிங்கம் இராசம்மா. இவர் கைநாடி பிடித்துப் பார்த்து நாட்டு வைத்தியம் செய்வதில் சிறந்து விளங்குகின்றார். 90 வயதில் தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தனது பாரம்பரிய சிகிச்சை முறையை செய்து வருகின்றார். தனது இந்த சேவைக்காகவே ஆசிரியப்பணியை இடைநிறுத்திவிட்டு மக்களுக்கு தொண்டாற்றி வருகின்றார். எந்த நெருக்கடி வந்தாலும் தனது பணியை இடையறாது செய்து வருகின்றார்.

நவீன விஞ்ஞான வளர்ச்சி துரித கதியில் முன்னேறி வருகின்றது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு விடயம் இன்று வரைக்கும் அழியாது இருக்கின்றது என்பது எம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்தச் சேவையை நான்காவது சந்ததியாக தனது பிள்ளைகளும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது அவரது ஆசையாகும். அவ்வாறே அவரது பிள்ளைகளும் தொடர முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர் பல வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார். கைநாடி பிடித்தே என்ன நோய் என்பதைக்கண்டு பிடித்து சிகிச்சையளித்து வருகின்றார். அதாவது வாதரோகம், சர்மரோகம், சுழுக்கு, சர்வாங்க, பாலரோகம், கண்நோய், வலிப்பு, சுவாசரோகம், மூலரோகம், மஞ்சற்காமாலை, மாங்கம், காக்கைவலி, பீனிசரோகம், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்.


சந்திரலிங்கம் இராசம்மா சொல்வதைக் கேட்போம். முள்ளியவளையில் நான் வசித்து வருகின்றேன். எனக்கு இப்பொழுது 90 வயதாகிவிட்டது. இந்த வயதிலும் நான் தனியாகவே இருந்து சமைத்து சாப்பிட்டு எனது வேலைகளைச் செய்து வருகின்றேன். நான்  55வருடங்களாக பாரம்பரிய சிகிச்சை முறையான கைநாடி வைத்தியம் செய்து வருகின்றேன். எனக்கு முதல் எனது இரண்டு சந்ததியினர் இந்த சேவையை செய்து வந்தார்கள். மூன்றாவது சந்ததியாக நான் தொடர்ந்து செய்து வருகின்றேன். எனது பேரனார் செய்து அதற்குப் பின்னர் எனது தகப்பனார் செய்து வந்தார். அவர் இறந்த பின்னர் நான் எனது ஆசிரியப்பணியையும் இடையில் விட்டிட்டு இதில் ஆர்வமுள்ளதாலும் பரம்பரையாக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் செய்து வருகின்றேன். எனக்குப் பின்னர் என்னுடைய பிள்ளைகள் இந்த சேவையை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதில் எனது பிள்ளைகளும் ஆர்வமாக இருந்து எனக்கு ஒத்தாசைகள் செய்து தருகிறார்கள். பழைய ஏடுகளை வைத்து படித்தே நாம் இந்த சிகிச்சை முறைகளைச் செய்து வருகின்றோம். மூலிகைகளையும், தாவர இலைகளையும், வேர்கள், தண்டுகள், காய், பூ இவற்றின் மூலமே இதற்கான மருந்துகளைத் தயாரிக்கின்றோம். பழைய முறைப்படியே நான் மருந்துகளை தயாரித்து வருகின்றேன். வவுனியாவிற்கு எனது பிள்ளைகள் சென்றுதான் மூலிகைகள் வாங்கி தருகின்றார்கள். தாவர இலைகள், வேர், தண்டுகள், கிழங்கு வகைகளை நான் அயலில் தேடி எடுத்து வருவேன். தாமரைக்கிழங்கு சொந்தக்கார பெடியள் பிடுங்கி தருவினம். சிகிச்சைக்கு மருந்தாக தூள் வகைகள், கூட்டுக்குளிசை, எண்ணெய் போன்றவற்றையே வழங்குகின்றேன். மருந்துகளை கையாலை உரலில் இடித்து மண் சட்டியிலை வெள்ளைத்துணி போட்டு அரித்தெடுக்கிறனான். எண்ணெய் காய்ச்சிறதும் மண் சட்டியிலைதான்.


தற்போதைய நவீன மருத்துவ உலகத்திலும் எனது சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை. அன்று எவ்வாறு சிகிச்சை அளித்தனோ அவ்வாறே இன்று செய்து வருகின்றேன். தூர இடங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றார்கள். நிறையப்பேர் பரம்பரையாகவே என்னிடம் தான் வைத்தியம் செய்கிறார்கள். இந்த வைத்திய முறையால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த மருந்துகளை நானே தயாரிப்பதனால் எனது சுவாசத்தில் இவை கலப்பதனால் எனக்கு இந்த வயதிலும் எந்த நோய் நோடியுமின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றேன். நான் வைத்தியசாலைப் பக்கம் போய் அறியேன். பழைய ஏடுகளில் (வாகடம்) கற்றதையும் அனுபவத்தையும் வைத்தே சிகிச்சை செய்வதனால் இன்றும் எனது வைத்தியத்துறையில் நின்று நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கின்றது.

எனது பணியினைப் பாராட்டி முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தினரால் பண்பாட்டு விழாவின்போது பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்கள். இதுவரை காலமும் பதிவுகள் எதுவும் செய்யாமலே எனது சேவையை செய்து வந்தேன். தற்பொழுதுதான் பதிவிற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். நான் அயல் வீடுஇ உறவினர் வீடுகளுக்குச் சென்று பொழுதைப் போக்குவதில்லை. எனது பொழுதுபோக்கே வைத்தியப் பணிதான். இதை ஒரு சேவையாகவே செய்து வருகின்றேன். நான் இவ்வாறு எனது பணியைச் செய்து நானே எனது வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்வது மிகவும் சந்தோசமான ஒரு விடயமாகும்.


இறுதி யுத்தத்தின் போது எனது வீடு சொத்துக்கள் அழிந்து விட்டன. தற்போது ஒழுங்கான ஒரு வீடு எனக்கு இல்லை. மருந்து தயாரிப்பதற்கான பொருட்கள் இல்லை. அதனால் நான் பெரிய சிரமத்தை எதிர்கொள்கின்றேன். இருப்பதை வைத்தே எனது சேவையை தொடர்கின்றேன். நான் பணத்திற்காக இந்த சேவையை செய்யவில்லை. அவர்கள் தரும் பணத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆங்கில வைத்தியம் என்றால் எங்கட சனம் விழுந்தடிச்சு நிறையக் காசுகள் கொட்டி வைத்தியம் செய்யுங்கள். இப்படியான இடங்களுக்கு வருகில் 100ரூபா அல்லது 50ரூபாவோடதான் வருங்கள். என்ன செய்யிறது தாறதை வாங்கிக்கொண்டு மருந்துகள் கொடுக்கிறனான். மூலிகைகளின் விலையும் இப்ப கூடிக்கொண்டு போகுது. வவுனியாவிற்கு போய்த்தானே மூலிகைகள் வாங்கி வாறது. அதுகளாலை செலவு கூடத்தான். அதற்காக எனது சேவையை என்னால் கைவிட முடியாது. எனது இறுதி மூச்சு வரை இந்தப் பணிதொடர்ந்தவண்ணம் இருக்கும். கைநாடி பிடித்தே வரும் நோயளர்களுனக்கு என்ன நோய் என்று கண்டுபிடித்துச் சொல்வேன். அதற்கு சிகிச்சையும் அளிப்பேன். கைநாடி பார்க்கிறது விடியத்தான் பார்க்கவேணும். அதுவும் வெறும் வயிற்றோட வரணும். அப்படி இல்லையென்றால் அடுத்தநாள் விடிய வரச்சொல்லித்தான் பார்ப்பேன். வீட்டிலை மட்டுமல்ல வரமுடியாது படுக்கையிலை கிடக்கிற நோயாளர்கள் என்றால் யாரும் வந்து கூட்டிட்டு போனால் போய் பார்த்து சிகிச்சையளிப்பேன். என்னிடம் வைத்தியம் செய்பவர்கள் தொடர்ந்து தமது நோய்க்கு என்னிடமே சிகிச்சை பெற்று பயனடைகின்றார்கள். இன்றும் மேலும் மேலும் வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. அறிந்து அறிந்து தூர இடங்களிலிருந்தும் வருகின்றார்கள். கௌரவிப்புக்கள் எல்லாம் எனக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது என்கின்றார்.


இந்த அம்மாவின் செயற்பாடுகள் வயது ஒரு சேவைக்கோ ஆர்வத்திற்கோ ஒரு தடையல்ல. மனமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மற்றறையது அரச உத்தியோகம்தான் வேண்டும் என்று படித்து பட்டம் பெற்றவர்கள் சோம்பேறியாக எந்த முயற்சியில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால் அவர் தனது அரச சேவையை கூட இந்த சேவைக்காக அர்பணித்திருக்கின்றார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தொடரவேண்டும் என வேண்டுகின்றோம்.


விக்னேஸ்வரி-
நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.