சுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்



ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாது தமது கிராமத்தையும் முன்னேற்றி வருகிறார்கள்.  தமது கடற்றொழில் சங்கத்தின் மூலம் பல வகையான தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தம்பாட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பல  சமூகநல செயற்பாடுகளைத் திட்டமிட்டு செய்து வருகின்றனர். இம் முயற்சிகள் தொடர்பில் அதன் செயலாளர் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இச் சங்கத்தில் அங்கத்தவர்களுக்கான நலத்திட்டங்கள் பல உள்ளன. அங்கத்தவர் சேமிப்புஇ வங்கிகள் ஊடான கடனுதவி,  சமூக அமைப்புகளூடான உதவிகள் என்பவற்றை வழங்குகிறோம். தொழிலில் ஈடுபடும் போது உயிர் இழப்பு ஏற்படின்  25 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்குகிறோம். கண்ணாடியிழை வள்ளங்களை வாடகைக்கு விடுகிறோம்.

இவற்றை விட சமூக நலத்திட்டங்களாக காந்திஜி முன்பள்ளியினை நிர்வகிக்கிறோம். புலமைப்பரிட்சையில் சித்தி பெறும் மாணவர்களுக்கு பாராட்டுதலும் பத்தாயிரம் ரூபா பண உதவியும் வழங்கப் படுகிறது. வெளிவாரி பட்டதாரிகளை பாராட்டுவதும்இ இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிடுவதும் எமது ஏனைய செயற்பாடுகளாகும்.


காந்திஜி சனசமூக நிலையம், காந்திஜி நாடக மன்றம், முத்துமாரி அம்மன் ஆலயம், காந்திஜி விளையாட்டுக்கழகம், கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன எமது கடற்தொழிலாளர் சங்கத்திடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுகின்றனர்.

நாம் 2013 ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றோம். கடல் தொழில் அமைச்சு, திணைக்களம் என அரசாங்க நிறுவனங்கள் இருந்தாலும் அவர்கள் எப்பவாவதுதான்  உதவிகள் செய்வார்கள். அதுவும் முழுமையாக கிடைப்பதில்லை. மானியத்திற்கு பல உதவித் திட்டங்கள் செய்தாலும் எமக்கு அவை கிடைப்பதில்லை. வெறும் பதிவுகள் மட்டுமே நடைபெறுகின்றது.  2012 ஆம் ஆண்டுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கே உதவித் திட்டங்கள் வழங்கப்படுகின்றது.  2013 ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.   கடலில் ஏற்படுகின்ற ஆபத்தான சூழலின் போது பாதுகாப்பாக தொழிலினை மேற்கொள்வதற்கு ஏற்ப பாதுகாப்பு அங்கிகள் எவையும் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.


எமது கிராமிய கடற்தொழில் சங்கத்தினால் கருவாடு பதனிடல் தொழில் முயற்சி செய்து வருகின்றோம். இதற்கான நிதி உதவி எமது சங்கத்தாலும் ஏனைய நிதி நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ருNனுP நிதி உதவியுடன் தம்பாட்டியில் நண்டு பதனிடும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எமது சங்கத்தின் கருவாடு பதினிடும் தொழில் முயற்சி ஊடாக எமது கிராமத்தைச் சேர்ந்தவர்களில் 67 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்துள்ளோம் .   தரமான கருவாட்டை ஏற்றுமதி செய்கின்றோம். இதற்காக துறைசார்ந்த பயிற்சிகளையும் வழங்கி வருகின்றோம். கருவாடு பதனிடும் தொழில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த காலம் முதல் எமது ஏற்றுமதிக்காக பல கண்காட்சிகளில் எமது உற்பத்தியை காட்சிப்படுத்தியுள்ளோம்.

ஆரம்பத்தில் இரண்டு, மூன்று பணியாளர்களுடன்  இருந்து இன்று 15,16 பேருக்கு அலுவலக வேலைவாய்ப்புக்களும் கிடைத்துள்ளன. எமது சங்க அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் பிரதேச செயலாளர் மற்றம் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனும் நாம் முன்னேற்றகரமான வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.  எமது முன்னேற்றத்திற்காக முழுமையான ஒத்துழைப்பை பிரதேசசெயலர் வழங்கி வருகின்றார் .  எமது பகுதியில் துறைமுகம் இல்லை. இது தொடர்பில் பிரதேச செயலருடன் கதைத்தோம் இந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.


தீவகத்தை பொறுத்தவரையில் பின்தங்கிய நிலையில் பல குடும்பங்கள் உள்ளன.  அதிலும் ஊர்காவற்றுறையில் எமது தம்பாட்டி கிராமத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன.  தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் மொத்த அங்கத்தவர்கள் 357 பேர் பதிவில் உள்ளார்கள்.  இவர்களில் 55 பேர் பெண்கள்.  எமது கிராமத்தில் 305   குடும்பங்கள் கடற்றொழிலை நம்பியுள்ளன.  இவற்றுள் 25 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள். எமது அங்கத்தவர்களில் இறால் தொழிலை 160  பேரும் நண்டு தொழிலை 120 பேரும் செய்கிறார்கள்.  65 மரவள்ளங்களும்,  27 கண்ணாடியிழை வள்ளங்களும், 5 கண்ணாடியிழை படகுகளும், 20 வெளியிணைப்பு இயந்திரப் படகுகளும் எமது சங்கத்தில் பதிவுகளை கொண்டுள்ளன.

போதிய கடல் வளம் இருந்தும் ஆழ்கடல் சென்று மீன்பிடித் தொழிலை செய்வதற்கு அடிப்படை வசதிகளற்ற நிலையில் நாம் இருக்கிறோம். துறைமுகமோ ஆழ்கடல் படகுகளோ இல்லாத நிலையில் போதிய தொழிலாளர்கள் இருந்தும் முன்னேற வாய்ப்பில்லாமல் உள்ளது. இந்த வளங்கள் கிடைக்கும் பட்சத்தில் நண்டுத் தொழிற்சாலையில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு  வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய வகையில் மூலப் பொருட்களை எமது அங்கத்தவர்களால் வழங்க முடியும்.  இவ்வாறான நிலை ஏற்படும்போது வேலைவாய்ப்பை பெறுகின்றவர்கள் மட்டுமன்றி கிராமம், மற்றும் அந்தப் பிரதேசம் முழுமையான வளா்ச்சியினைக் காண முடியும்.


நாம் பல துன்பங்கள், துயரங்கள் மத்தியில் முன்னேறி வருகின்றோம். வடக்கு மாகாணத்தில் தொழிற்சாலைகள், அமைக்கப்படவேண்டும் முதலீடுகள் வடக்கிற்கு வரவேண்டும் என மேடையில் கூறும் அரசியல்வாதிகள் எமது பகுதி தொழிற்சாலைகள் தொடர்பில் கண்டு கொள்வதில்லை. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை கடல் பெரும் வளமாக உள்ளது. கடல் வாழும் உயிரினங்களைக் கொண்டு அந்த தொழிலில் இருப்பவர்களை எவ்வாறு வலுவூட்டவேண்டும்  என்ற சிந்தனை இல்லை.  நாம் எதிர்பாக்கின்ற உதவிகள் கிடைப்பதில்லை. எமது தொழிலை ஊக்கப்படுத்துவதற்கு எவரும் முன்வராத நிலையே தெரிகின்றது.

நாம் எமது தொழிலை கூட்டுறவாக செய்து வருகின்ற போது தனியார் நிறுவனங்களுடன் போட்டிகள் நிலவுவதால் முன்னேற்றத்தை அல்லது எமது இலக்கை அடைய முடியாது உள்ளது.

எமது சமூகத்திற்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது எமது நோக்கம்.  அவர்களுக்கு லாபம் ஒன்றே நோக்கம்.  நாம் சிறிய தொழில் முறைகளை பின்பற்றி வருகின்றோம்.  அவர்கள் பெரிய நீண்டநாள் கலன்களைப் பயன்படுத்துகிறார்கள்.  எனினும் நாமும் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீண்டநாள் கலன் மூலமான தொழிலை செய்வதற்கு முயற்சிக்கின்றோம்.  கடல்வளம் இருந்தும் மூலதனப் பற்றாக்குறையால் அதனை முழுமையாக பயன்படுத்த முடியாது உள்ளது.

ஆரம்பத்தில் எமது சங்கத்தினர் கடலுக்குச் சென்று வந்து மீன்களை பதனிடாமல் விற்பனை செய்தோம். பின்னர் பதனிடும் தொழிலை மேற்கொண்டோம். அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தோம். இவ்வாறு மெல்ல மெல்ல நாமாக முன்னேறி வருகிறோம். கடற்தொழில்  அமைச்சு, வடக்கு மாகாண சபை என்பவை அடுத்தகட்ட நகர்வுக்கு எமக்கான ஆலோசனைகளையும்  உதவிகளையும் செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்தால் எமது கிராமம் மட்டுமல்லாமல் அயல் கிராமங்கள், தீவகம், மாவட்டம் என முன்னேறி பல வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும்.வாழ்வாதாரத்திலும், பொருளாதார ரீதியிலும் முன்னேற முடியும்.  இவ்வாறு  தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க செயலாளர் கூறினார்.

எம்.நியூட்டன்
நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.