ஆசிரியர் பார்வை"தமிழர்களுக்கு எதிரான போரில் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கினர்.  எனவே சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.  அவ்வாறு நிறுத்த தவறினால் அவர்களை சுட்டுக் கொல்லவும் நாம் தயங்க மாட்டோம்.  அவ்வாறு சுட்டுக் கொல்ல படையினரால் முடியும் என தமிழருக்கு எதிரான போரில் நாம் நிரூபித்தும் உள்ளோம்".  சிறி லங்கா அரசின் கூட்டுப்படைத் தளபதி  ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் இவை.

பங்குனி மாதம் 4 ஆம் திகதி தெல்தெனிய-திகன பகுதிகளில் சிங்கள இனவாதிகளால் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன.  அங்கு ஆரம்பித்த தாக்குதல்கள் கண்டி மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் பரவி ஏறத்தாழ ஐந்து நாட்களாக நீடித்தன.  மைத்திரி-ரணில் அரசாங்கம் கலவரத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் களமிறக்கியது.  ஆனால் அப்படையினரோ தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவரை தடுப்பதில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.  சேதமாக்கப் பட்ட முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதை மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருந்தனர்.

இக்கலவரங்கள் உலகநாடுகளின் முக்கியமாக முஸ்லிம் நாடுகளின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின.  உல்லாசப்பயணத்துறை போன்ற பல தொழிற்துறைகள் பாதிப்புக்குள்ளாகின.  ஆகவே கலவரத்தை அடக்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.  அதனைத் தொடர்ந்து கலவரத்தை அடக்குவதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பங்குனி 7 ஆம் திகதி கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே கடற்படைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்களுக்கு எதிரான போரில் இனவாத அரசாங்கம் இன்னொரு இனத்தை எவ்வாறு பயன் படுத்தியதென அவர் தெளிவாக்குகிறார். அப்போரை நடத்துவதில் தாம் கைக்கொண்ட உத்திகளையிட்டு அரச படையினர் எவ்வாறு பெருமைப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இனவாதம் தவறானது, ஆகவே சிறுபான்மையினரைத தாக்காதீர்கள் என அவர் கூறவில்லை. முஸ்லிம் மக்கள் எமக்கு உதவியவர்கள் எனவே அவர்களை விட்டு விடுங்கள் என்றே அவர் கூறுகிறார். அப்படியாயின் தமிழருக்கு எதிரான யூத்தத்தில் முஸ்லிம்கள் உதவி செய்திருக்காவிடின் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வி இங்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பங்குனிமாதம் கண்டியில் இனக்கலவரங்கள் ஆரம்பிக்க முன்னர் கிழக்கில் அம்பாறையில் மாசிமாதம் முஸ்லிம் மக்கள் மீது இன்னொரு தாக்குதலை சிங்களவர்கள் நடத்தி முடித்திருந்தனர். இவ்வாறான தாக்குதல்கள் இலங்கையில் சிங்கள இனவாதம் ஏனைய சிறுபான்மை இனங்கள் தொடர்பாக என்ன நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன.  சிங்கள அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடி முஸ்லிம் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று செயற்பட்டு வந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களின் முகத்தில் அறைந்துள்ளன.

சிங்கள அரசாங்கத்துடன் இணக்க அரசியலை மேற்கொண்டு மலையக மக்களின் முன்னேற்றத்தை அடையலாம் என மலையகத் தலைமைகள் ஒரு காலத்தில் நம்பின.  அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகளுடன் இணைந்து அவற்றின் ஆட்சியை பலப்படுத்த உதவின.  ஆனால் இன்று அம்மக்களின் நிலையை நோக்குகையில் அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார இருப்பு எந்த வகையில் திட்டமிட்டு சிதைக்கப் பட்டுள்ளது என்பதைக் காணலாம்.  இவ்வாறான ஒரு நிலமைக்கு முஸ்லிம் சமூகமும் தள்ளப்படும் நிலை வெகு தொலைவில் இல்லை.  இதனை முஸ்லிம் சமூகம் எந்தளவுக்கு விரைவில் உணர்கிறதோ அந்தளவுக்கே அவர்கள் தம்மைப் பாதுகாக்க முடியும்.

கலவரத்தை அடக்கும் ஓர் உத்தியாக பேஸ்புக்இ வாட்ஸப் சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்தது.  கலவரத்தை தூண்டவும் பரப்பவும் இவ்வூடகங்கள் துணை போவதாக குற்றம் சாட்டியது. இந்த ஊடகங்கள் தான் கலவரத்துக்கு காரணம் என்றும் அவற்றை உரிய முறையில் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறி கலவரம் தொடர்பான கருத்தாடல்களை திசை திருப்ப அரசாங்கம்முயற்சிக்கிறது.  கலவரத்துக்கு காரணம் சிங்கள மக்கள் மத்தியில் புரையேறிப் போயுள்ள சிங்கள இனவாம் தான் என்பதை அரசாங்கம் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை என்பதை இந்த நடவடிக்கை காட்டுகின்றது.
இலங்கையில் முஸ்லிம் சமூகம் எண்ணிக்கையில் துரித வளர்ச்சியடைந்து வருகிறது.  இது சிங்கள இனவாதத்துக்கு கவலையளிக்கிறது.  அதேவேளை எண்ணிக்கை அதிகரிப்பாலும் தமது பொருளாதார வளர்ச்சியாலும் ஒரு போலித்தனமான பாதுகாப்பை முஸ்லிம் சமூகம் உணருகிறது.  அது எந்த அளவுக்குப் போலியானது என்பதை அம்பாறையும் திகனவும் அடித்துச் சொல்லுகின்றன.  என்ன செய்யப் போகிறார்கள் இலங்கை முஸ்லிம்கள்?


செ.கிரிசாந்
நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.