தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும்
அரசியல் ஆய்வாளர்
மு.திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாதம், புதிய தேசியவாதம் நூல் வெளியீடு 24.02.2018 சனிக்கிழமை மாலை
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில்
இடம்பெற்ற இந்த நூல்வெளியீட்டு விழாவில், முதற்பிரதியினை அருட்தந்தை ஜெயசீலன் அடிகளார் வெளியிட்டு வைத்தார்.
அரசியல் சமூக ஆய்வாளர்
நிலாந்தன் உரையாற்றுகையில் பின்வரும் விடயங்களை எடுத்துரைத்தார்.
கொள்கை ஆய்வு, தந்திரோபாய ஆய்வு, மூலோபாய ஆய்வு போன்றவற்றை ஈழப்போரில் சமாந்தரமாக செய்து
கொண்டு வரும் ஒரேஒரு ஆள்
மு.திருநாவுக்கரசு தான்.
இத்துறைகளில் நாங்கள் இவரைப் போன்ற தனிமனிதர்களைத் தான்
வைத்திருக்கின்றோம். எங்களிடம் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஒரே ஒரு நிறுவனம் தான்
இப்பொழுது யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருக்கின்றது. இவ்வாறான ஒரு பின்னணிக்குள் தான்
இந்நூல் உங்கள் முன் வைக்கப்படுகின்றது.
இது மு.திருநாவுக்கரசு
இதுவரை வெளியிட்ட நூல்களிலே மிகப் பெரிய நூல். இது அவருடைய எடுத்துரைப்பு. இது போல
ஏனையவையும் வர வேண்டும். அவர் சொல்வது பிழை என்றால் அதை அந்தத் தளத்தில்
எதிர்க்கின்றவர் தன்னுடைய எடுத்துரைப்பைக் கொண்டுவர வேண்டும். புவிசார்
அரசியல் தொடர்பில் அவர் தன்னுடைய சில
கருத்துக்களை முன்வைக்கின்றார். இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் உண்டு என்பதை
நான் அறிவேன். அவருடைய புத்தகம் தொடர்பாக நாங்கள் முகநூலில் விளம்பரம் போட்ட
போது அதற்கு எதிர்வினை அவ்வாறு காட்டப்பட்டிருக்கின்றது. அதைச் செய்கிறவர்கள்
புலம்பெயர்ந்த தரப்புக்களில் பலமாகவும், வளங்களோடும் இருக்கின்றார்கள். எனவே இந்த எடுத்துரைப்பு பிழை என்றால் அவர்கள்
தங்களுடையதை முன்வைக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் எப்படி புவிசார் அரசியலையும் பூகோள
அரசியலையும் கையாள வேண்டும் என்பதனை அவர்கள் கூற வேண்டும்.
மு.திருநாவுக்கரசு
திரும்ப திரும்ப சொல்லுவார் ஈழத்தமிழருடைய பேரம் பேசும் சக்தி என்பதே அவர்களுடைய
புவிசார் அமைவிடம் தான் என்று. இந்த புவிசார் அமைவிடம் காரணமாகத்தான்
ஈழத்தமிழர்களுக்கு ஒரு பேரம் இருக்கின்றது என்று. இப்பொழுது தாமரை மொட்டின்
மலர்ச்சியோடு அந்த புவிசார் நிலைமைகளில் புதிய சுற்றோட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
நிலைமாறுகால நீதிக்கு கீழ் பத்தோடு பதின்னொன்றாக இனப்பிரச்சனைக்கான தீர்வையும்
முன்வைத்த வேறுநாடுகளும் ஐநாவும் இனியும் அதை செய்ய முடியுமா? அல்லது இனியும் அதை செய்யவிடலாமா? என்பதனை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
புதிய சுற்றோட்டம் தமிழ் மக்களுக்கு சாதகமான வாய்ப்புக்களை திறக்க முடியும்
அல்லாவிடின் திறக்கச் செய்ய வேண்டும். இதில் எப்படி காய்களை நகர்த்துவது எவ்வாறு நகர்த்துவது என்பது
குறித்து தமிழ் மக்கள் முடிவெடுக்க வேண்டும்.
அவ்வாறு முடிவெடுப்பதற்கு
கொள்கை ஆய்வுகளையும் தந்திரோபாய ஆய்வுகளையும் செய்யவல்ல வல்லுனர்கள் நிறுவனமயப்பட
வேண்டும். நிறுவனமயப்பட்டு அவர்கள் அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை
முன்வைக்கும் பொழுது தான் முடிவெடுக்கும் தகைமையுள்ள அரசியல் தலைவர்கள்
அவற்றைக்கண்டு அதைப்பற்றி யோசித்து அதைப்பற்றி ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள்.
தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்பது அதுதான். சில அரசியல் தலைவர்கள்
தங்களுக்குள் கூடி முடிவெடுப்பதல்ல அரசியல் தீர்மானம். நாங்கள் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருப்போம் என்பதற்காக எல்லா முடிவுகளையும் நாங்கள்
எடுக்க முடியாது. எங்களுடைய துறைக்கு வெளியில் விவகாரங்கள் இருக்கமுடியும்.
எங்களுக்கு தெரியாத பரப்புக்களில் அறிஞர்கள் இருக்க முடியும். மேற்கத்தேய
தலைவர்கள் ஒரு விவகாரத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் அது தொடர்பில்
ஞானமுள்ளவர்களை கூப்பிட்டு இப்படி ஒரு விடயம் இருக்கின்றது இதைப்பற்றி பேசவேண்டும்
இந்த இடத்தில் பேசப்போகின்றோம் இப்படி இப்படி கேள்விகளுக்கு எப்படி பேசலாம்
சொல்லுங்கோ என்று கேட்டு அவர்களிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டுதான் பேசப்போவார்கள்.
முதலமைச்சர்
எழுதிக்கொண்டு போய் பேசுவதை ஒரு தரப்பு கிண்டலாகச் சொல்லுகின்றது. ஆனால், அது ஒரு ஒழுக்கம். பொறுப்பான கதிரைகளில்
இருப்பவர்கள் ஒரு வார்த்தையும் வீணாக சொல்லமுடியாது. அப்படி பார்க்கும் பொழுது
நான் என்ன பேசப்போகின்றேன் என்பதில் தலைவர்கள்
கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதை ஒரு பலவீனமாக எடுத்துக்கொள்ள
முடியாது. வாயில் வந்தபடியெல்லாம் தலைவர்கள் பேசிவிட்டு போக முடியாது. தொலைபேசியில் கூட பேசிவிட்டு போக முடியாது. அதற்கு ஒரு பொறுப்பு
இருக்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது அது பற்றி முன் கூட்டியே ஒரு தயாரிப்பு
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்பில் போகும் பொழுது தான் துறைசார்
அறிஞர்களைக் கண்டு துறைசார் அறிஞர்களுடைய நிறுவனங்களை அணுகி துறைசார் அறிவை பெற்றுக்கொள்ள
வேண்டும். இந்த விடயத்தில் எனக்குத் தெரியாது என்றால் மற்றவர்களிடம் கேட்க
வேண்டும். எனவே அரசியல் தலைவர்கள் முடிவெடுக்கும் முன் துறைசார் நிபுணர்களைக்
கண்டு கதைத்து அது தொடர்பாக ஆலோசித்த பின்னர்தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.
அதற்குப் பெயர்தான் அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்பதாகும். அவ்வாறு அரசியலை
அறிவியல் மயப்படுத்தும் ஒரு நோக்கத்தோடு இந்நூல் முன்வைக்கப்படுகின்றது.
தமிழ் அரசியலை
அறிவியல்மயப்படுத்த வேண்டுமென்று மு.திருநாவுக்கரசு திரும்பத் திரும்ப சொல்லுவார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நவிப்பிள்ளை அம்மையார் கனடாவிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்திற்கு வந்த பொழுது ஒரு
கூட்டத்தில் பேசும் பொழுது ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலை அறிவியல் மயப்படுத்த
தவறிவிட்டார்கள் என்று கூறியிருந்தார். அப்பொழுது அந்தக் கூட்டத்திற்கு தலைமை
தாங்கிய பெண் பின்னர் சொன்னார். இதை இவர் 2016ஆம் ஆண்டு சொல்லுகிறார். திரும்பவும் 2020ஆம் சொல்லுகின்ற நிலமை வரக்கூடாது என்று.
அப்படி வரக்கூடாது என்பதை யோசித்துத்தான் நாங்கள் இதுபோன்ற நூல்களை முன்
வைக்கின்றோம்.
அதில் உங்களுக்கு
விமர்சனங்கள் இருக்கலாம்.
விமர்சனமுள்ளவர்கள் உங்களுடைய எடுத்துரைப்பை முன்வையுங்கள். இப்படியான
வாதப்பிரதி வாதங்கள் ஊடாக அடுத்தகட்ட அரசியலைப்பற்றி நாங்கள் யோசிக்கலாம். தமிழ்
அரசியல் இரு கட்சி ஜனநாயகப் பண்புடையதாக
மாறிக்கொண்டிருக்கும் இச்சூழலில் தாமரை மொட்டின் எழுச்சியோடு பிராந்திய வலுச்சமநிலையில்
தளம்பல்கள் உண்டாகிக் கொண்டிருக்கும்
இச்சூழலில் தமிழ் மக்கள் அரசியலை
இன்னும் அதிகமாக அறிவியல் மயப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால் மட்டும்
தான் தமிழ் மக்கள் அனைத்துலக மற்றும் பிராந்திய சூழலை தங்களுக்குச் சாதகமாக
பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற செய்தியை முன் வைத்து இந்நூலை நாங்கள்
வெளியிட்டிருக்கின்றோம்.
Post a Comment