தமிழ்மக்கள் பேரவையின் எதிர்காலம் -நிமிர்வின் பார்வை




2015 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆதரவுடன் தெற்கில் மலர்ந்த அரசாங்கம் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக புதிய யாப்பு ஒன்றை உருவாக்க முனைந்தது.  இந்த முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளராக இணைந்து கொண்டது.  அரசியல் கட்சிகள் என்ற வகையில் யாப்புருவாக்கத்தில் பங்கு பற்றிய கட்சிகள் தமது அரசியல் பேரங்களையும் யாப்புருவாக்க முயற்சிகளையும் ஒன்றாகக் கலக்க முற்பட்டன.  புதிய யாப்பில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அடிப்படையாக  இருக்க வேண்டிய அம்சங்களை முதன்மைப் படுத்துதல் கைவிடப்பட்டது.  புதிய யாப்பில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப் படுவதாக தோற்றம் ஏற்படுமானால் பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது என்ற அரசியல் காரணிகள் முதன்மைப் படுத்தப் பட்டன.  தெற்கில் மீண்டும் மகிந்த பதவிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கம் முதன்மைப் படுத்தப் பட்டது. சிங்கள இனவாதத்திற்கு பயந்த நிலையிலேயே யாப்புருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டன.  இந்த அடிப்படையை புரிந்தோ புரியாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த முயற்சிகளில் இணங்கிப் போகும் தன்மை காணப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் யாப்புருவாக்க முயற்சிகளில் தமிழரும் கலந்து கொள்ள கிடைத்த முதலாவது வாய்ப்பாக இதனைக் கருதினர்.  இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை யாப்பில் இடம்பெற வைக்க முடியும் என மனதார நம்பினர்.  இவர்களை இந்த முயற்சியில் ஈடுபடுமாறு சர்வதேச அரசாங்கங்களும் நிர்ப்பந்தித்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் சர்வதேச அரசாங்கங்களும் சிங்கள இனவாதத்தை தெரிந்தோ தெரியாமலோ  குறைவாக மதிப்பிட்டு விட்டனர் போலும். புதிய யாப்பு முயற்சி சிங்கள இனவாதத்தை உசுப்பி விட்டது.  மகிந்தவின்  ஊழல்களை தாங்க முடியாமல் அவரைப் பதவியில் இருந்து நீக்கி மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்திய சிங்கள மக்கள் மீண்டும் மகிந்தவின் பக்கம் சாயத் தொடங்கினர்.  இந்த மகிந்த பூச்சாண்டியால் புதிய யாப்பு முயற்சிகள் திசைமாறத் தொடங்கின.

புதிய யாப்பில் தமிழ் மக்களுக்கு சமஷ்டிக்கு சமமான உரிமைகள் உள்ளன என  தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குக் கூறியது. புதிய யாப்பில் நாம் ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தி இருக்கிறோம் என மைத்திரி-ரணில் அரசு சிங்கள மக்களுக்குக் கூறியது.  தமிழ் மக்களுக்கு புலியின் தலையையும் சிங்கள மக்களுக்கு பூனையின் வாலையும் காட்டும் முயற்சி வெளிப்படையாகவே நடந்தது.

இவ்வாறாக இரு சமூக மக்களையும் ஏமாற்றும் இந்த அரசியல் நாடகத்தின் மத்தியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக தமிழர் வேண்டுவது என்ன என்பதை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரத்துச் சொல்ல வேண்டிய தேவை எழுந்தது.  அரசியல் கட்சிகள் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு புதிய யாப்பு முயற்சியைப் பலிக்கடா ஆக்கிய நிலையில் இந்தக் குரல் ஓர் அரசியல் கட்சியிடமிருந்து வராமல் பொது மக்கள் தரப்பிலிருந்து வரவேண்டும் என்ற தேவை உணரப் பட்டது.

இவ்வாறான பின்னணியிலேயே தமிழ் மக்கள் பேரவை 2016 ஆம் ஆண்டு உதயமானது.  தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் ஆர்வலர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சேர்ந்து இதனை ஆரம்பித்தனர்.எந்த ஒரு கட்டத்திலும் இது ஓர் அரசியல் கட்சியாக மாற்றமடையாது என்ற கோட்பாட்டுடன் இது ஆரம்பித்தது.  அந்த வகையில் முதலமைச்சர் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சிஇ தமிழ் தேசிய மக்கள் முன்னணிஇ ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணி), தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயலாற்றத் தொடங்கின. தமிழ் அரசுக் கட்சி தலைவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்துக்கும் அது மேற்கொண்ட “எழுக தமிழ்” போன்ற நிகழ்வுகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டனர் என்பது இங்கு குறிப்பிடப் பட வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல் வெகுஜன அமைப்பாக செயலாற்றும் என்ற வகையில் தமிழர் பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வந்த தொழில் சங்கங்களும் சிவில் சமூக அமைப்புக்களும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயலாற்ற முன்வந்தன.  வடக்கிலும் பின்னர் கிழக்கிலும் “எழுக தமிழ்” நிகழ்வுகளைப் பலதரப்பினரின் ஒற்றுமையுடன் வெற்றிகரமாக நடத்தியது. இவ்வாறாக தமிழர் தரப்பின் பல்வேறு தரப்புக்களையும் பின்னணிகளையும் கொண்ட வெகுஜன இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை பரிணமித்தது.

புதிய யாப்பு முயற்சிகளில் தமிழர் வேண்டுவதென்ன என்பதை அரசியல் கட்சிகளுக்கும் சர்வதேசத்துக்கும் வெகுஜனத்தின் குரலாக எடுத்துச் சொல்லும் வரலாற்று முக்கியம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தலைவர்கள் ஆரம்பத்தில் இந்த வரலாற்றுக் கடமையின் தார்ப்பரியத்தை உணர்ந்தவர்களாகவே காணப்பட்டனர்.ஆயினும் இத்தலைவர்களில் முதலமைச்சர் உள்ளிட்ட எல்லோரும் தமது தொழில்சார் துறைகளில் முன்னணியில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஒரு வெகுஜன அமைப்பைக் கட்டுவதில் முன் அனுபவம் இருக்கவில்லை.  அமைப்பைக் கட்டுவதற்கு செலவழிக்க கிடைத்த நேரமும் குறைவு.  இதனால் நேரம் கிடைத்தவர்கள் தமது தனிமனித ஆளுமைகளைப் பயன் படுத்தியும் தன்னிச்சையாகவும் அமைப்பைக் கட்டுவதில் ஈடுபட்டனர்.

இதில் நகைப்புக்கிடமானது என்னவெனில், புதிய யாப்பில் இடம் பெறவேண்டியது என்னவென வலியுறுத்த ஆரம்பித்த அமைப்பு தனது செயற்பாடுகளை நெறிப்படுத்த ஒரு யாப்பை உருவாக்க தவறி விட்டது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்த நாளில் இருந்து கணிசமான காலம் வரை இதற்கென ஓர் அலுவலகம் இருக்கவில்லை. இவ்வாறான குறைபாடுகள் பலராலும் பலமுறை சுட்டிக் காட்டப் பட்ட போதும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  தமிழ் மக்கள் பேரவை தலைமை வெகுஜன அமைப்பு தானாக வளர்ந்து விடும் என எதிர் பார்த்தது.  அவர்களால் போதிய நேரத்தை இதற்கு ஒதுக்க முடியாத நிலையில் அமைப்பு கட்டும் செயற்பாடுகள் அவர்களின் ஓய்வு நேர முயற்சியாக வரும் நிலை ஏற்பட்டது.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்  கனடாவின்  TET தொலைக்காட்சிக்கு 2018 தைமாதத்தில் அளித்த பேட்டியில் தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்” போன்ற நடவடிக்கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட முடியுமா என்று கேட்ட பொழுது, தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரை அரசாங்கத்துடன் இணைந்து புதிய யாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதே சமயத்தில் அரசாங்கத்தின் போக்குக்கு எதிர்ப்பைக் காட்டுவது கடினமாக இருக்கும் எனக் கூறினார். அவ்வாறான முயற்சிகளைக் கூட்டமைப்பு செய்யாமல் ஏனைய அமைப்பு ஒன்று செய்வதே சாத்தியமானதாக இருக்கும். பயனுள்ளதாகவும்  இருக்கும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசையில் அமரும் பொழுது “எழுக தமிழ்” போன்ற நடவடிக்கைகள் கூட்டமைப்புக்கும் தமிழ் தரப்பிலிருந்து அழுத்தம் இருக்கிறது என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தப் பயன்படுகின்றன. எவ்வாறு சிங்களத் தீவிரவாதிகளால் தமக்கு அழுத்தம் இருக்கிறதோ அவ்வாறே தமிழ் தீவிரவாதிகளால் கூட்டமைப்புக்கும் அழுத்தம் இருக்கிறது என்று அவர்கள் உணர்கிறார்கள்.  அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் தீவிரவாதத்தை தூண்டாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் சக்திகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தப் பதில் தமிழ் மக்களின் உரிமைக்கான போரில் தமிழ் மக்கள் பேரவையின் பங்கை மிகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் முன்வைக்கிறது. அதாவது அரசியல் கட்சிகளுக்கு உள்ள சில கைவிலங்குகள் வெகுஜன அமைப்புகளுக்கு இல்லை என்பதை அவரது பதில் எடுத்துரைக்கிறது.  தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளை பல தடவைகள் கடுமையாக கண்டித்த சுமந்திரனே தமிழ் மக்கள் பேரவையின் இருப்பின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறார்.  ஆகவே தமிழ் மக்கள் பேரவையின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து அதனுடன் சம்பந்தப் பட்ட அனைவரும் பொறுப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டிய தருணம் இது.  வெறும் ஓய்வு நேர முயற்சியாக இதனைக் கருதாமல் வெகுஜன அமைப்பைப் பலப் படுத்த வேண்டிய தருணம் இது.

இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது. தமிழ்மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு. ஒரு மக்கள் அமைப்பில் ஜனநாயக கட்டுமானங்களும் ஜனநாயக செயற்பாடுகளும் இருப்பது அவசியம்.  ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒரு கட்டுக்கோப்பான நிறுவன ரீதியாகவோ ஜனநாயக நடைமுறைகளூடாகவோ எடுக்கப் படுவதாக தெரியவில்லை.  உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து செயற்படவிழைந்தன.  அதற்கு தமிழ் மக்கள் பேரவை பின்னிருந்து ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன.  தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலுடன் சம்பந்தப் பட்ட இத்தேர்தலில் ஒரு தலைமையை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் தமிழ் மக்கள் பேரவைக்கு இருந்தது.  தமிழ் மக்கள் பேரவை தலைமை குழுவில் இருந்த பலருக்கு இதில் உடன்பாடு இருந்தது. ஒரு நிறுவனப்படுத்தப் பட்ட ஜனநாயக ரீதியான முடிவெடுக்கம் முறைமைகள் அங்கு நிறுவப் படாமல் இருந்ததால் இறுதியில் முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்தே இறுதி முடிவானது.  இதனால் நடுவிலிருந்து பேரம் பேசக்கூடிய தலைமை இல்லாமையால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும்இணைந்து செயற்பட முடியாமல் பிரிந்தன. தமிழ் மக்களின் வாக்குகள் சிதறின.

இந்த வரலாற்று முக்கியம் மிக்க சமயத்தில்தமிழ் மக்கள் பேரவையின் நிறவனமயப்படுத்தலில் இருந்த குறைபாடுகள் காரணமாக முடிவெடுப்பதில் ஏற்பட்ட குழப்பங்களால் பேரவையின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.  உள்ளூராட்சித் தேர்தலையடுத்து நடந்த தமிழ் மக்கள் பேரவை கூட்டத்திலும் முதல்வர் விக்னேஸ்வரன் தமது அபிமானத்துக்கு உரியவர்களை அழைத்து வந்து அவர்களைப் பேரவையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரினார்.  ஒரு வெகுஜன அமைப்பில் சேருவதற்கு எல்லாருக்குமே உரிமை உண்டு.  ஆனால் அவர்களை அங்கத்தவராக இணைப்பதில் ஒரு நிறுவனச் செயல்முறை இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைமைக் குழுவில் இருந்தவர்கள் பலருடனாவது கலந்துரையாடியதாக இருக்க வேண்டும். தன்னிச்சையானதாக இருக்கக் கூடாது.

தமிழ் மக்கள் பேரவையில் முடிவெடுப்பதில் தனிநபர் ஆளுமைகள் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப் படவேண்டும்.  இது பேரவையில் உள்ள பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதை உணர வேண்டிய தருணம் இது.  இது தொடருமானால் பேரவையின் அழிவுக்கே வழிவகுக்கும். முக்கியமாக பெயரளவில் மக்கள் அமைப்பாக இருக்காமல் அதற்கான யாப்பையும் நிறவனமயப்பட்ட ஜனநாயக கட்டமைப்பையும் வேலைத்திட்டங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். 

இன்று தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வுஇ நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு இலங்கையை பொறுப்புக் கூற வைத்தல் ஆகிய விடயங்களையும் தாண்டி தமிழர் தாயகத்தில் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் ஏராளம் உள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்கான போராட்டம்இ அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்இ காணிவிடுவிப்பிற்கான போராட்டம் என்பனவற்றுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமை தாங்க வேண்டும். இத்தலைமையின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சனைகளைத் தீர்க்கச் சொல்லி அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

எங்களிடம் ஒரு சிந்தனையாளர் குழாம் (Think Tank) இல்லாத குறையை இன்று தமிழினம் கடுமையாக எதிர்கொள்கிறது. தமிழ்மக்கள் பேரவை ஆலமரமாக வளர்ந்து கிளை பரப்பியிருந்தால் தமிழ்மக்களின் அத்தனை பிரச்சினைகளையும் அது லாவகமாக கையாண்டிருக்க முடியும். சிந்தனையாளர் குழாம் ஏற்கனவே தமிழ்மக்கள் பேரவையிடம் உள்ளது. ஆனால் அது செயற்திறனின்றி உள்ளமை கவலையளிக்கிறது. கல்விஇ பொருளாதாரம்இ அபிவிருத்திஇ இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் எம்மக்கள் பின்தங்கியே நிற்கிறார்கள்.

தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களும் ஆளுமை பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்குமானால் அவர்கள் தமது பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் ஏனையவரை நியமிக்க முயற்சி எடுக்க வேண்டும்.  அப்பதவிகளையும் பொறுப்புகளையும் கையேற்க ஒருவரும் முன்வராத நிலை நிலவுமானால் தமிழ் மக்கள் பேரவையைக் கலைப்பதற்கு கூட தயங்கக் கூடாது.  ஏனெனில் செயற்படாத ஓர் அமைப்பை வைத்திருந்து தமிழ் மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குவதை விடுத்து இயலாமையை ஒத்துக் கொண்டு விலகுவதே தர்மம் ஆகும்.

அவ்வாறு தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படும் பட்சத்தில் அது  நிறைவேற்ற நினைக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழலாம்.  “வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை” என்று சொல்லப் படுவதுண்டு. தமிழ் மக்கள் பேரவைக்கென வரலாற்றுப் பாத்திரம் உள்ளதால் அது இல்லாதவிடத்து இன்னொரு செயற்திறனுள்ள அமைப்பு அதன் இடத்தை நிரப்ப உருவாகும்.  அது வரலாற்று நியதி. ஆகவே செயற்படாமல் இருந்து கொண்டு வழியை மறித்துக் கொண்டிருப்பதை விடுத்து ஒதுங்கி வழி விடுவதே தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய நன்மையாகும்.

தெற்கில் ஊழலையும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும் உட்கட்சிச் சண்டைகளாலும் மைத்திரி-ரணில் அரசாங்கம் சிறிது சிறிதாக பலமிழந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மகிந்த ராஜபக்சவின் எழுச்சியை காட்டுகின்றன.  அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள இனவாதமும் மீண்டும் மேல் எழுந்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியைத் தங்க வைக்க மைத்திரி-ரணில் அரசாங்கம் சிங்கள இனவாதத்தை திருப்திப் படுத்த முற்படுவதைத் தவிர்க்க முடியாது.  மகிந்த ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதை நோக்கமாக கொண்டு மேற்குலகமும் இந்தியாவும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளைத் தடுக்கப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதற்கு இணங்கிப் போவதற்கு நிர்ப்பந்திக்கப் படுவர்.

அதேவேளை மைத்திரி-ரணில் அரசாங்கம் இதுவரை இனப்பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கில் புதிய யாப்பை உருவாக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளை கிடப்பில் போடப்படும். இந்த நிலையில் புதிய யாப்பு முயற்சிகளை உயிருடன் வைத்திருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும் நம்பியிருக்க முடியாது. அப்படியாக இருப்போமானால் அதில் பலியாகப் போவது தமிழ் மக்களின் அபிலாசைகளே.  இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்று அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழ் மக்கள் தரப்பு நியாயத்தை சர்வதேசத்துக்கும் உரத்துச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ் மக்கள் பேரவையால் பிரேரிக்கப் பட்ட யாப்புக்கான முன்யோசனைகளை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்துக்கும் பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

நிமிர்வு  பங்குனி2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.