கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009




2009 ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்து வைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள்.

இந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் திருத்துவதற்கு நிர்மாணிப்பதற்கு என பல தேவைகளுக்காக கடன் பெற்றார்கள், இன்றும் பெற்றுவருகிறார்கள்.

போர் முடிவடைந்து இன்றோடு 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். மக்கள் மத்தியில் புதியதொரு கலாசாரத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருக்கிறது. அதுதான் கையேந்தும் கலாச்சாரம். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்த 2009 போர் மக்களின் அனைத்தையும் பறித்தெடுத்திருந்தது. என்னதான் இழந்தாலும் கௌரவத்துடன் எங்களால் வாழமுடியும் என்றிருந்த மக்களை இன்று கயிற்றுக்கும், நஞ்சுப் போத்தலுக்கும் வங்கிகளும், நுண்கடன் வழங்கும் நிறுவனங்களும் இரையாக்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் அனைவர் மனதையும் விட்டு விலக கிட்டத்தட்ட சில வாரங்கள் சென்றிருக்கும். கடனைச் செலுத்த முடியாமல் குடும்பத் தலைவி தன்னுடைய மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய கணவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தச் சம்பவத்தின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில், முல்லைத்தீவில், மட்டக்களப்பில், கிளிநொச்சியில் என கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களைப் பலியெடுத்து வருகின்றன.

நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களை இலக்காகக் கொண்டே கடன்களை வழங்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அவை திட்டமிட்ட முறையில் பெண்களை தங்களுடைய கடன் வலைக்குள் சிக்க வைக்கின்றன.

நுண்கடன் வழங்கும் நிறுவனம் முகவர் ஒருவரை ஊருக்குள் அனுப்பி கடன் திட்ட முறையின் மூல வேராக ஒரு பெண்ணை தெரிவு செய்கிறது. பிறகு அந்தப் பெண்ணைக் கொண்டு ஒரு குழுவை, குழுவில் 3 அல்லது 5 பேரைத் தேடிக் கொள்கிறார் அந்த முகவர். குறித்த பெண் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக தன்னுடைய உறவினர்களையோ அல்லது கிராமத்தவர்களையோ இணைத்துக் கொள்கிறார். இப்போது இவர்கள் அனைவரும் எடுக்கும் கடனை வாராந்தம் செலுத்துவதாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஒருவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் குழுவில் உள்ள ஏனையவர்கள் அவருக்காக செலுத்துவதாகவும் ஏற்றுக் கொண்டே கடன் பெறுகிறார்கள். ஆனால், யதார்த்த நிலவரம் தலைகீழாக இருக்கிறது. குழுவில் ஒருவர் வாரம் வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் ஏனையோரால் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதுடன் கடன் வசூலிக்க வருபவராலும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்.

நிதிநிறுவனங்களால் அனுப்பப்படும் கடன் வசூலிப்பவர்கள் வீடுவீடாக, கிராமம் தோறும் சென்று கடனை செலுத்த முடியாமல் இருக்கும் பெண்களை தகாத வார்த்தைகள் கூறி துஷ;பிரயோகத்துக்கு உள்ளாக்கி வருகிறார்கள். இதன் விளைவாக கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கடன் பெற்ற பெண்ணொருவர் குறிப்பிட்டார். குழுவாக ஒன்று சேர்ந்து கடன் வாங்கிய காரணத்தால் அயலவர்கள், உறவினர்கள் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததால் தான் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாக பெண்ணொருவர் எம்மிடம் கூறினார்.


திங்கள் லோன், செவ்வாய் லோன், புதன் லோன் என பல நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளதால் பெரும்பாலான நேரத்தை வாராந்தக் கொடுப்பனவைத் தேடுவதிலேயே பெரும்பாலான பெண்கள் செலவழித்து வருகிறார்கள். கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்காக பொது இடங்களில், வீட்டுக்கு வெளியில் வைத்து அவமானப்படுத்துவதை ஒரு கருவியாக கடன் வசூலிக்க வருபவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு மக்கள் முன்னிலையில் தொடர்ந்து அவமானப்படுத்தபட்டதால் தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை ஒருவர் எம்மிடம் கண்ணீர் மல்கக் கூறினார்.

கடன் வசூலிப்பாளர்களின் தொந்தரவினால், குழுவில் உள்ள ஏனையவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் உயர்ந்த வட்டிக்கு ஏனைய நிதிநிறுவனங்களிடமிருந்தோ அல்லது ஊரில் வட்டிக்குப் பணம் வழங்குபவர்களிடம் இருந்தோ கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் இதன் மூலம் மேலும் மேலும் தாங்கள் கடனாளிகளாக்கப்படுவதாகவும் எம்மைச் சந்தித்த பெண்கள் கூறுகிறார்கள்.

எம்மிடம் பேசிய பெரும்பாலான பெண்கள், கடன் பத்திரத்தில் என்ன இருந்தது என்பதை அறியாமலேயே தாங்கள் கையெழுத்திட்டதாகக் குறிப்பிட்டார்கள். பத்திரம் ஆங்கிலத்தில் இருந்தபோதும் அதில் என்ன நிபந்தனைகள் உள்ளதென்பதை நிறுவனக்காரர்கள் தங்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்றும், கையெழுத்திட்டவுடன் பத்திரம் தங்களுக்குத் தரப்படவில்லை என்றும் கூறினார்கள்.

கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் நிபந்தனைகள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவு போதாது என்று கூறுகிறார் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் அகிலன் கதிர்காமர். கடன் வழங்க அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும் என்று கூறி மக்களின் பணத்தை நிதிநிறுவனங்கள் சுரண்டி வருகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

'பொதுவாக வங்கிகளில் கடனுக்கு வட்டி வீதமாக 8 வீதத்திலிருந்து அறவிடப்படுகிறது. சுயதொழிலிலுக்கான கடனுக்காக 14%வீதத்திலிருந்து அறவிடப்படுவதுடன், தங்க ஆபரணங்கள், சொத்துக்களை அடமானம் வைத்து அதனை மீட்பதற்கான வட்டியாக  வரை வங்கிகள் அறவிடுகின்றன. ஆனால், நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் 15-21பெருமளவு வட்டி அறவிடுகின்றன. நாங்கள் ஆராய்ந்து பார்த்தபோது  40%-220%
 வரை நிதிநிறுவனங்கள் அறவிடுகின்றன. இருந்தபோதிலும் கடன் பத்திரங்களில் 24%-28% வரை அறவிடுவதாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்' என்று அகிலன் கதிர்காமர் குறிப்பிடுகிறார்.

கடந்த வருடம் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றிய பேரணி ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றது. பேரணியின் இறுதியில் மக்களால் யாழ். அரச அதிபர், வடமாகாண ஆளுநரிம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் நிறுவனங்கள் தனது வேட்டையை நிறுத்தவுமில்லை. அதிகாரிகள் அத்துமீறி நடக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமில்லை.

இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறும் அகிலன் கதிர்காமர், ஒரு வருடத்தில் செலுத்தி முடிக்கவேண்டிய கடனை 5 வருடங்களில் செலுத்தி முடிப்பதற்கு கால அவகாசமொன்றை வழங்கலாம் அல்லது வட்டியை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பெண்கள் நிதிநிறுவனம் எனும் முதலையின் வாயிற்குள் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், கணவனின் வன்முறையைத் தாங்க முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், அடமானத்தில் உள்ள பொருட்களை மீட்பதற்காகவும், வீட்டைக் கட்டுவதற்காகவும் என நிதிநிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட, தலைமறைவாக வாழ்ந்துவரும் பெண்களை 'மாற்றம்' சந்தித்தது. அவர்கள் தாங்கள் அனுபவித்துவரும் இன்னல்களை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

மகளைத் திருமணம் செய்யும்போது அவளுடைய கணவர் நன்றாகத்தான் இருந்தார். பிறகு குடிக்கு அடிமையானவர் மகளை கடன் வாங்கித்தருமாறு தொந்தரவு செய்திருக்கிறார். என்ன செய்தாவது கடன் வாங்கித்தருமாறு அடித்திருக்கிறார். குழுவாகச் சேர்ந்து வாங்கும் கடன் முறையில்தான் மகள் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனை முழுவதுமாக குடித்தழித்துவிட்டு, எங்கு சென்றானோ தெரியவில்லை, இதுவரை காணவில்லை.

கடன் வழங்கிய நிறுவனக்காரன் மகளுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறான். குழுவாகச் சேர்ந்து கடன் எடுத்ததால் குழுவில் இருந்த மற்றவர்களும் மகளை கஷ;டத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். ஒரு நாள் என் கண் முன்னே மகளை பெண்ணொருவர் அடித்தார். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் நாங்கள் இருந்த இடத்துக்கு மகளை அழைத்துச் சென்றோம். அங்கு நிம்மதியாக இருந்தாள்.

கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி, 'புதுவருஷம் வருது, வீட்டெல்லாம் கூட்டிப்போட்டுட்டு, துப்பரவாக்கிட்டு வாறேன் அப்பா' என்று வீட்டுக்குப் போனவள் தூக்கில் தொங்கிய செய்திதான் வந்து சேர்ந்தது. இதோ இந்த வீட்டில்தான்... இறக்கும்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறாள். அவளுக்கு பெரிய வயதும் இல்லை தம்பி, மூன்று பிள்ளைகளையும் எங்களால் வளர்க்க முடியாது என்பதால் இருவரை கிறிஸ்தவ தேவாலயமொன்றால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்திருக்கிறோம். ஒருவரை மட்டும் நாங்கள் வளர்த்துவருகிறோம்.

மகள் இறந்த பிறகுதான் தெரிந்தது, வங்கிகள் உட்பட 5 நிறுவனங்களிடம் கடன் வாங்கியிருக்கிறாள் என்று.

எனக்கு 4 பிள்ளைகள். கணவர் கட்டாரில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் அனுப்பிய காசைக் கொண்டுதான் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். அதேவேளை, வீட்டையும் கட்ட ஆரம்பித்தேன். வீட்டு வேலையை முடிக்க பணம் போதாததால் கடன் வாங்கினேன். அந்த நேரம் பார்த்து, நான் பொறுப்பாக நின்று போட்டு வந்த சீட்டுக்கு காசு கொடுக்காமல் சிலர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களுக்காக நான் பொறுப்புக் கூறவேண்டியிருந்ததால் அவர்களது கொடுப்பனவையும் செலுத்துவதற்கு கடன் வாங்கியிருந்தேன். இப்போது வட்டி வட்டி என்று செலுத்துவேண்டிய தொகை வானத்தைத் தொட்டுவிட்டது. கணவர் அனுப்பும் பணத்தையும், நான் உழைப்பதையும் கடன் மட்டுமே செலுத்திவருகிறேன்.

வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு வந்த கணவர் என்னோடு கோபித்துக் கொண்டு அவருடைய அம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 'அனுப்பிய பணத்தில் வீடு கட்டவில்லை, கடன்காரியாக இருக்கிறாய், என்னால் உன்னுடைய கடனை அடைக்க முடியாது, வாழவும் பிடிக்கவில்லை' என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். வாழ்ந்து என்ன பயன் என்று தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். பிள்ளைகளால்தான் இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். லோன் வசூலிக்க வருபவர்கள் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் விவசாயப் பண்ணைக்குள் வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்து என்ன சொன்னாலும் பரவாயில்லை. வேலை செய்யும் இடத்துக்கு வந்து தொந்தரவு செய்கிறார்கள். எமக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரி, இனிமேல் இப்படி நடந்தால் என்னை வேலையை விட்டு விலக்கிவிடுவதாகக் கூறினார்.

நாளை மறுதினத்துக்குள் 30,000 செலுத்துமாறு லோன் வசூலிக்க வரும் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறுகிறார். வீட்டை விற்றாவது கடனைக் கட்டுங்கள், இல்லையென்றால் வேலைசெய்யும் இடத்துக்கே வருவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கிறார். அப்படி அவர் வந்து எனது இந்த வேலையையும் இழந்துவிட்டால் மீண்டும் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கவேண்டி வரும்.

வீட்டையாவது விற்றுவிட்டு கடனைக் கட்டுங்கள் என்று பிள்ளைகள் கூறுகிறார்கள். இருக்கிற வீட்டையும் விற்றுவிட்டால் பிள்ளைகளுக்கென்று ஒன்றும் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதன்றே தெரியாமல் இருக்கிறேன்.

'சரோஜா அக்காவுக்கு நான் 60,000 கடன் வாங்கிக் கொடுத்தேன். 3 பேர் கொண்ட குழுவாக, கிழமைக்கு ஒரு தடவை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு எடுத்த கடன் அது. 4 வாரங்கள் மட்டும்தான் அவர் கட்டியிருக்கிறார். அதன் பிறகு கட்டவேயில்லை. லோன்காரன் நேரம் காலமில்லாமல் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்வான், நகரமாட்டான். பிள்ளைகள் லோன்காரனைக் கண்டவுடனே நடுக்கத்துடன் எனது பின்னால் ஒழிந்துவிடுவார்கள். லோன்காரன் அடிக்கடி வருவதால் அக்கம் பக்கம் இருப்பவர்களும் கூடாத மாதிரி பேசத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் இங்கு வந்தேன்' என்கிறார் பிருந்தா.

கிறிஸ்தவ தேவாலயமொன்றினால் நடாத்தப்படும் பராமரிப்பு இல்லமொன்றில் 4 பிள்ளைகளுடன் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தங்கிவரும் பிருந்தா, தொடர்ந்து கடன் வழங்கிய நிறுவனத்தைச் சேர்ந்தவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தி வருவதால் இங்கும் தொடர்ந்து இருக்கமுடியாத நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் கூறுகிறார்.

கடந்த வாரம் கூட 'சரோஜா அக்காவைச் சந்தித்துப் பேசினேன். தான் ஆறாம் மாதத்துக்குள் செலுத்துவதாகக் கூறினார். ஆனால், லோன்காரன் எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாக அச்சுறுத்துகிறான். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.

கணவர் என்னோடு சேர்ந்திருக்கும்போது வாங்கிய ரிவியையும் நிறுவனக்காரர்கள் தூக்க வந்துவிட்டார்கள். பல மாதங்கள் செலுத்திய காசு அநியாயம் என்பதால் ஊரில் உள்ள ஒருவரிடம் 30,000 கடன் வாங்கித்தான் ரிவியை மீட்டேன். இப்போது அந்தக் கடனையும் செலுத்தவேண்டியிருக்கிறது.

கடன் பெறும்போது கையொப்பமிட்ட விண்ணப்பம் தமிழிலும் இருந்தது. எனக்கு வாசிக்க முடியாததால் லோன்காரனோ அல்லது வேறு யாருமோ எனக்குத் தெளிவாக வாசித்துக் காட்டவில்லை. அப்போது வாசித்திருந்தாலாவது கடனை வாங்காமல் இருந்திருப்பேன்.

இங்கேயே தொடந்தும் இருக்க முடியாது. எவ்வளவு நாளைக்குத்தான் இவர்களுடைய உதவியுடன் வாழ்வது. பிள்ளைகளுடைய எதிர்காலம் எனக்கு முக்கியம். நாங்கள் உழைத்து சாப்பிடுவது போல் வருமா?

பலசரக்குக் கடையை விருத்தி செய்யவே கடன் வாங்கியிருந்தேன். 5 கடன் வாங்கியிருக்கிறேன். மகன் அனுப்பும் 30,000 ஷரூபா இரண்டு கடன் அடைக்க மட்டும்தான் போதும்.

நன்றாகப் படித்தவன். கட்டாருக்கு அனுப்பிவைக்க இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் செலவானது. அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். ஐம்பதாயிரம் ரூபா சம்பளம் தருவதாகக் கூறினார்கள். ஆனால், 40,000 ரூபாவே தருவதாக மகன் கூறுகிறான். செலவு போக 30,000 எனக்கு அனுப்பிவைக்கிறான். இங்குள்ளவர்களோ, மகன் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் அனுப்புகிறான் என்று கூவித்திரிகிறார்கள்.

இரண்டு மகன்கள் இன்னும் பாடசாலை செல்கிறார்கள். மகள் ஒருத்தி ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கிறாள். அவள் என்னுடைய இரண்டு லோன்களைப் பொறுப்பெடுத்திருக்கிறாள்.

அன்று அப்படித்தான் 4ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மகனை பாடசாலையில் இருந்து அழைத்துக் கொண்டு வரும்போது லோன் காரன் நிறுத்தி கூடாத மாதிரி பேசிக்கொண்டிருந்தான். பாடசாலை செல்லும் பிள்ளைகளும் இருந்தார்கள். எனது பிள்ளைக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

சாப்பாட்டுக்குக்கூட சரியான கஷ;டமாக இருக்கிறது. என்னுடைய அண்ணாதான் உதவிசெய்கிறார். அவர் இல்லையென்றால் ஒரு வேளை சாப்பாடுகூட எங்களுக்கு இல்லை.

வாற திங்கள்கிழமை 10 பவுண் தங்கம் ஏலம் விடப்படவிருக்கிறது. வீட்டில் பத்திரங்கள் இருக்கின்றன. அது பரவாயில்லை. எங்களுடைய பொருட்கள்தானே.

காணியொன்று இருக்கிறது. பிள்ளைகள் அதை விற்று கடனை அடைக்குமாறு கூறுகிறார்கள். முன்பு ஐந்து இலட்சத்துக்குக் கேட்டு வந்தார்கள். அப்போது காணியை விற்பதற்கு மனம் விடவில்லை. ஆனால், இப்போது விற்கலாம் என்று நினைத்தால் யாருமே வருவதில்லை. வெளிநாட்டுக்குப் போவதற்கு எல்லாம் பேசிவிட்டேன். ஒருவருடம் போல் இருந்துவிட்டு வந்தால் அனைத்து கடனையும் அடைத்துவிடலாம்.

கணவர் என்னோடு இருக்கும்போது எங்களுக்கிருந்த காணியொன்றை அடமானத்துக்கு வைத்தோம். என்னுடைய விருப்பத்துக்கு மாறாகவே கணவர் இந்த வேலையைச் செய்தார். கடந்த தை மாதம்தான் காணியை மீட்கவேண்டிய இறுதி மாதம். அதற்காகத்தான் கடன் வாங்கினேன். 120,000 ரூபா ஒரு நிறுவனத்திமிருந்து வாங்கினேன்.

திருமணம் முடித்துக்கொடுத்த மகளுக்கு கொடுக்கவென இருந்த காணி அது. 'காணியை மீட்டுத் தராவிட்டால் வீட்டுக்குப் போகவேண்டியது தான்' என்று மகளுக்கு அவருடைய கணவர் அச்சுறுத்தியிருக்கிறார். அதனால்தான் மெனக்கெட்டு காணியை மீட்க வேண்டி ஏற்பட்டது. இல்லையென்றால் விட்டிருப்பேன்.

கணவரும் என்னை விட்டுச் சென்றுவிட்டதால் புல்லு வெட்டி, வீடுகளுக்குச் சென்று சமைத்து கடனைக் கட்டி வருகிறேன். அதுவும் போதாது என்றால் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் வட்டிக்காவது வாங்கி கட்டிவிடுவேன். இப்போது அந்தக் கடனும் அதிகரித்துவிட்டது. யாரும் எனக்கு உதவிக்கு இல்லை.

ஒரு மகன் பாடசாலை செல்கிறான். ஒரு மகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறான். 9ஆம் வகுப்பு வரைதான் படித்தான். 'படிக்காத பிள்ளைய ஏன் ஸ்கூலுக்கு அனுப்புறீங்க அம்மா? எங்கயாவது ஹொஸ்டல்ல சேர்த்திடுங்க' என்று பாடசாலை அதிபர் சொன்னார். இப்போது அவர் என்னுடைய அம்மாவின் வீட்டில்தான் இருக்கிறார்.

இவற்றையெல்லாம் யோசித்துவிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் வந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள். இல்லையென்றால் இந்நேரத்துக்கு உங்களோடு பேசிக்கொண்டிருக்க நான் இருந்திருக்க மாட்டேன்.

மூன்று தினங்கள் வைத்தியசாலையில் இருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது பிள்ளை சாப்பாடு இல்லாமல் பசியால் வாடிப்போய் இருந்தது. நான் செத்திருந்தால் என் பிள்ளை அநாதையாகிருக்குமே... இனிமேல் அந்த முடிவுக்கு போகமாட்டேன். என்ன செய்தாவது கடனைக் கட்டுவேன். ஆனால், தவணை மட்டும் நிறைய இருக்கிறது. அது இல்லையென்றால் எப்படியாவது மாதாம் மாதம் கடனைக் கட்டிமுடிக்கலாம்.

கணவர் தச்சு வேலை செய்கிறார். அவருடைய தொழிலை கொஞ்சம் விருத்திசெய்யத்தான் லோன் வாங்கினோம். மெஷpன் ஒன்று வாங்கியிருக்கிறோம். வேலைகள் செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால், வருமானம் அவ்வளவாக இல்லை. ஒரு கதவையோ, யன்னலையோ செய்துகொடுத்தால் உடனடியாகவே முழுப்பணத்தையும் தரமாட்டார்கள். ஒரு மாதம் இரண்டு மாதம் என இழுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படியிருக்கும்போதுதான் இன்னும் சில லோன்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. லோன்காரன் வீட்டுக்கு வந்து சத்தம்போடும் போது என்னதான் செய்வது. இன்னொரு லோனை எடுத்து கடனைக் கட்டினோம். அப்படி அப்படி என்று கடன் பெருகிவிட்டது. இப்போது மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கடன் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுகூடப் பார்க்காமல் லோன்காரர்கள் திட்டுவதால் அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் லோன்காரன் வந்தால் 7 வயதான என்னுடைய மகள் உடனடியாக வந்து, 'அம்மா லோன்காரன் வாரான் ஒழியுங்கோ' என்று கூறுவாள். இல்லையென்றால், வாசலில் வைத்தே, 'அம்மா இல்லை, வெளியே கிளம்பிட்டாங்க...' என்று கூறுவாள்.

அன்று அப்படித்தான், எனக்காக கையொப்பமிட்டு கடன் வாங்கித்தந்தவர்களை எங்களுடைய வீட்டின் முன்னால் லோன்காரன் வரிசையாக உட்கார வைத்துவிட்டான். 'பணத்தைத் தந்தால் இவர்களை அனுப்புவேன்' என்று இருந்தான். காலை 11 மணியிலிருந்து பகல் 1 மணிவரை அவர்களை இருத்தி வைத்திருந்தான். அங்குமிங்குமாக அழைந்து ஒருமாதிரி பணத்தைச் செலுத்திய பின்னால்தான் அவர்களைப் போக அனுமதித்தான்.

ஒவ்வொரு வாரமும், மாதமும் லோன்காரன் வந்தால் அழவைத்து    விட்டுதான் செல்வார்கள். அன்றைய முழு நாளும் செத்தவீடு போலத்தான் வீடு இருக்கும். கூடாத மாதிரி பேசுவார்கள். 'பிள்ளைகளோடு வெள்ளைச் சீலையை விரிச்சிப்போட்டு இருங்கோ...' என்று அன்று வந்தவன் கூறுகிறான். குடும்பத்தோடு செத்துவிடலாம் என்றுகூட தோன்றும். பிள்ளைகளை நினைத்தால்தான்...

கன்று போட இருக்கும் மாடும் விழுந்து விட்டது. வைத்தியர் வந்து ஊசிபோட்டு விட்டுச் சென்றார். அவருக்கு 600 ரூபா கொடுத்தோம். இன்னும் அது எழும்பவில்லை. அதை எழுப்பவேண்டுமாக இருந்தால் இன்னும் 3,000 ரூபா செலவளிக்க வேண்டிவரும்.

கோழி வளர்க்கவும் லோன் வாங்கினேன். பெரிதாக கூட்டையும் கட்டிவிட்டு 250 கோழிகள் வளர்த்தேன். அத்தனை கோழிகளும் இறந்துவிட்டன. இப்போது வெறும் கூடுதான் இருக்கிறது.

வீட்டு வேலை செய்வதற்காகத்தான் கடன் வாங்கினேன். நான்கு இலட்சம் ரூபா, கணவர் என்னோடு சேர்ந்திருக்கும்போது தான் எடுத்தேன். தானும் வேலைசெய்து கடனை செலுத்துவதற்கு உதவுவதாக சொன்னார். ஆனால், பிறகு அவர் எனக்கு ஒரு சதம் கூடத் தரவில்லை. எந்தநேரம் பார்த்தாலும் குடிமயக்கத்தில்தான் இருப்பார். வீட்டில் இருந்த அத்தனை பொருட்களையும் விற்று குடித்தார். அவர் வீட்டில் இருந்தால் அடித்துக்கொண்டே இருப்பார். கண்ணில் பட்டதையெல்லாம் கொண்டு அடிப்பார். இப்போது எங்கு போனார் என்று தெரியவில்லை. வீட்டுப்பக்கம் வருவதே இல்லை.

லோனை நான் மட்டும்தான் உழைத்து கட்டிக்கொண்டிருக்கிறேன். அப்பா தச்சு வேலை செய்கிறார். அவரும் எனக்கு உதவிசெய்கிறார். அவர் இல்லையென்றால் எனக்கு யாரும் உதவிக்கு இல்லை. கூலி வேலை செய்து பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன்.

கடனையும் வாங்கும் போது எவ்வளவு வட்டி வீதம் அறவிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. லோன் தந்தவரும் கூறவில்லை. கடனைச் செலுத்த செலுத்த கொடுக்கவேண்டிய தொகை எகிரிக்கொண்டே போகிறது. கேட்டால் அவமானப்படுத்துகிறார்கள். 'ஒழுங்காக செலுத்தினால் அது தானாக குறையும்' என்று லோன்காரர் கூறுகிறார்.

லோன் பெறும்போது எனக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருந்தது. ஏற்கனவே எனக்கு தமிழில் வாசிப்பதே கஷ;டமாக இருக்கும்போது ஆங்கிலத்தில் இருக்கும் படிவத்தை தருகிறார்கள். நான் எப்படி விளங்கிக் கொள்வது?

நன்றி: மாற்றம் இணையம்

செ. ராஜசேகர் 
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.