முள்ளிவாய்க்கால் எனும் பெரு நெருப்பு
ஆயுதப் போருக்கு பின்னரான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணி விடுவிப்பு பிரச்சினை என பல போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர். நுண்கடன் பிரச்சனை, பொருளாதார பின்னடைவு, சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல்வேறு சிக்கல்கள் தமிழ் மக்களின் கழுத்துக்களை நெரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளை எல்லாம் மக்கள் தாங்களாகவே எதிர்கொண்டு தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் போராட்ட களங்களில் குதித்த பிறகு தான் அரசியல்வாதிகள் சிலர் இழுபட்டுப் போனார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் அவ்வாறு தான். 2009 முள்ளிவாய்க்காலில் சர்வதேசத்தின் துணையுடன் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்புப் போர் இடம்பெற்றது. 2010 இல் இருந்து மஹிந்த அரசின் அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் பாதிக்கப்பட்ட மக்களும் தங்கள் வீடுகளில் தீபமேற்றி உறவுகளை நினைவு கூர்ந்தார்கள். 2015 க்குப் பின்னர் தான் வடமாகாண சபையால் முள்ளிவாய்க்காலில் நினைவு கூர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் தான் அரசியல்வாதிகளும் நினைவேந்தலில் கலந்து கொண்டார்கள்.
இரண்டு விடயங்களை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற நிலை இன்று எழுந்துள்ளது. முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஒன்றை அமைப்பது, இரண்டாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் ஒன்றைஅமைப்பது. இந்த நினைவாலயத்தில் எம் இனம் இதுவரை கடந்து வந்த இனவழிப்புக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு மே மாத நிமிர்வு இதழில் நாங்கள் வலியுறுத்திய விடயங்கள் முக்கியமானவை,
'முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னால் கூட ஒரு தேசமாக, ஒரே இனமாக சிந்திக்க கூட முடியவில்லை. அனைத்து அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அல்லது அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு நினைவாலயத்தை உருவாக்க முடியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் காயங்களை கூட குணமாக்க முடியவில்லை. உறவுகளை இழந்தவர்கள் மட்டும் இதுவரை அனுட்டித்து வந்த முள்ளிவாய்க்கால் தினத்தை எப்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக அனுட்டிக்கப் போகிறோம்?
அன்றைய நாளில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒட்டுமொத்த தமிழர் அரசியல் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் எல்லோரும் உங்களுடன் தான் இருக்கின்றோம் என ஆத்ம ரீதியில் சொல்லும் உளவுரனுக்கு ஈடிணையாக எதுவும் இல்லை.
நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. தீபம் ஏற்றுதல், மலரஞ்சலி, உணர்ச்சி உரைகளையும் தாண்டி அந்த நாளில் என்ன செய்யலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இனப்படுகொலை நடந்த வேறு வேறு நாடுகளில் கூட்டாக எவ்வாறு இதனை எதிர்கொள்கிறார்கள் என்பதனையும் கற்றுக் கொண்டு எமது தமிழர் தாயகத்துக்கு ஏற்ற மாதிரியான நினைவுகூரல்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.'
அவற்றில் இந்த ஆண்டு ஒரு விடயம் நடந்தேறியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் இன அழிவை நினைவு கூர ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடினார்கள். நிகழ்வின் ஏற்பாடுகளில் முன்னின்ற பலர் செய்த தவறுகளால் நிகழ்வுகளை சரியான முறையில் ஒழுங்கமைக்க முடியாமல் போனமை தான் வேதனையானது.
18.05.2018 முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?
முள்ளிவாய்க்காலில் உறவுகளை நினைத்து ஏற்றுவதற்காக ஏராளமான தீபங்கள் கம்பிகளில் பொருத்தப்பட்டிருந்தன. அங்கே முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைத்து அம்மாக்கள், அப்பாக்கள், மனைவிகள், கணவர்கள், பிள்ளைகள் என எல்லோரும் கதறி அழுதனர். அதிலும் பல அம்மாக்கள் நிலத்தில் உருண்டு பிரண்டு அழுதனர். இவை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் மீடியாக்கள் எல்லாம் முதலமைச்சரை மட்டுமே கூடியளவு முக்கியத்துவப்படுத்திக் கொண்டிருந்தன. பிரதான சுடர் ஏற்றும் இடத்தில் பலரும் முண்டியடித்து கொண்டிருந்தனர். இப்படியான நினைவேந்தல்கள் உறவுகளின் மனங்களை ஆற்றுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஆனால், அங்கு நடந்த நிகழ்வுகள் அந்த உறவுகளை மேலும் தனித்தீவாக்கும் முயற்சிகளே.
அங்கே தீபமேற்ற வந்திருந்த அம்மா ஒருவர் இரண்டு மூன்று தடைவ தீபத்தை கொளுத்தினார். அது தொடர்ந்து அணைந்த வண்ணம் இருந்தது. அப்போது 'எங்கோ என்னுடைய பிள்ளைஉயிருடன் இருக்கின்றார். அதுதான் எரியவில்லை' என அழுதபடி கூறினார்.
ஒழுங்கமைப்பு சரியாக இல்லாததனால் அங்கே பல்கலைக்கழக மாணவர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், சில தமிழ் அரசியல்வாதிகள் என பலரும் குழம்பிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்கள் எவ்வாறு போராட்டங்களை தன்னெழுச்சியாக முன்னெடுத்தார்களோ அதே போல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கின்றார்கள். ஆனால், அங்கே தம்மைப் பிரபலப்படுத்த முனைபவர்களால் தான் அந்த நிகழ்வின் புனிதம் களங்கப்படுத்தப்படுகிறது. மக்களோடு மக்களாக நின்று தீபமேற்ற பல அரசியல்வாதிகள் தயாரில்லாத நிலையே உள்ளது.
தமிழ் மக்களின் ஒன்றிணைந்த ஒற்றுமையான பலத்தைக் காட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் எல்லாம் இது வரை என்ன செய்துள்ளோம், இனி தமிழர் நலன்சார்ந்த அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்கிற உறுதிப்பாட்டை தமிழ் மக்களுக்கு அறிவிக்கும் நாளாகவும் இது அமைதல் வேண்டும்.
சும்மா எதுவுமில்லாமல் நினைவேந்தல் என்கிற பெயரில் கூடிக் கலையும் நாளா கஅது இருக்கக் கூடாது. 9 ஆண்டுகள் வேகமாக கடந்து விட்டன. ஒரு நினைவேந்தல் மையமோ, நிலையமோ ஆரம்பிக்கும் எண்ணம் யாரிடமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை, 'இந்த நாள் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒருமித்த நாடு (ஏக்கிய ராஜ்ஜிய), பிரிக்கப்பட முடியாத நாடு (Indivisible country) என்ற கருத்துகளை இந்நாள் புரட்டிப்போட்டு விடுகிறது. இந்த ஒருநாளில் மட்டும் இத்தீவு இரண்டுபடவில்லை. இரண்டுபட்ட தீவினைக் குறிகாட்டுவதாக இந்நாள் அமைந்துவிடுகிறது.
ஒரு தேசம் வெற்றி விழாவைக் கொண்டுகையில் மற்றைய தேசம் தன் இனவழிப்பின் துயரத்தை நினைவு கொள்கிறது. இந்தப்பிளவு மிக ஆழமானது. வருடம் 365 நாளும் இந்த உண்மையை மூடிமறைக்க முற்படும் தரப்புகள் இந்த ஒருநாளில் தோற்று விடுகின்றன. அதனால், இந்தப்பிளவு தங்களுக்கு ஆச்சரியத்தைத் தருவதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.' என சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர்.
தமிழ் அரசியல் பரப்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவினாலும் மே 18 இல் கணிசமான மக்களும் அரசியல் பிரமுகர்களும் முள்ளிவாய்க்கால் முன்றலில் ஒன்று கூடியது தென்னிலங்கை அரசியலின் பேசுபொருளாக மாறிவிட்டது.
தமிழ் மக்களும் தமிழ்க்கட்சிகளும் உட்பூசல்களை தூர விலக்கிவிட்டு மக்கள் சக்தியாக அணிதிரண்டால் மட்டுமே எமது உரிமைகளை படிப்படியாக வென்றெடுக்க முடியும்.
இறந்தவர்களுக்காக அன்றைய நாளில் அஞ்சலி செலுத்தினாலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரத்திற்காக அன்றாடம் போராடும் வடகிழக்குத் தமிழர்களுக்கு உதவிட எவ்வாறான பொறிமுறைகள் உருவாக்கப்படவுள்ளன? யார் முன்வரப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தேர்தல் காலங்களில் ஒவ்வொரு ஊரூராகவும் வீடுவீடாகவும் சென்று வாக்குக் கேட்கும் அரசியல்வாதிகளால் அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை இனங்கண்டு, கேட்டறிந்து நிவர்த்தி செய்ய முடியாதா?
நினைவேந்தலில் தாய் ஒருவர் தன் மன ஆதங்கத்தைக் கூறி அழுதபோது அங்கு தன்னை யாரென்று காட்டிக்கொள்ள விரும்பாத பொதுமகன் ஒருவர் அத் தாயின் கடன்சுமையை இறக்கிட அந்த இடத்திலேயே உதவினார். ஆவரை முன்னுதாரணமாகக் கொண்டு அனைவரும் முன்வரவேண்டும்.
அனைத்து தாய்மாரும், மக்களும் பொது இடத்தில் வந்து அவர்களது குறைகளைக் கூறி அழப்போவதில்லை. அவற்றை மக்களுக்குப் பணியாற்ற வேண்டியவர்கள் தான் அறிய முனைப்புக் காட்ட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த அருட்தந்தை ரவிச்சந்திரன் கூறிய விடயங்கள் முக்கியமானவை,
"முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல. அது ஒரு புதிய ஆரம்பம்.
முள்ளிவாய்க்காலில் எமது வரலாற்றை அடக்கம் செய்யும் எவரையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இன்று அவலத்தில் ஒன்றிணைந்தது போல பயணத்திலும் ஒன்றிணைவோம்.
இங்கிருந்து தொடங்குவோம்.
அவலத்தை தந்த மண்ணே எமது வரலாற்றின் புதிய முன்னுரையாகட்டும்.
புதிதாய் தொடங்கட்டும் எமது பயணம். "
நிமிர்வு வைகாசி 2018 இதழ்
Post a Comment