தூத்துக்குடி ஊடகவியலாளரின் பார்வையில்
'எவ்ளோ அடிச்சாலும் பரவாயில்ல வாங்க ஏறி போவோம்' - தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், காவல்துறையினர் நடத்திய தடியடியின் போது, ஒரு சகோதரர் இவ்வாறு கூற கேட்டேன். இந்த துணிச்சலுக்கும், சொந்த மண்ணைக் காப்பாற்ற 100 நாட்கள் போராடிய வைராக்கியத்திற்கும் கிடைத்த சன்மானம் - 13 பேர் உயிரிழப்பு, 19 பேர் படுகாயம், 83 பேர் காயம் (இது வரை).
இந்தியாவில் பல மாநிலங்களில் தாமிர ஆலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட பின்பு, தமிழகத்தில் அதற்கான அனுமதியை கொடுத்தது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம். அப்போதே பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
1996-ல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆலையின் முன்பாகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமர்ந்தார்கள் பொதுமக்கள். ஸ்டெர்லைட்டின் பாதிப்புகள் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பார்த்துள்ளேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி ஆகையால், அங்கு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எனக்கு, என் அறிவியல் ஆசிரியை கூறியது இன்றும் நினைவில் உள்ளது. 'ஸ்டெர்லைட் ஆலையால், முடி வளரும் தன்மை பாதிக்கப்பட்டு (புற்றுநோய் பற்றி கூறி எங்களை அச்சப்படுத்த அவர் விரும்பவில்லை என்பது எனக்கு இப்போது புரிகிறது) அனைவரும் செயற்கை முடி (Wig) பயன்படுத்தும் சூழல் வெகு விரைவில் வந்துவிடும்' என்றார். நான் செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்ததில் இருந்தே, டொல்ஃபின் ரக மீன்கள் தூத்துக்குடியில் செத்துக் கரை ஒதுங்கும் செய்திகளை அடிக்கடி படித்த ஞாபகமும் உள்ளது.
ஆண்டு தோறும், செத்து ஒதுங்கும் டொல்ஃபின்களின் எண்ணிக்கை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை, உடல்நலக் குறைபாடால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருந்தது. வசதி படைத்தவர்கள் ஊரை விட்டு வெளியேறினர். மற்றவர்கள் ஸ்டெர்லைட்டின் பாதிப்புக்கு இரையாகினர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ளாத மக்கள், மீண்டும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 99 நாட்கள் நடத்திய போராட்டம், தமிழக ஊடகங்களில் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஒரு சில அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மட்டும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். 100வது நாளான மே 22 ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டிய காவல்துறையினர், ஆயுதங்களை கையில் எடுத்து, 11 பேரின் உயிரை பறித்தனர். மறுநாளான 23ம் தேதி, அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோரின் உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அச்சத்துடன் கூடிய சோர்வில் ஆழ்ந்தனர் மக்கள்.
போராட்டம் கலவரமான பிறகு, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க பல அமைப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், கண்டனங்கள், எச்சரிக்கைகள் என அனைத்தும் அரசியல் லாபத்திற்காக அரங்கேற்றப்பட்ட நாடகங்களாகவே மக்கள் பார்த்தனர். அதற்கும் அப்பாற்பட்டது தான், தூத்துக்குடி மண்ணில் நடந்து கொண்டிருக்கும், உயிர் காக்கும் போராட்டம்.
பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களின் கவனத்தை இந்த போராட்டம் ஈர்த்தாலும், மாநில அரசிடம் இருந்து விளக்கம் வருவதற்கு 48 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
ஜனநாயக நாட்டில், அறவழியில் போராட்டம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி ஏன் கொடுக்கப்பட்டது? கொடுத்தது யார்? இத்தகைய துயரத்திற்கு பிறகும், தமிழகத்தை ஆளும் அதிமுகவினர் ஏன் இன்னும் தூத்துக்குடி வந்து ஆறுதல் சொல்லவில்லை? போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? என காத்திருக்கின்றனர் அரசு மற்றும் ஊடகங்கள் மீது நம்பிக்கையிழந்த தூத்துக்குடி மக்கள்.
தூத்துக்குடியில் இருந்து நிமிர்வு இதழுக்காக ஊடகவியலாளர் நி ஷா பி.சேகர்-
நிமிர்வு வைகாசி 2018 இதழ்
Post a Comment