இயற்கைவழி இயக்கம்


எமது பாரம்பரிய மரபுசார்ந்த நல்ல விடயங்களை அறிவியல் தளத்துக்கு சமாந்தரமாக எடுத்துச் சென்று எதிர்கால சந்ததியினர் அவற்றை மனித குல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை  வழங்குவதே இயற்கை வழி இயக்கத்தின் நோக்கமாகும். 

எங்களுடைய மரபிலிருந்து கற்றுக்கொண்ட நல்ல விடயங்களை மீண்டும் வாழ்வியல் நடைமுறைக்கு கொண்டுவருவது இதன் பிரதான நோக்கமாகும். இதற்காக பாரியளவிலான செயற்பாட்டுத் தளத்தை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.


மரபுசார்ந்த வாழ்வியலில் அக்கறை கொண்ட நண்பர்கள் குழுவாக இணைந்து கட்டமைத்த இயக்கமே இதுவாகும். இதில் செயற்பாட்டாளர்களே உள்ளனர். ஆரம்பத்தில் வாராவாரம் பண்ணைகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பின்னர் தொடர்ச்சியாக வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரம் இயற்கை அங்காடி இயங்கி வருகின்றது. அதில் இயற்கையாக விளைந்த மரக்கறிகளை யார் வேண்டுமானாலும் கொண்டு வந்து சந்தைப்படுத்த முடியும். முக்கியமாக இயற்கையாகவே விளைந்த மரக்கறிகள், கீரை, இலை வகைககள், உள்ளூர் உற்பத்தி பொருட்களை  மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றோம். இதன் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற உள்ளன.     அதில் முக்கியமாக இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் செய்ய அனைவரையும் ஊக்குவித்து வருகின்றோம்.


எங்களது உணவு, வாழ்வியல் சார்ந்த விடயங்களில் மேலைத்தேயக் கலாச்சாரத்தை பின்பற்றும் போக்கு  அதிகரித்து வருகிறது. அது தான் சரி என்றும்  அது தான் நாகரீகம் என்றும் சொல்கின்ற நிலைமையும் சமீப காலத்தில் வேகமாக  அதிகரித்து இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் எங்களது பாரம்பரியங்கள், மரபு சார்ந்த விடயங்கள் அறிவுபூர்வமானவை, முன்னேற்றகரமானவை என்று நம்புகின்ற ஆட்கள் வேகமாக மாறிவரும் இந்த நிலைக்கு எதிராக வேலை செய்ய தொடங்கி விட்டனர்.  அதனால் இப்போது எமது தாயகப் பிரதேசங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மரபுவழிக்கு திரும்புகின்ற செயற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

எமது பாரம்பரிய மரபு சார்ந்த விவசாயம், கடற்தொழில், உணவு உற்பத்தி, பண்ணைத்தொழில், உணவு பதப்படுத்தல் எல்லாவற்றிலும் இருந்த திறன்களையும் அது தொடர்பான அறிவு முறைகளையும் நாங்கள் இழந்துவிட்டோம். எங்களின் கூட்டுறவு வாழ்வு சிதைவடைந்து விட்டது. பாரம்பரியமாக எங்களின் துறைசார்ந்த முன்னோர்களிடம் இருந்த தொழிநுட்ப அறிவுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படவில்லை. ஏற்கனவே துறைசார்ந்த ஒரு தொழிலை செய்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் வேறு தொழிலுக்கு போகும் போது, அந்த ஆற்றல்கள், நிபுணத்துவம் என்பன அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாமல் போய் விடும் துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது.  அந்த விற்பன்னங்கள்  ஆவணப்படுத்தப்படவுமில்லை என்பது தான் வேதனையானது. தற்போது அவற்றை எல்லாம் மீளத் தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இப்போது தனிப்பட்ட முறையில் இவற்றை புனராக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. ஆனால், அதற்குரிய திறன்கள், ஆற்றல்கள் என்பன        இல்லாமல் உள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் குழுவாக இயங்கவேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள், பயிற்சிக் கருத்தரங்குகள் ஊடாக எங்களுடைய மரபுசார்ந்த வாழ்வியலுக்கு திரும்ப வேண்டும் என விரும்பும் தனிநபர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இணைந்தனர். அப்பொழுது இயல்பாகச் சேர்ந்த ஒரு குழுவாகத் தான் நாங்கள் இயற்கை வழி இயக்கத்தை பார்க்க வேண்டும்.


இயற்கை வழி இயக்கத்தின் பெரும்பாலான ஆட்கள் இதனை ஒரு வருமானமீட்டும் இடமாக பார்க்கவில்லை. புதிய உலக ஒழுங்கில் வரவேற்பு பெறுகின்ற ஒரு விடயமாகவும் பார்க்கவில்லை. இது ஒரு கடுமையாக கொள்கை சார்ந்து இறுக்கமான நிலைப்பாடு உடைய மரபுசார்ந்த வாழ்வியலாகத் தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரபு சார்ந்த வாழ்வியலில் ஏற்பட்ட  மாற்றங்கள்,   எங்களுடைய மக்களுக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. வழமையாக எங்கள் பிரதேசங்கள் முற்போக்கான மாற்றங்கள், மேம்பாடுகளில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், இந்தப் பரப்பை கவனிக்காமல் நாங்கள் பின்னுக்கு நிற்கின்றோமோ என்கிற ஏக்கமும், கேள்வியும் எங்களிடம் இருந்தது. அதன் ஆரம்பமாகவே இயற்கை வழி இயக்கம் ஊடாக தன்னார்வலர்கள் ஒன்று கூடும் நிலை ஏற்பட்டது.

இயற்கை வழி இயக்கத்தில் இணைந்துள்ள தனிநபர்கள், குழுக்கள், ஒழுங்கு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தனியார் வியாபாரங்கள் எல்லாமே ஏற்கனவே இயங்கி வந்தவை. அவற்றுக்கிடையில் ஒரு தொடர்பை மேம்படுத்துவது, தோழமை உணர்வைக் கட்டியெழுப்புவது ஊடாக எங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

அல்லைப்பிட்டியை சேர்ந்த ஒரு இளம் விவசாயி கிரின் மேற்கைத்தேய ஆர்வம் கொள்ளாமல் இயற்கை விவசாய, கால்நடை வளர்ப்பில் தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.  இப்படியான நிலையில் இயற்கை வழி இயக்கத்தின் தேவை எங்கே வருகின்றதென்றால், அவர் இயற்கை விவசாயம் சார்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தல், அதனை ஏனைய மக்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லல், அதற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அது ஒரு வலையமைப்பாக அவரது முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் நம்மாழ்வார் போன்ற தனி நபர்கள் விதைத்த விதைகள் தான் இன்று பெரு விருட்சங்களாக மாறியுள்ளன. ஏற்கனவே இயற்கை வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் பயனாளர்களை வலுவூட்டுவது தான் இயற்கை வழி இயக்கத்தின் பிரதான பணியாகும்.இயற்கைவழி இயக்கம் என்பது தனியே வேளாண்மைக்கான இயக்கம் அல்ல. இதனை ஒரு முழுமையான மரபுசார்ந்த வாழ்வியலுக்கு திரும்புகின்ற பயணமாகத் தான் பார்க்கின்றோம். மேலைத்தேய பொருளாதாரம் எங்களிடம் அளவுக்கு அதிகமாக நுகரும் கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளது. இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்கின்ற உச்ச நுகர்வு  கலாச்சாரம் இப்போது வந்துள்ளது. தேவைக்கதிகமாக வாங்கி குவிக்கும் கலாச்சாரம் இப்போது பிரபலமடைந்துள்ளது. நாங்கள் முன்னைய காலங்களில் அப்படி இருக்கவில்லை. எங்கள் தேவைக்கும் குறைவான வளங்களை வைத்துக்கொண்டு நிறைவாக வாழ்ந்த சமூகமாக தான் நாங்கள் இருந்திருக்கிறோம். இப்படி நாம் தற்சார்பு பொருளாதாரத்தை விளங்கி வாழ்ந்து வந்தபடியால் தான் கொடிய போர்க்காலத்திலும் துவண்டு போகாதசமூகமாக நாங்கள் இருந்து வந்திருக்கிறோம்.

இன்றைய இளைய தலைமுறை உச்சபட்ச நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உடலுழைப்பின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக உணவு மருத்துவம் தினசரி செயற்பாடுகள் சார்ந்ததாக இருக்கும். நீரழிவு வருவதற்கான பிரதான காரணம் சீனியை அதிகம் பாவிப்பதல்ல, உடலுழைப்பு இல்லாத எங்கள் வாழ்க்கை முறையும் ஆகும்.  நாங்கள் அசையாமல் கணனிக்கு முன்னால் குந்திக் கொண்டிருக்கின்ற நிலை உருவாகி வருகிறது. ஒருவர் என்ன தொழிலில் இருந்தாலும் வீட்டில் சிறிய வீட்டுத்தோட்டம் இருப்பதனை, கால்நடைகள் வளர்ப்பதனை  உறுதிப்படுத்த வேண்டும்.    மூலிகை தாவரங்களை வீட்டில் வளர்ப்பதன் ஊடாக நோய்களை வருமுன் காப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கான விழிப்புணர்ச்சியையும் இயற்கை வழி இயக்கம் ஏற்படுத்தி வருகிறது. மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த முறை என்பது எங்கள் வாழ்வு முறையாக மாற்றமடைய வேண்டும்.

வாழ்வியல் என்று பார்க்கும் போது பல விடயங்கள் இருக்கின்றன. அதற்குள் சிறார்களின் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. என்னதான் இன்று கல்வியில் தொழிநுட்பங்கள் வளர்ந்தாலும், 3னு இல் மாணவர்களுக்கு கற்பித்தாலும், கடற்கரைக்குக் கொண்டு போய் கடலை காட்டினால் தான் பிள்ளைகள் அதனை உண்மையாக உணர முடியும். இன்றைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகளுக்கு கத்தரிச் செடியையும், வெண்டிச் செடியையும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஏன் பல பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு கூட இது தெரியாமல் உள்ளது. இதனை அறிவின் மேம்பாடு என்று சொல்வதா? அல்லது அறிவின் குறைபாடா என்று எண்ணத் தோன்றுகிறது.


எங்களுடைய படிப்பு, பட்டம் எல்லாம் நாம் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்க்கையை நடாத்துவதற்கும், ஒருங்கிணைந்து வாழ்வதற்குமான ஒரு அடிப்படையாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம்.   சிறு பிள்ளைகள் இயற்கையில் இருந்து பலவற்றை கற்றுக் கொள்ள பாடசாலைகள் அடிப்படியாக அமைய வேண்டும். பாடசாலைகளிலும் சிறிய அளவிலான மரக்கறித்தோட்டம் அமைவதனால் மாணவர்கள் அங்கே தோட்டம் உருவாக்கல் தொடர்பிலான பயிற்சிகளை பெறக் கூடியதாக இருக்கும்.

சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டுமென்றால் முதலில் அவர்களது உடலை நல்ல செயற்திறன் (Active)) மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும்.         உடலை நல்ல செயற்பாட்டு நிலையில் வைத்திருந்தால் மட்டுமே மனமும் புத்துணர்வு மிக்கதாக இருக்கும். இது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு ரீதியாக ஒரு வேலையும் செய்யாமல் இருந்தோம் என்றால் எங்களுடைய சிந்தனைப்பரப்பு, ஞாபக சக்தி எல்லாமே பாதிக்கப்படும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முன்னைய காலங்களில் அதிகாலையில் தோட்டத்துக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு படிக்கச் சென்ற எங்களுடைய தலைமுறை பல்வேறு சாதனைகளையும் நிலைநாட்டியிருக்கிறது.

இன்று மாணவர்களை கொண்டுபோய் நீ படிப்பதற்குரிய ஆள் படித்தால் மட்டும் போதும் என்று கூறி பாடசாலையில் விட்டு விடுகிறோம். அப்படியான பலர் 9 ஆம் ஆண்டோடு பள்ளிப்படிப்பை விட்டு விலகிச் செல்வதனை நடைமுறையில் காண்கின்றோம். எங்களினுடைய குடும்ப அமைப்புக்களில் சம்பாதிக்கும் பொறுப்பு குடும்பத் தலைவருக்கு மட்டும் என்று இருக்கவில்லை. உதாரணமாக ஒரு வீட்டில் ஆடு வளர்த்தால் அதற்கு இலை, குழை, கஞ்சி வைப்பதென்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாடுபடுவார்கள். பொதுவாக இலைகளை போடுவதில் சிறார்களின் பங்கும் அதிகமாக காணப்படும்.   ஆனால், இப்போது அதெல்லாம் சிறுபிள்ளைகளின் வேலை அல்ல என்பதாக பிழையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.  இப்போது நாங்கள் மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்க பிள்ளைகளை பழக்குகிறோம்.  எங்களுடைய மரபு சார்ந்த வாழ்வியலை மீட்டெடுப்பது ஒன்று தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்வழியாகும்.


காலையில் எழுந்ததில் இருந்து பார்த்தோமானால், முன்னைய காலங்களில் வேப்பம் குச்சியும், கருவேல பற்பொடியையும் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்று பற்பசைகளில் வேம்பு, கருவேல பவுடர் கலந்துள்ளதாக கூறி பன்னாட்டு நிறுவனங்கள் விற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலிலும் மரபுசார்ந்த நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நோக்கி நாம் திரும்ப வேண்டும். அப்படி வாழும் போது செலவுகளும் மட்டுப்படுத்தப்படும். குடும்பத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் இருக்கும்.

இப்போது கூடுதலாக பலரும் தனித்தனி வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். பொதுப்போக்குவரத்தை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இது எரிபொருள் பாவனையில் எங்களின் தங்கியிருப்பை அதிகரிக்கிறது.  உதாரணமாக நாங்கள் குடிக்கும் தேனீரிலேயே  எரிபொருளின் பங்களிப்பு கலந்துள்ளது. எப்படியென்றால், உதாரணமாக தேயிலையை மதிப்புக்கூட்டும் இயந்திரங்களில் இருந்து அதனை சந்தைக்கு கொண்டு செல்லும் வரை  எத்தனை ஆயிரம் லீட்டர் எரிபொருளை செலவழிக்கிறோம்.  இதற்காக நாம் தேனிர் குடிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதல்ல.  அதன் பாவனையை மட்டுப் படுத்த வேண்டும் என்பதே அர்த்தம்.  நாங்கள் எங்களுடைய பொருளை உற்பத்தி செய்வதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணையை நம்பி இருப்போமாக இருந்தால், அது ஒருகாலத்தில் தடைப்படுமிடத்து எம் உணவு உற்பத்தி சுழற்சி பாதிக்கப்படும்.

உதாரணமாக எங்களுடைய முழு பொருளாதார சுழற்சிக்குள் சுய சார்பு பொருளாதாரம் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி  பாவிக்கின்ற கைப்பையில் இருந்து நடை, உடை, பாவனை, பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களிலும் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று பலரும் ஓய்வை விரும்பி பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்கிறார்கள். ஏன் வீட்டுத்தோட்டம் கூட ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்கு முயற்சி தான். ஓர் பிரதேசத்தில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கும் அதேவேளை அதற்குச் சமமாக அங்குள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து மாதிரிப் பண்ணை (Community Farming) ஒன்றையும் ஆரம்பிக்கலாம்.  அதுவும் மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்கும் ஒரு செயற்பாடு தான்.  வாழ்வியலின் அடிப்படையே இது தான். இந்தப் பூமி எங்களுக்கானது மட்டும் அல்ல. எங்களுடைய வாழ்க்கைக் காலத்தில் எந்தவிதத்திலாவது பயன்படுத்திப் போட்டு கழிவுகளை அப்படியே விட்டுச் செல்லும் இடமுமல்ல. அப்படி எங்களின் முன்னோர்கள் சிந்தித்து  இருந்தால் இன்று எங்கள் தலைமுறையே இருந்து இருக்காது.

அன்றாட வாழ்வியலில் மேலும் பார்த்தால், பிளாஸ்டிக் இன் பாவனை அதிகரித்து வருகிறது.  இன்றைய உலகில் பிளாஸ்டிக் பாவனை முற்றாகத் தவிர்க்கப் படக்கூடியதல்ல. உதாரணமாக, தொழில்நுட்பச் சாதனங்களுக்கும் மருத்துவத் துறைக்கும் பிளாஸ்டிக் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது.  அதற்காக பிளாஸ்டிக்கை எல்லாத் துறைகளிலும் பாவிப்பதென்பது சூழலை மாசுபடுத்துவதிலேயே கொண்டு சென்று நிறுத்தும். மேலும் பிளாஸ்டிக் பாவனையை இயன்றளவு தவிர்ப்பது பிராந்திய பொருளாதார அபிவிருத்தியை கொண்டு வருவதற்கும் உதவும். உதாரணமாக நாங்கள் ஒவ்வொருவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மேசை கதிரைகளை கூட பிளாஸ்டிக்கில் வாங்குவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட தளபாடங்களையே வாங்குவேன் என உறுதியெடுத்துக் கொண்டால் நாளை இது ஒவ்வொரு இடமாக பரவி இறுதியில் சமூக மாற்றமாக மலரும். யப்பானுக்கு சென்று அமெரிக்க பொருளொன்றை விற்றால், அது எவ்வளவுதான் விலை குறைவாகவும் சிறந்ததாகவும் இருந்தாலும் அதற்கு மாற்றாக யப்பானிய பொருள் கிடைக்குமாயின் கூடுதலாக அதனையே யப்பானியர்கள் வாங்குவார்கள். ஏனெனில் யப்பானியர்கள் தற்சார்பு பொருளாதாரத்தில் கூடுதல் அக்கறை உள்ளவர்கள்.

எங்களுக்கு பிறகு வரும் சந்ததிகளும் தொடர்ச்சியாகவும் நிறைவாகவும் இந்தப் பூமியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னுமொன்றையும் யோசிக்க வேண்டும். பூமியானது மனிதர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள சகல உயிரினங்களுமான பொதுவான வாழ்வியல் சூழல் ஆகும். எமது செயற்பாடுகளால் அவ்வுயிரினங்கள் வாழும் சூழலை மாசு படுத்துவோமாக இருந்தால் அவை அழிவின் விழிம்புக்குத் தள்ளப் படும். இதனால் அவற்றால் எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.  சூழலை மாசுபடுத்தலைத் தவிர்த்தால் மட்டும் போதாது.  அவ்வுயிரினங்களும் நாமும் வாழ்வதற்கான வாழ்வாதாரங்களையும் நியாயமான முறையில் பங்கிட பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக கிழக்கு மற்றும் வன்னியின் சில பகுதிகளில் யானை புகுந்து மனிதர்களின் வாழ்விடத்தை அழிப்பதாக கேள்விப்படுகிறோம்.   யானைகள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த தடங்களில் எல்லாம் வீடுகளை கட்டி வைத்து அதன் வாழ்விடங்களை குறுக்கி விட்டு யானை வந்து அடிக்கிறது என்று கவலைப்படுகிறோம். இது யாருடைய தவறு?  அதேவேளை மட்டக்களப்பில் சில கிராமங்களில் பனைவடலிகளை நட்டு இயற்கை வழியில் யானைகளால் ஏற்படும் அழிவைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப் படுவதை இங்கு குறிப்பிட வேண்டும்.

எங்களுடைய மரபு சார்ந்த விடயங்களில் அறிவியல் சார்ந்த தொடர்புகளை கண்டுபிடித்து அதனை மேம்படுத்தி ஏனைய இனங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எம் சமூகத்தில் ஒரு தேக்கநிலை காணப்படுகிறது. அது என்னவென்றால் இன்றைய இளம் சந்ததியினர் பெரும் பரப்பில் வேலை செய்வதற்கான திறனற்று உள்ளார்கள். அல்லது அக்கறையற்று  இருக்கிறார்கள்.எல்லாவற்றையும் நாங்கள் எங்களுக்குள்ளேயே வைத்திருக்கப் பார்க்கிறோம். ஏனையவர்களோடும் பகிர்ந்து வேலை செய்யும் நிலையிலும் இல்லை. எங்களிடம் இருக்கின்ற தொழிநுட்பங்களை வெளியாட்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழக ஆய்வுத்துறையை சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்புக்கு ஆய்வு செய்யும் போது கூட இதனால் சமூகத்துக்கு ஏதேனும் உபயோகம் இருக்கா? இது பொருளாதாரத்தை அல்லது அரசியல் ஸ்திரமின்மையை அதிகரிக்குமா என்பது தொடர்பிலும் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். வருங்காலத்தில் இயற்கை வழி இயக்கம் மரபுசார்ந்த வேளாண்மையில் ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு அது தொடர்பிலான அறிவையும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்  உதவும்.

தமிழ்நாட்டில் செயற்படுத்தப்படும் விடயங்களை இன்னும் ஒரு படி மேலே சென்று அதனை ஆராய்ந்து அதனை ஒழுங்குபடுத்தி இன்னும் பலருக்கும் படிப்பிக்கக் கூடிய மாதிரி செயற்றிட்டங்களை வகுக்க வேண்டும். உதாரணமாக பஞ்சகாவியாவை எப்படி வர்த்தக நோக்கில் பெருவிவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். லீகுவான்யூ 70 களில் சொன்ன விடயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அரசு வடக்கு கிழக்கு தமிழர்களை புறக்கணித்து பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது. ஏனெனில் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் மட்டுமல்ல, புத்தாக்க சிந்தனை உள்ளவர்கள், எதையும் ஆய்வு ரீதியான மனப்பாங்கில் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். வேலணையில் ஒரு விவசாயி பஞ்சகாவியாவில் 5 விதமான கலவைகளை உருவாக்கி, அதனை தனித்தனியே பயிர்களுக்கு உபயோகித்து அதன் வளர்ச்சி, பூச்சி தாக்கு திறன்களை தனித்தனியே ஆய்வு ரீதியில் தினமும் அவதானித்து பதிவு செய்து பல நல்ல முடிவுகளையும் பெற்றுள்ளார். அரசாங்கமோ, துறைசார்ந்த பல்கலைக்கழகமோ, ஆய்வு நிபுணர்களோ  செய்யவேண்டிய வேலையை அந்த விவசாயி மட்டுமே பார்க்கிறார். இவ்வாறான விவசாயிகளை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள், துறைசார்ந்த நிபுணர்களுடன் ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இயற்கை வழி இயக்கம் இயங்கும்.

இன்றைய காலத்தில் இளம் பிள்ளைகளிடம் பிழையான சிந்தனைகள் புகுத்தப்படுகின்றன. ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்று சொன்னால் அது தகவல் தொழிநுட்பத்தில் வளர்ந்தால் மட்டும் தான் வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அவுஸ்திரேலியாவின் பொருளாதாரம் பால்மாட்டை நம்பி இருக்கிறது. நோர்வேயின் பொருளாதாரம் மீனை நம்பி இருக்கிறது.

 ஜேர்மனியின் பொருளாதாரம் சிறுகைத்தொழில்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது.  சீனா ஜப்பான் கூட அடிப்படைக் கைத்தொழில்களை நம்பியே உள்ளன. அமெரிக்கா கூட தகவல் தொழிநுட்பம் சார்ந்த வேலைகளை புறநிறைவேற்று (outsourcing) அடிப்படையில் இந்தியாவிடம் கொடுக்கிறது. ஆனால் விவசாயத்தையும், இதர அடிப்படை தேவைகளையும் தானே நிறைவேற்றிக் கொள்கிறது. பெருமளவு உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது. எங்களின் உணவை எம்மால் உற்பத்தி செய்ய முடியாமல், எல்லோரும் கணனிக்கு முன் அமர்ந்து வேலை செய்தால் ஒரு காலத்தில் தகவல் தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் உணவு இறக்குமதிக்கும் பெரும் பணம் தேவைப்படும் நிலையேற்பட்டால் எம் பிரதேசங்களில் உயிர்வாழ்ப்பவர்களின் நிலை என்ன? ஆனால் தகவல் தொழிநுட்ப துறையை சேர்ந்தவரராக இருந்தாலும், ஒரு சிறிய நிலத்தை ஒதுக்கி வார இறுதிநாள்களில் ஆவது வீட்டுத் தோட்டப்  பயிர்செய்கைளை மேற்கொண்டு எம் சுய மரக்கறித் தேவைகளை ஆவது பூர்த்தி செய்து கொள்ளலாம்.

போசனைப் பெறுமானங்கள் என்கிற பெயரில் எமது உணவு திருடப்பட்டு வருகிறது. காலை உணவின் முக்கியத்துவம், உணவின் ருசியை அனுபவித்து சாப்பிடுகின்ற நிலை இன்று இல்லை. இயற்கையாகவே விளையும் கீரைவகைகள், இலைவகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள போசனைக் கூறுகளை விடவா மருந்தகங்களில் விற்கப்படும் பன்னாட்டு சத்து மாக்களில் அதிகம் இருந்துவிடப் போகிறது.  குழந்தைகளுக்கு ஒரு மா, கர்ப்பிணி அம்மாவுக்கு ஒரு மா, வயோதிபர்களுக்கு ஒரு மா என்று பல கோடிகளில் புரளும் பலதேசிய நிறுவனங்களின்  குப்பைக்கூடையாக எமது பிரதேசங்கள் விளங்குகின்றன.

இன்று மக்கள் மத்தியில் சிறுதானியப் பயன்பாடு அறவே குறைந்துள்ளது. எம் முன்னோர்களின் ஆரோக்கியத்தில் குரக்கன், சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் பங்கு அதிகம். பீட்ஸா, கே.எப்.சி ஐ நோக்கி ஓடும் எம் இளைய தலைமுறை எம் பாரம்பரிய உணவுகளை கூட மறந்து வருகிறது. ஆனால் இப்படியான நிலையிலும் வடக்கு விவசாய அமைச்சால் செயற்படுத்தப்படும் அம்மாச்சி உணவகங்கள் மீண்டும் இயற்கையை நோக்கி திரும்புகின்ற நிலையை ஊக்குவித்து வருகின்றன. அங்கே எங்கள் பாரம்பரிய உணவுகள் விற்கப்படுகின்றன. அதனை மக்கள் முண்டியடித்து வாங்கி உண்டு வருகின்றார்கள்.

எங்களுக்கு நன்மை செய்கின்ற நுண்ணங்கிகளோடு இணைந்த வாழ்வியல் தான் எம்மத்தியில் முன்பு இருந்தது. வீட்டு முற்றத்தில் அம்மாக்கள் சாணத்தால் மெழுகும் போது நன்மை செய்யும் கிருமிகள் தீமை செய்யும் கிருமிகளை அண்டவிடாமல் செய்யும் நிலை இருந்தது. இன்று அதனை  effective micro organism technology என்று சொல்கிறார்கள். இது தொடர்பில் பெரும் ஆய்வுகள் எல்லாம் ஜப்பான் உட்பட பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போன்று எமது நாட்டிலும் ஆய்வுகள் நடத்தப் படவேண்டும். தனியே விழிப்புணர்வு மட்டுமல்லாமல், கிராமிய, பிரதேச சபையில் இருந்து அரச உயர்மட்டம் வரையும் அதனையும் தாண்டி பிராந்திய நாடுகளின் கொள்கை முடிவெடுக்கப்படும் இடங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும். கட்டமைப்புக்கள் உருவாக்கப் படவேண்டும். உதாரணமாக இந்துசமுத்திர கடல்வளத்தின் நிலை பெறுகையை உறுதிப்படுத்துவது என்பது அதன் எல்லைகளோடு சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளுடையதும் பிரச்சினை. இலங்கை அரசு இழுவை மீன்பிடியை தடை செய்வதாக ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் ஏதும் நன்மை விளையப் போகின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், இந்திய அரசும் அப்படியானதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தான் உண்மையில் மாற்றம் வரும்.  பிராந்திய மட்டத்தில் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.       
கொள்கைகள் எனப்படுபவை துறைசார்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, அரசியல்வாதிகளால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.  அவற்றினுடைய நன்மை, தீமைகள் மக்கள் மத்தியில் ஆராயப்பட்டு அந்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளே கொள்கைகளாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கொள்கைகளை தான்தோன்றித்தனமாக தீர்மானிக்கின்றவர்களாக அரசியல்வாதிகள் இருக்க முடியாது. யாழ்மாவட்டத்தில் நீரியல் வளர்ப்புக்கென 3000 ஹெக்டேயர் கடற்பரப்பை அரசு ஆக்கிரமித்துள்ளது. மாகாணத்தில் இருக்கின்ற யாருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படுகின்றது. எங்களுடைய அரசியல்வாதிகளுக்கும் இது தொடர்பில் தெரியாது. பத்தோடு பதினொன்றாக சட்டமாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. இப்படியான முடிவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து கருத்துக்களை அறிந்து கொள்வது தொடர்பில் கருத்துக் களங்கள் பல்வேறு மட்டங்களில் உருவாக்கப்பட வேண்டும். அரசு சார்ந்த, தனியார் சார்ந்த நிகழ்வுகளிலிலும் இயற்கை வழி இயக்கத்தை சேர்ந்தவர்களின் பங்குபற்றுதல் அவசியமானது. எங்களுடைய கருத்துக்களை அங்கே கூற அது வசதியாக இருக்கும்.

இயற்கை வழி இயக்கம் கொள்கைகளை இறுக்கமாக பேணுவதற்கும், செயற்பாடுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் வருமான வழி முக்கியமானது. இயற்கை அங்காடி, களப்பயணங்கள், கருத்துக் பகிர்வுகள், விதைப்பயணம், வேளாண் காடாக்கம், இயற்கை வழி ஆய்வு செயற்பாடுகள் என்பனவற்றுக்கு நிதி வேண்டும்.  கூட்டுப்பண்ணை, சில நிறுவனங்களை நடாத்தல் போன்றன மூலமாக சிறிய வருமானங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதியை மட்டும் நம்பிச் செயற்படும் ஒரு அமைப்பாக இருந்தால் அது காலப்போக்கில் தனது குரலை உயர்த்துவதற்கான தன்மையை இழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

வடிவமைப்பில் நாங்கள் எப்படி இயற்கையின் உதாரணங்களை பின்பற்றலாம்? புதிய தொழிநுட்பங்களை உருவாக்குவதில் இயற்கையில் இருக்கும் உதாரணங்களை எவ்வாறு நாம் பிரயோகிக்கலாம்? இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு மாணவர் மத்தியில் தூண்டுவது? சூரிய மின்கலன்களை பெரிய அளவில் எப்படி பொருத்துவது என்ற கேள்வி துபாயில் எழுந்த போது, பலரும் பல்வேறு ஒழுங்கமைப்புக்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் வட்டவடிவ இலை ஒழுங்கு, ஒன்று விட்ட இலை ஒழுங்கு என நான்கு செடிகளை பிடுங்கிக் கொண்டு வந்து இரண்டே நிமிடங்களில் சூரிய மின்கலங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டுமென விளக்கினார். மற்றவர்கள் எல்லோரும் சொன்னதை விட இது மிகச்சரியாக இருந்தது. மற்றைய வடிவங்களை விட தாவரங்களின் இலை ஒழுங்கில் சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு பார்த்த போது மற்றைய ஒழுங்கமைப்புகளை விட  பல மடங்கு சூரிய ஒளியை நுகரும் ஆற்றலை அது பெற்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட்து. உச்ச அளவில் சூரிய ஒளியை பயன்படுத்துவது தான் சூரிய மின்கலத்தின் நோக்கம். இயற்கையிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. மழை நீரை எப்படி உச்ச வினைத்திறனுடன் சேமிப்பது? தொடர்பிலும் யோசிக்கலாம். மாணவர்களிடையே பிரச்சினைகளை கொடுத்து அதற்கு இயற்கையிடம் இருந்து தீர்வைக் கொண்டுவரும்படி கூறலாம். இவற்றை போட்டியாக கூட வைக்கலாம். மாணவர்களிடையே கலை, காலாச்சார அம்சங்கள் ஊடாக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் .

சுழற்சிப் பொருளாதாரம், நேர்கோட்டுப் பொருளாதாரம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். கூடுதலாக பலதேசிய பெரு நிறுவனங்கள் முன்னெடுப்பது நேர்கோட்டுப் பொருளாதாரம். அதன்படி தன்னுடைய உச்ச இலாபத்தை எடுக்க வேண்டும். குறித்த உற்பத்தியால் வரும் குப்பை கழிவுகளை எல்லாம் அடுத்தவரின் சூழலுக்குள் வீசிவிட்டு தன்னுடைய இடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் போக்கையும் காணலாம்.

சுழற்சி முறை பொருளாதாரத்தில் நான் தேவையானதை மட்டும் அளவாக பெற்றுக் கொண்டு எதிர்கால சந்ததியினர், பூமிக்கு எவ்வித கெடுதல்களை ஏற்படுத்தாத மாதிரி எனக்குரிய பங்களிப்புக்களை அடுத்தவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கான பங்களிப்புக்களை நான் கொடுக்கிறேன் என்பதனை உறுதிப்படுத்தி வாழ்வியலை அமைத்துக் கொள்வதே  சுழற்சி முறை பொருளாதாரமாகும்.

நாங்கள் சின்ன சின்ன விடயங்களை செய்து கொண்டு போவதற்கான அடித்தளம் எங்கிருந்து வருகிறது என்றால், பெரிய பெரிய கொள்கை வகுப்புத்திட்டங்களில் இருந்து தான் வருகிறது.  தத்துவார்த்தம் என்பது முக்கியமானது. இதைத் தான் இயற்கை வழி இயக்கம் செய்யப்போகிறது. சுயசார்புப் பொருளாதாரமே அதன் தத்துவம். பிராந்திய ரீதியில் பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களுடனும் இணைந்து வேலை செய்யலாம். நுகர்வு போக மித மிஞ்சிய உற்பத்திகளை தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும். சுழற்சிப் பொருளாதாரத்தை பின்பற்றுவது தான் சிறப்பானது.  எது எங்கள் பொருளாதாரக் கொள்கை? எம் தேசத்தின் அபிவிருத்தி எவ்வாறு திட்டமிடப் பட வேண்டும்? எப்படிப்பட்ட சுற்றுலாத்துறை வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும்? எப்படிப்பட்ட கடல் சார் தொழில் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும் என்ற விடயங்களில் எல்லாம் இந்த தத்துவமே அடிப்படையாக இருக்கும்.

இப்படியான எல்லாப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடிய மாதிரி  துறை சார்ந்த நிபுணர்களை     கொண்டமைந்த ஒரு குழுவாக எதிர்காலத்தில் இயற்கைவழி இயக்கம் வளரும். கொள்கை என்பது, இது சாத்தியமா இல்லையா என்பதை யோசித்து எடுக்கும் முடிவல்ல. மக்களுக்கான கொள்கையை துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வகுத்து அதனை நோக்கி எல்லாவற்றையும் வளைப்பதே எம் நோக்கமாகும்.


வைத்தியகலாநிதி நடராஜா பிரபு 
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.