பதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்
இலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோருக்கு மட்டும் தான் எம் தேசத்தின் மீதான கரிசனை இருக்கிறது. இந்த மாத இதழில் நாங்கள் பார்க்க இருப்பதும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் தேசத்தின் மீதான கரிசனை, மக்கள் மீதான ஈடுபாடும் அக்கறையும் எள்ளளவும் குறையாத ஒரு நல்ல மனிதத்தை பற்றித் தான். அழகாக பேசுகிறார் சண்முகநாதன் சுகந்தன்.
நாட்டு சூழ்நிலைகள் மோசமடைய 1989 ஆம் ஆண்டு இங்கிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து இருந்தேன். பின் 2014 ஆம் ஆண்டு பிள்ளைகளை கூட்டி வந்து ஊரை, உறவுகளை காட்ட வேண்டும் என்கிற காரணத்தால் தான் இங்கு வந்தேன். இங்கே பிஞ்சு வாழைக்குலையை கூட ஒரு ஆபத்தான மருந்தை அடித்து ஒன்றிரண்டு நாட்களுக்குள் பழுக்க வைத்து விடுகிறார்கள். உயிருக்கே ஆபத்தான இந்த முறைகள் தான் இப்போது எம் தேசத்தில் பெருகியுள்ளன. இயற்கையிலிருந்து நாம் வேறுபட்டு நாம் எங்கேயோ பயணிக்கிறோம். இந்நிலை மிகவும் ஆபத்தானது.
வரணியில் உள்ள தென்மராட்சி பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணி நடாத்தும் வடிசாலையில் இருந்து பனஞ்சாராயம் விநியோகிக்கும் பொறுப்பை செய்து தருமாறு கேட்டார்கள். அதனை நான் எடுத்து செய்யவேண்டிய முக்கிய காரணம் என்னவெனில், 15 முன்பள்ளிகளுக்கு குறித்த சங்கம் உதவி வருவதோடு 3000 குடும்பங்கள் அதனால் பலன் பெற்று வருகின்றன. வடமாகாணத்தின் தனிச் சொத்தான பனையிலிருந்து வரும் பொருட்களை சரியான முறையில் சந்தைப்படுத்தினால் ஒரு அரசை இயக்குவதற்கு தேவையான வருமானத்தையே அதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற உண்மை எனக்கு தெரிய வந்தது. ஆனால், இங்கே அந்த வளத்தை சரியான முறையில் உபயோகிக்கவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்தது.
கள் உற்பத்தியை சரியான முறையில் விநியோகித்தாலே பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். கள்ளை பெரியதொரு கொள்கலன் ஊர்தியில் எடுத்துச் சென்று வெளிமாவட்டங்களில் விநியோகம் செய்தோம். நல்லபடியாக விற்பனை அமைந்தது. அந்த நேரம் என் மருத்துவ நண்பர் சுரேந்திர குமார் என்னிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு "அமெரிக்காவில் இருந்தும்இ இந்தியாவில் இருந்தும் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் பதநீர் கேட்கிறார்கள். அதனை எடுத்து தர முடியுமா எனக் கேட்டார் " அப்போது பதநீர் இங்கு இல்லை. அப்போது பனை அபிவிருத்தி சபையை சேர்ந்த மூத்த அலுவலர் ஒருவரை அணுகிய போது அவர் கிளிநொச்சியில் இருந்து எடுத்து தந்தார். 15 போத்தல் எடுத்து கொடுத்த போதுஇ அதன் சுவையை அவர்கள் ரசித்து ருசித்து கடைசி சொட்டு வரை குடித்துவிட்டு நாளைக்கும் கிடைக்குமா எனக் கேட்டார்கள். அதிலுள்ள போசனைக் கூறுகளை மருத்துவர் விளங்கப்படுத்தினார். அதனை பின் இணையத்தில் தேடிப் பார்த்த போது ஒரு குழந்தைக்கு தேவையான போசனைக் கூறுகளில் பெரும்பாலானவை பதநிரில் இருப்பதனை அறிய முடிந்தது. அந்த நேரம் தான் நாங்கள் இதனை எவ்வாறு வர்த்தக நோக்கில் விற்கலாம் என யோசிக்க தொடங்கினோம்.
பனை அபிவிருத்தி சபையின் ஓய்வுபெற்ற அதிகாரியான தியாகராஜா பன்னீர்செல்வம் அவர்கள் தொழிநுட்ப வழிகாட்டியாக விளங்கினார். அவரது அனுபவங்கள் தான் இன்று சீரிய முறையில் பதநீர் உற்பத்தி செய்ய காரணமாக உள்ளது. பல்வேறு மேம்படுத்தல்களை அவர் செய்து தந்துள்ளார். பதநீரை விநியோகம் செய்வது என முடிவெடுத்த பிற்பாடு பல்வேறு சிக்கல்களையும் எதிர்நோக்கினோம். முதலாவது பதநீரை பதப்படுத்தி சந்தைப்படுத்த சரியான போத்தல்கள் இல்லை. போத்தல்களை வைத்து அனுப்பும் சரியான பெட்டிகள் இல்லை. முன்னைய காலங்களில் வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய போத்தல்களை தான் மீள உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அவற்றை மீள பயன்படுத்தும் போது கூட அதனை சரியான முறையில் கழுவுவதில்லை. இந்தக் குறையைப் போக்குவதென்றால் பதநீரை புதிய போத்தல்களில் அடைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. உடனே கொழும்பு சென்று அதற்கான இடத்தை கண்டுபிடித்து புதிய போத்தல்களில் அடைத்து பதநீரை விற்பனை செய்யக் கூடியதாக இருந்தது. சரியான விதத்தில் தகவல்கள் அடங்கிய மக்களைக் கவரும் லேபிள்களும் உருவாக்கினோம்.
தற்பொழுது பதநீரை பண்டத்தரிப்பு பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் மாத்திரமே உற்பத்தி செய்து வருகின்றது. மேலும் வடக்கிலுள்ள ஐந்து பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் பதநீரை. உற்பத்தி செய்ய முயற்சித்து வருகின்றன. பதநீருக்கான விளம்பர மேம்படுத்தல்கள், விற்பனைகளை எங்கள் குழுவினர் கவனித்து செய்து வருகின்றார்கள். இங்கு ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒரு கடையில் பதநீரை கிடைக்க வழிவகை செய்திருக்கிறோம். சிங்கள ஊர்களில் பதநீருக்கு கடும் கிராக்கி உள்ளது. பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் பதநீரை அறிமுகப்படுத்தி உள்ளோம். அடுத்த வருட இறுதிக்குள் எல்லா ஊரில் உள்ள பெரும்பாலான கடைகளில் பதநீர் கிடைக்கும். பதநீரை வருடாந்தம் 8 மாதங்கள் தான் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். குறித்த 8 மாதங்களில் பதநீரை சரியாக பெற்றாலே மீதி 4 மாதங்களையும் பூர்த்தி செய்ய முடியும். சில சங்கங்களில் பதநீர் உற்பத்தியை மேம்படுத்த புதிய இயந்திரத் தொகுதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். எங்களிடம் நல்லதொரு குழுவினர் உள்ளார்கள். அதனால் இந்த விநியோகத்தையும் சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தற்போது பதநீர் vs என்னும் வர்த்தக நாமத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு பலர் கள்ளில் இருந்து தான் பதநீர் வருவதாக நினைக்கிறார்கள். பதநீர் தான் மணித்தியாலங்கள் ஆக ஆக நொதித்து கள்ளாகும். இப்பொழுது நாங்கள் பதநீரை சில பாடசாலைகளுக்கும் விநியோகித்து வருகிறோம். அது மாணவர் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது. பதநீரில் உள்ள போசனைக் கூறுகளை ஒருவர் நன்கு அறிவாரானால் எங்களுக்கு இயற்கை தந்த கொடையை ஒரு போதும் வீணாக்க விரும்ப மாட்டார்.
பதநீரைப் போன்று கள்ளுக்கும் மருத்துவ குணமுள்ளது. போதியளவு வழங்கலும் உள்ளது. 1972 ஆம் ஆண்டு 27000 சீவல் தொழிலாளிகள் இருந்துள்ளார்கள். தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து குறைந்து வந்து, தற்போது 12000 அளவிலான சீவல் தொழிலாளிகளே இருக்கிறார்கள். அதில் 8000 பேருக்கே வேலை உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எங்கள் மண்ணின் முக்கிய தொழில்துறை ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது தொடர்பில் யாரும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. கூட்டுறவு சங்கங்கள் இவ்வளவு நாளும் என்ன முறைகளில் கள்ளை பொதியிடுகிறார்கள், விநியோகம் செய்கிறார்கள் என்பதை கவனித்த போது பல பிழையான நடவடிக்கைகளும் சில சரியான நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால், கள்ளிலோ, பதநீரிலோ கலப்படம் செய்யக்கூடாது என்ற தனிக் கொள்கை வடமாகாணத்தில் இருந்தது. கள்ளில் நாங்கள் மூன்று அளவுகளிலாலான 200 ml, 330 ml, 625 ml போத்தல்களில் அடைத்து சந்தைப்படுத்தி வருகிறோம். அதிலும் இருவகைகள் உள்ளன. அல்ககோல் 3 பிளஸ் அல்லது மைனஸ், 5 பிளஸ் அல்லது மைனஸ். (கள்ளிறக்கும் கால அளவுகளை பொறுத்து இது மாறுபடும்.) சாதாரண கடைகளில் இருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கள் வரையும் இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆடம்பர ஹோட்டல்களிலும் கள்ளுக்கு தனி வரவேற்பு உள்ளது.
இன்று வரைக்கும் கள்ளை பெரிதாக யாரும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குடித்ததில்லை. இங்கே நாங்கள் பதநீரை, கள்ளை பலரிடம் குடிக்க கொடுத்து அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டுள்ளோம். அவை தான் எங்களுக்கு தொய்வில்லாமல் செய்வதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது. திடீரென வெப்பப்படுத்தி பின் திடீரென குளிர்விக்கவேண்டும். 80 பாகையில் 30 நிமிடம் அவிக்க வேண்டும். பிறகு குளிர் நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒருநாளைக்கு பனையிலிருந்து 3 லீட்டர் இலிருந்து 5 லீட்டர் கள்ளு எடுக்க முடியும். இங்கு அரச சேவையில் இருக்கும் ஒருவர் கூட ஆயிரம் ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரையே பெரும்பாலும் உழைக்கின்றனர். ஆனால் சீவல் தொழிலாளிகள் பலர் 3000 ரூபாயில் இருந்து 7000 ரூபாய் வரைக்கும் ஒரு நாள் உழைக்கின்றனர். பனை ஏறும் தொழிலை சாதிக்கானதாக மட்டும் பார்க்காமல் இதனை ஒரு உயர் பொருளாதாரம் மிக்க தொழிலாக அனைவரும் பார்க்க வேண்டும். முன்னைய காலங்களில் பாரம்பரிய முறைப்படியே பனைகளில் ஏறி வந்தனர். ஆனால் தற்போது பனை ஏறுவதற்குரிய இயந்திரங்கள் வந்துள்ளன. அதன்மூலம் பனை ஏறும் தொழிலை நவீன முறையில் மேற்கொள்ள முடியும். இதனால் இன்னும் கூடுதலான பனைகளில் இருந்து கள்ளைஇ பதநீரை விரைவாக இறக்க முடியும். அடுத்து பனம் பாணியை விநியோகம் செய்ய இருக்கிறோம். அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு என்றார்.
உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீர் பனையின் மிக முக்கிய பொருளாகும். அந்த காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதநீர் எப்படி உருவாகுகிறது என்பது தெரியும். ஆனால் இக்கால தலைமுறையினருக்கு தெரியவாய்ப்பில்லை. பதநீரில் சுக்ரோஸ் அதிக அளவு காணப்படுவதால் விரைவில் நொதித்து விடும். இலங்கையின் யாழ்குடாநாட்டிலும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் சுட்ட சுண்ணாம்பின் நீர் பதநீர் சேகரிக்கத் தொங்க விடப்பட்டுள்ள மண் பானைகளின் உட்புறம் தடவப்படுகிறது. 1 லீட்டர் பதநீர் எடுப்பதற்கு 2.5 கிராம் சுண்ணாம்பு பானையில் தடவினால் போதுமானது. இதன் மூலம் நொதித்தல் தடுக்கப்படுகிறது. கலப்படமற்ற பதநீரில் சுண்ணாம்பு கலந்திருப்பினும் பதநீர் பருகலாம். சுண்ணாம்பு சேர்ப்பதால் சுவை கூடுகிறது.
பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி வலுவாக்குகிறது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேற்று பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கல்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் நோய்களையும் நீக்குவதுடன் கண் நோய், இருமல், கசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சலரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது. என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் பொங்கல்; கொழுக்கட்டை தயாரிக்கலாம். “பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான்.” இது எங்கள் புதுமொழியாகும். பனை விதையிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.
தொடர்புக்கு-0763131973
நிமிர்வு யூன் 2018 இதழ்
Post a Comment