நுண்கடன் பயனுள்ளதே! ஆனால்...!
செப்டெம்பர் 11, 2001 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டில் முன்னெடுத்தது. மத்திய திறைசேரி வட்டி விகிதத்தை குறைத்து வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரித்தது. இதன் அங்கமாக பொதுமக்கள் குறைந்த வட்டி வீதத்தில் பல்வேறு தேவைகளுக்காக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதை இலகுவாக்கியது.
நம்நாட்டில் தங்கநகைகள் வாங்கி வைத்திருப்பது சேமிப்பு என்று கருதப்படுகிறது. அதேபோல மேலைநாடுகளில் வீடு வாங்குவதே முதன்மையான சேமிப்பு எனக் கருதப்படுகிறது. குறைந்த வட்டியில் கடன்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் நிலவியதால் பலரும் வங்கிக்கடன் பெற்று வீடுகளை வாங்கினர். இதனால் வீட்டு விலை அதிகரித்தது. அதனையடுத்து வீடுகளில் முதலிட்டால் பெரும் லாபம் ஈட்டலாம் என ஆசைப்பட்டு குறைந்த வருமானமுடையவர்களும் வங்கியில் கடன்பட்டு வீடுகளை வாங்கினர். பணமீட்டுவதிலேயே குறியாக இருந்த வங்கிகளும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலருக்கும் வீட்டுக்கடன்களை வழங்கின. இக்கடன்களுக்குப் பிணையாக அவ்வீடுகளின் உறுதிப் பத்திரங்களை தம்வசம் வைத்திருந்தன.
இக்கடன்களில் பெரும்பாலானவை முதல் ஐந்து வருடங்களுக்கு குறைந்த வட்டியிலும் அந்த ஐந்து வருட முடிவில் இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு வட்டி வீதத்தைக் கொண்டவையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடன் பெற்றவர்கள் பலருக்கு இது தொடர்பான போதிய விளக்கம் இருக்கவில்லை. அதைப் பற்றியெல்லாம் வங்கி முகவர்கள் கவலைப்படவில்லை. வல்லூறுத்தனமாக அப்பாவி மக்களின் ஏமாறும் தன்மையை பயன்படுத்தி வீட்டுக் கடன்களை அவர்களுக்கு முகவர்கள் வழங்கினர். அம்மக்கள் நிரந்தர வருமானம் உடையவர்களா அவர்களால் உயர்ந்த வட்டி வீதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றெல்லாம் அவர்கள் பார்க்கவில்லை.
இவ்வாறு வழங்கப்பட்ட கடன்களின் முதல் ஐந்து வருட முடிவில் வட்டி விகிதம் எகிறியது. கடன்பட்டவர்களில் பெரும்பான்மையினரான குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் மாதாந்தம் வீட்டுக்கடன் கொடுப்பனவுகளை கட்ட முடியாமல் திண்டாடினர். கடனைக் கட்டுமாறு வங்கிகள் அவர்களை நெருக்கின. தம்மிடமுள்ள குறைந்தபட்ச சேமிப்புக்களைக் கொண்டாவது கடனை செலுத்த பலர் முயன்றனர். பலர் தம்மிடமுள்ள பொருட்களை விற்று கடனை அடைக்க முயற்சித்தனர். அவற்றுக்கான சாத்தியங்கள் எல்லாம் அருகிப்போன பலர் சொல்லாமல் கொள்ளாமல் வீடுகளைவிட்டு வெளியேறினர். அவர்கள் தாம் வங்குரோத்து அடைந்து விட்டதாகப் பிரகடனப்படுத்தி தமது கடன்களை இரத்து செய்யுமாறு வங்கிகளைக் கோரினர். மேலும் பலர் வீட்டுக் கடனைச் செலுத்தாமலே வீடுகளில் இருக்க முற்பட்டனர். வங்கிகள் அவர்களை பொலிஸ் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் தள்ளின.
இவ்வாறாக கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் வீட்டு விலைகள் சரிந்தன. அதேவேளை இந்த வீட்டுக்கடன்களினால் வரக்கூடிய வருமானத்தை முன்னிறுத்தி அவ்வீட்டுக்கடன் அடமானப் பொதிகளை அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள நிதி நிறுவனங்களுக்கு வீட்டுக்கடன் வழங்கிய வங்கிகள் விற்றிருந்தன. உலக மயமாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பில் இது சாதாரணமாக நடக்கும் ஒன்று. இதன் மூலம் இந்தக் கடன்களால் வரக்கூடிய அபாயங்களை அவ்வங்கிகள் பல்வேறு நாடுகளிலிமிருந்த நிதி நிறுவனங்களுக்கு கடத்தி விட்டிருந்தன. அமெரிக்காவில் வீட்டு விலைகள் உச்சத்தில் இருந்த போது வாங்கப்பட்ட இந்த அடமான பொதிகள் அங்கு வீட்டு விலைகள் சரிந்து விட்ட நிலையில் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியை அடைந்தன.
இவ்வாறாக அமெரிக்காவில் நடந்த வீட்டுக் கடன்பிரச்சனை பல உலகநாடுகளிலுமிருந்த நிதி நிறுவனங்களை நட்டத்துக்குள் தள்ளியது. இது அந்த நிதி நிறுவனங்களில் முதலிட்டிருந்த உள்ளூர் அரசாங்கங்களைப் பாதித்தது. அதனையடுத்து உலகப் பொருளாதாரமே 2007-2009 ஆண்டுகளில் ஒரு தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டது. பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். பல நாடுகளிலும் தமது ஓய்வு காலத்துக்கென பல்வேறு நிதிநிறுவனங்களில் முதலிட்டிருந்த பணத்தை பலர் இழந்தனர்.
பெரிய பெரிய வங்கிகளின் பணமீட்டும் பேராசை காரணமாக, அவ்வங்கிகள் அதன் முகவர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் வழங்கிய அதிகாரங்கள் காரணமாக அமெரிக்காவின் சாதாரண மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய பல அரசாங்கங்களும் நிதிநிறுவனங்களும் பெரும் நட்டத்தைச் சந்தித்தன. இதனையடுத்து வங்கிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் அவற்றை மேலும் இறுக்கமாக நெறிப்படுத்தவும் சட்டங்களை அமெரிக்க அரசாங்கம் இயற்றியது. இதனூடாக வங்கிகள் பொறுப்பற்ற முறையில் கடன்களை வழங்கி மக்களைச் சூறையாடுவது தடுக்கப்பட்டது.
இது இவ்வாறு இருக்க வரலாற்றில் சிறிது பின்னோக்கிச் செல்வோம். 1970 களில் உலகிலேயே மிகவும் வறிய நாடாக பங்களாதேஷ் இருந்தது. அங்கு பொருளாதாரப் பேராசிரியர் முகமது யூனஸ் 1976 ஆம் ஆண்டு கிராமீன் வங்கித் திட்டம் (Grameen Bank Project) ஒன்றை ஆரம்பித்தார். அதுவரை கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கிக் கொண்டிருந்த வறிய தொழில் முனைவர்களுக்கு வங்கி கடன்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதே இவரது நோக்கம்.
அவர் முதலாவதாக தனது ஊரிலேயே பிரம்புக் கதிரைகளைப் பின்னி விற்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு சிறுதொகைப் பணத்தை நுண்கடனாக வழங்கினார். இக்கடன் மூலம் அப்பெண் தனது மூலப்பொருட்களை வாங்கி கதிரைகளை பின்னி அவற்றை விற்பதனால் கிடைத்த இலாபத்தில் பெரும்பகுதியை கடனை அடைக்கப்பயன்படுத்த முடிந்தது. அதுவரை கந்து வட்டிக்காரர் அறவிட்ட அதிக வட்டி விகிதம் காரணமாக அப்பெண்ணுக்குக் கிடைத்த இலாபத்தில் பெரும்பகுதி வட்டி செலுத்தவே பயன்பட்டுக் கொண்டிருந்தது.
இதையே முன்னுதாரணமாக வைத்து மேலும் பல நுண்கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் கிராமீன் வங்கியூடாக வழங்கி அக்கடன்களை மீளப்பெறுவதில் வெற்றியடைந்தார். உலகிலேயே முதலாவதான வறிய தொழில்முனைவோருக்கு அடமானமில்லாமல் கடன் வழங்கும் நிறுவனமான கிராமீன் வங்கியை பங்களாதேஷ் அரசாங்கம் அங்கீகரித்தது. 2008 வைகாசிமாதமளவில் இவ்வங்கியில் கடன்பெறுவோர் தொகை 7.5 மில்லியன் ஆகவும் இவர்களில் கடனை மீளச்செலுத்தி முடிப்பவர்களின் எண்ணிக்கை 98 சதவீதமாகவும் இருந்தது. கிராமீன் வங்கி திட்டத்தின் வெற்றிகாரணமாக 2006 இல் பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு பேராசிரியர் முகமது யூனசுக்கு வழங்கப்பட்டது.
கிராமீன் வங்கித் திட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது நுண்கடன் வழங்குவதில் அவர்கள் காட்டும் அவதானம் தான். ஒருவருக்கு கடன் வழங்க முன்னர் அக்கடனைப் பெறுபவரின் தொழில்முயற்சி பற்றியும் அவரது கடனை மீளச்செலுத்துகைக்கான ஆற்றல் பற்றியும் அவர்கள் போதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். இதனாலேயே பங்களாதேஷின் 82,072 கிராமங்களில் அவர்களது கடன் திட்டங்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன.
இன்று பல நுண்கடன் நிறுவனங்கள் கிராமீன் வங்கி திட்டத்தை முன்மாதிரியாக வைத்து இயங்கி வருகின்றன. ஆனால் சில வங்கிகள் எந்த உயரிய நோக்கத்துக்காக இந்த நுண்கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு எதிர்மாறாக செயற்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள் நுண்கடன் எண்ணக்கருவையும் தமது பணம் சம்பாதிக்கும் பேராசைக்காக பலியிடுகின்றன.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் அமெரிக்க வங்கிகள் எவ்வாறு அப்பாவி உழைக்கும் மக்களை திட்டமிட்ட ரீதியில் கடன் சுமைக்குள் தள்ளி அவர்களை சூறையாடின எனப் பார்த்தோம். கடன் வாங்குபவர் அதனை மீளக்கட்டுவதற்கான ஆளுமையுடையவரா என்றெல்லாம் அவர்கள் ஆராயவில்லை. ஒருவரைக் கடனாளியாக்கி அதனூடாக கிடைத்த அடமானப் பொதியை இன்னொரு நிதி நிறுவனத்துக்கு விற்பதிலேயே அவர்கள் குறியெல்லாம் இருந்தது. இதனால் இறுதியில் பாதிக்கப்பட்டது அப்பாவி மக்களும் ஏனைய நிதிநிறுவனங்களும் தான். இவ் வங்கிகள் அல்ல. அதன் முகவர்கள் அல்ல.
அதேவேளை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒருவர் அளவுக்கதிகமான கடன் சுமையால் அழுத்தப்பட்டு அதனைக்கட்ட முடியாமல் போகுமிடத்து தான் வங்குரோத்து (bankruptcy) அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்த முடியும். இப்பிரகடனம் பல்வேறு சட்டதிட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும். அவ்வாறு செய்யப்படுமிடத்து அக்கடன்களில் பெரும்பகுதியிலிருந்து குறிப்பிட்ட நபர் விடுதலையடைய முடியும். அவரது முழுக்கடன் சுமையுமே இரத்துச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதனால் வரும் நட்டத்தை கடன் கொடுத்த வங்கிகளே ஏற்க வேண்டும். வீட்டுக்கடன் எடுத்தவர்களில் பெரும்பாலாலானவர்கள் கடனைக் கட்டமுடியாமல் போன சந்தர்ப்பங்களில் இந்த சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்தியே சிறை செல்வதிலிருந்தோ அபராதம் செலுத்துவதிலிருந்தோ தப்பித்துக் கொண்டனர்.
துரதிஷ்டவசமாக கடன் பெறுவோருக்கான இவ்வாறான சட்டரீதியான பாதுகாப்புக்கள் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இல்லை. அது பணம் சம்பாதிப்பதை ஒரே நோக்கமாக கொண்ட வங்கிகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. அதேவேளை கடன்வாங்கி விட்டு அதனை திருப்பிக் கட்டாவிட்டால் அது ஒரு அவமானகரமான செயலாக கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இது சமூகத்தில் ஒருவரின் அந்தஸ்த்தை குறைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. எமது இறுக்கமான சமூகக் கட்டுக்கோப்புக் காரணமாக இச்செயலைச் செய்வோர் அதிகளவு மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இதனை மேலும் சிக்கலாக்குவதற்கு இங்குள்ள நுண்கடன் வங்கிகள் மிகவும் கீழ்த்தரமான கடன் வசூலிப்பு உத்திகளைக் கையாளுகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒருவரை அவர் சார்ந்த சமூகத்தில் அவமானப்படுத்தப் போவதாக பயமுறுத்துகின்றனர். அவ்வாறான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறான முயற்சிகளை கடன்பட்டோர் மீது மேற்கொள்ள மேலைநாட்டு சட்டங்கள் இடமளிப்பதில்லை. ஆனால் இங்கோ நிலைமை தலைகீழ். சட்டப்பாதுகாப்பின்மை ஒருபுறம். சமூகத்தில் வரக்கூடிய அவப்பேர் தொடர்பான மனவுளைச்சல் மறுபுறம். இதனால் எப்பாடுபட்டாவது கடன் பட்டவர் கடனை திருப்பிச் செலுத்துவார் என்று வங்கிகள் நம்புகின்றன. கடன் பெற்றோர் கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் அவர்களை சமூககலாச்சார அடிப்படையில் கையாள்வதற்கான வழிமுறைகள் அவர்களிடம் உள்ளன. அதனால் கடன்வழங்க முன்னர் கடன்பெறுனர் தொடர்பாக போதிய ஆராய்ச்சிகளை அவர்கள் செய்வதில்லை.
இந்த இரக்கமற்ற வல்லூறுத்தனமான நுண்கடன் வங்கிகளினதும் அவர்களது முகவர்களினதும் செயற்பாடுகளை சென்ற நிமிர்வு இதழில் வந்த கட்டுரை ஒன்றில் பார்த்தோம். அவர்களின் நடவடிக்கைகள் போரினால் பாதிக்கப்பட்ட பின்னர் நிமிர நினைக்கும் ஏழைத்தமிழ் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படுவதைப் பார்த்தோம். அதனால் தற்கொலை உட்பட அம்மக்கள் அடையும் பாதிப்புக்களையும் பார்த்தோம்.
அதேவேளை இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் ஒரு ஏழை நாட்டின் 97 வீதமான கிராமங்கள் நுண்கடன் வங்கிகளால் பயன்பெறுவதையும் நாம் கண்டோம். அங்கே கடன் திருப்பிச் செலுத்துகை 98 சதவீதமாக இருப்பதையும் கண்டோம். அப்படியானால், இந்த உயரிய எண்ணக்கருவைக் கொண்ட நுண்கடன் திட்டம் எமது பகுதிகளில் உயிர்களைப் பலியெடுக்கும் அளவிற்குப் பிழைத்து போனதன் காரணம் என்ன? இதற்கான சூத்திரதாரிகள் யார்?
எமது சமூக கலாச்சாரப் பின்புலங்களை தமது பக்கபலமாக வைத்துக் கொண்டு மக்கள் எவ்வாறான இன்னல்களுக்குள் இருந்தாலும் தமது இலாபத்தை மட்டும் ஒரே குறிக்கோளாக கொண்டு இயங்கும் வங்கிகளே இதற்கு காரணம். அவர்களை மட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லாமல் இருப்பதே இதற்கு காரணம். இருக்கும் சட்டங்கள் கூட அமுலாக்கப்படாமல் இருப்பதுவும் இதற்கு காரணம். தமது அரசியல் பொருளாதார லாபம் கருதி இந்த வங்கிகளை சட்டரீதியில் கட்டுப்படுத்தாமல் இருக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இதற்குக் காரணம்.
நுண்கடன் திட்டம் ஒரு உன்னதமான எண்ணக்கரு. வங்கிகளின் தவறான நடத்தைகளால் ஒட்டுமொத்த நுண்கடனே தவறானதென கூறிவிட முடியாது. பொருத்தமான வழியில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எமது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்ற முடியும். அது எமது பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறும் பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்றவாறும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நுண்கடன் வங்கிகள் மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும். வங்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கடன்பட்டோரைப் பாதுகாக்கவும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
மேலும் நுண்கடன் வங்கிகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிராது சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும். கடன் வழங்குவதோடு நின்று விடாது கடனுடன் சேர்த்து கடன் பெறுபவர்களின் தொழில் முயற்சிகளை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆளுமையை வளர்க்க திட்டங்கள் வங்கிகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடன் வசூலிக்க முகவர்களை அனுப்புவதை விடுத்து இத்திட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேற்றம் பெறப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிடவும் பின்னடைவுகளை ஏற்படுமிடத்து அதனை நிவர்த்தி செய்ய பயிற்சியாளர்களை அனுப்ப வேண்டும்.
ஒருவனுக்கு மீனை வழங்கினால் அது அவனுக்கு ஒரு நாள் பசியை மட்டுமே தீர்க்கும்; அவனுக்கு மீன்பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவனின் வாழ்நாள் முழுவதுமே பசி தீரும். ஆகவே கடனை மட்டும் வழங்காதீர்கள் அக்கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவதென கற்பித்தும் விடுங்கள்.
-ரஜீவன்-
நிமிர்வு யூன் 2018 இதழ்
Post a Comment