நிபந்தனையற்ற விடுதலையே தேவை பொது மன்னிப்பும் புனர்வாழ்வும் அல்ல




அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கத்தோடு இணைந்து வழங்கிய  அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கிஎனும் கலந்துரையாடல் 01.06.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மண்டபத்தில் இடம்பெற்றது.

அதில் பிரதான உரையினை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  சட்டத்துறைத் தலைவரும்,   அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான  குமாரவடிவேல் குருபரன் நிகழ்த்தியிருந்தார். அதற்கு பதிலுரையினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் வழங்கியிருந்தார். அந்த பதிலுரை இங்கே தொகுத்து தருகிறோம்:

நான் சர்வதேச சட்டங்களையோ அல்லது உள்ளூர் சட்டங்களையோ கற்றறிந்த ஒரு ஆசிரியன் அல்ல. வீதியிலே சத்தம் போட்டுக் கொண்டிருப்பவன். இது தான் எனக்கு இருக்கின்ற தகுதி. இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்கிறேன். கடந்த பத்து பதினைந்து வருட காலமாக அரசியல் கைதிகள் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள். அவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் அடிப்படைக் கோரிக்கை. இப்போது நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பம் மிக முக்கியமானது.


கடந்த மாதம் இங்கிலாந்துக்கு சென்ற  ஜனாதிபதி மைத்திரிபால பிபிசி சந்தேசிய என்று சொல்லப்படுகின்ற சிங்கள சேவைக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் குறிப்பிடுகின்றார் “இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என்று யாரும் கிடையாது.” அடுத்ததாக குறிப்பிடுகின்றார் தமிழ், சிங்கள புதுவருடத்தின் போது 560 ஏக்கர் காணிகளை அன்பளிப்பாக தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கின்றோம் என்று. மூன்றாவதாக குறிப்பிட்டிருந்தார் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களை தேடுவதாக கூறி போராட்டம் நடத்துபவர்கள், இனவாதிகள், டயஸ்போராக்கள், என்ஜீயோக்கள்.  மிக பாராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார். எங்களுடைய காணிகளை இராணுவம் பறித்திருக்கின்றது. அந்தக் காணிகளை விடுவிக்குமாறு  நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஜனாதிபதி தமிழ்மக்களுக்கு தெற்கிலிருந்து 560 ஏக்கர் காணியை கொடுத்திருந்தால் அதை அன்பளிப்பு என்று கூறலாம். ஆனால் எங்களுடைய காணிகளை மீண்டும்  கொடுத்துவிட்டு தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக அன்பளிப்புச் செய்தோம் என்றால் இதனை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் இனவாதிகள், டயஸ்போராக்கள், என்ஜீயோக்கள் என்று அடுத்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றார். நாங்கள் கேட்டது நீதி. இந்த நீதியை மறுக்கின்றார். அரசியல் கைதிகள் இந்த நாட்டிலே இல்லை என்று கூறுவதன் மூலம் சொல்ல வருகின்ற செய்தி எங்களுடைய  அரசியல் போராட்டத்தையே ஒரு பயங்கரவாதம் ஆக்குகின்றார். இவரோடு சேர்ந்து இராஜித சேனரட்ன அவர்களும்  “அரசியல் கைதிகள் என்று யாரும் கூறக்கூடாது” எனக் கூறி அரசியல் ரீதியாக எங்களை அடக்குகின்றார், அதட்டுகின்றார். அதைப் போன்று சம்பிகரணவக்க அதே காலகட்டத்தில் கூறுகின்றார் “அரசியல் கைதிகள் என்று யாரும் கிடையாது; எல்லோரும் பயங்கரவாதிகள்” என்று.

இந்தப் பின்னணியில் இருந்து கொண்டுதான் நாங்கள் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக உரையாடிக்கொண்டிருக்கின்றோம்.  என்னை பொறுத்தவரையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டமே ஒரு பயங்கரவாதம் தான். இதற்கு மனித முகம் கிடையாது. இந்த பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? அரசு பயங்கரவாதத்தை மறைப்பதற்காகத்தான்.அரசு தன்னுடைய பயங்கரவாதத்தை மறைப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்து எங்களை பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டது. இது அரசியல். அரசு தன்னுடைய பயங்கரவாதத்தை மிக நீண்டகாலமாக நிறைவேற்றிக் கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நாங்கள் தற்காப்பு நிலை எடுக்கின்றோம். இந்த தற்காப்பு நிலையில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை பயங்கரவாதமாக்கி அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே எங்களை இன்று வரை வெளியே வரவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றது.

இந்தப் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக  விரிவுரையாளர்குமாரவடிவேல் குருபரன் ஆழமாக அறிந்திருக்கின்றார். இதற்கு மனிதமுகம் கிடையாது என்று குறிப்பிடடிருந்தேன். ஏனென்றால் ஒருவரை கைது செய்த பின்னர் தான் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. குற்றத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. தடுத்து வைக்கும் காலமும் அவ்வாறு தான். அதுமட்டுமல்ல ஒப்புதல் வாக்குமூலம் பற்றி பார்ப்போம்.  பல்வேறுவிதமான துன்புறுத்தலுக்கு மத்தியிலே  உடலில் பல்வேறு பாகங்கள் உடைந்து நொருங்கிய நிலையிலே அவர்களுக்கு தெரியாத மொழியிலே இந்த ஒப்புதல் வாக்கு மூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டிருகின்றன. அதுமட்டுமல்ல இன்னும் சிலருக்கு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் அவர்களிடம் கையொப்பமே பெறப்படவில்லை என்று கண்டி பல்லகலயில் இருக்கின்ற அரசியல் கைதிகள் கூறுகின்றார்கள். எங்கள்மீது இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பாவித்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகின்றது. ஆனால் நாங்கள் எங்கும் கையொப்பம் வைக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.

ஆனந்தசுதாகரனின் வழக்கை எடுத்துப் பார்ப்போமானால் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் 199 குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டது. 199 குற்றச்சாட்டுக்களில் வழக்கு ஆரம்பித்து நடைபெறுகின்ற போது 104 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டார்கள். அப்படியென்றால் இந்த 104 குற்றச்சாட்டுக்களை அவர்கள் எந்த ரீதியில் சுமத்தினார்கள்? மீண்டும் அவற்றை ஏன் மீளப் பெற்றுக்கொண்டார்கள்? சாட்சிகள் இல்லாது அடையாளம் இல்லாது தான்தோன்றித்தனமாக இந்த சட்டத்தை பாவித்து அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள். அதுமட்டுமல்ல ஆனந்தசுதாகரனுடைய மனைவி நோயின் காரணமாக இயற்கை மரணம் எய்தினார் என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பாக நாங்கள் கூறுகின்றோம்: பயங்கரவாத தடைச்சட்டமும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஆனந்தசுதாகரனின் மனைவியைக் கொலை செய்தது!  ஏனென்றால் இவருக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 95 அதில் ஒரு குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை. மிகுதி  இருக்கின்ற 94 குற்றச்சாட்டுக்களுக்கு 94 ஆயுட்கால சிறைத்தண்டனை கொடுக்கின்றார்கள். ஒருநபருக்கு 94 ஆயுள்கால சிறைத்தண்டனை. ஒருவருக்கு ஒரு ஆயுள்கால சிறைத்தண்டனை கொடுப்பது வேற கதை. 94 ஆயுள்கால சிறைத்தண்டனை கொடுப்பது எந்த மனித சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது எங்களுடைய  கேள்வி.

மனிதாபிமானம் என்பது இதில் கிடையாது. இவருடைய மனைவி ஏற்கனவே நோய் வாய்ப்பட்டவர். தன்னுடைய கணவருடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். இவருடைய இரண்டாவது பிள்ளை இவர் சிறைக்கு போகும் போது 10 மாதங்கள் என்று நினைக்கிறேன். மகனுக்கு 3 வயது, திருமணம் செய்கின்ற போது  26 வயது.  தன்னுடைய கணவர் வருவார் என்று இளம்பெண்ணான அவர் மனைவி  எதிர்பார்த்து கொண்டிருந்திருக்கிறார். தீர்ப்பு கொடுத்த பின்னர் தான் இவர் அதிகமாக நோய்வாய்ப்படுகின்றார். மீண்டும் வரமாட்டார் என்பது தெரியும். மீண்டும் நான் என்னுடைய கணவரை சந்திக்கமாட்டேன். என்னுடைய பிள்ளைகளுக்கு தகப்பன் கிடையாது. இந்த நிலையில் அவர் இறக்கின்றார். எனவே இது இயற்கை மரணமா? அல்லது கொலையா? அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்ற தேசிய அமைப்பாக நாங்கள் கூறுகின்றோம்: இது சட்டமா அதிபர் திணைக்களமும் பயங்கரவாத தடைச்சட்டமும் இணைந்து நடத்திய ஒரு கொலை!

அதே காலகட்டத்திலை வவுனியாவைச் சேர்ந்த அரசியல்கைதி ஒருவர் இறக்கின்றார். அவர் 8 வருட காலமாக சிறையிலே இருக்கின்றார். இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். ஒருவருடம் முடிவடைகின்றது. அவர் நினைக்கின்றார் இன்னும் ஒருவருடத்தில் நான் வீட்டுக்கு போகலாம் என்று. கைது செய்யப்படுகின்ற போது 49 வயது. இப்பொழுது 58 வயதாகின்றது. இவருடைய மனைவியும் அதே வயதில இருக்கின்றார். குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு தண்டணையில் ஒரு வருடம் முடிந்த நிலையிலே அவர்மீது இன்னொரு வழக்கு சுமத்தப்படுகின்றது. இன்னொரு வழக்கு சுமத்தப்படுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துக்கொண்ட காலம் 8 வருடமாக இருக்கின்றது. இந்த நிலையிலே தான் அவர் பாதிக்கப்படுகின்றார். கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கே இறக்கின்றார். இதனை நாங்கள் என்னவென்று கூறுவது? இதனை நாம் சட்டமா அதிபர் திணைக்களமும் பயங்கரவாத தடைச்சட்டமும் இணைந்து நடாத்திய ஒரு கொலை என்று தான் நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

  இப்பொழுது எங்களுடைய நாட்டில் அரசியல் கைதிகளுடைய விடயம் என்பது அரசியல் விடயமாக இருக்கின்றது. அரசியல் விடயமாக இருப்பதை நாங்கள் சட்டரீதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுவதும் ஒரு அரசியல் தான். அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்று கூறுவதும் ஒரு அரசியல் தான். மகிந்தராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது 12000 விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். இன்னும் 600 பேர் வேறொரு காலகட்டத்தில் கொழும்பில் பழைய பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு விடுதலை அளிக்கப்பட்டார்கள். இவர்களை கதிர்காமம்  வழியாக சிங்களப்பகுதிகளால் அழைத்து வந்தார்கள். அந்தப் பிரதேசங்களையெல்லாம் அவர்கள் சுத்திக்காட்டிவிட்டு  விடுதலை செய்கின்றார்கள். பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் சிங்களப்பகுதிக் அழைத்து செல்லப்படுகின்றார்கள். சிங்கள மக்கள் எவரும் இவர்கள் பயங்கரவாதிகள் என்று இவர்களது  பாதையை மறிக்கவில்லை. இவர்கள் சென்ற வாகனத்திற்கு கல் எறியவுமில்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரைக் கொன்றவர் எனக் கூறப்படுகின்ற கருணா  எங்கே இருந்தார்என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே அவர்கள் விடுதலை அரசியல் மயமாக்கப்பட்டது.

இதனைவிட பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் விடுதலைப் போராளிகளுக்கு உணவு கொடுத்தவர்கள், வேலை செய்தவர்கள் இப்படியெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். என்னுடைய நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு நீண்டகாலத்துக்கு பின் அவருடைய உறவினர் ஒருவர் வருகின்றார். நண்பர் வீட்டில் இல்லை. அவருடைய மனைவியும் பிள்ளைகளும் கூறுகின்றார்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருகின்றீர்கள். இன்று எங்களுடன் தங்க வேண்டும் என்று. அவர் இல்லை நான் போகவேண்டும் என்கிறார். அவர்கள் அவரை பலவந்தமாக தங்க வைக்கிறார்கள்.  மாலை வேளையில் அந்த வீட்டின் தகப்பன் வருகின்றார். இருவரும் இருந்து கதைத்த பின்னர் வந்தவர்  சொல்லுகின்றார் தான் திரும்பி போகிறேன் என்று. இவர் தடுக்கின்றார். 25 ஆண்டுகளுக்கு அப்புறம் முதன்முறையாக கண்டிருக்கிறோம் இன்று இரவுமட்டும் தங்கி விட்டு செல்லுமாறு கேட்கிறார். அந்த இரவை அவர்களின் வீட்டிலே கழிக்கின்றார். அடுத்தநாள் விடிய அவர் செல்லுகின்றார். மூன்று கிழமைக்குப் பின்னர் பொலிஸார் வருகின்றார்கள். இவரைத் தேடி கைது செய்கின்றார்கள். இப்பொழுது இவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனையும் 600 வருட கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவர் என்ன குற்றம் செய்தார் என்று இவருக்கே தெரியாது. 25 வருடங்களுக்கு முன்பு தான் சந்தித்த ஒருவர், ஒன்றாக வாழ்ந்த ஒருவர் வந்தார். அவரை வீட்டிலே தங்க வைத்து உணவு கொடுத்தது மட்டும்தான் இவர் செய்தது. இப்பொழுது அவர் கொழும்பிலே இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றார். தலதாமாளிகை குண்டு வெடிப்போடு சம்பந்தப்படுத்தி தான் அவரை கைது செய்தார்கள். இவர் குண்டைக் கண்டதும் இல்லை. குண்டு கொண்டுவந்தவரின் கையில் என்ன இருந்தது என்றும் தெரியாது. தூங்குவதற்கு  இடம் கொடுத்திருக்கின்றார் என்பதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை எந்த வகையில் நியாயமானது?

பிரமேதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது இயக்கத்திற்கு இலச்சக்கணக்கிலே பணம் கொடுத்தார், ஆயுதங்களைக் கொடுத்தார் என்று பாராளுமன்றத்திலே கதைக்கப்பட்டிருக்கின்றது. இவர் செய்ததது பயங்கரவாத செயலா? அல்லது அரசியலா? அதனை கட்சி ஏற்றுக்கொள்கின்றது. அதே போன்று மகிந்த ராஜபக்ஸ இயக்கத்திற்கு பணம் கொடுத்ததாக தென்னிலங்கை ஊடகங்களே பகிரங்கமாக எழுதின. அவர் பணம் கொடுத்ததை தெற்கு ஏற்றுக் கொள்கிறது. அவர்கள் கொடுத்த ஆயுதத்தை பாவித்தவர்கள், அவர்கள் கொடுத்த பணத்தை வைத்து ஆயுதம் வாங்கியவர்கள் எவ்வாறு பயங்கரவாதிகள் ஆக முடியும்? அவர்கள் செய்தது அரசியல் என்றால் நாங்கள் செய்ததும் அரசியல் தான்.  தெற்கின் ஆட்சியாளர்கள் செய்தால் அது தேசப்பற்றாளர்கள்  செய்த செயலாக கருதப்படுகின்றது. எங்களுடைய சுதந்திரத்திற்காக,  விடுதலைக்காக நாங்கள் செய்கின்ற செயல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகின்றது. இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதமே தவிர அதனை கொண்டு வந்தவர்கள் பயங்காரவாதிகளே தவிர நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. அரச பயங்கரவாத்தை மறைப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் பயங்கரவாத தடைச் சட்டம்.

 பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள். தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பை மேற்கொண்டவர்கள். 2009 ஆம் ஆண்டு மட்டுமல்ல 1948 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பை மேற்கொண்டவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாத கட்சிகள் தான் நாட்டை ஆண்டிருக்கின்றன. ஆண்டு கொண்டிருக்கின்றன. எனவே அவர்களை பாதுகாத்துக் கொண்டு எங்களை அச்சட்டத்துக்கு உட்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சமூத்தையும் அதன் அரசியலையும் ஒடுக்குவதற்காகத்தான் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

அரசியல் கைதிகளை தண்டிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு கிடையாது. பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டு அவர்களை தண்டிப்பதற்காக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இன்றைய நாள் வரையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் தண்டிக்க நினைப்பது இப்பொழுது அரசியல் கைதிகளாக இருக்கின்ற 108 பேரை மட்டுமல்ல. தமிழ் மக்களுடைய அரசியலை தண்டிக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நோக்கம். அந்த அரசியலுக்கு பின்னால் யார் எல்லாம் நிற்கின்றார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நோக்கம்.   எனவே 108 பேர் தண்டிக்கப்படுகின்றார்கள் என்றால் நாங்களும் தண்டிக்கப்படுகின்றோம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். எந்தவகையில் பொதுமன்னிப்புக் கொடுப்பது? இவர்களுக்கு பொதுமன்னிப்புக் கொடுங்கள் என்று கேட்டால் இவர்கள் குற்றமழைத்தவர்கள் என்று நாங்களே கூறுகின்றோம்;இவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுகின்றோம். பொதுமன்னிப்பு கேட்பது என்பது எங்களுக்கு நாங்களே தண்டனை வழங்குகின்ற செயலாகத் தான் நான் கருதுகின்றேன். நாங்கள் பொது மன்னிப்பு கேட்கக்கூடாது. பொதுமன்னிப்பு அவன் கொடுக்கட்டும்.  நிபந்தனையற்ற விடுதலை என்பதுதான் எங்களுடைய குரலாக இருக்க வேண்டும்!

அதே போன்று புனர்வாழ்வு கேட்கின்றார்கள் யாருக்கு புனர்வாழ்வு? குற்றம் செய்தவர்களுக்குத்தான் புனர்வாழ்வு. இவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நாங்களே தீர்மானித்தால் அந்த அரசியலை பிழை என்று கூறுகின்றேன். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நாங்கள் பிழை என்றா கூறுகின்றோம்? தந்தை செல்வாவை நாங்கள் பிழை என்றா கூறுகின்றோம்? இவ்வாறு கூறிவிட்டு எங்களால் அரசியல் நடத்த முடியுமா? தந்தை செல்வா பிழை, கடந்தகால போராட்ட வரலாறு பிழை, இவர்கள் எல்லாம் பிழையானவர்கள், பயங்கரவாதிகள்  இவர்களுக்கு பொதுமன்னிப்புக் கொடுங்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுங்கள் என்று கேட்க முடியாது.  அப்படி கூறுகின்றவர்களுக்குத்தான் புனர்வாழ்வு கொடுக்கப்பட வேண்டும். எங்களுடைய அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு கொடுக்கபடல் வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் தெரியாது. எங்களை குற்றவாளிகள் ஆக்கிவிட்டு அவர்கள் பதவிக்கு போவதற்கும் பதவியை தக்கவைக்கவும் செயற்படுகின்றார்கள்.  ஜனாதிபதியிடம் சென்று புனர்வாழ்வு கொடுங்கள், பொதுமன்னிப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது. இவர்களுக்குப் பின்னால் போகின்றவர்களும் தமிழர்களும் அல்ல. இவர்களும் பயங்கரவாதிகளே தான். பயங்கரவாத தடைச்சட்டத்தை இவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அரசியலில் இருந்து அவர்களை நாங்கள் அகற்ற வேண்டும்.

ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று கூறி 13 பேரை தூக்கிலிட்டார்கள். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன   அவர்களை தேசப்பற்றாளர்கள் என்று கூறி வர்த்தமானியில்  வெளியிடுகின்றார். ஒரு அரசாங்கம் பயங்கரவாதிகள் என்று கூறி தூக்கிலிடும் போது இன்னொரு அரசாங்கம் அவர்கள் தேசப்பற்றாளர்கள் என்று கூறுகிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய, இலங்கை உடன்படிக்கை செய்துகொள்ளப்படுகின்ற போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். எனவே அரசியல் கைதிகளின் விடயத்தை பிரேமதாசா அரசியல் மயமாக்கினார்.அதேபோன்று ரணில்விக்ரமசிங்க, சந்திரிக்கா போன்று தொடர்ந்து வந்த அத்தனைபேருமே அதனை தம்முடைய அரசியலாக்கி இருக்கின்றார்கள். 12000 பேரை விடுதலை செய்தவர், அதற்கு மேலாக இன்னும் 600 பேரை விடுதலை செய்தவர் இப்பொழுது கூறுகின்றார் இவர்களை விடுதலை செய்ய வேண்டாம் அவர்கள் பயங்கரவாதிகள் என்று.  இதனை அவருடைய அரசியலுக்காவே கூறுகின்றார். அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுவதும் தன்னுடைய அரசியலுக்காகவேதான்.

எனவே இந்த அரசியல் சித்துவிளையாட்டுகளுக்குள்ளே நாங்கள் சிக்கிப்போயிருக்கின்றோம். இந்த அரசியல் சித்துவிளையாட்டுக்குள்ளே எங்களுடைய அரசியலை முன்நகர்த்துவதற்கு இப்பொழுது தடையாக இருப்பது இந்த பயங்கரவாத தடைச்சட்டம். இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களின் அரசியலை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்பது தெரியும். இவர்கள் இன்னும் அதனை பாதுகாத்துக் கொண்டிருப்பது  சிறையில் இருப்பவர்களை தண்டிப்பதற்காகவே. இதற்குப் பதிலாக இன்னுமொரு சட்டம் கொண்டுவர இருக்கின்றார்கள் என்பதை நண்பர் கூறினார்.  

அடுத்து தேசிய பொருளாதார திட்டம் ஒன்றை கொண்டு வர இருக்கிறார்கள். அந்த பொருளாதார திட்டத்தின் படி முழு நாட்டையும் அவர்கள் சிதைக்கப்போகின்றார்கள். அதற்கு கீழ் மாங்குளத்தில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பேரை குடியேற்றப்போகின்றார்களாம்.  புதிய குடியேற்றத்திட்டங்களை உருவாக்கப் போகின்றார்கள். முழு பௌதீக அமைப்பையும் மாற்றப்போகின்றார்கள். அதற்கு எதிராக தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய காலகட்டம் வந்துகொண்டிருக்கின்றது. எனவே பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை யார் எதிர்க்கின்றார்களோ அவர்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வர இருப்பதுதான் அடுத்த சட்டம்.

 இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று மன்னார், அடுத்தது அநுராதபுரம், இன்னொன்று கொழும்பு. மன்னாரில் நீதிமன்றம் இப்பாழுது இயங்குவது கிடையாது. அநுராதபுரத்திலே அரசியல் கைதிகளுடைய வழக்குகளை எடுப்பது கிடையாது.  ஹெரோயின் விற்றதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அல்லது பாலியல் துஷ்பிரயோகம்  செய்தவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் தான் இப்பொழுது விசேட நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. எனவே இதெல்லாம் ஒரு கண் துடைப்புக்காக கொண்டுவரப்பட்ட விசேட நீதிமன்றங்கள். நாங்கள் கேட்பது விசேட நீதிமன்றங்கள் அல்ல. நாங்கள் கேட்பது புனர்வாழ்வும் அல்ல. நாங்கள் கேட்பது பொதுமன்னிப்பும் அல்ல. நாங்கள் அரசியல் தளத்திலிருந்து கேட்கின்றோம். இவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்!

நீண்ட ஒரு அறிக்கையை நாங்கள் தயாரித்து இருக்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து வழக்கிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாள் வரையிலே முகம் கொடுக்கின்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான ஒரு அறிக்கை. இந்த அறிக்கையை நாங்கள் ஜனாதிபதிக்கு கையளித்தோம். இந்த அறிக்கையை பிரதமருக்கு, மனிதஉரிமை ஆணையத்திற்கு கையளித்திருந்தோம். இந்த அறிக்கையை ஐநா விற்கும் கையளித்திருந்தோம். கையளித்துவிட்டு இதுதொடர்பாக நாங்கள் உரையாடுவதற்கு சந்தர்ப்பதை தாருங்கள் என்று கேட்டோம். யாருமே தரவில்லை.

இந்த அறிக்கையில் கிட்ட 39 பேருடைய வழக்குகள்  இருக்கின்றது. எங்களுடைய அமைப்பிலே சட்டத்தரணிகள் கிடையாது.  ஏனென்றால் சட்டத்தரணிகளை நம்பி நாங்கள் இதனை செய்யவில்லை. என்ஜியோக்களை நம்பி நாங்கள் இதனை செய்யவுமில்லை. சட்டத்தரணிகள் சட்டநுணுக்கங்களைக் கொண்டுபோய் எப்போது விடுதலை செய்யலாம் என்று பார்க்கின்றார்கள். அதன் காரணமாகத்தான் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டிருக்கின்றது. என்ஜியோக்கள் இதனை வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டத்தரணிகளும் என்ஜியோக்களும் இணைந்தும் செயற்படுகின்றார்கள். எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்பது சட்டத்தரணிகளை உள்வாங்கவுமில்லை, என்ஜியோக்களை உள்வாங்கவுமில்லை, அரசியல் கட்சிகளையும் உள்வாங்கவுமில்லை. இது மக்கள் சக்தியோடு மக்கள் குரலாக வீதியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஒரு குரல். உங்கள் மத்தியிலே இந்த விடயம் சம்பந்தமா கலந்துரையாடுவது தொடர்பில்  இந்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறுகின்றேன்.

நீதி அமைச்சர் இத்தனை பேர்தான் உள்ளே இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார். அவர் கூறிய பின்னர் நாங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை அறிவதற்காக ஒரு விண்ணப்பப்படிவத்தை கொடுத்தோம். அதற்கேற்ப எங்களுக்கு  வழங்கப்பட்டது 135 பேர் இருக்கின்றார்கள் என்று. இப்பொழுது  புனர்வாழ்வு, விடுதலை என்று கூறப்பட்டு வழக்குகள் முடிவடைந்த நிலையில் 108 பேர் உள்ளே இருக்கின்றார்கள். 108 பேர் உள்ளே இருக்கின்ற நிலையில் தான் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று ஜனாதிபதி லண்டனில் போய் கூறிக்கொண்டிருக்கின்றார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பாக கடந்த மே தினத்திற்கு முன்னதாக கூடி தெற்கில் இருந்த முற்போக்கு சக்திகளுக்கும், இடது சாரி தொழில் சங்கங்களுக்கும் நாங்கள் கடிதம் ஒன்று கையளித்தோம். நீங்கள் உங்களுடைய மே தின மேடையிலே  இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன் வையுங்கள் என்று கூறினோம். அதற்கேற்ப தெற்கிலே அந்த மேடையிலே அவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகத்த தான் கருதுகின்றோம். தெற்கிலே இருக்கின்ற இடதுசாரிகளும், முற்போக்கு சக்திகளும் அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையிலே நாங்களும் அவர்களும் கைகோர்க்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம். குறிப்பாக ஜேவிபி யினர், மக்கள் விடுதலை முன்னணியினர்  இந்த யுத்தத்தை   கொண்டு நடத்துவதற்கு முழு மூச்சாக ஒத்துழைப்பை வழங்கியவர்கள். அவர்களும கூட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று கூறினார்கள் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதமுடியும்.

இறுதியாக பார்வையாளர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான  பதில்களும் ஆரோக்கியமான உரையாடலாக இருந்தன. சில பகுதிகளை இங்கே தருகிறோம்:   

வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்கள் அரசியல் கைதிகள் விடயத்தை எவ்வாறு பார்க்கின்றார்கள்?

அருட்தந்தை சக்திவேல்: தமிழ் மக்களின் அரசியலை ஏற்றுக் கொண்ட தமிழ் சமூகம் எங்களுக்கு தேவை. அந்த தமிழ் சமூகத்தை பத்திரிகைகளில் காண்கின்றோம். ஆனால், நடைமுறையில் காண முடியாமல் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை எடுத்துக் கொண்டாலும் கூட அந்தக் குடும்பத்தார் தாய்மார்கள் வீதிகளில் அமர்ந்திருக்கின்றார்களே தவிர, எத்தனையோ பேர் அந்த வீதியாலே பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சிறிது இறங்கி அந்த போராடும் மக்களை பார்ப்பதோ அவர்களோடு பேசுவதோ கிடையாது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பேரணிகள், போராட்டங்கள் நடாத்தும் போது அந்தப் பிரதேசம் சார்ந்தவர்களைக் கூட காண முடியாமல் இருக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தங்களிடத்தில் இருந்து தூர வைக்கும் நிலைப்பாட்டுக்குள்ளே தள்ளப்பட்டிருக்கின்றது. இது தான் இன அழிப்பின் உச்சக் கட்டம்!  2009 ஆம் ஆண்டு இனவழிப்பின் உச்சக் கட்டமல்ல!  எங்களை எங்கள் பிரச்சினைகளில் இருந்து தூரமாக்குகின்ற மனநிலையினை உருவாக்கி அந்த மனநிலைக்குள்ளே எங்களை வைத்திருப்பதைத் தான் இனவழிப்பின் உச்சக் கட்டம் என்று நான் கூறுகின்றேன்.  இதற்குத் தான் இப்போது மருந்து தேவை. 

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் சமூகம் அக்கறை காட்டாது விட்டால்,   அடுத்து ஒரு போராட்டத்துக்கு எம் இளைய சமூகம் முன்வரும் என்பதனை நாம் எதிர்பார்க்க முடியாது.   இப்போது உள்ளே இருக்கின்றவர்கள் பாதிக்கப்பட்ட அவர்களுடைய குடும்பத்தார் ஆகியோர்களுக்கு வெளியே இருக்கின்றவர்கள், இந்த அரசியல் சமூகம் ஒரு பாதுகாப்பை கொடுக்காது என்கின்ற மனப்பான்மைக்குள் வந்தால் அடுத்த ஒரு போராட்டத்துக்கு  யாரும் ஆயத்தமாக மாட்டார்கள். இந்த அரசாங்கங்கள் எங்களுக்கு தேவையானவற்றை கொடுக்கப் போவதில்லை. ஆகவே,  அடுத்து ஒரு போராட்டம் தேவை.  இந்த அரசாங்கம் கூட அடுத்த தேர்தலுக்காக ஆயத்தப்படுகின்றார்களே தவிர தமிழ்மக்களுடைய அரசியல் தீர்வுக்கு ஆயத்தப்படுத்தக்கூட இல்லை. ஆகவே, நாங்கள் அரசியல் கைதிகளை உள்ளே வைத்துக் கொண்டு என்ன மாதிரியான செயற்பாட்டுக்குள் இறங்கப் போகின்றோம் என்பதே கேள்வி. 

அரசியல் கைதிகள் தொடர்பில் எங்களால் கட்டமைக்கப்பட்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்கான தடைகள் என்ன?     

குமாரவடிவேல் குருபரன்: நாங்கள் அரசியல் கைதிகளினுடைய பொருளாதார நிலைமை, மறுவாழ்வு நிலைமை தொடர்பில் எந்தவித காத்திரமான நிலைப்பாடும் எடுக்கவில்லை என்பது மீள மீள தமிழ்ச் சமூகம் பல்வேறு தளங்களில் எதிர்நோக்குகின்ற விமர்சனமாகும். நாங்கள் காத்திரமான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை இன்னும் செய்யத் தொடங்கவில்லை. 108 அரசியல் கைதிகளும் யார் என்பதனை அறிந்து கொண்டு, அவர்கள் எந்தெந்த நீதிமன்றங்களில் அந்த வழக்குகளை எதிர்கொள்கின்றார்கள். அந்த நீதிமன்றங்களில் அவர்களுக்கு சட்டத்தரணிகள் இருக்கின்றார்களா? இல்லையா?  அந்த அரசியல் கைதியின் குடும்பம் எங்கே உள்ளது? அவர்களுடைய பொருளாதார நிலை என்ன? அந்தப் பொருளாதார நிலையை  உயர்த்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமா? அப்படியான விடயங்களை பார்ப்பதற்கு கூட எங்களுக்கு நேரமில்லாமல் இருக்கிறது என்பது உண்மையில் ஆச்சரியமாகவும் இருக்கு. மாவீரர் குடும்பங்களைப் பற்றிக் கதைப்பதென்றால் அது ஒரு பெரிய அளவிலான நடவடிக்கை. ஆனால் அரசியல் கைதிகள் எண்ணிக்கையே 108 தான். சிறப்பாக முகாமைத்துவம் செய்யக்கூடிய அளவிலான தொகையினரை கூட நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது உண்மையாகும். ஒரு விடயத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். தமிழர்கள் அமைப்பு ரீதியாக சிந்திப்பதற்கும், அமைப்பு ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கும் சரியாக நலிவடைந்த நிலையில் இருக்கின்றோம். 

அரசியல் கைதிகளின் விடயத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் மாணவர்கள் அனைவரும் போராடியிருந்தோம். ஆனால், அதற்கு சரியான தீர்வு தான் கிடைக்கவில்லை. ஏனென்றால் இதற்கொரு சரியான வழிகாட்டல் இல்லை என்பது தான். எங்களுக்கு முந்தைய காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் சரியான முறையில் வழி நாடத்தப்பட்டதாக கேள்விப்படுகின்றோம். இப்போது போராட்டங்களை  முன்னெடுப்பதற்கு சரியான வழிகாட்டல்கள் இல்லை என்பது தான் காரணம். எங்களது வீட்டில் உள்ளவர்களில் இருந்து எல்லாருமே சுயநலம் மிக்கவர்களாக தான் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டத்தில் முன்னின்றதற்கு வீட்டில் நிறைய பேச்சு வாங்கியிருக்கின்றோம்.  மாணவர்கள் சிலர் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில்  இந்தப் போராட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வழி உள்ளதா

குமாரவடிவேல் குருபரன்:மிக முக்கியமான கேள்வி. காலத்தின் தேவை கருதிய கேள்வியாகவே நான் இதனை பார்க்கிறேன். 

பல்கலைக்கழக மாணவர்கள் காலம் காலமாக பொதுப் பிரச்சினைகளில் முன்னாலிருந்து போராடி இருக்கின்றார்கள். இந்த நீண்ட பாரம்பரியத்தில் இருந்து நீங்கள் வருகின்றீர்கள்.அது வரவேற்புக்குரியது. ஆனால், பல்கலைக்கழக மாணவர்களுடைய போராட்டம் ஒரு  வித்தியாசமான போராட்டமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.   70, 80 களில் இங்கே இருந்த சூழல் எதனைச் செய்திருக்கும் என்றால், ஒரு பிரச்சினை வருகின்றதென்றால் அதைப்பற்றி ஆழ அகலமாக விசாலமாக உரையாடி இருப்போம். சில நேரங்களில் பேராசிரியர்களும் வந்திருப்பார்கள், சில வேளை சிரேஷ்ட மாணவர்களும் வந்திருப்பார்கள். அந்த உரையாடல்களின் இறுதியில் சில தீர்க்கமான முடிவுகளுக்கு வந்திருப்பார்கள். என்று தான் நாங்களும் கேள்விப்படுகின்றோம். ஆனால் எந்த நடவடிக்கையாக இருக்கலாம்.  அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டமாக இருக்கலாம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாக இருக்கலாம்.  இவை தொடர்பில் மாணவர்களுக்கு இடையிலேயாவது ஒரு ஆழமான  உரையாடலை நடத்தியிருக்கலாம். பல மணி நேரங்கள் உரையாடல் நடத்திக் கூட தீர்க்கப்பட முடியாத  விடயங்கள் இவை. ஆனால், இவற்றுக்காக நாங்கள் ஒரு மணித்துளி கூட செலவிட்டதில்லை.   அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போது சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் மிக ஆழமான நிபுணரான கனேடியப் பேராசிரியர் ஒருவர் இங்கு வந்திருந்தார்.    'அரசியல் கைதிகள் தொடர்பிலான சர்வதேச சட்ட நிலைமை' என்ன என்பதனை அறிவதற்காக அவர்களை உரையாற்ற நாங்கள் கூப்பிட்டிருந்தோம்.  அந்த உரையாடலில் 4 பல்கலைக்கழக மாணவர்கள் தான் பங்குபற்றி இருந்தார்கள்.  அது தான் இன்று பல்கலைக்கழகத்தில் இருக்கக் கூடிய சூழல். நாங்கள் உரையாடல் வெளிகளை அதிகரிக்க வேண்டும்.  அந்த மாதிரி வெளிகளில் நானோ அல்லது அருட்தந்தையோ வரவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை.  மாணவர்களே உரையாடலை முன்னெடுக்கலாம்.

ஆனால்,  உரையாடல் கூட இல்லாமல் செயற்ப்பாட்டு வெளிக்குப் போனால் நாங்கள் பல்கலைக்கழகம் தானா என்கிற கேள்வி எனக்குள் எழுகின்றது. அது மீள உயிர்ப்பு பெறுவது இந்தப் பல்கலைக்கழகம் நிமிர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும். இப்படி ஒரு கேள்வி ஒரு மாணவனிடம் இருந்து தன்னியல்பாக வருவதை இன்றைய நாளில் நான் பெற்ற மிகப்பெரிய சந்தோசமாக கருதுகிறேன். 

இந்தக் கலந்துரையாடல் நடத்தியதன் முடிவு அல்லது பலாபலன் என்ன?. 

குமாரவடிவேல் குருபரன்: சிந்தனைக்கான செய்திகளை சொல்வது தான் இந்தக் கலந்துரையாடலின் நோக்கம். அது போதுமற்றதென நீங்கள் நினைக்கலாம். ஆனால், செயற்பாட்டிற்கான புள்ளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.  செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய நபர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றார்கள்.  எமது அடையாளம் அமைப்புக்கும் சில பொறுப்புக்கள் உள்ளது. தொடர்ந்தும் விதைப்போம். 

 தொகுப்பு-துருவன்
நிமிர்வு யூன் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.