வலிகாமம் வடக்கில் மீளக் குடியேறலில் உள்ள சவால்கள்


யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்ற போதும் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாகவுள்ள மக்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. இது நல்லிணக்க அரசாங்கத்தின் ஸ்திரமற்றதன்மையினைக்  காட்டுகின்றது.
நல்லாட்சி  அரசாங்கம் என்று சொல்லி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் வட கிழக்கு மக்களுக்கு ஆக்கபூர்வமாக எவ்விதமான செயற்றிட்டங்களையோ,  உதவிகளையோ செய்யவில்லை. மாறாக மக்களை ஏக்கநிலைக்குள் வைத்திருப்பதனையே விரும்புகின்றது. வலிகாமம் வடக்கில் அண்மையில் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அதற்குப் பின்னர் 40 ஏக்கர் அதனைத் தொடர்ந்து 36 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது. எனினும் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை என்பதே தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது.


வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தின்பின்னரான சூழலில் நல்லிணக்க அரசாங்கத்தின் ஆட்சிக்குப் பின்னர் மக்களுக்குத் தேவையான எந்தவொரு விடயத்தையும் ஆக்கபூர்வமாக செய்யவில்லை. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதுவித பதிலும் இல்லை.  உயர்பாதுகாப்பு வலய விடுவிப்புக்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் மற்றும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகள் எவையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் வடக்குமாகாணசபை கூட ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. மகாணசபைக்கும் ஆயுள்முடிவடையவுள்ள நிலையில் இருக்கின்ற நான்கு மாதங்களில் அடுத்த தேர்தலுக்காக உள்ளே வரவேண்டும் என்பதற்காக அமைதிபோக்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் வெளிப்பாடுதான் ஆனி மாதம் நடைபெற்ற  மாகாணசபை அமர்வு நண்பகல் 12.30 மணியுடன் வேறுவிடயங்கள் இல்லாமையால் ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையால் பலவிடயங்களை செய்யக் கூடியதாக இருந்தும் அதனை பற்றிய செற்பாடு இல்லாது தேவையற்ற விடயங்களில மூக்கை நுழைத்து வருகிறது.


குறிப்பாக வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பில் எத்தனை உறுப்பினர்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்கள் தெரியும்?  விடுவிக்கப்படும் இடங்களுக்கு எத்தனை பேர் சென்று பார்திருக்கிறார்கள்? வடக்குமாகாண முதலமைச்சர் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிக்கு சென்று பார்வையிட்டார் என்றே ஊடகங்களில் பெரிய  படமும் செய்தியும் வெளியாகியிருந்தது. அவர் எந்த இடத்தில் எத்தனை மக்களை சந்தித்தார்? குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தாரா?  மயிலிட்டி விடுவிக்கப்பட்ட இடத்தைஇ அங்கிருந்த இடத்தை இயலுமானளவு பார்வையிட்டாரா? குறித்த இடத்தில் விடுவிக்கப்பட்ட கோயில் ஒன்றை பார்வையிட்டுவிட்டு திரும்பிச் சென்றவா் அதற்கு பின் ஆக்கபூர்வமான செயற்பாடு எதுவும்  வடக்குமாகாணசபையில் நடைபெறவில்லை. இவ்வாறான சூழலே தற்போதும் மாகாணசபையில் உள்ளது.

மீள்குடியேறுவதற்கான காணி விடுவிப்புக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றபோதும் அத்தகைய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் விடுவிக்கப்பட்டிருந்த இடங்களைப் பார்க்கும் போது காடுகள் பற்றிப் பரந்து  காணப்படுவதுடன் அங்கிருந்த வீடுகள், பொது மண்டபங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் ஆகியவை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட நிலையிலேயே  காணப்படுகின்றன.


நிரந்தரமாக காணப்பட்ட வீதிகள் மூடி மறைக்கப்பட்டு புதிய வீதிகள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு அவையே ஆரம்பகால வீதிகள் போல காட்சி தருகிறன. இது மட்டுமன்றி மக்கள் பாவித்து வந்த கிணறுகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அவை சமையல் அறைகளாக  பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் மண் குடிசையிலான வீடுகளைக்  கட்டி உல்லாச விடுதிகள் போன்று பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இத்தகை சூழலே வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் காணப்படுகின்றது.

மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்வத்துடன் பார்வையிடச் செல்லும் மக்கள் ஒருசில மரங்கள் மற்றும் வீதிகள் கட்டடங்கள் சிலவற்றை கண்டே தமது வீடுகள் காணிகளை அடையாளம் கண்டு வருகின்றார்கள். ஒருசில குடும்பங்கள் தமது வசதிக்கேற்ப உடனடியாகவே தமது காணிகளை அடையாளம் கண்டு எல்லைககளை அடைப்பதும் அடையாளப்படுத்தும் வேலைகளை வேகமாக செய்து வருகின்றார்கள்.


இதேவேளை விடுவிக்கப்படும் இடங்களில் மிச்சமாக இருக்கின்ற பொருட்களை கொள்ளை அடிப்பதில் கொள்ளையர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு சில இராணுவம் மற்றும் பொலிஸார் உடந்தையாகவும் செயற்பட்டு வருகிறார்கள். மக்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற ஒருசில பகுதிகளில் உள்ள ஓடுகள் கதவுகள்  நிலைகள் ஜன்னல்கள் இயந்திரங்கள் இரும்புக் கம்பிகள் கேடயங்களை இவ்வாறானவர்கள் கொள்டையடித்துச் சென்று விற்று அதிக இலாபம் ஈட்டி வருகின்றார்கள். ஆலயங்களில் உள்ள சிலைகள் ஐம்பொன்கள் விக்கிரகங்களையும் இக் கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையிலேயே வலிகாமம் வடக்கில் மீள்டியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மீள்குடியேறுவதற்காக கிராம அலுவலரிடம் தமது காணிவிபரங்களை உறுதியுடன் முழுமையான விபரங்களை பதிவு செய்து வருகின்றார்கள். தமது காணிகளில் உள்ள மரங்கள் பொருட்களை எற்றுவதாயின் பிரதேசசெயலகத்தில் அனுதியைப் பெற்று ஏற்றிசெல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசார்பற்ற  நிறுவனம் கண்ணிவெடி தொடர்பான விளக்கங்களை வழங்கி வருகின்றது.

விடுவிக்கப்பட்டவுடன் எத்தகைய தேவைகள் செய்யவேண்டும் என்பதில் துறைசார் திணைக்களங்களுடாக தரவுகளை பெற்று  பிரதேச சபைஇ பிரதேச செயலகம் கணக்கெடுத்து வருகிறது. இதுமட்டுமன்றி காணிகள் வீதிகள் பாதைகள்  வீடுகளை அடையாளம் கண்டு அடையாளப்படுத்தி வருவதுடன் வீதிகள் பாதைகளை கனரக வாகனத்தின் முலம் அகற்றிவருகிறது. விடுவிக்கப்பட்டபகுதிகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு பதிவுகளை செய்துருகின்றனர். இம் மக்களுக்கு வாழ்வாதர உதவிகள்  வீட்டுத்திட்டங்கள் போன்றவை உடனடியாக வழங்கப்படுமேயானால் தாம் உடனடியாகவே மீள்குடியேறுவோம் என  உறுதியாக கூறுகின்றார்கள். எது எவ்வாறு இருந்தாலும் யாழ்மாவட்டத்தின் மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் பல இடங்கள் விடுவிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டது. அதனை வைத்தே பல அரசியல் கூத்துக்களும் இடம்பெற்று வந்தன. எனினும் விடுவிக்கப்படாது என கூறப்பட்ட இடங்கள் பல விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறானாலும் விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் மீளக் குடியேறுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதற்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் வேண்டும்.

முனைவன்
நிமிர்வு யூன் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.