அரசியல் கைதிகள் தொடர்பான கொள்கை நிலைப்பாடு



அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கத்தோடு இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக்கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் கலந்துரையாடல் நடத்தியது. 01.06.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மண்டபத்தில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.

அதில் பிரதான உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவரும், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான குமாரவடிவேல் குருபரன் நிகழ்த்தியிருந்தார். அவரின் உரையின் தொகுப்பு வருமாறு:

நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டு வந்தது.  ஆனாலும் ஆனந்த சுதாகரன் என்ற அரசியல்கைதி தன்னுடைய மனைவி இறந்த போது 3மணித்தியாலங்கள் மாத்திரமே அவருடைய மரண வீட்டிலே பங்கு பற்றி மீள சிறைச்சாலைப் பேரூந்திலே ஏறுகின்ற பொழுது அவருடைய மகளும் அவருடன் சேர்ந்து ஏறுகின்ற காட்சியானது தமிழ் சமூகத்திலே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து மீள அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் சமூகத்திலே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. கையெழுத்துப் போராட்டங்கள், ஜனாதிபதியிடம் மகஜர் சமர்ப்பிப்பது என்ற வகையிலே போராட்டங்கள் நிகழ்ந்தன. மீள மீள ஏதோ ஒரு சம்பவம் அல்லது ஏதாவதொரு செய்தி என்பது அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் ஆர்வத்தை எழுப்புவதும் பின்னர் அவை அடங்குவதும் பின்னர் மீள எழும்புவதுமாக தமிழ் சமூகம் இந்த விடயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் கைதிகள் என்ற பதம் அரசாங்கத்தினாலோ,  ஐக்கிய நாடுகள் அமைப்பினாலோ,  அல்லது எந்த ஒரு அமைப்பினாலோ பாவிக்கப்படாத வார்த்தையாகும். அடையாளம் கொள்கை ஆய்வு மையமும் சரி,  தமிழ் சிவில் சமூக அமையமும் சரி நாம் ஏன் இந்த சொல்லாடலை பாவிக்கின்றோம் என்பதற்கு 2015 தமிழ் சிவில் சமூக அமையத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டியிருக்கின்றோம். “அரசியல் காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பதனால் அவர்களை நாங்கள் (தமிழ் சமூகம்) அரசியல் கைதிகளாக கருதுகின்றோம். இதன் அடிப்படையில் அவர்கள் சாதாரண குற்றவியல் கைதிகளிலிருந்து வித்தியாசமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.” நாங்கள் எடுத்துக் கொண்ட வரைவிலக்கணம் சர்வதேச மன்னிப்புச்சபை அரசியல் கைதிகளுக்கு கொடுக்கக்கூடிய வரைவிலக்கணத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

இதற்கு அப்பால் காத்திரமாக அரசியல் கைதிகள் தொடர்பாக நாங்கள் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றால் அது எத்தகைய கொள்கை நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒரு தலையீட்டை செய்ய வேண்டும். இதில் நாங்கள் எடுக்கின்ற நிலைப்பாட்டைத் தான் தமிழ் சமூகமும் எடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இது தமிழ் பார்வையில் இருந்து நாம் வைக்கின்ற ஒரு தலையீடு. அந்த தலையீட்டை வைத்துக்கொண்டு அந்த அடிப்படையிலே இதைப்பற்றி சிந்திக்கலாமா என்று ஆராயவேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.


இதனை இரண்டு பிரதான விடயங்களாக நாம் நோக்கலாம். ஒன்று, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு நடத்தப்படுவதின் சரித்தன்மை தொடர்பான பிரச்சனை. இரண்டாவது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு தமிழ் சமூகம் தொடர்பில் பொதுமன்னிப்பை கோர வேண்டுமா, அல்லது பொதுமன்னிப்புக்கு மாற்றாக சட்டத்தின்  பாற்பட்டு ஏதேனும் மாற்றீடுகள் உள்ளனவா, மாற்றீடுகளை நாம் தேடவேண்டுமா, அவை எத்தகைய மாற்றீடுகளாக இருக்க முடியும் என்பது தொடர்பான நிலைப்பாடு.

முதலாவது நிலைப்பாடு பற்றி நான் அதிகம் பேச வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இரண்டாவது விடயம் மிக முக்கியமான கடினமான விடயம்.  ஒரு முழுமையான மாற்றுக்கருத்தை சொல்லுகின்ற விடயமாக இருக்கின்றபடியால் நான் அதில் கூடுதலாக என்னுடைய நேரத்தை செலவழிக்கலாம் என கருதுகின்றேன்.

முதலாவதாக பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி பார்ப்போமென்றால் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினுடைய பயங்கரவாதத்திற்கு  எதிரான நடவடிக்கைகளில் மனிதஉரிமைகள் தொடர்பான விடயத்திற்கு பொறுப்பான சிறப்பு அறிக்கையாளர் பென் அமெர்சன் இலங்கைக்கு வந்திருந்தார். வவுனியாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர் தன்னுடைய அறிக்கையிலே 82 பேர் இன்னும் குற்றச்சாட்டு பத்திரம் கூட தாக்கல் செய்யப்படாத நிலையில் சிறையில் இருப்பதாக தனக்கு அரசாங்கம் சொன்னதாக கூறினார். அதிலே 70 பேர் ஐந்து வருடங்களிற்கு மேல் எந்த வித வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் இருப்பதாகவும், 12 பேர் பத்து வருடத்திற்கு மேல் எந்த வித வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் இருப்பதாகவும் அவர் தன்னுடைய அறிக்கையிலையே சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் 19 ஒக்டோபர் 2017 அன்று கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையில் பதிலளித்து பேசிய அப்போதைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் சாகலரட்னநாயக்க கைது செய்யப்பட்டவர்களிலே 74 பேர் எந்தெந்த ஆண்டுகள் கைது செய்யப்பட்டனர் என்ற விபரத்தை வழங்கினார். இந்த புள்ளி விபரங்களிலே ஒரு மயக்கத்தன்மை இருக்கின்றது.

சிறைச்சாலைக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் அண்மையிலே ஒட்டுமொத்தமாக சிறைச்சாலையில் 216 பேர் சிறைக்கைதிகளாக இருப்பதாக தெரிவித்தார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நெடிய பேட்டியிலே அவர் இதனை கூறினார். அவர்களில் 48 பேர் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டவர்கள். அதாவது வழக்கு நடைபெற்று தண்டனை வழங்கப்பட்டவர்கள் 48 பேர். ஆனந்த சுதாகரன் அந்த வகைப்படுத்தலுக்குள் தான் வருவார். 116 பேருக்கு இன்னும் வழக்கு நடைபெற்று வருவதாகவும், 52 வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தின் முன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

2015 இல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விடயத்தை அரசாங்கம் எப்படி கையாண்டிருக்கிறது  என்று பார்ப்போம். ஒன்று நாங்கள் பிணை கொடுக்கின்றோம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அது நீதவான் நீதிமன்றமாக இருக்கலாம் அல்லது மேல் நீதிமன்றமாக இருக்கலாம் தற்பொழுது கூடுதலாக பிணை வழங்குகின்றோம் என்கிறார்கள். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பிணை என்பது இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் பிணைக்கு அனுமதி வழங்கினால் தான் பிணை கொடுக்கலாம் என்றிருக்கின்றது. ஆகவே 2015 இல் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் நாங்கள் அவர்களுக்கு பிணை வழங்குவதனை கூடுதலாக்கியுள்ளோம். பிரச்சனைக்குரிய வழக்குகளாக இல்லாமல் இருந்தால் நாங்கள் பிணைகளை வழங்கியிருக்கின்றோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

இரண்டாவது புனர்வாழ்விற்கு செல்ல விரும்புபவர்களை தாங்கள் புனர்வாழ்விற்கு அனுப்புகின்றோம். அதாவது பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்களுக்கு புனர்வாழ்வை ஒரு தெரிவாகக் கொடுக்கிறோம். அத்தெரிவை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் புனர்வாழ்வை பெற்றுச்செல்லலாம் என்ற நிலையை அவர்களுக்கு வழங்குகின்றோம் என்று அரசாங்கம் பென் எமர்சனுக்கு கூறியதாக அவர் தன்னுடைய அறிக்கையில் சொல்லுகின்றார். தங்களைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வடிவங்களில் அரசியல் கைதிகள் பிரச்சனைகளை கையாளுகின்றோம் என தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்புவது என்பது பொருத்தமானதா? சரியானதா?  சட்டரீதியாக பார்க்கின்ற பொழுது 2009 ஆம் ஆண்டு மக்கள் வெளியேறுகின்ற பொழுது அவர்கள் சரணடையலாம் என்று சொல்லி சரணடையாவிட்டால் என்ன நடக்கும் என்று ஒலிபெருக்கியில் எல்லாம் சொல்லப்பட்டு போராளிகள் மக்கள் என்று பலர் சரணடைந்தார்கள். இது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் இல் அப்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே சில ஒழுங்கு விதிகள் ஆக்கப்பட்டன. 2011 யூலை 31 ஆம் திகதி அவசரகால நிலைமையை நீடிப்பதில்லை என்று தீர்மானித்ததாக சர்வதேசத்திற்கு அறிவித்துவிட்டு, ஓகஸ்ட் 1 ஆம் திகதி பயங்காவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்கு விதிகள் என்று இரண்டு தடிப்பான ஆவணங்கள் வெளியிடப்படுகின்றன. சர்வதேசத்துக்கு தாங்கள் அவசரகால நிலையை நீக்குகின்றோம் என்று சொல்லிவிட்டு பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழே இந்த ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டன.

அந்த ஆவணங்களில் ஒன்றில் யாரை சரணடைந்தவர்கள் என்று கருதலாம், இவ்வாறாக சரணடைந்தவர்களை என்ன செய்யலாம் என்பது கதைக்கபடுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ, அல்லது ஏனைய ஆயுதப் பயன்பாடுகள் தொடர்பிலான ஏனைய சட்டங்களின் கீழோ நான் ஒரு குற்றம் இழைத்தவனாக என்னை கருதினால் நானாக என்னை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பு செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த இடத்தில் இத்தனையும் சொல்ல வேண்டும். 2012 இல் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு அவர்கள் சரணடைந்தவர்களாக கருதப்பட்டு 3 மாதம் புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டார்கள். அது நல்ல ஒரு உதாரணம். நாங்கள் அது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடாக ஐ.நா. செயற்குழுவுக்கு உடனடி மனு ஒன்று அனுப்பினோம். அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் அரசாங்கத்திற்கு அது தொடர்பான  கேள்வி எழுப்பப்பட்டது. இதில் சரணடைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரோ, செயலாளரோ சரணடையவில்லை என்று நாங்கள் சொல்லியிருந்தோம். மாறாக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதனை வலியுறுத்தியிருந்தோம். கைது செய்யப்பட்டவர்களையும் சரணடைந்தவர்களாக வகைப்படுத்துவதன் அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பலாம். அதாவது இந்த சட்டத்தின் கீழ் தாங்கள் குற்றவாளிகளாக இருக்கக்கூடும் என கருதுபவர்கள் சரணடையலாம் என்றும், அவ்வாறு சரணடைந்தவர்களை ஒன்றிலிருந்து இரண்டு வருடங்கள் புனர்வாழ்விற்கு அனுப்பலாம் என்றும் சொல்லி இந்த விதிகள் பேசுகின்றன.

அப்படியானவர்களுக்குத்தான் புனர்வாழ்வு என்று சொல்லிவிட்டு ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து வருடங்களுக்கு மேற்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்களை எந்த அடிப்படையில் புனர்வாழ்விற்கு அனுப்புகின்றார்கள்?  சட்டத்தில் அதற்கான இடம் இல்லை என்பது தான் உண்மை. சட்டதில் இடமில்லாத வகையில் அவர்கள் புனர்வாழ்விற்கு அனுப்படுகின்றார்கள். அதன் காரணமாக புனர்வாழ்வு பெற்றதன் பின்னரும் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லையா என்ற கேள்வியை அது ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கு தெளிவாக சொல்லப்படுகின்றது நீங்கள் புனர்வாழ்வு எடுத்தக் கொள்ளுங்கள் என்று. புனர்வாழ்வு எடுத்தால்அவர்களுக்கு எதிராக வழக்குகள் முன்வைக்க முடியாது.

பல்கலைக்கழகத்தில் மிருதங்க பாடத்தினுடைய விரிவுரையாளராக, போதனாசிரியராக இருந்த திரு கண்ணதாஸ் அவர்கள் அவ்வாறாக குறிப்பிட்ட கால புனர்வாழ்வு பெற்றவர். அதன் பின்னரும் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அவர் குற்றவாளியாக ஆயுள் தண்ணடனை விதிக்கப்பட்டதை நாம் காணக்கூடியதாக இருந்தது.

அதன் பின்னராக புனர்வாழ்வை பெற்றுக்கொண்டு மீள சமூகத்தில் இணைந்து கொண்டவர்கள் இது நிலைக்குமா என்பது தொடர்பாக தங்களுக்கு ஐயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது பலத்த ஒரு சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்ற விடயமாகவும் இருக்கின்றது என்பதனையும் சொல்லியிருக்கின்றனர். அதாவது வவுனியா மேல் நீதிமன்றத்தில் கண்ணதாஸ் ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றவர் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. புனர்வாழ்வு பெற்றவர் ஏதோவொரு குற்றத்தின் கீழ் புனர்வாழ்வையும் ஒரு தண்டனையாகப் பெற்றிருக்கிறார்.

ஐக்கிய  நாடுகள் சபையினுடைய மனிதஉரிமை காரியாலயம் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புனர்வாழ்வு என்ற பெயரில் நடந்த சித்திரவதைகள் பற்றி பக்கம் பக்கமாக பேசப்பட்டுள்ளது. புனர்வாழ்வு என்ற பெயரில் என்ன உண்மையாக நடக்கிறது என்பது பற்றி ஒரு பக்கம் பேசலாம். ஆனால் புனர்வாழ்விற்கு அனுப்புவதே அவர்களுக்கு முற்றான விடுதலை என்ற உத்தரவாதத்தை வழங்குகின்றதா என்றால் அதுவுமில்லை என்பது கண்ணதாஸ் அவர்களின் வழக்கு மூலமாக சொல்லப்படுகின்ற செய்தியாகும். இது விடுவிக்கப்பட்டு வெளியில் வந்திருக்கக் கூடிய அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான எதிர்காலம் தொடர்பிலும் ஒரு கேள்விக் குறியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கியமான விடயம். இது தொடர்பான ஒரு தெளிவு வரவேண்டும். புனர்வாழ்வை ஒரு தண்டனையாக கருதுவோமானால் சட்டப்படி ஒரு தண்டனைக்கு மாற்றீடாக புனர்வாழ்வு இருக்குமாக இருந்தால் எங்களுடைய குற்றவியல் தண்டனை வழக்கிலே ஒரே நபரை இரண்டு தடவை தண்டனைக்கு உட்படுத்த முடியாது. அவர் புனர்வாழ்வு பெற்றது ஒரு தண்டனை, இப்பொழுது ஆயுள் தண்டனை பெற்றிருப்பது இரண்டாவது தண்டனை. இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. அப்படியிருந்தாலும் வவுனியா மேல் நீதிமன்றம் இந்த விடயத்தை கவனிக்கத் தவறியிருந்தது. கவனிக்க மறுத்திருந்தது. தற்பொழுது இவ்வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு போயிருக்கின்றது. இதுவும் ஒரு பெரிய சிக்கல். பயங்கரவாத தடைச்சட்ட வழக்காக இருக்கலாம், அல்லது குற்றவியல் வழக்காக இருக்கலாம் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு அப்பீலுக்கு சென்றால் அந்தக் கேஸ் எடுபடுவதற்கே இரண்டு வருடங்கள் எடுக்கும். அவ்வளவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறிப்பாக குற்றவியல் மேன்முறையிட்டு வழக்கில் ஒரு தேங்கிய நிலை காணப்படுகின்றது.

இதை தவிர எங்கே வைத்து புனர்வாழ்வு எடுக்கப்போகிறீர்களா? இல்லையா என்ற கேள்வி கேட்கிறார்கள் என்பதனையும் பாருங்கள். நீதவான் நீதிமன்றத்தில் வைத்துக் கேட்கிறார்கள். நீதவான் நீதிமன்றத்தில் PTA வழக்குதாக்கல் செய்யப்படுவதில்லை. குற்றச்சாட்டுப் பத்திரமே வாசிக்கப்படுவதில்லை. குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்படுவது, நீங்கள் குற்றவாளியா, சுற்றவாளியா என்று கேட்டு வழக்கு விசாரணை முழுமையாக நடைபெறுவது எல்லாம் மேல் நீதிமன்றத்தில் தான். ஆனால் நீதவான் நீதிமன்றத்தில் புனர்வாழ்வு சந்தர்ப்பம் கொடுக்கப்படுபவருக்கு எதிராக இன்னமும் குற்றச்சாட்டுப் பத்திரமே வாசிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டு நான் குற்றவாளி என்று ஒப்புக் கொண்டு அதன் பின்னர் அவர் புனர்வாழ்விற்கு அழைக்கப்படுவார் என்றால், ஓம் குற்றச்சாட்டுப் பத்திரம் வாசித்தாச்சு,  குற்றவாளி என்ற அடையாளம் காணப்பட்டாச்சு, புனர்வாழ்வு கொடுத்தாச்சு.ஆகவே திரும்ப குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்க முடியாது என்று வரும். ஆனால் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து இது நடப்பதனால் இந்த புனர்வாழ்வு முறை உண்மையில் இந்த விடயத்தில் ஒரு தெளிவான பதிலை நிச்சயமாக வழங்காது.

சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து இந்த அரசாங்கம் எடுத்துவரக்கூடிய ஒரு பிரச்சாரம் தாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து கைதுகளை செய்யவில்லை என்பது. 2015, 2016 ஆம் ஆண்டுகளில் தான் இறுதியாக கைது செய்ததாக சொல்லுகிறார்கள். ஆனால் எங்களுக்குத் தெரியும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பின்னர் அதற்குப் பிறகும் கைதுகள் நடைபெற்றிருக்கின்றன. அப்படியான கைதிகள் நீண்ட காலமாக தொடர்ந்து வைத்திருப்பதில்லை என்றாலும், அதை இன்னும் பாவித்து ஒரு விதத்தில் சமூகத்தை அச்சுறுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வார்கள்  கொஞ்சக்காலம் வைத்திருப்பார்கள்  பிறகு விடுதலை செய்துவிட்டு பிறகு திருப்பி வழமையான சட்டத்தின் கீழ் கைது செய்கின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் சொல்லுகின்றது புதிதாக தாங்கள் கைது செய்தவதில்லை என்று. ஆனால் தொடர்ந்து பயங்காரவாத தடைச்சட்டத்தை அவர்கள் உபயோகித்து வருகின்றார்கள் என்பதற்கு சான்று இருக்கின்றது.

எங்களுடைய வணக்கத்திற்குரிய எழில்ராஜனுடைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழக்கு மீளாய்வுக்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வந்த பொழுது தற்செயலாக நான் இன்னொரு வழக்கை கேட்க வேண்டி வந்தது. எழில்ராஜனுடைய வழக்கிற்கு அடுத்ததாக வந்த வழக்கு ஏறத்தாழ 15 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்காக ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. அப்படியான வழக்குகள் கூட இன்றும் தொடர்ந்து வருகின்றன என்பது தான் நிஜம். நான் அந்த  வழக்கை கேட்டுவிட்டு அன்று மாலை தான் பென் எமர்சனை சந்தித்தனான். பயங்கரவாத தடைச்சட்டத்தை தாங்கள் உபயோகிப்பதில்லை என்று அரசாங்கம் சொல்லுகின்றது என்று அப்பொழுது சொன்னார். அது உண்மையா என்று கேட்டார். இன்று காலை மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் நாங்கள் காட்டியிருப்போம் என கூறினேன்.

 தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யாமல் இருக்கலாம். ஆனால் 2010 இற்கு பத்து வருடங்கள் முதல் கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் வன்னியில் வர்த்தகம் செய்த எல்லோரும் பிடிக்கபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பக் கூடிய அளவிற்கு இது உள்ளது. நேரடியாக போரியலோடு சம்பந்தமில்லாத வழக்குகள் கூட PTA வழக்குகள் என்று வருவது தான் இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது. எந்த விதத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நாங்கள் எடுத்திருக்கும் கூடிய நிலைப்பாடு. தொடரப்பட்ட வழக்குகள் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து விளக்கத்திற்கு கொண்டு செல்வது பிழை என்ற நிலைப்பாட்டை நாம் எடுக்கிறோம். அதற்கான காரணம் பல்வேறு நபர்கள் பல இடங்களில் சொன்னதுதான். பயங்கரவாத சட்டம் ஒரு நீதியான விசாரணைக்கு இடம் கொடுக்காது. குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்துக்கொண்டு தான் கூடுதலாக இந்த வழக்குகள் முடிவுறுத்தப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைக்குழுவினுடைய ICCPR அறிக்கைகளில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது நீதியான நியாயமான விசாரணைகளுக்கு இடமளிக்காது என்பது பல முறை கூறப்பட்டுள்ளது. பல பத்து வருடங்களாக அதாவது பயங்கரவாத தடைச்சட்டம் வந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்களாக இலங்கையின் தெற்கிலிருந்து மனித உரிமை அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைப்பாடு இது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நாங்கள் பாவிக்கமாட்டோம் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கவில்லை என்று சொல்லுகின்ற அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது அதாவது பழைய பயில்களுக்கு புதிய வழக்குகள் தொடர்வதும் பிழையானது.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் பேரவை எடுத்த தீர்மானம் முப்பது ஒன்றில் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி அந்த பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் தேவைப்பட்டால் அவர்கள் இந்தப் பிரச்சனைகளை கையாண்டு கொள்ளலாம் என்ற ஒரு விடயத்தை சொல்லுகின்றோம். தெற்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ( Prevention of terrorism act of srilanka)  ஐ இல்லாமல் செய்து  counter terrorism act of srilanka என்ற ஒன்றை கொண்டு வரலாம் என்று சொல்லுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் பயங்கரவாதத்தை நீங்கள் அழித்ததாக சொன்னால் பிறகு எதற்கு கவுண்டர் பண்ணுறதோ, பிரிவென்க்ஷன் பண்ணுறதோ எங்கிருந்து எழுகின்றது என்ற கேள்வியைக் கேட்கின்றோம்.

சாதாரண சட்டத்தின் கீழ் இந்த விடயங்கள் கையாள முடியாது என்பதற்கு என்ன அத்தாட்சியை இந்த அரசாங்கம் முன்வைக்கப் போகின்றது என்ற கேள்வியைக் கேட்கப் போகின்றோம். புதிதாக ஞானசாரதேரர் போன்றவர்களை கைது செய்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் தேவை என்று இந்த அரசாங்கம் காரணம் சொல்லுகின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நாம் ஒரு தத்துவசார் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஞானசாரதேரர் போன்றவர்களைக் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யக்கூடாது என்ற நிலை எடுக்க வேண்டுமென நான் நம்புகின்றேன். அவர்களை கைது செய்வதற்காக ஐசிசிபிஆர் இற்கு கீழ் வெறுப்பை தூண்டுகின்ற பேச்சைப் பேசுபவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்டம் இருக்கின்றது. சாதாரண கிரிமினல் சட்டங்கள் இருக்கின்றன. அதில் வைத்து அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம். அதற்காக எங்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவை என்று சொல்லுவது உண்மையில் மக்களை பிழையாக நடத்துவது. ஆகவே அதை நீக்க வேண்டும்.

இதில் இன்னொரு அம்சத்தை பார்க்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கீழே என்ன மாதிரியான வழக்குகள் போடப்படுகின்றன? சாதாரணமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக அல்லாதவர்களாக இருந்தவர்கள், அவர்களோடு வெளியிலிருந்து செயற்பட்டவர்கள் அல்லது வர்த்தக உறவு வைத்திருந்தவர்கள், சமைத்துக் கொடுத்தவர்கள் போன்றவர்களுக்கு எதிராகவும் வழக்கதாக்கல் செய்யப்படுகின்றது. அல்லது இரண்டாவது வகை இயக்க உறுப்பினர்களாக இருந்து இந்த முகாம் அடித்தவை, அந்த முகாமுக்கு எதிரான சமரிலை பங்கு பற்றியவர்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முல்லைத்தீவு முகாம் அடித்தது தொடர்பான வழக்கொன்று இப்பொழுது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது.  முடிந்துவிட்டதோ தெரியவில்லை.

மூன்றாவது விடயம் இதுதான் பிரச்சனையான விடயம். இதுதான் நாங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபர்களால் யுத்தக்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படவில்லை. யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் என்றே சொல்லப்படுகிறது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் குற்றங்களாக இருக்கக் கூடிய குற்றங்களுக்கு PTA  க்கு கீழே வழக்கு தொடர்கின்றார்கள். உதாரணம் ஆனந்தசுதாகரன் விடயம். இதில் பிரச்சனை என்னென்றால் ஆனந்தசுதாகரன் உண்மையா அதிலை ஈடுபட்டாரா, இல்லையா என்பது வேறு விடயம்.

இதில் நாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? மூன்று விதமான பதில்களை இங்கு சொல்லலாம். ஒன்று யுத்தத்தின் போது நேரடி பங்கு பற்றுனர்களாக அல்லாமல் மறைமுகமாவோ அல்லது விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலோ நீங்கள் வழக்குத் தாக்குதல் செய்வதாக இருந்தால் அதனை நாங்கள் அரசியல் அறம் சார்ந்து பிழை என்கின்றோம். அப்படிப் பார்த்தால் நீங்கள் ஏறத்தாழ ஒவ்வொரு தமிழ் குடிமகனையும் கொண்டுபோய் நீதிமன்றத்தின் முன்னால் நிற்பாட்ட வேண்டிவரும். ஏதோவொரு கட்டத்தில் சாப்பாடு கொடுத்திருப்போம். ஏதோவொரு வகையிலை நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களுடைய மாமனாரோ, மச்சினனோ எவனோ ஒருத்தன் செய்திருக்கப் போகிறார். ஆகவே ஒவ்வொரு தமிழ் குடும்பத்தையும் பாதிக்கக்கூடிய அணுகுமுறை அது. உண்மையிலையே நாங்கள் யுத்ததிற்கு வெளியிலை வந்து சமாதானமாக போக வேண்டுமென்றால் அந்த அணுகுமுறை அரசு பின்பற்றாது

இரண்டாவது யுத்தத்தில் பங்கு பற்றிய விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய குற்றச்சாட்டு. இதற்காகவும் PTA இல் வழக்குகள் பாய்கின்றன. இந்த விடயத்தில் சர்வதேச சட்டத்தையும், உள்ளூர்சட்டத்தையும் பார்ப்போம். அரசுக்கெதிராக ஆயுதம் தூக்குவதற்கு சர்வதேச சட்டத்தில் என்ன சொல்லப்படுகின்றது. உள்ளூர் சட்டத்தில் என்ன சொல்லப்படுகின்றது எனப்பார்த்தல் இலகுவானது. எந்த அரசாக இருந்தாலும் தனக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை சரி என்று சொல்லாது. அரசு வன்முறை தொடர்பில் தனி உடமையைக் கோருகின்றது. யாராவது தன்னுடைய எல்லைப்பரப்புக்குள் வன்முறையை பாவிப்பதை மறுத்து வன்முறை மீது  தனக்கு மட்டுமே தனி உடமை வேண்டும் என்று கேட்பதுதான் அரசினுடைய வரைவிலக்கணம் என சர்வதேச அறிஞர் ஒருவர் கூறியிருக்கின்றார். அப்படி பார்த்தால் தனக்கு எதிராக வேறு யாரும் ஆயுதம் தூக்குவதை அனுமதிக்காது. சமூக ஒப்பந்த கோட்பாடுகள் அடிப்படையில் அரசினுடைய உருவாக்கத்தை எடுத்துப் பார்த்தால் அதன் நியாயமும் அதைப்பற்றித் தான் சொல்லப்படுகின்றது. அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னை தற்பாதுகாப்புச் செய்வதற்கான உரிமையை விட்டுக்கொடுத்து அதற்குப் பதிலாக அரசு எங்களுடைய உரிமைகளை பாதுகாத்துத் தரும் என்பதற்காகத் தான் நாங்கள் அந்த உரிமையை விட்டுக்கொடுத்தோம். அந்த அடிப்படையில் பார்த்தால் ஏறத்தாழ எல்லா தேசிய அரசுகளும் ஒரே மாதிரியானவை தான். இன்று பரவலாக பேசப்படுகின்ற அமெரிக்க யாப்பின் இரண்டாவது திருத்தம் எதற்கு வகை செய்கின்றது என்றால் நீங்கள் தனிநபராகவும் ஆயுதம் வைத்திருக்கலாம் என்கிறது. அமெரிக்க அரசியலமைப்பு உருவான காலம்,  அமெரிக்காவின் வடக்கு, தெற்கு இடையே போர் நடந்த போது லிபரலா இருக்கின்ற வடக்கு மாநிலத்தவர்களை நம்ப முடியாது என்று கறுப்பின அடிமைத்தனத்தின் பக்கம் நின்ற தெற்கு மாநிலத்தவர்கள் சொன்னார்கள். அவர்களிடம் முற்றுமுழுதாக இராணுவத்தை கொடுத்துவிட முடியாது. நாங்களும் சொந்தப் பாதுகாப்புக்காக ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சர்வதேச சட்டம் இரண்டு அரசுகள் அல்லது பல்வேறு அரசுகளுக்கிடையில் மோதல் நடைபெறுகின்ற பொழுது உதாரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டைபிடிக்கிறது என்றால் இந்திய ஆமியும், பாகிஸ்தான் ஆமியும் போரிலை ஈடுபடுகிறார்கள் என்றால் பாகிஸ்தான் ஆமியை இந்தியா தன்னுடைய நீதிமன்றில் கொண்டு போய் நிறுத்த முடியாது. ஏனென்றால் எனக்கு எதிராக யுத்தம் தொடங்கிய குற்றத்திற்காக. எந்த அரசினுடைய அரசபடைக்கும் அந்த அரசுக்கான போரிடுதலுக்கான உரிமை சர்வதேச சட்டத்தில் தெளிவாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அரச படைகளில் போரில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு அது. அதாவது வெறுமனே ஆயுதம் எடுத்து போராடினான் என்பதற்காக பாகிஸ்தான் வீரனுக்கு எதிராக எந்த ஒரு இந்திய நீதிமன்றத்தில் கூட வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.

சர்வதேச சட்டத்தில் நாடுகளுக்கிடையிலான போரில் பங்குபற்றுகின்ற அரச படை உறுப்பினர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்று வழக்கு வைக்க முடியாது. ஆனால் உள்ளகரீதியாக நாட்டிற்கு உள்ளுக்குள் நடக்கின்ற யுத்தங்களிற்குள் அதற்கு சாத்தியம் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே அர்த்தம். இதற்கு காரணம் ஒரு நாளும் அரசுகள் அதற்கு அனுமதிக்கமாட்டாது. இறைமையை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டத்தில் தங்களுடைய இறைமைக்கு சவால் கொடுக்கக்கூடிய ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதக்குழுக்களில் பங்கு எடுப்பவர்களுக்கு அந்த உரிமையை அரசு வழங்குமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். ஆனால் வெவ்வேறு அரசுகள் வெவ்வேறு காலப்பகுதிகளில் உள்ளக ரீதியில் போரில் ஈடுபட்டவர்களுக்கு வழக்கிலிருந்து விலக்களிப்பு செய்த வரலாறு உள்ளது. உள்நாட்டுப் போரில் வெறுமனே அரசுக்கெதிராக ஆயுதம் தாங்கிபோராடியமை என்கிற ஒரேயொரு காரணத்துக்காக அவருக்கெதிராக வழக்கு வைக்கலாம் என்று சட்டம் சொல்லவில்லை.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களோடு நல்லிணக்கத்திற்கு வந்து உண்மையாக நாங்கள் சந்தோசமாக இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் வெறுமனே ஆயுதம் தாங்கி உங்களுக்கெதிராக போராடியது என்பதற்காக தயவு செய்து வழக்கு வைக்காதீர்கள்.

மூன்றாவது விடயம் சிக்கலான விடயமாகும். சர்வதேச சட்டத்தால் சர்வதேச போரில் பங்கு பற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்ற விலக்களிப்பு பல்வேறு அரசுகளால் உள்ளூர்ப்போரில் பங்கு பற்றியவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான விலக்களிப்பை ஏன் எங்களுடைய விடுதலைப்புலிகளில் பங்கு பற்றிய தமிழ் உறவுகளுக்கு வழங்கக்கூடாது என்கிறீர்கள்? இதற்கு பதிலாக என்னத்தை கேட்கலாம் என்கின்ற போது பொதுமன்னிப்பு என்ற வார்த்தை பாவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணிகளின் வேலை சட்டவகைகளை கொண்டு போய் மக்களிடம் திணிப்பதல்ல.  பொதுவாக தமிழ் சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற உரையாடலையும் சட்டத்தையும் அடிப்படையாக கொண்டு அந்த உரையாடலையும் சட்டத்தையும் தொடர்புபடுத்தி அது தொடர்பான வெளிப்படுத்தலை செய்வதற்குத் தான் நாங்கள் முயற்சிக்கின்றோம். அந்த வகையில் அவர்கள் எங்கள் சார்பில் போரிட்டவர்கள். ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்திற்காக அவர்களுக்கெதிராக நீங்கள் வழக்கு வைக்கக்கூடாது. சர்வதேச போரில் இது பாவிக்கப்பட்டதற்கான சான்று இருக்கிறது. உள்ளூர் போரிலும் இதை பாவியுங்கள் என்று கேட்கலாம்.

பொதுமன்னிப்பு கேட்பதில் இரண்டு விதமான சிக்கல்கள் இருக்கின்றது. ஒன்று சர்வதேச சட்டம் சார்ந்தது. இரண்டாவது அரசியல் அறம் சார்ந்தது. சர்வதேச சட்டம் சார்ந்த விடயத்தில் பல்வேறு அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். சர்வதேச சட்டம் வளர்ந்து வரும் விதம் என்னவென்றால் பொதுவாக யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பில் போர்க்குற்ற மீறல்கள் நடைபெற்றிருந்தால் அதற்கு மன்னிப்பை கொடுக்கும் அணுகுமுறை பிழையானது என்றஅணுகுமுறை சர்வதேச சட்டத்தில் வளர்ந்து வருகின்றது. பொதுமன்னிப்பு வழங்கினால் உதாரணமாக சிறிலங்கா இராணுவத்திற்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்என்று சொல்லுவினம். ஆனால் அரசாங்கம் இராணுவம் குற்றமே செய்யவில்லை என்று தான் சொல்லும். அப்படி சொல்லுவது இன்று சர்வதேச சட்டத்தில் பிழையாகத் தான் பார்க்கப்படுகின்றது.

இராணுவம் புரிந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை தமிழ் மக்கள் கேட்பதன் நோக்கம் இனி வரும் காலங்களில் இப்படியொரு துயரம் எம் இனத்துக்கு நடக்ககூடாது என்பதற்காக தான். பொதுமன்னிப்பு என்பது சர்வதேச சட்டத்திலையும் இல்லை. தமிழ்மக்கள் இதுவரை பொறுப்புக் கூறல் தொடர்பாக எடுத்து வந்த நிலைப்பாட்டிலும் இல்லை. எங்களுடைய தமிழ் அரசியல் கைதிகள் மீது சுமத்தப்படுகின்ற யுத்தக் குற்றமீறல் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறோம் என்ற ஒரு கேள்வி எழுகிறது. படையினருக்கு மட்டும் தான் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாதா? விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்புக் கொடுக்கக்கூடாதா என்ற ஒரு சிக்கலான கேள்விக்கு வருகின்றோம். இந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்கவே வழியில்லை.

முதலாவது நாம் எடுக்க வேண்டியதும் எடுக்கத்தக்கதுமான நிலைப்பாடு யார் யுத்தகுற்ற மீறல் செய்திருந்தாலும் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே. தந்துரோபாய ரீதியாக மட்டுமல்ல ஆத்மாத்த ரீதியாக பொறுப்புக்கூறலை விரும்புபவர்கள் கட்டாயம் இதனைக் கேட்பார்கள். இரண்டாவது அந்த பொறுப்புக் கூறலை செய்வதாக இருந்தால் எவ்வாறு அதனை செய்ய வேண்டும். இதில் சர்வதேச சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. யார் துவக்கை வைத்துக்கொண்டிருக்கிறானோ சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் அவனை பிழை சொல்லாதீர்கள். யார் அவனுக்கு உத்தரவிட்டானோ அவன் தான் கூடப் பொறுப்புள்ளவன். அவனை கொண்டு வந்து சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் நிறுத்துவது தான் செய்ய வேண்டியது. வழமையாக குற்றவியல் சட்டத்தில் இப்படி நாம் பார்ப்பதில்லை. யார் கொலை செய்தானோ அவனுக்கும் தண்டனை கொடுப்போம். யார் அவனுக்கு ஆணையிட்டானோ அவனுக்கும் தண்டனை வழங்குவோம். சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் அப்படியில்லை. இங்கு இந்த தவறு மீள இடம்பெறக்கூடாது  என்பதற்காக அதற்கு யார் காரணமாக இருந்தார்களோ, யார் உத்தரவிட்டார்களோ அவர்களைத்தான் கொண்டுவர வேண்டும் என்பது மிகத்தெளிவான ஒரு நிலைப்பாடு.

ஆகவே இன்று யார் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களாக யுத்த மீறல்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறார்களோ அவர்கள் எல்லோரும் களத்தில் நின்ற போராளிகள். ஆகவே அவர்களுக்கு எதிராக சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் வழக்குகள் கொண்டு வர முடியாது. அவர்கள் துவக்குகளை இயக்கிவர்களே தவிர உத்தரவிட்டோர் அல்ல. இரண்டாவது விடயமாக சொல்லுகிறோம் இந்த குற்றச்சாட்டுக்களை PTA  ற்கு கீழ் செய்ய முடியாது என்று. PTA க்கு கீழ் எங்களுடைய பிள்ளைகளைத்தான் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்களே தவிர ஆமியைக் கொண்டு வந்து நிறுத்தியதில்லை.  PTA யை நீங்கள் பாகுபாடு காட்டி அதனை பயன்படுத்துகிறீர்கள். சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களை விசாரிப்பதற்கான வாகனமோ,  சட்டமோ நிச்சயமாக பயங்கரவாத தடைச்சட்டம் இல்லை. அதற்குத்தான் கேட்கிறோம் சர்வதேச தீர்ப்பாயத்தைக் கொண்டு வாருங்கள் என்று. குறைந்த பட்சம் கலப்பு தீர்ப்பாயத்தையாவது கொண்டு வாருங்கள். அங்கு சர்வதேச மனிதாபிமான தடைச்சட்டத்தின் கீழ் யுத்த மீறல்கள் செய்த எல்லோரையும் விசாரிக்கலாம்.

ஆகவே இந்த அறிக்கை எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொதுமன்னிப்பு என்று தமிழ் சமூகம் கேட்கவில்லை என்பதே. எங்களுடைய ஆயுதப் போராட்டத்தில் நாங்கள் பிழைவிட்டிருந்தோமென்றால் அதற்கு பொறுப்புக்கூற எங்களுடைய மக்களும் எங்களுடைய போராளிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதனையும் சரியாக சட்டத்திற்கு கீழ் செய்ய வேண்டும். அதிலையும் சாதாரண படைசிப்பாய்களை,  படைவீரர்களை உட்படுத்த முடியாது. அதற்கு ஆணையிடும் அதிகாரம் உள்ளவர்களைத் தான் கொண்டு வரவேண்டும். நிச்சயமாக அதனை PTA க்குள் செய்யமுடியாது. நியாயமாக அந்த விசாரணை நடக்க வேண்டுமென்றால் அது சர்வதேச சட்டத்திற்கு கீழ்இ சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கீழ் நடக்கின்ற ஒரு விசாரணையாகத் தான் இருக்க முடியும் என்கிறோம்.

அரசியல் கைதிகள் விடயத்தில் இவ்வளவு பல்வகைமை இருக்கின்றதை தான் நாங்கள் சொல்ல வருகின்றோம். இதனை எப்படி நாம் அரசிடம் கேட்பது? விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அல்லாமல் அவர்களோடு தொடர்புடையவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வைத்திருந்தால் நிச்சயமாக அதை நீங்கள் செய்யக்கூடாது என்று கேட்கிறோம்.  விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து முகாம்களை தாக்கினார்கள் என்பதனால் அவர்களுக்கு எதிராக PTAஐ பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறோம். மூன்றாவது விடயம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என்று சொல்லி யுத்தமீறல்கள் செய்தவர்கள் என்று சொல்லப்பட்டிருந்தால் அதற்கு PTA அல்ல வாகனம். உள்ளூர் நீதிமன்றங்களையும் பயன்படுத்த முடியாது. அதற்குரிய முறையில் அந்த விசாரணைகளைச் செய்யுங்கள் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்திருக்கின்றோம். இந்த விடயத்தை விசாலமாக அதனுடைய ஆழ அகலத்தோட பார்த்து தமிழ் மக்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும் அவர்களுடைய சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

தொகுப்பு-விக்னேஸ்வரி
நிமிர்வு யூன் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.