தமிழர்களின் இருப்பை சிதைக்கும் கொழும்பு அரசாங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பெரிய புல்லுமலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கும்புறுவெளி என்ற இடத்திலே குடிநீரை போத்தலில் அடைக்கும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு அரசாங்கத்தின் பூரண ஆசீர்வாதத்துடன் மட்டக்களப்பில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்தாசையோடும் இது நடக்கிறது. இதற்கு எதிராக கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் கடுமையான எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர். பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் புல்லுமலையில் நிரந்தரமாக குடிதண்ணீரை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளே இதனூடாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த 11.06.2018 அன்று இடம்பெற்ற போது அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தொழிற்சாலை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை 12.06.2018 அன்று குறித்த தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சிலர் ஆக்கிரமித்து அக்காணியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நாள் ஒன்றிற்கு இருபது ஆயிரம் லீற்றர் நீரை உறிஞ்சி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றார்கள். பெருந்தேசிய வணிகர்களின் இந்நடவடிக்கை மூலம் பாரம்பரிய தமிழ்க் கிராமத்தை சுடுகாடாக மாற்றும் திட்டம் மெல்ல மெல்ல முன்னெடுக்கப்படுகிறது.
தன்னுடைய 85 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் அந்த உறுதி 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட காணித்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அக்காணிக்கு சொந்தமான தமிழர் ஒருவர் பிரதேச செயலாளரிடம் உறுதியை காட்டியுள்ளார்.
தண்ணீர் வளம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாம் வரைமுறையின்றி நுகராமல் அளவுடன் நுகர்ந்து அடுத்து வரும் சந்ததிக்கும் பாதுகாத்து விட்டுச் செல்ல வேண்டும் என்கிற நல்லெண்ணத்துக்கு ஆப்படிக்கிறது கொழும்பு அரசாங்கம்.
கிழக்கிலும் சரி வடக்கிலும் சரி கொழும்பு அரசாங்கம் மிகத்தெளிவாக தமிழர் தாயகத்தை சூறையாடும் நடவடிக்கைகளை தனது நிறுவனங்களூடாக கனசச்சிதமாக முன்னெடுத்து வருகின்றது. கொழும்பு அரசின் அனுமதியுடன் வனவளப் பாதுகாப்புத் திணைக்களமும், புள்ளிவிபரவியல் திணைக்களமும் இணைந்தே மேற்படி காணியை அபகரித்து குடிநீர் தொழிற்சாலையை அமைக்க முன் நிற்கின்றன என அப்பிரதேச மக்கள் நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு குறித்த இடத்தில் உள்ள பிரதேச செயலரிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகின்றது.
தமிழ்மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அவர்களை நடுத்தெருவில் அலைய விடுவது ஒன்று தான் நல்லாட்சி அரசின் நோக்கமா? விழிப்பாய் இருப்பது ஒன்று தான் தமிழ்மக்களுக்கு இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானது.
நிமிர்வு யூன் 2018 இதழ்
Post a Comment