கல்வி அபிவிருத்தியில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள்
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கல்வித் தரம் கடந்த சில வருடங்களாக தாழ்ந்தநிலையில் இருந்து வந்தது. தற்பொழுது அது படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகின்றமையை அண்மைக் கால பரீட்சைப் பெறுபேறுகள் காட்டுகின்றன. 2016 ஆம் ஆண்டின் க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறுகளில் இருந்து 2017 ஆம் ஆண்டின் பெறுபேற்று வீதமானது தேசிய அளவில் 3.0% உயர்ச்சியைக் கொண்டிருந்தது. அதேவேளை வடமாகாணத்தின் உயர்ச்சி 6.4% ஆக உள்ளது. இது வடமாகாணத்தின் கல்வியில் கணிசமானதொரு உயர்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றது. அதேவேளை எல்லாப் பாடங்களிலும் சித்தியின்மையைக் காட்டுகின்ற வீதமும் அப்படியே மாறாத நிலையில் காணப்படுகிறது. இதனால் வடமாகாணத்தில் கல்விப் பெறுபேற்று வீதத்தின் உயர்ச்சியை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாது இருக்கின்றது.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் பொழுது வட மாகாணத்தின் கல்வி வளர்ச்சியின் வேகம் அதிகரித்து இருந்தாலும் கல்வித் தரம் இன்னும் பின்னடைந்தே இருக்கிறது. இது கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்களை சிந்திக்க வைக்கவேண்டும். மேலும் க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலாவது இடத்தைப் பெற்றிருக்கும் வடக்கு மாகாணம், க.பொ.த.சாதாரண தரத்தில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது ஏன் என்பதுதான் புரியாத ஒன்றாக இருக்கின்றது…..!
அந்த வகையில், பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டிற்கும், வீழ்ச்சிக்கும் வகைகூறுபவர்களாக பாடசாலைக் கல்வி அபிவிருத்தியில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதில், அதிபர்கள், ஆசிரியர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், கோட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோரின் வகிபாகமானது மிகவும் முக்கியத்துவமானதாகும்.
இவர்களில் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு அடுத்த நிலையில் பாடசாலையுடனும் ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் நேரடியாகத் தொடர்புகளை வைத்திருக்கும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் பங்களிப்பு என்பது கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒவ்வொரு படிநிலையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களே தமக்குப் பொறுப்பாக உள்ள பாடசாலைகளில் தமது பாடத்துறை சார்ந்த கல்விப் பெறுபேறுகளுக்குப் பொறுப்பானவர்களாகவும் வகைகூறுபவர்களாகவும் (Responsibility and Accountability) இருப்பர்.
ஆயினும் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்களின் பணிகளும், பொறுப்பேற்பும் தொடர்பாக அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகள் திருப்தி அளிப்பனவாக இருக்க வில்லை. அந்த ஆய்வறிக்கையில் குறிப்பாகப் பின்வரும் விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன:
• சேவைக்காலஆசிரியர் ஆலோசகர்கள் தமது பாடரீதியாகப் போதிய அறிவையும்இ விளக்கத்தையும் கொண்டிருப்பதில்லை.
• சேவைக்காலஆசிரியர் ஆலோசகர்களினால் நடத்தப்படுகின்ற செயலமர்வுகள் வினைத்திறனற்றவையாகக் காணப்படுகின்றமை.
• அவர்களில் பலர், தம்மை ஒரு மேற்பார்வையாளராகவே கருதி செயற்படுகின்றார்களேயொழிய ஆசிரியர்களுக்கு உரியமுறையில் வழிகாட்டும் ஆலோசகராக செயலாற்றுவதில்லை.
• பாடசாலைகளின் கற்றல் அடைவுமட்டங்களின் அபிவிருத்திக்கு நேரடியான பொறுப்பும், வகைகூறக் கூடியவர்களும் சேவைக்கால ஆலோசகர்களாகவே இருந்தபோதும், அவர்கள் அந்தப் பொறுப்பைச் சரியாகச் செய்யாததாலேயே இத்தகைய விளைவுகளை வடக்குக் கிழக்கு மாகாணம் சந்தித்து வருகின்றது.
இத்தகைய அபிப்பிராயங்கள் தொடர்பாகவும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு எவ்வாறான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக திரு ராஜா குணவர்தன (Raja Gunawardthana) வினால் ஆய்வு செய்யப்பட்டது. அவரின் விரிவான அறிக்கை தேசிய கல்வி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. “A Study on the Effectiveness of short Term in service Teacher Training Learning Process" என்ற அந்த அறிக்கையில் ஆசிரிய ஆலோசகர்களின் வகிபாகம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலைஅதிபர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:
• சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கு வழங்கப்பட்ட கடமைகள் தொடர்பாகஅவர்கள் திருப்தியடையவில்லை.
• சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் ஆட்சேர்ப்பு முறையிலும் அவர்களின் செயற்பாடுகளிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.
• கல்வி வலயங்கள் பலவற்றில் சில பாடங்களுக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கு பற்றாக் குறை காணப்படுகிறது. சிலவேளைகளில் ஒரு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பல பாடசாலைகளைப் பார்க்கவேண்டியுள்ளது. இதனால் போதிய நேரத்தை ஒரு பாடசாலைக்கு வழிகாட்டுவதில் செலவிட முடியவில்லை.
• அனுபவக் குறைவு மற்றும் பாடரீதியான குறைந்த அறிவு போன்றவற்றால் அவர்களால் பாடரீதியாகப் போட்டி போட முடியாத நிலையில் உள்ளனர்.
• நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
• அவர்களுக்கான சேவைப் பிரமாணக்கோப்பு (Service Minute) ஊக்குவிப்புக்கள், பதவிஉயர்வுகள் போன்றன இல்லாமை.
• சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் செயற்பாடுகள் தொடர்பாக பல ஆசிரியர்கள் அதிருப்தியைக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்களை விட சில ஆசிரியர்கள் கூடிய கல்வித் தகைமையும், அனுபவமும், ஆற்றலுமுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தத் தகைமை வேறுபாடுகள் அவர்களிடையே முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றன.
• சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் தேசிய பாடசாலைகளுக்கும், 1AB பாடசாலைகளுக்கும் மிகவும் அரிதாகவே விஜயம் செய்கின்றனர்.
• அவர்களுக்கான கண்காணிப்புப் பொறிமுறை, பின்னூட்டல்கள், அவர்களு டைய சேவைதொடர்பான கணிப்பீடு என்பன வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் மேற்கொள்ளப்படுவதில்லை.
அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் செயற்பாடுகளில் பின்வரும் நடைமுறைகளை மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்வித் திணைக்களங்கள் பின்பற்றும் பொழுது மிகச் சிறந்த சேவையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
1. சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களாக கடமையாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுடைய பாடத்துறை தொடர்பான ஆற்றல் மற்றும் மாணவர்களின் அடைவுமட்டம் போன்றவை மதிப்பிடப்பட்டு அவர்களது தரக்கணிப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. ஒவ்வொரு பாடத்துறைக்கும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களை உள்ளடக்கியதாக ஒரு வளஅணியினர் குழு ஒவ்வொரு மாகாணத்திலும், வலயத்திலும் அல்லது கோட்டத்திலும் அமைக்கப்படவேண்டும்.
3. அவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பொருத்தமான செயலமர்வுகள் திட்டமிடப்படல் வேண்டும். மற்றும் அவர்களது பாடத்துறை சார்ந்த தேர்ச்சி ரீதியாக எளிமையில் இருந்து கடினம் நோக்கியதாக வினாக்களைக் கொண்ட வினாவங்கி அமைக்கப்பட வேண்டும். இவை யாவும் கணனி மயப்படுத்தப்பட வேண்டும்.
4. சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்களின் கடமைகள் தொடர்பான மேற்பார்வைத் திட்டம் மற்றும் கணிப்பீடுகள் முறைப்படி வகுத்து செயற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான கணிப்பீட்டுத் திட்டம் அவர்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.
5. ஆசிரியர்களுக்கான பாடத்துறை சார்ந்த செயலமர்வுகளை நடத்தும் பொழுது ஆசிரியர்களின் தேவைகள் இனங்காணப்பட்டு பொருத்தமான வள ஆளணியினர் மூலம் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்பட வேண்டும். இதில் நவீன கற்றல் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி குழுச்செயற்பாட்டு ரீதியாக செயலமர்வுகளை நடத்த வேண்டும். சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் தமது செயற்பாடுகளினூடாக ஆசிரியர்களை உறங்கு நிலையில் வைத்திருக்காது உயிர்த்துடிப்புள்ளவர்களாக இயங்கச் செய்வதற்கு இது உதவும்.
ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள் தம்மை ஒரு மேற்பார்வையாளர்களாக கருதாது ஆசிரியர்களை வசதிப்படுத்துவோராகவும், அவர்களுக்கு உதவி புரிவோராகவும், வழிகாட்டுபவர்களாகயும் இருந்து ஆசிரியர்களுடன் நட்பு ரீதியான ஓர் உறவைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
6. ஒவ்வொரு சேவைக் கால ஆசிரிய ஆலோசகரும் தமது பாடத்துறை சார்ந்த மேலதிக விடயங்களையும் நவீன உத்திகளையும் பற்றி கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் ஆசிரியனும் கற்போனாக மாறுவார்.
7. ஒவ்வொரு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் தத்தமது பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வை நடத்தும் பொழுது, ஆசிரியர்களைக் கொண்டே பின்வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்:
• ஒவ்வொரு தேர்சியிலும் ஆகக் குறைந்தது 100 வினாக்களையாவது வெவ்வேறு திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்களை கொண்டே தயாரிக்க செய்து, அவற்றை மாணவர்களுக்கு வழங்கிச் சுயமாகச் செய்ய விடுதல்.
• செய்முறைப் பாடங்களில் ஒவ்வொரு தேர்ச்சியிலும் செய்யப்பட வேண்டிய செய்முறை அட்டவணை தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவை ஒழுங்காகச் செய்யப்பட்டு மதிப்பிடப்படுவதை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் தமது பாடசாலைத் தரிசிப்பின் பொழுது உறுதிப்படுத்த வேண்டும்.
சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வி அமைச்சின் 2/2002 இலக்கமிடப்பட்ட 2002.04.15 ஆம் திகதிய சுற்றறிக்கையின் படி “சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள் காலை 8.00 மணி முதல், பிற்பகல் 1.00 மணி வரை, (தற்பொழுது 7.30 மணிதொடக்கம் 12.30 மணிவரை) பாடசாலையொன்றில் கடமையில் ஈடுபடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் கடமையில் இருந்து விலகிச் செல்லும் சந்தர்ப்பங்களில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்தப் பாடசாலையின் அதிபரே பொறுப்புக் கூறுபவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக அவர்களுக்கென குறித்து ஒதுக்கப்பட்ட கடமைகளை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் சரியான முறையில் மேற்கொண்டால் இத்தகைய கல்வித்தர வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது.
இவ்வாறான பாரிய பொறுப்புக்களைத் தாங்கி நிற்கும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியும், வலயங்களில் அவர்களது பாடத்துறை சார்ந்த கடமைகளுக்கு மேலதிகமாக சில பணிகளைச் செய்வதற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்களின் நெருக்குதல்களுக்கும் ஆளாகும் நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் திரிசங்குசொர்க்கநிலையில் இருப்பதை கல்விச் சமுகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஆளணியாக இருந்து கொண்டு கல்வி நிர்வாக சேவையாளர்களுக்குரிய பணியையும் ஆற்றிவருகின்ற நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இவ்வாறு இரட்டைத் தன்மையான கடமைகளை ஆற்றி வருவதால், அவர்களுக்கான பதவி உயர்கள், சமுகத்தில் கிடைக்கின்ற கணிப்பீடுகள், அந்தஸ்துக்கள் மற்றும் சுயதிருப்தி என்பன ஏனைய அலுவலர்களைப் போன்று கிடைப்பதில்லை. இந்த நிலையில் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் சேவையைத் தாபித்து அவர்களுக்கான “சேவைப் பிரமாணம்" (Service Minutes) என்ற ஒன்று அமைக்கப்படும் பொழுதே அவர்களிடம் இருந்து வினைத்திறன் மிக்க சேவையை எதிர்பார்க்க முடியும்.
அதேவேளை அவர்களுக்கு வழங்கப்படுகின்ற படிகள் மற்றும் போக்குவரத்துச் செலவினங்கள் என்பன மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் அவர்கள் தமது கடமைகளைச் சரிவர மேற்கொள்ள முடியாத நிலையிலும், விரக்தியுற்ற நிலையிலும் உள்ளனர். அவர்களுக்கான கொடுப்பனவுகளும் உயர்த்திக் கொடுக்கப் படவேண்டும். அப்பொழுது தான் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கான அங்கீகாரம் என்பது கல்விச் சமுகத்தில் ஏற்படும்.
வல்வை.ந.அனந்தராஜ்
நிமிர்வு யூலை 2018 இதழ்
Post a Comment