கிழக்குத் தமிழர்களின் பண்பாடும் நிலைமாற்றமும்
பண்பாடு என்பது “குறியீட்டு ரீதியாக சமூகம் உரித்தாக்கிக் கொண்டுள்ளதும் பாரம்பரியமாக தமதாக்கிக் கொண்டுள்ளதுமான சகல விதமான நடத்தைக் கோலங்களுக்கும் வழங்கக் கூடிய கூட்டான ஒரு பெயராகும்” என சார்ளஸ்.ஏ.எல்வூட் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுகின்றார். அதாவது பண்பாடு என்பது மொழி, அறிவு, சமயம், வழிபாடுகள், கலை, கலாசாரங்கள், சட்ட திட்டங்கள், ஆடையணிகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள், கருவிகள், தொழிநுட்பம் மற்றும் சமூகத்தில் வாழ்வதன் மூலம் மனிதர்கள் பெற்றுக் கொள்கின்ற சகல பின்பற்றுதல்கள், ஆற்றல்கள் என்பவற்றின் மொத்த வடிவமாகும்.

உலகில் மூத்த இனமான தமிழர்களுக்கென்று சிறப்பான பண்பாடுகள் உள்ளன. எனினும் அகிலத்தின் எல்லாத் திக்குகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் பிரதேசங்களுக்கு ஏற்ப விசேட பண்பாடுகளைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். பெரும்பாலும் பல் சமூகங்கள் கொண்ட பன்மைப் பண்பாடுகளுக்குள் உலகத் தமிழர்கள் வாழ்வதனால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எதிர்நோக்கும் பண்பாட்டுச் சவால்களை ஆராயலாம்.

இலங்கையில் கிழக்குத் தமிழர் பண்பாடானது மிக நீண்ட கால வரலாற்றுத் தன்மை கொண்டதாக விளங்கி வருகின்றது. இந்தியாவின் ஆரியச் சுவடுகளே கூடப் பதியாத தனித் தமிழர் பண்பாட்டைக் கொண்ட மண்தான் கிழக்கு மண். மிக அண்மைக் காலம்வரை அவ்வாறுதான் இருந்தது. ஆனால் தற்போது மூவினமும் வாழும் பன்மைப் பண்பாட்டுச் சமூகமாக மாறி விட்டது. இங்கு வாழ்ந்த சிங்கள மக்கள் மொழியிலும் கலாசாரத்திலும் வேறுபாடுடையவர்களாக இருந்த போதிலும் அவர்களின் சனத்தொகை குறைவாகவேயிருந்தது. ஆனால் மதத்தைத் தவிர மொழி, உடை உட்பட அனைத்துப் பண்பாட்டு நடத்தைகளிலும் முஸ்லிம்கள் தமிழர் பண்பாட்டைக் கொண்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர். கிழக்குத் தமிழர்களின் சில விசேட பண்புகளாக விருந்தோம்பல், சகிப்புத் தன்மை, எளிதில் நம்புதல், ஏனையோரையும் மதித்தல், பெண்கள் சேலை அணிதல், ஆண்கள் வேட்டி அணிதல், மானத்தை பெரிதாக மதித்தல், பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுதல், சித்த வைத்தியத்தைக் கைக் கொள்ளுதல், இயற்கையுடன் கூடிய மாந்திரீக வழிபாட்டு முறை போன்ற இன்னும் பலவற்றைக் கூறலாம்.


மேலைத்தேயத்தவர்களின் வருகையினாலும், கிறிஸ்தவ மதச் செல்வாக்கினாலும் தென்னாசியா எங்கும் பண்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்ட வகையில் கிழக்குத் தமிழர்கள் பண்பாட்டிலும் மொழி, ஆடை போன்றவற்றில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டாலும் பழைய மரபுகள் அவ்வாறே இருந்தன. ஆனால் இன்று இலங்கையில் பௌத்த சமயத்தின் செல்வாக்கினாலும், இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சியினாலும் கிழக்குத் தமிழர் பண்பாடு கடுமையான சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. ஏனெனில் கிழக்கில் தற்போது செறிவாக முஸ்லிம்கள் வாழ்வதனாலும் அவர்களின் கடுமையான இன, மத பற்றுகளினாலும் தமிழர் பண்பாடு பெரும் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. தமிழர் உணவு, உடை, சமயம், பாலியல் முறைகள், பழக்க வழக்கங்கள் சடுதியாக மாற்றத்திற்குள்ளாகியுள்ளன.

போர்ச் சூழல் காரணமாக வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழ்க் குடும்பங்களில் பெண் பிள்ளைகள் முஸ்லிம் தனியார் வர்த்தக நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அங்கு பல ஆண்களுக்கு மத்தியில் அவர்களுக்கு எவ்வித பாதுகாப்புமற்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அவர்கள் இலகுவாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பின்னர் மதம் மாற்றப்படுகின்றனர். அண்மைக் காலத்தில் நூற்றுக்கணக்கான இளம் தமிழ் யுவதிகள் மதம் மாற்றப்படுவதை பத்திரிகைகளில் கூட நாம் காணலாம். அரச தொழில் நிலையங்கள், பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் இந்த நிலை தொடர்கிறது. திட்டமிட்டும் கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும் கிழக்குத் தமிழர்கள் மெல்ல மெல்ல தமது சிறப்பான பாரம்பரிய உணவு முறையைக் கைவிட்டு முஸ்லிம்களின் தாக்கத்தினால் பிரியாணி, கொத்து ரொட்டி மற்றும் பரோட்டா போன்ற அரபு உணவுகளை உட்கொள்ளத் தொடங்கி விட்டனர். அவர்களின் உணவு விற்பனை நிலையங்களில் கூடிய விற்பனைக்காக கவர்ச்சிகரமான, பிழையான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இவ்வுணவு வகைகள் சுகாதாரத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறே ஆடை விடயத்திலும் தமிழர்களின் சேலை அணியும் கலாசாரத்திற்கும் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. உலக சமூகமே மரியாதையாகக் கருதும் சேலையை அதுவும் முஸ்லிம்கள் தற்போதுவரை அணிந்து வரும் சேலையை ஒரு ஆபாச ஆடையாக சித்தரித்து வணக்கத் தலங்களில் கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சேலை அணிந்த தமிழ்ப் பெண்களை சமூக வலைத் தளங்களில் ஆபாசமாகச் சித்தரிக்கின்றனர். திருகோணமலையில் தமிழ்ப் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியையும், அவரின் உறவினர்களும் அத்து மீறி நடந்து கொண்ட முறை தமிழர் பண்பாட்டுக்கே சவால் விடுவதாகும். அதை அவர்களின் சமூக நிறுவனங்களும் கூட கண்டிக்காமல் ஊக்கப்படுத்தியது வருந்தத் தக்கதாகும்.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் முறைமை சீர்குலைந்திருப்பதே இவையனைத்திற்கும் பிரதான காரணமாகும். மேலும் தமிழர்களின் சமய, சமூக மற்றும் பொருளாதார விடயங்களிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே இவையனைத்தையும் சீர்திருத்த வேண்டிய பொறுப்பு தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக கிழக்குத் தமிழர்கள் விழிப்படைய வேண்டிய ஒரு கால கட்டத்தில் உள்ளனர்.

முனைவன்
நிமிர்வு யூலை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.