இராணுவமயமாக்கலை எப்படி எதிர்கொள்ளலாம்?




அறிமுகம்:

இன்றைய யதார்த்த நிகழ்வுகள் இராணுவ மயமாக்கலின் இருப்பையும் வலையமைப்பையும் அதன் செயற்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றன. கட்சி அரசியலை கடந்து கால எல்லைகளை கடந்து எந்தவிதமான சிக்கல்களுமின்றி இராணுவமயமாக்கல் எனும் நாடகம் நன்கு அரங்கேற்றப்பட்டு வருகின்றது. 2009 இல் அதனை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் இதயகனத்துடன் தங்களுக்குள் எதிர்த்து தவித்தவர்களும், நல்லாட்சி அரசின் ஆட்சியில் வெளிப்படையாக எதிர்த்தவர்களும் கூட இன்று இராணுவமயமாக்கலை ஏற்றுக்கொள்ளும் சதிக்குள் விழுங்கப்பட்டு வருவதை இன்றைய யதார்த்தம் நன்கு தெளிவாக்குகின்றது.

இந்தியாவின் கேரளாவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாத இலங்கை அரச இயந்திரம், மல்லாகம் துப்பாக்கிச்சூடு, 2009 மே இல் படையினரால் அழிக்கப்பட்ட வன்னி பெருநிலப்பரப்பிலேயே சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி கேனல் ரத்ணப்பிரியவுக்கு கண்ணீருடன் செய்யப்பட்ட பிரியாவிடை, மக்கள் குடியிருப்புக்குள் வரும் யானை மற்றும் சிறுத்தை போன்றன திட்டமிடப்பட்ட இராணுவமயமாக்கலின் அரங்கேற்றல் இல்லையா? இவற்றை இயல்பான யதார்த்தமாக நோக்கும் மனநிலையை அல்லது இவற்றைப் பற்றி மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதில் அர்த்தமில்லை எனும் மனநிலையை தோன்றச் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்று வெற்றிபெறத் தொடங்கிவிட்டன. இந்த யதார்த்தத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய  மக்கள் ஈடுபாட்டு அரசியல் என்ன?

சுயநிர்ணய உரிமையுடன் வாழ தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்டங்கள், சர்வதேச நாடுகளின் அணுசரனையுடன் இலங்கை அரசுகளால் அழிக்கப்பட்டன. இன்றும் தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கி, பிரிவினைகளை கடந்து, விடுதலைப் போராட்டத்தை தொடர்வது  காலத்தின் தேவை.


தொடரும் இன அழிப்பும் இனப்பிரச்சினையும்:

வரலாற்றில் குறிப்பாக இன்றும் தொடரும் இன அழிப்பில் ஜுலை 23, 1983 – மே  19, 2009 காலப்பகுதி மிகவும் கொடூரமானது.  இனவிடுதலைக்காக இன்றும் தொடரும் இப்போராட்டம் பல்வேறு விதங்களில் பல்வேறு மட்டங்களின்  சவால்களுக்குட்படுத்தப்பட்டு அழிக்கப்படுவது இன்றும் தொடர்கின்றது. தனிச் சிங்களச் சட்டம், பௌத்தம் அரச சமயமாக்கப்படல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், அரச பயங்கரவாதம், யாழ் பொது நூலகம் எரிப்பு, சிங்களமயமாக்கம், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, சிங்களப் பேரினவாதம், ஆட்கடத்தல்களும் காணாமலாக்கப்படலும், அரச சித்திரவதை, பாலியல் வன்முறை, இலங்கைத் தமிழர் இனவழிப்பு, இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் என்பவற்றை இனப்பிரச்சினைக்கான காரணங்களாக பட்டியலிடலாம்.

விடுதலைப் போராட்ட தடுப்பும் இராணுவமயமாக்கலும்:

இனப்பிரச்சினைக்கான மூலகாரணங்கள் தீர்க்கப்படாமல் இனவிடுதலைக்காக போராடியோரும் அவர்களது கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டமையால் போருக்குப் பின்னான சூழலில் (Post War Context) இழப்புக்கள் ஈடுசெய்யப்படுவதோ மீள்வாழ்வு உறுதி செய்யப் படுவதோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனவிடுதலைக்காக போராடியோருக்கு ஏற்பட்டிருந்த இயலாமை நிலைகள் இராணுவமயமாக்கல் மூலம் மேலும் சிக்கலாக்கப்பட்டன. முக்கியமாக அவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்கி வாழ்வோராக ஆக்கப்பட்டனர்.  காணாமலாக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், விசேட தேவைக்குரியோர், தடுப்புமுகாம்களிலிருந்து வந்தோர், பெண்கள், சிறுவர் முதியோர் என்பவர்கள் அவர்களுக்குள் முக்கியமானவர்கள்.

விடுதலைப்போராட்டம் தொடர்வதை தடுக்க போதைப்பொருள் விற்பனை, மது மற்றும் சிகரட் விற்பனை போன்றவை நடைபெறுகின்றன. சிவில் பாதுகாப்பு படைக்காக இயலாமையிலிருந்த பல இளம்பெண்களும் ஆண்களும் சேரக்கப்பட்டனர். கவர்ச்சியான சம்பளம் வழங்கப்பட்டது. அவர்களில் சிலர் முன்பள்ளிகளிலும் கற்பிக்கின்றனர். படையினர் கற்பிக்கலாமா  எனும் கேள்விகளை வெறும் கேள்விகளாகவே இராணுவமயமாக்கல் கருதுகின்றது. நீண்டகாலம் இராணுவம் குடியிருந்த காணிகளை மீளப்பெற்ற மக்கள் அவர்களது எல்லைகளை இடும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உறவுகளுக்குள்ளேயே பாரிய மோதல்கள் நடைபெறுகின்றன. பாலியல் கொடுமைகள் (புங்குடுதீவு வித்தியா), தற்கொலைகள், விபத்துக்கள், பாரிய கடன் கொள்வனவுகள், கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் ஏற்படும் விரக்தி, கடன்காரராக்கி விட்ட வீட்டுத்திட்டம், மறுப்புக்கு மத்தியில் முன்னகர்த்தப்படும் பொருத்து வீட்டுத்திட்டம் என பல பிரச்சினைகள் மக்களை தொடர்ந்தும் இயலாமைக்கு உட்படுத்தி வருகின்றன.


விடுதலைப் போராட்ட தடுப்பும் பிரித்தாளலும் சர்வதேச சக்திகளின் நலனும்:

ஒற்றுமையின்றி மக்கள் பிரிந்து வாழ்வதை உறுதிப்படுத்தலும், கட்சிகள் தமக்குள் பிரிந்து அரச கதிரைகளுக்காக ஒன்றாவதும் பின்னர் பிரிவதும், ஒருவருக்கெதிராக மற்றவர் எதிரிமனப்பான்மையுடன் செயற்படுவதும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. முதலாளித்துவம், தாராளவாத பொருளாதாரம், நுகர்வுவாதம், என்பன இன்னொரு விடுதலைப் போராட்டம் பெரியளவில் உருவாவதை தடுத்து நிற்கின்றன. அத்துடன் மேற்குலகம் தற்போதுள்ள அரச தலைவர்களை காப்பாற்றும் மனநிலையிலுள்ளனது. அது அவர்களுக்கு எதிராக இருந்த அரசை மாற்றவும் செய்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என ஐ.நா சபையில் பிரேரனை கொண்டுவந்த நாடு கூட தற்போது இந்த விடயத்தில் நாட்டமற்று இருப்பதை நாம் அவதானிப்பது மிகவும் முக்கியம். வெளிநாடுகள் எமது பிரச்சினையை பாவித்து தமது நலனை உறுதி செய்ய முற்படுகின்றனர் என்பது முக்கியம்.

பாதிக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுவிட்ட வடக்கு கிழக்கு தமிழர்கள், உலக வல்லரசுகளின் அரசியல் நகர்வுகளையும், இலங்கையின் அயல்நாடுகளின் போக்குகளையும், இலங்கை மத்திய அரசின் தேசிய கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளையும் அவதானித்து விடுதலைப் போராட்டத்தை தொடர்வது மிகவும் முக்கியம். யாப்பு மாற்றங்கள் பற்றிய நடவடிக்கைகளுக்கு தமிழ் பிரதிநிதிகள் பொறுப்பான மாற்றுத் தளங்களை வழங்குவதை உறுதி செய்வது முக்கியம்.

முக்கியத்துவப்படுத்தப்படாத மக்கள் போராட்டங்கள்:

சொந்த காணிகளை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட பிலக்குடியிருப்பு போராட்டம் அரசு மக்களின் காணிகளை வைத்திருப்பது தவறு என்பதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியது. இராணுவ பிரசன்னத்தில் மத்தியிலேயே, மக்கள் வாழ பிலக்குடியிருப்பு  கொடுக்கப்பட்டது. அந்த கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்றும் தொடர்கின்றது. ‘எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும்’ எனும் குரல் தொடர்ந்து ஒலிக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுவோரின் போராட்டங்கள் வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்கின்றன. இந்த மக்கள் போராட்டங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத அரசு கடந்த ஆண்டு எங்களிடம் உங்கள் உறவினர் யாருமில்லை என வெளிப்படையாக கூறியது. ஜனாதிபதி அவர்களுடைய கருத்தின்படி அவரது ஆட்சியில் எந்த ஒரு இரகசிய சிறையுமில்லை; அதில் யாரையும் அரசு மறைத்து வைத்திருக்கவுமில்லை. அப்படியென்றால் நல்லாட்சி அரசுக்கு முதல் ஆண்ட அரசு கையேற்ற எமது உறவுகளை என்ன செய்தது எனும் கேள்விக்கு எந்த பதிலும் இன்னும் இல்லை.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டாலும் அவை எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவு. இலங்கையில் அரசியில் கைதிகள் யாருமில்லை என்பதையே கடந்த மாதத்தில் ஜனாதிபதி அவர்கள் லண்டனில் தெரிவித்திருந்தார்.

அரசு, அரசியல்வாதிகள் மட்டுமல்ல சாதாரண மக்களும் இப்போராட்டங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காத்திரமானதல்ல. இவர்களுடைய போராட்டங்களை பாவித்து தமது இருப்பை நிலைநாட்ட பலர் முனைவது கசப்பான உண்மை.

காணாமலாக்கப்பட்டு வரும் மக்கள் அரசியல்:

மக்கள் அரசியலை அழிக்க எப்போதும் பாவிக்கப்படுவது கட்சி அரசியல். கட்சியை தக்க வைக்க கட்சி நலன்களை முன்னுரிமைப்படுத்த தமது கட்சி செய்ததை இதயசுத்தியுடன் கூறுவதை விட மற்ற கட்சி செய்யாததை அழுத்தமாக்கி கூறுவதில் தான் கட்சிகள் திருப்தி அடைகின்றன. இங்கு ‘பிரித்து ஆளுதல்’ எனும் வலைக்குள் கட்சிகள் மட்டுமல்ல அரசியலே சிக்குண்டு போகின்றது. எதிர்த்து எதிர்த்தே சிலரும், எல்லாம் சரி வரும் என ‘இராஜ தந்திரம்’ கதைப்பதாக கூறி வேறு சிலரும்  தம்மை தக்க வைக்க முயற்சிக்கின்றனர். யார் ஆண்டாலும் எமக்கென்ன என சிலரும் நாம் தப்ப என்ன செய்யலாம் என பலரும் முயல்வதால் மக்கள் அரசியல் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் காணாமலாக்கப்பட்டு வருகின்றது.

இராணுவமயமாக்கலை எப்படி எதிர்கொள்ளலாம்?
யதார்த்தம்:

முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு விடுதலைப் போராட்டத்தின் கனவுகளும் நினைவுகளும், சுதந்திர உணர்வுகளும் சோக பெருமூச்சுகளும் நம்பிக்கைகளும் காட்டிக்கொடுப்புகளும் எப்படி மறக்கப்படலாம்? மறக்கச்செய்யப்பட முயற்சிகள் நடைபெறுவது இயல்புதான். ஆனால் மறப்பதா மறப்பதாக நடிப்பதா மறந்தும் மறக்காமல் தவிப்பதா என்னும் நிலையே இன்று யதார்த்தமாகி வருகின்றது. வரலாறு சந்தர்ப்பவாதத்துக்காக மாற்றப்பட முடியாதது. தற்போது அல்லது சமகாலத்தில் பொறிக்குள்ளிருந்து தப்ப இதய அறத்துக்கு மாறாக எதையாவது செய்தாலும் நீண்ட காலப்போக்கில் மனதின் கேள்விகளுக்கும் உள்ளுணர்வுகளுக்கும் பதில் சொல்ல முடியாது.

உலகில் வாழும் அனைவரும் அனைத்தையும் பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். உலகின் அனைத்து வளங்களும் மனித தேவைகளை தீர்க்க போதுமானவை. மனித பேராசைகளை தீர்க்க போதுமானவை அல்ல என்பது காந்தியின் சிந்தனை. இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களைப் போல அனைத்து உரிமைகளுடனும் அடையாளங்களுடனும் வாழுவதை யாரும் தடுக்கக்கூடாது என இயல்பாகவே எண்ணுவதே நீதியானது ஆகும்.

கருத்துருவாக்கம்

அல்பேட் ஐன்ஸ்டீன் அவர்களின் கருத்தின்படி  தீமை செய்பவர்களால் அல்ல தீமை நடைபெறுவதை கண்டும் செயற்படாமல் இருப்பவர்களாலேயே உலகம் மிகவும் ஆபத்தான இடமாகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் நீண்ட கால போராலும் இராணுவமயமாக்கலாலும் சாதாரண வாழ்வே சாத்தியமற்றது என அன்றாடம் வாழும் மக்களுக்கு இலங்கையில் நிலவும் ஜனநாயக கட்டமைப்பு முன்வைக்கும் மாற்று வழி என்ன?

தீமையை எதிர்க்காமல் மௌனமாக இருப்பது தான் ஒப்பீட்டளவில் சிறந்தது என்பதைத்தான் இன்று பலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாகவும் வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர். இதனைக் நடைமுறைப்படுத்துவதையே இராணுவமயமாக்கலில் காணலாம். இதற்கான ஒரு கட்டமைப்பே சிவில் பாதுகாப்பு திணைக்களம். கட்டமைப்பு வடிவில் ஒடுக்குமுறை நடைமுறைப்படுத்தப்படும்போது அதனை இன அழிப்பு என அடையாளப்படுத்துவது காலத்தின் தேவை.

பகுப்பாய்வு விமர்சனப்பார்வை:

எமது யதார்த்தத்தை விமர்சனக்கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்வது இன்றைய அவசரத் தேவை. “நிலவும் அரசியல் சமூக பொருளாதார கல்வி கலாசார சமய கட்டமைப்புகள் எவ்வளவு தூரம் மனிதத்துடன் அனைவரும் (உயிரிகள்) வாழ உதவுகின்றது?” என்பது மீண்டும் மீண்டும் வினவப்பட வேண்டிய வினா.

சமூகமாக இந்த பகுப்பாய்வு விமர்சன கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் இயல்பாக முன்வரும் போது தான் தீமைகளையும் ஒடுக்கு முறைகளையும் தடுக்கலாம்.

குறிப்பிட்ட ஒருவரிடம் அல்லது ஒரு குழுவிடம், தீர்மானங்களை எடுக்கும் உரிமைகளை கையளிப்பது எந்தவிதத்திலும் நன்மை தராது. குறிப்பிட்ட குறுகிய காலத்துக்கு நன்மை தருவது போலத்  தோன்றலாம். ஆனால் அது தவறு என்பதை நீண்ட கால வாழ்க்கை யதார்த்தம் புரிய வைக்கும்.

தொகுப்பு:

பங்கேற்பு தீர்மானமெடுத்தல் (Participatory Decision Marking)  பொறிமுறை இன்றைய காலத்தின் தேவை. சாதாரண மக்களாக மற்றும் சாதாரண மக்களுடன் இணைந்து இயங்கும் நிலையை உறுதி செய்யும் துறைசார் மதியுடையோராக அனைவரும் உரிய இடையீடுகளுடன் வாழும் கட்டமைப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். இவற்றை தடுக்கும் இராணுவமயமாக்கல் கட்டமைப்புகள் மற்றும் அச்சமூட்டும் நிலைப்பாடுகள் களையப்பட வேண்டும். அவை களையப்படும்வரை அனைத்தையும் வடிகட்டி பார்க்கும் எண்ணப்போக்கை பல்கலைக்கழக சமூகம் உட்பட அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போது மட்டும் தான் எமது விடுதலைப்போராட்டம் தொடரும். இராணுவமயமாக்கல் உட்டபட அனைத்து தீமைகளும் நீக்கப்படாவிட்டாலும் இயங்கவிடப்படாத நிலை பிறக்கும்.


அருட்பணி S.D.P.செல்வன் 
நிமிர்வு யூலை 2018 இதழ்




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.