இயற்கை வழி இயக்கத்தினரின் பயண அனுபவ பகிர்வு
வேளாண்மை முதல் வாழ்வியல் வரை சகல விடயங்களிலும் இயற்கைவழிக்கு மீள்திரும்பல் பற்றிய அனுபவங்களைக் கண்டுணர்வதற்கான பயணம் ஒன்றினை இயற்கைவழி இயக்க உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் பயண அனுபவங்கள் தொடர்பாகக் கலந்துரைஒயாடியபோது தங்கள் அனுபவத்தினைப் பின்வருமாறு விபரித்தனர்.
கொழும்பில் இருந்து புறப்பட்டு சரியாக ஒரு மணித்தியாலத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தினைச் சென்றடைந்தோம். அங்கு எமக்காக விஞ்ஞானி திருவாளர் கமலகாசனன் பிள்ளை அவர்கள் காத்திருந்தார். இவர் அசோலாப் பயன்பாட்டினை ஊக்கிவித்தமைக்காக இந்திய நடுவண் அரசினால் பாராட்டி விருது வழங்கப்பட்ட விஞ்ஞானி. அசோலா பிள்ளை என மக்களால் நன்கறியப்படுபவர். அவருடன் அங்கிருந்து நாங்கள் தங்கவுள்ள விடுதியை நோக்கிச் செல்கின்ற போது ஒரு விடயம் அதிசயிக்க வைத்தது. வீதி முழுமைக்குமே நிழல்தரு மரங்கள் தான் ஆக்கிரமித்திருந்தன. விமான நிலையத்துக்கு செல்லும் பாதையில் தான் இவ்வாறு அமைத்து இருக்கின்றார்கள் என ஆரம்பத்தில் யோசித்தோம். பின்னர் நகரங்களுக்குள்ளும் பெரும்பாலான இடங்கள் மரங்கள் சூழ்ந்து குளிர்மையாக இருப்பதை அவதானித்தோம். எங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி என்கிற பெயரில் வீதிகளை அகலிக்கும் போது மரங்களை வகைதொகையின்றி தறித்து வீழ்த்துவது தான் வழமை. ஆனால் அங்கே மரங்களை பாதுகாப்பதற்காக சில இடங்களில் வீதிகளில் கடினமான வளைவுகளையும் காணக்கூடியதாக இருந்தது. திருவனந்தபுரம் புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றிற்தான் நாங்கள் தங்கியிருந்தோம்.
முதல் நாளன்று கேரள அரசின் கால்நடைத் திணைக்களத்துக்கு சென்றிருந்தோம். நிலம் முழுமையும் பசும் ஆடை போர்த்தியதுபோற் புல் பரந்திருந்தது. வானத்தையும் தெரியாத அளவுக்கு மரங்கள் கவிந்து இருந்தன. தேவையில்லாமல் மரங்களையோ கொடிகளையோ புதர்களையோ அகற்றுவதில்லை எனக் கூறினார்கள். மாறாக டெங்குக் கட்டுப்பாடு என்ற பெயரில் யாழ்நகரில் பெரும்பாலான காணிகளில் புல் பூண்டுகள் வலிந்து அகற்றப்பட்டிருப்பதைக் காணலாம். நிலங்களின் பசும் ஆடைதனை அகற்றாவிடில் தண்டனை என்று அச்சுறுத்தும் தொனியிலான பெரிய அறிவுறுத்தற் பலகைகளை அங்காங்கே எம் பிரதேசங்களிற் காணலாம். திருவனந்தபுரத்தில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் முற்றங்களில் சீமெந்து கற்பதிப்பினைக் பெரிதாக காண முடியவில்லை. எல்லா இடங்களும் செடி கொடிகளாகவும் பசுமை போர்த்தப்பட்டும் காட்சியளித்தமை மனதுக்குள் ஓர் புத்துணர்வினைத் தந்தது. யாழ்ப்பாணத்தினைப் போல் நிறைய மேல்மாடி வீடுகளையும் காணக் கூடியதாக இருந்தாலும் அந்த வீடுகளும் மரக் கூடல்களுக்குள் தான் இருந்தன.
சாதாரண வியாபாரிகளின் இருந்து பெரிய கடைக்காரர் வரை எல்லோரும் ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்களாக இருந்தனர். நாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து சிறப்பாக உபசரித்தார்கள். உணவுப் பாரம்பரியத்தில் கேரளத்தவர்கள் பெரிதும் எம்முடன் ஒத்திருந்தார்கள். தமிழகத்தைப் போல் அல்லாமல் பெரும்பாலான கடைகளில் பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன. பெரும்பாலான நிறுவனங்கள், வீதிகளின் பெயர்கள் ஆங்கிலம், ஹிந்தி, மலையாள மொழியில் அமைந்திந்தமை பயணத்தினை இலகுவாக்கியது. மலையாள மொழியினையும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தமையால் மக்களுடன் அளவளாவுவது கடினமாக அமையவில்லை.
வீதிகளில் போகும் போது அவதானித்த முக்கியமான விடயம் பயிர்ச் செய்கை பண்ணப்படாத நிலங்களை எங்குமே காண முடியவில்லை. எல்லா இடங்களிலும் நிலங்கள் ஏதோ ஒரு வகையில் உபயோகப்படுத்தப்பட்டே வருகின்றன. பொதுவாக எல்லாத் தென்னம்தோட்டங்களிலும் பூசணி, முருங்கை என ஊடு பயிர்ச்செய்கை நடைபெறுவதைக் காண முடிந்தது. கேரளாவில் பரவலாக்கப்பட்ட நகராக்கம் இடம்பெறுவதைக் காணமுடிந்தது. கற்றறிந்த மத்தியதர வகுப்பினர் அதிகமாகக் காணப்படும் போதும் அவர்கள் வாழ்வியல் இயற்கையோடு ஒன்றித்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.
கேரளாவில் மாநில அரசு இயற்கை விவசாயத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது. கேரளா நகரங்களில் குறைந்தது ஒரு கிலோமீற்றருக்கு ஒரு இயற்கை வழி மரக்கறி விற்பனை நிலையங்களை நாங்கள் பார்க்கக் கூடியதாக உள்ளது. இயற்கைவழியில் விளைந்த மரக்கறிகளை தான் அங்குள்ள பெரும்பாலான மக்கள் தேடி வாங்குவதனையும் காணக் கூடியதாக இருந்தது. அங்குள்ள மக்கள் மத்தியில் இயற்கை முறையில் விளைந்த மரக்கறிகள் முதற்கொண்டு இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்கு அரச ஆதரவு பெரிய அளவில் இருப்பதாகக் தெரியவில்லை. அங்கு தனிநபர்களும் சமூக நிறுவனங்களும் தான் இயற்கை வழியில் விளைந்த உற்பத்திப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்.
கேரளாவில் இருக்கின்ற பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்றுக்கும் சென்றிருந்தோம். அங்கே கால்நடை வளர்ப்பாளர்களிடம் இருந்து பாலை மட்டும் வாங்காமல் சாணி, மாட்டு சலம் ஆகியவற்றையும் கொள்வனவு செய்கின்றனர். பெரும்பாலான பாலை ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளின் மூலப் பொருளாகத்தான் தான் பயன்படுத்துகிறார்கள். நெய்யை பாரம்பரிய முறையில் காய்ச்சி எடுக்கின்றார்கள். அந்த தொழிற்சாலையை முழுமையாகச் சுற்றிப் பார்வையிட்டோம். அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களும் மகிழ்வான ஒரு சூழலில் வேலை செய்வதனை பார்க்கக் கூடியதாக இருந்தது. கொள்வனவு செய்யப்படும் சாணி, மாட்டுச் சலத்தினை ஏனைய உள்ளீடுகளுடன் கலந்து இயற்கை உரம், பஞ்சகாவ்வியா முதற்கொண்டு சகல இயற்கைவழி வேளாண் உள்ளீடுகளையும் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றனர்.
கன்னியாகுமரியில் இயற்கைவழி உற்பத்திகளை விற்கும் சிறிய கடையொன்றில் பனஞ்சீனியை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. தற்போது யாழ்ப்பாணத்திலோ பனஞ்சீனியை பனைவள ஆய்வுப் பிரிவில் மட்டுமே காணக் கூடியதாக உள்ளது. தென்னிந்தியாவில் உணவுற்பத்திகளைப் பனை ஓலையினால் செய்யப்பட்ட குட்டானுக்குள் பொதி செய்து பரிமாறுகிற பழக்கம் இன்னும் இருக்கிறது. இயற்கைவழி உற்பத்திகளை விற்கும் கடைகளில் முற்றாகவே பொலித்தீன் பாவனை தவிர்க்கப்படுகிறது.
மறுநாள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் தான் முழு நேரத்தையும் செலவிட்டோம். அங்கே வேலை செய்தவர்களின் வயதினைக் கேட்டு அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. முதிய வயதினராக இருந்தாலும் நம்ப முடியாத அளவுக்கு உடல் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருந்தார்கள். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திராவில் உள்ள "அவ்வை" இயற்கைப்பானக் கடையை பெண்களே முழுக்க முழுக்க நிர்வகித்து வருகின்றார்கள். அங்கே கம்பங்கூழ், சிறுதானிய உணவுகள், மோர், மூலிகை தேநீர் போன்ற பலவகையான பானங்களையும் சுவைக்கக் கூடியதாக இருந்தது.
அடுத்து இயற்கை வளங்களை பயன்படுத்தும் திட்டத்துக்கு கீழ் பலவகையான இயற்கை விவசாய இடுபொருள்கள் உற்பத்தி தொடர்பான பயிற்சி வழங்கப்படுவதோடு அதற்கான செய்முறைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்ட காட்சிக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சகாவ்யா, அமிர்தக்கரைசல், மண்புழு உரம் போன்ற சகல இயற்கைவழி வேளாண் உள்ளீடுகளையும் அங்கு வரும் இயற்கை வேளாண்மையாளர்கள் வாங்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது. வீட்டுக்கழிவுகளை மண்புழுவின் உதவியுடன் உரமாக்கும் அமைப்பு ஒன்றும் விற்பனைக்கு இருந்தது.
விவேகானந்த கேந்திராவின் பசுமை இராமேஸ்வரம் திட்டம், கிராமோதயம் திட்டம் முதற்கொண்டு திருநெல்வேலி மாவட்டத்திலமைந்துள்ள முருங்கைத் தோட்டங்கள், நெல்லித் தோட்டங்கள் தொடர்பான பயணக் குறிப்புகளை அடுத்த இதழில் அலசுவோம்.
இயற்கைவழி இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளவும், இணைந்து செயற்படவும் விரும்புபவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிரில் சிங்கர் காட்சியறைக்கு அருகில் உள்ள ஜூசி டச் வளாகத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் இடம்பெறும் அங்காடிக்கு வாருங்கள். இயற்கைவழியில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதற்கொண்டு இயற்கைவழி வீட்டுத்தோட்டத்தை அமைப்பதற்கான உள்ளீடுகள் என சகலவற்றினையும் அங்கு பெறமுடியும்.
தொடர்புக்கு- 0779866409
தொகுப்பு-யாழ் விறலி
நிமிர்வு யூலை 2018 இதழ்
Post a Comment