சர்வதேச அளவில் அதிகரிக்கும் சர்வசன வாக்கெடுப்புக்கள்
சர்வசன வாக்கெடுப்புக்களின் எண்ணிக்கையும் அவற்றின் தாக்கமும் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன. இதற்கு மிக அண்மைக்காலத்தைய சிறந்த உதாரணமாக கடந்த வைகாசி மாதம் 25 ஆம் திகதி அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது தொடர்பாக நடந்த சர்வசன வாக்கெடுப்பைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரித்தானியர் 2016 இல் நடத்திய சர்வசன வாக்கெடுப்பையும் ஞாபகப்படுத்தலாம். உலக நாடுகள் தமது பிரச்சனைகளைத் தீர்க்க ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுவதைக் கூடுதலாக கடைப்பிடிக்க முனைவதை இவை சுட்டி நிற்கின்றன.
வெறுமனே நாடாளுமன்ற விவாதங்களூடாக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்குள் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது கடினமாகிக் கொண்டு வரும் போக்கை இவை சுட்ட நிற்கின்றன. சர்வசன வாக்கெடுப்புக்களின் தாக்கம் அதிகரித்து வருவதை இவை சுட்டி நிற்கின்றன.
சமூகமாற்றம் தொடர்பான சர்வசன வாக்கெடுப்புக்கள் ஒருபுறம் இருக்க தேசங்கள் தமது இறையாண்மைக்கான உரிமை கோரி நடத்தும் சர்வசன வாக்கெடுப்புக்களும் அதிகரிக்கும் போக்கு உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஸ்பெயினின் கரலோனியாவிலும் இராக்கின் குர்திஸ்தானிலும் நடந்த சுதந்திரமாக போகும் உரிமைக்கான சர்வசன வாக்கெடுப்புக்கள் இந்த வகையில் முக்கியம் பெறுகின்றன.
இறையாண்மை கோரி நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்புக்கள் ஒன்றும் புதியவையல்ல என்கின்றனர் மிசா ஜமான் (Micha Germann) மற்றும் பெர்னான்டோ மென்டெஸ் (Fernando Mendez) ஆகிய ஆய்வாளர்கள். இவர்கள் முறையே KU Leuven என்கின்ற பெல்ஜிய பல்கலைக் கழகத்தையும் சுவிற்சலாந்தின் சூரிக் (Zurich) பல்கலைக்கழகத்தையும் சேர்ந்தவர்கள். 1990 களில் இறையாண்மை தொடர்பாக 110 சர்வசன வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து போவதற்காக நடத்தப்பட்டவை. அதனைத் தொடர்ந்த 2000 ஆம் ஆண்டுத் தொடரில் 88 இறையாண்மை வாக்கெடுப்புக்கள் நடந்ததாக புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு இறையாண்மை சர்வசன வாக்கெடுப்பின் பின்னால் பல்வேறு பட்ட காரணங்கள் இருந்தாலும் அவற்றின் அதிகரிக்கும் போக்குக்குப் பின்னால் இறையாண்மை தொடர்பான மோதல்களின் பெருக்கமே முக்கிய காரணம் என இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் தேசிய இனங்களுக்கிடையேயான மோதல்களில் சர்வதேசம் தலையிடும் போது இறையாண்மைக்கான வாக்கெடுப்பு ஊக்குவிக்கப் படுவதாக தெரிவிக்கிறார்கள். உதாரணமாக கிழக்கு திமோர் விடுதலைப் போராட்டத்தில் போத்துக்கல் நாட்டவர் இறையாண்மை வாக்கெடுப்பு ஒன்றை ஒழங்கு செய்தார்கள். அதனை ஐ.நா. நடத்திக் கொடுத்தது.
இறையாண்மை வாக்கெடுப்புக்கள் சமாதானத்தைப் பேண அல்லது போருக்குப் பின் சமாதானத்தை முன்னெடுக்க பெருமளவில் உதவும் என அண்மைய ஆராய்ச்சிகள் காட்டுவதாக இவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனினும் அதற்கு இரு தரப்பினரும் உடன்பட வேண்டும். அதற்கு நீண்ட பேச்சுவார்த்தைகள் அவசியமானவை. இருதரப்புக்களும் இணக்கத்துக்கு வர முடியாத நிலையில் ஒருதரப்பு (க டலோனியாவைப் போல) ஒருதலைப்பட்சமாக வாக்கெடுப்பை முன்னெடுக்கலாம். அவ்வாறு நடக்குமிடத்து இரு தரப்புக்குமிடையில் முறுகல் நிலை ஏற்படலாம். அது குர்திஸ்தானில் இராக் துருப்பினர் நடத்தியது போன்ற இராணுவத் தாக்குதல்களுக்கும் வழி வகுக்கலாம்.
அதேவேளை, இறையாண்மை தொடர்பான சர்வசன வாக்கெடுப்புக்களின் முடிவு உடனடியாக நடைமுறைப்படுத்தப் படாவிட்டாலும் நீண்டகாலப் போக்கில் பாரிய மாற்றங்களுக்கு அது வழிவகுக்க கூடும். ஸ்கொட்லாந்துஇ வேல்ஸ், வட அயர்லாந்து பிரதேசங்கள் பெருவளவான தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள 1990 களில் அங்கு நடந்த சர்வசன வாக்கெடுப்புக்கள் பெரும் காரணிகளாக அமைந்தன.
இறையாண்மைக்கான மேலும் பல வாக்கெடுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி நிலையில் இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் கோரி ஸ்கொட்லாந்து இன்னுமொரு சர்வசன வாக்கெடுப்பைக் கோரி நிற்கிறது. தென்மேற்கு பசிபிக் கடல் தீவான நியு கலிடோனியா (New Caledonia) பிரான்சிலிருந்து சுதந்திரம் கோரி சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை இந்த வருடம் நடத்த இருக்கின்றது. பப்புவா நியு கினியாவின் போகன்வில் (Bougainville) பிரதேசமும் சர்வசன வாக்கெடுப்பொன்றை 2019 இல் நடத்தவிருக்கிறது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த தகவல்களை வைத்துப் பார்க்கும் பொழுது இலங்கையில் தமிழ் மக்களும் இறையாண்மை தொடர்பாக தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றுக்கு உரித்துடையவர்கள் என்பது தெளிவாகிறது. இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ்த் தேசிய இன மக்கள் தமது இறையாண்மை தொடர்பான விருப்பத்தை வெளியிடுவதற்கு அமைதியான ஜனநாயக வழியாக இந்த சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஈழத்தமிழர் தமது சுயநிர்ணய உரிமையினை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வழிமுறையாக இந்த சர்வசன வாக்கெடுப்பு நடத்தப் படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கையில் பல்வேறு இடங்களிலும் பரவி வாழும் தமிழ் மக்களும் உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாபன ரீதீயான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் இது. இவ்வாறான சர்வசன வாக்கெடுப்பு இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டத்திற்கு எதிரானதல்ல. ஆகவே இலங்கையில் இதற்கான ஏற்பாடுகளை சட்ட ரீதியாக மக்கள் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் மேற்கொள்ள முடியும். சுயநிர்ணய உரிமையை எதிர்க்கும் தமிழ்க்கட்சிகள் கூட தமது தரப்பின் நியாயத்தை கூறி பிரச்சாரங்களில் ஈடுபட முடியும்.
இங்கு இம்மாதம் 10 ஆம் திகதி ஸ்பெயினில் பாஸ்க் (Basque) பிரதேசத்திற்கு கூடுதல் அதிகாரம் வேண்டி மக்கள் நடத்திய மனிதச்சங்கிலிப் போராட்டம் குறிப்பிடப் படவேண்டியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட இம்மனிதச் சங்கிலி 202 கி.மீ. தூரம் வரை நீண்டிருந்தது. இப்பிரதேசத்துக்கு விடுதலை வேண்டி எற்றா (Eta) எனும் ஆயுதப் போராட்ட இயக்கம் போராடி வந்தது. 2010 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் செய்த இவ்வியக்கம் கடந்த மாதம் தன்னை முற்றாக கலைத்துக் கொண்டது. பாஸக் பிரதேசம் ஸ்பெயினில் இருந்து பிரிந்து போகாவிட்டாலும் அங்குள்ள மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை அம்மக்களுக்கு வழங்கப் படவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். இதே நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கும் பொருத்தமான ஒரு நிலைப்பாடு ஆகும்.
சர்வதேச மட்டத்தில் சர்வசன வாக்கெடுப்புக்களின் சட்டபூர்வத் தன்மை அதிகரித்து வரும் வேளையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு தெரிவிக்க வேண்டியது எமது இன்றைய வரலாற்றுக் கடமை. இதற்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும்.
ரஜீவன்
நிமிர்வு யூலை 2018 இதழ்
Post a Comment