மக்களின் குழந்தைகள் மக்களுடன் மீள் இணைப்பா?
சர்வதேச பெண்கள் மாநாடு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் 22.07.2018 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான வெற்றிச்செல்வி அவர்களின் உரை வருமாறு:
முன்னாள் போராளிகள் என்ன றோபோக்களா? கரண்டில்லாமல் போன உடனை வேலை செய்யாமல் போய் விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களை பாரபட்சமாக நடத்துகின்றோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்? எங்களுக்கு புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது என்கிறார்கள். சமூகத்தோடு மீள் இணைக்கின்றோம் என்கிறார்கள். எந்த சமூகத்தோடு இணைக்கின்றார்கள்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எங்கள் சமூகம் எது? எனது தந்தை தாய் அக்கா என்னுடைய மாமன் மாமி மச்சாள் என்னுடைய உறவுகள் என்னுடைய குடும்பம் என்னுடைய வீடு, அயலவர்கள் என்னுடைய கிராமம் எல்லாவற்றோடும் தானே நாங்கள் வாழ்ந்தோம். எங்களை ஏன் பிரித்து பார்க்க வேண்டும்?
நாங்கள் எந்த சமூகத்தோடு மீள் இணைக்கப்படுகின்றோம்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? இங்கிருந்தவர்களையே இந்த சமூகத்தோடு இணைக்கிறார்களா? யார் இணைக்க வேண்டும்? எத்தனை நிகழ்ச்சித் திட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன? புனர்வாழ்வு அளிப்பதற்கும், எங்களுடைய உள்ளத்தை ஆற்றுப்படுத்துவதற்கும், எங்களை வலுவூட்டுவதற்கும் என்றார்கள். வலுவூட்டுவது என்பது என்ன? ஒவ்வொரு மனிதர்களும் தன்னளவில் தன்னை உணர்தலையே வலுவூட்டல் என்கிறோம். அந்த வலுவூட்டல் எங்கே சறுக்கியது. மூச்சு திணறல் ஏற்படும் போது முதுகில் இரண்டு தட்டு தட்டி உனக்கு மூச்சு வந்து விட்டது ஓடு என்று எங்களுடைய சமூகம் எங்களைப் பார்த்து சொல்லவில்லை. பாவம் நீங்கள் என்றது. அதனால் எனக்கு சமூகத்தின் மீது கோபம் இருக்கின்றது.
எங்களை ஏன் பாவம் பார்க்கின்றீர்கள்? தனியே காட்டுக்குள் ஒன்றுமே இல்லாமல் கொண்டுபோய் விட்டால் கூட மரத்தில் வளரும் கொடியை அறுத்து தண்ணீரைக் குடித்து பழங்களை உண்டு ஒரு மாதம் தாண்டியும் உயிரோடு மீண்டு வரத்தெரிந்த பெண் போராளிகள். எதற்காக அவர்கள் ஒன்றுமில்லால் இருக்கின்றார்கள் என்று சொல்லுகிறீர்கள்? அது தான் என்னுடைய கேள்வி. நீங்கள் அப்படிக் கருத வேண்டாம். எனக்கு தெரியும் எத்தனையோ பெண் போராளிகளை போருக்கு பின்னர் அவர்களை வீட்டுக்குள் முடக்கியது அவர்களுடைய அம்மாக்களும் அப்பாக்களும் சகோதரர்களும் தான். பாதுகாப்பு என்ற பெயரில் வீட்டினுள் முடக்கினார்கள். உண்மையில் பாதுகாப்பு பிரச்சனை இருந்ததுதான். ஆனால் பாதுகாப்பு என்பதை உயிர் அச்சுறுத்தல் என்று கருதினோம். யாருக்கு அந்த உயிர்ப் பயம் வந்திருக்க வேண்டும். பயிற்சி பெற்று என்னுடைய உயிர், உடல், ஆவி அனைத்தையும் இந்த மண்ணுக்காக கொடுப்பேன் என்று சத்தியம் செய்தவர்களுக்கா உயிர் அச்சம் வர வேண்டும். அந்த அச்சுறுத்தல் இராணுவ மட்டத்திலிருந்தும் பொலிசார் மட்டத்திலிருந்தும், புலனாய்வு மட்டத்திலிருந்தும் மட்டுமல்ல எங்களுடைய சமூக மட்டத்திலிருந்தும் வந்தது. எங்களுடைய குடும்பத்திலிருந்தும் வந்தது. இது மிகவும் துயரமானது.
நாங்கள் மீண்டும் எங்களுக்குள் போராட வேண்டிய நிலை வந்தது. எங்களுடைய அம்மாவை, சகோதரியை எங்களுடைய சமூகத்தை எதிர்த்து குரலை உயர்த்த வைப்பதற்காக நான் என்னுடைய சமூகத்திலும் என்னுடைய குடும்பத்திலும் போராட வேண்டியிருந்தது. அந்த போராட்டத்தின் பிரதிவிம்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய போராளிகள் தான் சமூகத்தில் வளமாக இன்று வரை இருக்கின்றார்கள்.
போராளிகள் அனைவருமே ஆயுதத்தை மட்டும் கையிலே பிடித்துக் கொண்டு களமுனையில் நின்றவர்கள் அல்ல. அவர்கள் இதே போன்ற சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு பெண்களை வலுப்படுத்தல், பெண்களுக்கான சட்டம் நீதி நியாயம் அனைத்திற்காகவும் இயங்குகின்ற ஒரு அமைப்பையே தோற்றுவித்து நடத்தியவர்கள். நீதிமன்றங்களில் சாட்சிகள் சரியில்லை என்பதால் புறக்கணிக்கப்பட்டு பொருத்தமான நீதியின்றி வீட்டுக்கு அனுப்பட்ட பெண்களின் சக்தியாக வாழ்வின் ஆதாரமாக குரலாக இருந்தவர்கள். பெண் உரிமைகள் பேசுபவர்களாக மட்டுமல்ல, பெண்களுக்காக வாழ்ந்தவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகின்ற நல்ல அதிகாரிகளாக இருந்தார்கள். குடும்பநல ஆலோசகர்களாக இருந்தார்கள். சட்டம் படித்திருந்தார்கள். நீதிபதிகளாக இருந்தார்கள். விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள், சமையல் கலை செய்பவர்களாக இருந்தார்கள். கலைத்துறையில் இருந்தார்கள். எங்கே அவர்கள் எல்லாம்? படகு கட்டுமான பிரிவில் இருந்தார்கள். படகு கட்டினார்கள், படகு செலுத்தினார்கள். ஆண்களுக்கு நிகராக நீரடி நீச்சலில் நின்று முதல் பரிசு பெற்றார்கள். அவர்களை எல்லாம் காணாமல் ஆக்கியது யார்? நாங்கள் அவர்களை காணாமல் ஆக்கிவிட்டு அவர்களுக்காக இரங்குகிறோமா? தயவு செய்து இரங்க வேண்டாம்.
முன்னாள் போராளிகள் நாட்டுக்காக தங்களை இழந்தவர்கள் அல்ல. ஒவ்வொரு போராளிகளும் இந்த மண்ணின் விடுதலைக்காக அவர்களாக முன் வந்து சென்றவர்கள். அவர்களுடைய ஈடுபாட்டோடு அர்ப்பணிப்போடு நின்றவர்கள். போர்க்களத்தில் அவர்கள் வென்ற பொழுது எப்படி பாராட்டினீர்களோ அதே பாராட்டை இப்பொழுதும் பாராட்டுங்கள். அதுதான் நீங்கள் அவர்களுக்கு தட்டிக்கொடுக்கின்ற ஒரே செயல். தயவு செய்து அவர்களை பாரமாக அல்லது பாவமாக பார்க்க வேண்டாம். அதுவே நான் உங்கள் முன் இந்த சபையின் முன் உலகத்தின் முன் நான் முன் வைக்கின்ற மிகப் பெரிய செய்தி.
பேச்சளவிலும் எழுத்தளவிலும் கணக்களவிலும் மாற்றுத்திறனாளிப் பெண்களையும் நாங்கள் வைத்திருக்கின்றோம் . மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும் நான் இதையேதான் சொல்லுவேன். ஒரு கண் இல்லாவிட்டால் என்ன கை இல்லவிட்டால் என்ன இரண்டு கால்களும் இல்லாவிட்டாலும் தான் என்ன வாழும் வல்லமையினால் தான் நிமிர்ந்து வாழ முடியும். அந்த நிமிர்வை நாங்கள் எவ்வாறான இடங்களில் காட்டுகின்றோம் என்றால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டும்தான்.
இந்த இடத்திற்கு வருவதற்காக நான் செய்த வேலைகள் பல்லாயிரம். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் நான் அர்ப்பணிப்போடும் உண்மையான உணர்வோடும் செயற்பட்ட ஒரே காரணத்தால் என்னை இனங்கண்டீர்கள் இங்கே அழைத்தீர்கள். இனங்காணப்படாத எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் இந்த மண்ணில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். அவர்கள் குடும்பங்களின் நம்பிக்கை தூண்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான மாற்றுத்திறனாளிகளை நாங்கள் இனங்காண வேண்டும். அவர்களை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் சாதனை தொடர்பாக மட்டுமல்ல அவர்களுக்கு விருதுகளும் வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அது நாங்கள் செய்கின்ற மிகப் பெரிய சாதனையாக இருக்கும். மாற்றுத்திறனாளிப் பெண்கள் என்று குறிப்பிடும் போது ஓரளவு நடமாடக் கூடியவர்களை நாங்கள் யோசிக்ககூடும். உண்மையில் மாற்றுத்திறனாளிகளின் பல்வகைமை இதற்குள் அடங்கும். படுக்கையில் இருக்ககூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் அல்லது மாதம் மூவாயிரம் கொடுத்தால் போதும் என்கின்ற நிலைமை எங்களுடைய எண்ணங்களில் இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் வாழ வேண்டியவர்கள்.
எல்லோருக்கும் சுய கௌரவமும் சிறந்த முறையில் தமக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழியும் தெரிந்தவர்கள். அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அவர்களோடு கொஞ்சத்தூரம் நடந்து பின்னர் அவர்களை தாங்களாக நடக்கவிட வேண்டும். சின்ன வயதிலேயிருந்தே அவர்களுடைய கோயில் அவர்களுடைய ஊர் பற்றி தெரியாது வீட்டுக்குள்ளேயே வாழும் அந்த சின்னக் குழந்தைகள் பற்றி யார் கவனம் எடுப்பது? அரசஅதிகாரிகள் மட்டுமல்ல சிறுவர் பாராமரிப்பு உத்தியோகத்தர்கள் மட்டுமல்ல கச்சேரி மட்டுமல்ல பிரதேச செயலகங்கள் மட்டுமல்ல நாங்கள் அனைவரும் அவர்கள்மீது கவனம் எடுக்க வேண்டும். கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களது தேவைகளை நிறைவேற்ற இந்த நாட்டிலே என்ன இருக்கின்றது? கல்வியில் சிறந்த ஒரு மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை உருவாக்குவது மிகப்பெரிய கடமை. நான் வாழுகின்ற பிரதேசத்தில் மட்டும் 13 வயதிற்குட்பட்ட 35 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அவர்களில் 7 பேர்தான் பாடசாலைக்கு செல்கிறார்கள். அந்த 7 பேருக்காகவும் ஒரு ஆசிரியர் இருக்கின்றார். கதவு எல்லாம் மூடிக்கட்டிய அறைதான் அவர்களுடைய வகுப்பறை. இப்படியாயின் எவ்வாறு எங்களுடைய மாற்றுத்திறனாளி சிறார்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவது?
பாடசாலை சமூகம் அதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டால் அவர்களுக்கு இந்த மாற்றாற்றல் உடைய சிறுவர்கள் பற்றி போதிய தெளிவு படுத்தல் இல்லையாம். கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் இருக்கின்றது என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள். உட்படுத்தல் கல்வித்திட்டம் இருந்தும் அந்த கல்வித்திட்டத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பு இந்த சிறு குழந்தைகளிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத சூழல் இருக்கின்றது. அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு யார் இருக்கின்றார்கள்? அதற்கு யார் பொறுப்புக் கூற வேண்டும்? அரசாங்கம் இதனை செய்ய வேண்டும் என்றால் அரசாங்கத்திற்கு இதனை கரிசனை கொள்ளுமாறு கேட்பதற்கு யார் இருக்கின்றார்கள்? அதை நாங்கள் கேட்க வேண்டும்.
தொகுப்பு – விக்னேஸ்வரி
நிமிர்வு யூலை 2018 இதழ்
Post a Comment