ஆசிரியர் பார்வை




செய்திகளுக்கு பின்னால் அலைக்கழிக்கப்படுகின்றோமா நாம்?

தமிழ்மக்கள் தங்களுக்குரிய நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை விட்டு விட்டு அன்றாட செய்திகளுக்கு பின்னால் ஓட வேண்டிய அல்லது ஓட வைக்கப்படுகின்ற நிலமை இன்று உள்ளது. இது மிகவும் துயரமானது. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் ஏதாவது கொலை, கொள்ளை, கடத்தல் செய்திகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. "காட்டுப்புலம் சிறுமி கற்பழிப்பு, கொக்குவிலில் வாள்வெட்டு, தொண்டைமானாற்றில் பெருந்தொகை கஞ்சா பிடிபட்டது"   என்றவாறான செய்திகள் சாதாரண மக்களின் பொது உளவியலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறன. ஆனால் இத்தகையை செய்திகளின் பரபரப்புக்களும் ஒரு வாரத்துக்குள் அடங்கி விடுகின்றன. காட்டுப்புலம் கிராமத்தை போல் கஞ்சா, போதைப்பொருள்கள் பாவனை கூடிய இன்னும் பல கிராமங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றன. இங்கு ஆரோக்கியமான உரையாடல்களை சிறிய வயதில் இருந்தே தொடங்க வேண்டும். சிறுமி கற்பழிப்புக்கான ஏதுநிலைகள், புறச் சூழல்களில் சரியான மாற்றங்களை நாங்கள் கொண்டுவராமல் சமூக மாற்றங்களை கொண்டு வர முடியாது. அதே போல கஞ்சா கடத்தலுக்கான மத்திய நிலையமாக யாழ்ப்பாணம் எவ்வாறு மாற்றப்பட்டது? யார் யாரின் அசட்டையீனத்தால் இவ்வாறான நிலை உருவானது?   சுறாக்கள் தப்பிப்பதும் நெத்தலிகள் அகப்படுவதும் எவ்வாறு என்பது தொடர்பிலும் ஆழமான செய்தி புலனாய்வுகளே காலத்தின் தேவை.

இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை,  இராணுவத்திடம் இருந்து தமிழ்மக்களின் காணிகளை மீட்பதில் உள்ள சிக்கல்கள் என்பவற்றை தொடர்ச்சியாக பேச நாம் மறந்து வருகின்றோம். தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு எப்படியான படிமுறைகளின் ஊடாக முன்னேறலாம் என்பது தொடர்பிலும் யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை. மாறாக இப்படியான தீர்க்கப்படவேண்டிய தமிழ்மக்களின் முக்கியமான பிரச்சினைகளை விட்டு விட்டு கஞ்சா, வாள்வெட்டு போன்ற வேண்டுமென்றே திசைதிருப்ப உருவாக்கப்படும் பிரச்சினைகளின் பின்னால் ஓடுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

பிரச்சினைகளின் ஆழத்தை பேசுபொருளாக்காமல், எம் நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு சரியான தீர்வினை கண்டு கொள்ளாமல் அதனை தீர்க்க முழுமையான முயற்சிகளை செய்யாமல் வெறும் அன்றாட செய்திகளுக்கு பின்னால் ஓடுவதென்பது எமது போராட்ட வேகத்தை படிப்படியாக நீர்த்துப் போகவே செய்யும்.

ட்ரெண்டிங் செய்திகளின் பின்னால் ஓடுகின்ற ஊடக கலாச்சாரம் கூட மிகவும் ஆபத்தானது. மஹிந்த அரசு சீனாவிடம் இருந்து பெற்ற லஞ்சம் தொடர்பிலான நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பில் பல்வேறு அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன. நாடாளுமன்றிலும் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. அதற்கு அடுத்தடுத்த நாள் விஜயகலா புலிகள் குறித்து பேசியவுடன் விஜயகலாவுக்கு எதிராக தென்னிலங்கையே திரண்டிருந்தது. நாடாளுமன்றமும் விஜயகலாவை பற்றியே முழுநாளும் பேசியது. மஹிந்த விவகாரத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட குழப்பத்தை விஜயகலாவின் பேச்சு திசைதிருப்பி விட்டதாக எழுதுகின்றன தென்னிலங்கை ஊடகங்கள்.     இந்தியாவிலும் மக்கள் போராட்டங்கள் மத்திய அரசால் திட்டமிட்டு எவ்வாறு திசை திருப்பப்படுகின்றன என்பதனை நாங்கள் தினமும் பார்த்து வருகின்றோம். 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஒருமுறை இஸ்ரேல் சென்றிருந்த சமயம் தலைநகர் டெல் அவிவில் அவர் தங்கியிருந்த விடுதி அருகே பெரிய குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அதில் சிலர் இறந்த தகவல் கலாமுக்கு உடனே கிடைத்தது. குண்டு வெடிப்புக்கு அடுத்த நாள் அந்த நாட்டின் பத்திரிகைகளில் குறித்த செய்தியைத் தேடினார். எங்களது நாட்டில் என்றால் அந்தச் செய்தி தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், இஸ்ரேல் பத்திரிகைகளில் அந்த செய்தி “கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலை” யில் (INVISIBLE CORNER OF NEWS PAPER) பிரசுரமாகி இருந்தது. அதேநேரம், விவசாயத்தில் சாதனை புரிந்த ஒரு விவசாயி தொடர்பிலான செய்தி தான் தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்தச் சம்பவத்தை அப்துல் கலாமே பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கின்றார். “நமது ஊடகங்களும் இஸ்ரேல் பத்திரிகைகள் போல ஆக்கப்பூர்வமாக செயற்படுவது எப்போது?” என்பது தான் இந்த நிமிடம் எம் முன்னுள்ள மில்லியன் டொலர் கேள்வி.

அன்றாடம் என்ன தான் நடந்தாலும் அரசியல் கைதிகள்,  காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு பிரச்சினைகள்,  தமிழ்மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடல்களை,  ஆழமான கட்டுரைகளை, அது தொடர்பிலான ஆய்வுகளை  தினமும் செய்ய வேண்டும்.  அவை பத்திரிகைகளில் முன்னிலை பெற வேண்டும். இதனை விடுத்து அன்றாட செய்திகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தால் எம் நிலை நிச்சயம் கவலைக்குரியதாகவே மாறும்.

-செ.கிரிசாந்-

நிமிர்வு யூலை 2018 இதழ்



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.