ஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன்

ஆடு வளர்ப்பு என்பது எம் முன்னோர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வந்திருக்கிறது. வளர்த்த ஆட்டை விற்று முக்கிய பொருளாதார கடமைகளை நிறைவேற்றும் நிலைமையும் இருந்ததுகுடும்பத்தில் உள்ள அனைவருமே ஆடுவளர்ப்பில் அக்கறை செலுத்துவார்கள்ஆட்டுப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கும் நிலை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மிக்கது என அறியப்பட்டது. ஆட்டிறைச்சிக்கு எம்மவர்கள் மத்தியில் என்றுமே தேவை குறைந்ததில்லை. அதுவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஊருக்கு வர முதலே உறவினர்களிடம்ஒரு நல்ல கிடாயா பார்த்து வாங்கி வீட்டை கட்டி வையுங்கோ! வருகிறோம்என இரண்டு மாதங்களுக்கு முன்பே  சொல்லுகின்ற நிலையும் உள்ளது. இதன் மூலம் எங்கள் பிரதேசங்களில் ஆடுகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆட்டெருவும் உடனடியாக விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும்.     

மன்னார் மாவட்டத்தின் பரப்பாக்கண்டல் பிரதேசத்தில் உள்ள காத்தான்குளம் கிராமசேவகர் பிரிவில் பிரதான வீதியில் இருந்து உள்ளே சென்றால் "நம்பிக்கை பண்ணை" எல்லோரையும் வரவேற்கின்றது. கட்டுக்கரை குளத்துக்கு அண்மையில் (சின்ன அடைப்பு துருசு) க்கு அண்மையாக இப்பண்ணை அமைந்துள்ளது.  

பெயருக்கு ஏற்றால் போல் குறித்த பண்ணை நமக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கின்றது. உதயன் என்பவர் இந்தப் பண்ணையை நிர்வகித்து வருகின்றார். கிறிஸ்தவ  தொண்டு நிறுவனம் ஒன்றும் இந்தப் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது

எதற்காக இப்படி ஒரு பண்ணை எனக் கேட்ட போது உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் உதயன்தற்போது நம்பிக்கை பண்ணை அமைந்துள்ள ஏறக் குறைய 4 ஏக்கர் காணி என் அப்பா அன்பளிப்பாக எனக்கு தந்திருந்தால் .  2009 யுத்தம் முடிவுற்ற பிறகு நிர்க்கதியாகவுள்ள எமது மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற உந்துதல் எனக்குள் எழுந்தது. குறித்த காணியைப் பயன்படுத்தி ஏதாவது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய மாதிரி விடயங்கள் செய்யவேண்டுமென நினைத்தேன். ஆனால் அதற்கு முதலீடு செய்ய பணம் பெரிய தடையாக  இருந்தது. 2012 ஓகஸ்ட் மாதம் தான் ஒரு பண்ணையை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து காணியை சுற்றி வேலி அமைத்தோம். 2013 இல் ஏழு பால் மாடுகளை வாங்கினோம். மாடுகளின் மூலம் சிறிய வருமானத்தை பெற்று அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் நோக்கமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு பால் உற்பத்தியினை குறித்த மாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை. நல்ல இன பால்மாடுகளை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அப்போது மாட்டை தொடர்ந்தும் வைத்திருக்கப் போகின்றோமா என்று யோசிக்க வேண்டி இருந்தது. 5 வருடங்கள் மாடுகளுடன் செலவழித்து விட்டோம். அதனால் பெரிதாக வருமானம் வரவில்லை. அடுத்த கட்டம் என்ன செய்வது என பணியாளர்களுடன் சேர்ந்து சிந்தித்தோம்.    


2015 நடுப்பகுதியில் ஆடுகளை வாங்கி வளர்ப்பது நல்லது என யோசித்து 10 ஆடுகளை வாங்கி வளர்த்துக் கொண்டு அதே நேரம் மாடுகளை பண்ணையில் இருந்து குறைத்துக் கொண்டு வந்து 2017 இல் மாடுகளை முற்றாக விற்று ஆட்டுப்பண்ணை அமைப்பது என முடிவெடுத்தோம். முதலில் ஏற்கனவே இருந்த பரண் முறையிலான ஆட்டுக் கொட்டகை ஒன்றை விலைபேசி வாங்கி கொண்டு வந்து  அமைத்தோம். அதோடு சேர்த்து 35 ஆடுகள் வரை வாங்கி சிறியதொரு ஆட்டுப் பண்ணையை அமைத்தோம். எங்களுடைய காலநிலைக்கு ஏற்ற கலப்பின ஆடுகளையே நாங்கள் அதிகம் வைத்திருக்கிறோம். தற்சமயம் 104 ஆடுகள் எங்களிடம் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்குள் 50 ஆடுகள் வரை நாங்கள் விற்றிருக்கின்றோம்


அகத்தி, இப்பிலிப்பில், கிளிசரியா போன்ற மரங்களை அதிகளவு நடுகை செய்து வருகிறோம். இவை நிழல், குளிர்ச்சியை தருவதோடு ஆடுகளுக்கும் நல்ல தீவனமாகவும் விளங்குகின்றன. எங்களிடம் கிராமப் புறங்களில் உள்ள நாட்டு ஆடுகளே அதிகம் உள்ளன. ஜமுனாபாரி கலப்பினங்களையும் உருவாக்கி வருகின்றோம்.  இவ்வினங்கள் இனப்பெருக்கம் அதிகம் உள்ளவை. ஆடுகளை  வெளியில் கொண்டு போய் விவசாயம் செய்யப்படாத நிலங்களில் மேய்த்துக் கொண்டு வருகின்றோம். அதையும் விட எங்களது காணியிலும் குறிப்பிட்ட சதுர காணியாக தெரிவு செய்து அதனை சுற்றி கம்பி வேலி அமைத்து அதற்குள் CO3 வகையான புல்லுகளையும் நாட்டி தூறல் நீர்ப்பாசனம் செய்து அதற்குள் ஆட்டுக் குட்டிகளை மேய்ச்சலுக்காக விட்டு வருகின்றோம்அதில் நல்ல பலன்களை பெற கூடியதாக உள்ளது. பரந்த திறந்த வெளியில் ஆடுகளை உலவ விடுவதால் நோய் தொற்றுவதும் மிகக் குறைவாக உள்ளது. கோடை காலத்தில் உணவுற்பத்தி தான் எமக்கு பெரும் சவாலாக உள்ளது. முதலில் அதற்கான நீர்வளத்தை பெற்று புல்லு வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பை விஸ்தரிக்க உள்ளோம். எங்களது காணியின் வேலிகளை உயிர்வேலிகளாக அமைத்து வருகின்றோம். இதனால் பல நன்மைகள். ஒன்று பசுமையான சூழலை உருவாக்குகிறோம். ஆடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது. மற்றையது காற்றுத்தடுப்பு வேலிகளாகவும் இவை விளங்குகின்றன

ஆடுவளர்ப்பு ஆரம்பித்து ஒரு சில வருடங்களே முடிந்துள்ளன. சந்தைவாய்ப்புக்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றன. எங்களிடம் இருக்கின்ற ஆடுகள் ஒருவருட காலத்தில் 25 கிலோவில் இருந்து 30 கிலோவுக்குள் தான் வருகின்றன.    ஆனால், இதனையே 6 மாதத்துக்குள் 25 கிலோ உயிரெடை வரக் கூடியமாதிரி வளர்த்தால் இன்னும் விலையை குறைத்தும் கொடுக்க முடியும்.அதிக இலாபமும் சம்பாதிக்கலாம்.

ஆடுகளுக்கு வலிப்பு நோய் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்று முதலில் எங்களுக்கு தெரியாது. இப்படியான நோய்கள் வருவதற்கு உண்ணியும் ஒரு காரணம் . இயன்றளவு இயற்கை முறையில் இதற்கு தீர்வு காண முடியும் என பின்னர் அறிந்து கொண்டேன். மஞ்சள், தேங்காய் எண்ணெய், பூண்டு மூன்றையும் சேர்த்து ஆடுகளின் காதுகளில் பூசிவ ந்தால் உண்ணித்தாக்கம் குறையும். 


உள்ளி நல்லதொரு மருந்து. ஒரு ஆடுக்கு ஒரு பல்லு உள்ளி ஒவ்வொரு நாளும் கொடுத்து வந்தால் ஆடுகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அத்தோடு பல்வேறு நோய்களையும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆடுகளுக்கு ஏற்படும் பூச்சித்தாக்கத்தை கட்டுப்படுத்த பூசணி விதை நல்ல மருந்தாகும். கத்தாழை நடுப்பகுதியும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த கொடுக்க முடியும்.\

வளர்க்கிற மாதிரியான நல்ல இன ஆடுகளை கிலோ 750 - 1300 ரூபாய் வரைக்கும் கொடுக்கிறோம். சாதாரண ஆடுகளை 650 - 750 ரூபாய் வரையும் கொடுக்கின்றோம்இந்த வருடம் ஆடுகளை விற்பதன் மூலம் 20 இலட்ச்சம் ரூபாய் வருமானமாக ஈட்டலாம் என இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆட்டுப்பண்ணை சூழலை ஒரு பசுமை சூழலாக மாற்றி இதற்குள் ஓய்வு விடுதி ஒன்றையும் அமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற இடமாக இதனை கொண்டு வந்தால் ஆட்டுப் பண்ணையும் மேலும் வளரும் சூழல் உருவாகும் என்றார்

குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். ஆடுகளுக்கு வர இருக்கும் நோய்களுக்கும் நாம் முன்கூட்டியே இயற்கை முறையில் சிகிச்சையளித்து ஆரோக்கியமாக வளர்க்க முடியும். எங்கள் சூழலுக்கு ஏற்றதும் அதிக வருவாயை பெற்றுத் தரக் கூடியதுமான ஆடுவளர்ப்பை எம்மக்கள் அச்சமின்றி மேற்கொள்ளலாம். இதன் மூலம் கிராமிய பொருளாதாரம் நிச்சயம் உயரும்


                                                                                                              தொடர்புகளுக்கு- 0778896730

                                                                                       info@nambikay.orgதொகுப்பு- துருவன்
நிமிர்வு யூலை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.