இலங்கை அரசின் முகத்திலறைந்த சிங்கள கேலிச்சித்திரக் கலைஞர்



அவந்த ஆட்டிகல என்கிற சிங்கள கேலிச்சித்திர கலைஞர் இலங்கை அரசினால் தாபிக்கப்பட்டுள்ள OMP(Office Of Missing Person)காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வரைந்த கேலிச்சித்திரம் இலங்கை அரசு தொடர்பிலான அப்பட்டமான உண்மை நிலையை தோலுரித்துக் காட்டியுள்ளது.


ஏற்கனவே மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட  பரணகம ஆணைக்குழு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 25000 முறைப்பாடுகளை பெற்றுக் கொண்டது. இதையும் தாண்டி மஹிந்த அரசில் இருந்து மைத்திரி அரசாங்கம் வரை பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு அடியைக் கூட இந்த ஆணைக்குழுக்களால் எட்ட முடியவில்லை. இந்த நிலையில் தான் காணாமல் போனோர் அலுவலகம்   திறக்கப்பட்டு வருகிறது. கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்   இந்த அலுவலகமும் வேண்டாம் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் நுழையும் போது பலரை இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்தனர். விசாரிக்க அழைத்த இராணுவ அதிகாரியின் முன் மனைவியோஇ தாயோ கையொப்பம் வைத்து  ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலருக்கு இராணுவத்தின் எந்த டிவிஷனை சேர்ந்த இந்த பெயர் கொண்ட அதிகாரியியிடம் தான் ஒப்படைத்தோம் என்று உறுதியாக சொல்கின்ற நிலை உள்ளது. அப்படியான இராணுவ அதிகாரிகளை இலங்கை அரசாங்கம் முதலில் இனம் கண்டிருக்கிறதா?    விசாரித்திருக்கிறதா? இதற்கு பதில் இல்லை. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் இல்லாத இலங்கை அரசாங்கத்திடம் இருந்து இனியும் நீதியை இந்த உறவுகள் எதிர்பார்க்க முடியுமா? சர்வதேச பொறிமுறை ஒன்றினூடாக தான் இதற்கு பொறுப்புக் கூற முடியும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நிலைப்பாடாகும்.


   காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளில் ஏராளமானவர்கள் வயதான தாய் தந்தையராவார். இவர்கள் தான் தற்போது 500 ஆவது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலப்பகுதியில் மாத்திரம் 10 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மரணமடைந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஆணைக்குழுக்களை நியமித்து காலம் தாழ்த்தி இழுத்துக் கொண்டே சென்று நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் சச்சிதமாக செய்து வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை இலங்கை அரசாங்கம் என்றோ குழி தோண்டிப் புதைத்து விட்டது. இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பல ஆணைக்குழுக்களுக்கு சமாதி கட்டி விட்டதையும்இ தற்போதைய OMP இற்கும் அதே கதிதான் என்றும்,  இவர்கள் போடும் நாடகங்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் தாயொருவர் தனது குழந்தையுடன் ஏக்கத்துடன் பார்ப்பதையும் தெளிவாக காட்டி இருக்கிறார்   அவந்த ஆட்டிகல.

சர்வதேச பொறிமுறையுடனான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான வெளிப்படையான விசாரணைகளே இன்றைய தேவை. 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.