தகவல் அறியும் உரிமைச்சட்டம்தகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று.   இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத சட்டமாக இருப்பது தான் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு சாதகமாக உள்ளது. சாதாரண மக்களிலிருந்து கல்வி அறிவுடைய மக்கள் வரை இச்சட்டம் பற்றி தெளிவாக அறிந்தால் ஊழல்களை பெருமளவில் குறைக்க முடியும். இலகுவாக தகவல்களை பெற முடியுமாயின் குற்றவாளிகளை அம்பலப்படுத்த வழியமைக்க முடியும். இலங்கையில் குடியுரிமை பெற்ற எந்த நபரினாலும் பொது அதிகார சபையில் உள்ள தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை உரிமையே தகவலிற்கான உரிமை ஆகும்.

தகவல் அறியும் சட்டம் எமது நாட்டுக்கு புதிய விடயமாக இருந்தாலும் உலகில் கிட்டத்தட்ட 85 நாடுகளில் தகவல் பெறுவதற்கான உரிமை சட்டங்கள் உள்ளன. முதன் முதலில் சுவீடனில் 1766 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரச் சட்டம் மக்கள் சுதந்திரமாக தகவல் பெறும் உரிமையை வலியுறுத்தியது. அது அந்நாட்டைஊழலற்ற அபிவிருத்திப் பாதைக்கு செல்வதற்கு வழியமைத்தது. எமது அயல்நாடான இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் வாழ்கின்ற போதும் இங்கு 2005 ஆம் ஆண்டு வைகாசி மாதமே இச்சட்டம்நடைமுறைக்கு வந்தது.


இலங்கையில் கடந்த வருடம் மாசி 3 ஆம் திகதி 19ஆம் திருத்த சட்டத்திற்கு பின்னர் அரசியலமைப்பின் உறுப்புரை 14 (அ) இன் தகவலை பெறுவதற்கான உரிமை இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இச்சட்டமும் ஒன்று என்பது யாவரும் அறிந்த விடயம்.

இதன் மூலம் மக்கள் பல்வேறு உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது கண்காணிப்பில் உள்ள தரவுகளை பெற முடிவதுடன் இத்தகவல்களை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் நாடு எப்படி ஆளப்படுகிறது என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னைய ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். “ஒரு கண்ணாடி பெட்டியில் அரசை வைப்பதற்கு சமம்” என்றார். அரசாங்கம் வழங்கும் தகவல்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் அரசிடம் இருந்து கணிசமான நிதி பெறும் அரசசார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், உயர் கல்வி நிறுவனங்கள் பற்றி வெளிப்படையாக தகவல்கள் வழங்கப்படவேண்டும்.

இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்கள் தொடர்பாகவும், நடக்க இருக்கும் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பாகவும், தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் விடயங்களை பெற தடை உள்ளது. உதாரணமாக இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள், வெளிநாடுகளுடன் செய்து கொள்ளும் வியாபார ஒப்பந்தங்கள், இராணுவத்திடம் உள்ள வெடிபொருட்கள் பற்றிய தகவல்களை நாட்டின் பாதுகாப்பு கருதி கேட்க முடியாது.

இச்சட்டம் பற்றி அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகளுக்கே தெளிவான விளக்கங்கள் இல்லை. அது பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்ததால் மாத்திரமே மக்களுக்கு தகவல்களை வழங்கி எதிர்வரும் காலங்களில் எமது நாட்டை ஒரு ஊழலற்ற நாடாக மாற்றலாம். இது நடைபெறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 2009 ஆம் ஆண்டு 192 அங்கத்துவ நாடுகளில் ஊழல் குறைந்த நாடுகளை தொடர்பாக ஆய்வு செய்ததில் எமது நாடு 97 ஆவது இடத்தில் உள்ளது என்பதை பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தகவல் அறியும் சட்டம் பற்றிய அறிவை பெற்று மிகவும் விழிப்பாக செயற்பட்டால் எமது அரசியல்வாதிகளும்,  அரச அதிகாரிகளும் செய்யும் ஊழல்களை வெளிகொணர்ந்து எமது நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி நகர வழியமைக்கலாம்.

தகவல் அறியும் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு பொது அதிகார சபையிலும்  அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். மக்கள் இலகுவாக தகவல்களை பெறுவதற்கு இது ஏற்றதாக உள்ளது. ஒரு தகவலை பெற வேண்டுமாயின் அத்தகவல் எந்த திணைக்களங்களுடன் தொடர்புபட்டது என முதலில் அறிய வேண்டும்.  அறிந்த பின்னர் அத் திணைக்களங்களில் இதற்கென நியமிக்கப்பட்ட தகவல் உத்தியோகத்தர் ஊடாகவும் அவருக்கு மேலாக குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ஊடாகவும் தகவலை பெற்றுக்கொள்ள முடியும்.

அரசியல் வாதிகளோ அரச உத்தியோகத்தர்களோ எமக்காக சேவை புரிவதற்கென பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் எமது தகவலை அவர்களிடம் எந்த தயக்கமும் இன்றி பெற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு நீண்ட நாட்களாக வீட்டுத்திட்டம் தரப்படவில்லை என்றால் அவர் தான் வாழும் பிரதேச செயலகம் ஊடாக அணுகி தகவலை பெறவேண்டும். பெரும்பாலான பிரதேச செயலகங்களில் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் சென்று தகவல் அறியும் விண்ணப்பப் படிவத்தினை பெற்று அதில் உங்களது பெயர்இ முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றோடு குறித்த அதிகார சபையிலிருந்து கோரப்படும் தகவல் போன்றவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வீட்டுத்திட்டமாக இருந்தால் “வீட்டுத்திட்டம் எமக்கு ஏன் இதுவரை தரப்படவில்லை? எப்போது எமக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும்?” என கேட்கலாம். இப்படிவத்தை தமிழ் மொழியில் நிரப்பலாம். இறுதியாக நீங்கள் விண்ணப்பம் கையளிக்கும் திகதியை இட்டு கையொப்பமும் இட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை கொடுத்த பின் உங்கள் விண்ணப்பப் படிவத்தை அவர் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பற்றுச்சீட்டு வழங்கிய நாளிலிருந்து 14 வேலை நாட்களுக்குள் உத்தியோகத்தர் தகவலை வழங்குவார். அவர் மறுக்கும் பட்சத்தில் அதற்கான காரணத்தை அவர் குறிப்பிட வேண்டும்.

வழங்கப்பட்ட தகவல் திருப்தி அளிக்காதவிடத்து குறித்தளிக்கப்பட்ட அதிகாரியாக அவ் அதிகார சபையில் உயர் நிலையில் உள்ளவரிடம் முறையீடு செய்யலாம். அவரும் மறுக்கும் பட்சத்தில் மறுக்கும் தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தகவலுக்கான ஆணைக்குழுவுக்கு முறையீடு செய்யலாம். இவ் ஆணைக்குழுவின் தீர்மானமும் திருப்தி கொள்ளாதவிடத்து அதற்கெதிராக தீர்மானிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு மாத காலத்திற்குள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.
இந்தப் படிமுறையில் எமது உரிமைகளில் ஒன்றான தகவல் பெறும் உரிமையை நிலைநாட்ட இச் சட்டத்தை பிரயோகிக்கலாம். எமது நாட்டில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டாலும் எமது மக்களுக்கு தெளிவான விளக்கங்கள் இல்லை. எமது உரிமைகளை நாம் கேட்காவிட்டால் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவோம். சகல மக்களும் தகவல் அறியும் சட்டம் பற்றிய பூரண விளக்கங்களையும் அதை எவ்வாறு பிரயோகிப்பது என்பது பற்றியும் தெரிந்தால் மாத்திரமே இச் சட்டம் கொண்டு வந்ததற்கான முழுமையான வெற்றி கிடைக்கும் என்பது நிதர்சனம்.

தகவல் அலுவலகர் ஒவ்வொரு அதிகார சபையிலும் தகவலை வழங்க நியமிக்கப்பட்ட அதிகாரி ஆவார். இவர் நாம் கேட்கும் தகவலை உடனடியாக பெற முடியுமாயின் உடனடியாக பெற்றுக் கொடுத்தல் அவசியம். வழங்க முடியும் என ஒப்புக் கொண்ட பின் 14 வேலை நாட்களில் அத்தகவல் வழங்கப்பட வேண்டும் அத்தகவலானது எண்ணிக்கை அளவில் பெரியதாக இருந்தால் 21 நாட்களில் வழங்கப்படலாம். குடிமக்களது உயிருடன் அல்லது தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்புற்று இருக்குமாயின் கோரிக்கை விடுத்து 48 மணிநேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும். எமது விண்ணப்படிவத்தை உறுதிப்படுத்த பற்று சீட்டைஇவரிடமிருந்து பெறுதல் அவசியம்.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரி

எம்மால் கோரப்பட்ட தகவல் தகவல் அதிகாரியால் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக மேன் முறையீட்டை மேற்கொள்வதற்காக பொது அதிகார சபைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரி இவர். ஒவ்வொரு அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் இவ் இடத்தில் அங்கம் வகிப்பர். குறிப்பாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் குறித்தளிக்கப் பட்ட அதிகாரியாக இருப்பார்.

தகவலிற்கான ஆணைக்குழு

குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் முடிவு திருப்தி கொள்ளாத ஒருவர் அவருக்கு எதிராக தகவலிற்கான ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யலாம். 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்தின் பிரகாரம் இவ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. சட்டத்தில் குறிப்பிட்ட உரிமைகளை பிரசாரப்படுத்துவதற்கும் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கும் ஆணைக்குழு அதிகாரங்களை கொண்டுள்ளது.

இவ்வாறாக ஒவ்வொரு படிமுறைகள் ஊடாகவும் மக்களுக்கு தகவல்களை வழங்க அரசு அதிகாரிகளைநியமித்துள்ளது. இது மிகவும் நல்ல தொருவிடயம். நாட்டின் எதிர்காலத்தை பாதாளத்துக்கு கொண்டுசெல்லாமல் நாட்டின் வளங்களை சூறையாடி சின்னபின்னமாக்காமல் கடந்த கால அரசுகள் செய்ததவறுகளை இனியும் செய்யாமல் சுபீட்சமான எதிர்கால இலக்கை அடைய ஒரு சந்தர்ப்பம்.

இந்தியாவில் தகவலுக்கான உரிமையை மக்கள் சரியாக பயன்படுத்துகின்றனர். சேரிப்பகுதியில் வசிக்கும் நண்ணு என்பவர் தினக் கூலியாவார். அவர் தனது ரேஷன் அட்டையினை தொலைத்து விட்டார். அவர் புதிய அட்டையினை பெற சம்பந்தப்பட்ட திணைக்களத்தில் விண்ணப்பித்தார். அவர் அதனை சாதாரணமாக 10நாட்களில் பெறக் கூடியதாக இருப்பினும் 3 மாதங்கள் கழித்தும் அவரால் குறித்த அட்டையினை பெற முடியவில்லை. ஆகவே சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன்  நண்ணு தனது தகவலிற்கான உரிமையின் கீழ் குறித்தஅட்டை தொடர்பான தகவலிற்காக விண்ணப்பித்தார்.

அவர் தான் விண்ணப்பித்த திகதியிலிருந்து தனது விண்ணப்பத்திற்கு என்ன நடந்தது என்ற செயற்பாட்டு அறிக்கை ஒன்றினை குறித்த அரச அதிகாரியிடம் கோரினார். அவ் அறிக்கையிலே அவரது விண்ணப்பத்தை குறித்த ஒழுங்கில் செயற்படுத்த தவறிய அதிகாரியின் பெயர், எவ்வகையான மற்றும் எப்போது அந்தஅதிகாரியின் மீது குறித்த திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்ற தகவல்களை கோரினார். மேலும் எப்போது தனது குடும்ப அட்டையை பெற முடியும் எனவும் கோரியிருந்தார். தகவலிற்கான உரிமைக்கான விண்ணப்பத்தின் பின் அத்திணைக்களத்தின் உயர் அதிகாரி நண்ணுவின் ரேஷன் அட்டையை பெற்றுக் கொடுத்ததுடன் அவரை நல்ல முறையிலும் நடத்தினார். இறுதியில் அவர் தண்டனைகளிற்கு அஞ்சி நண்ணுவின் தகவலிற்கான கோரிக்கையை மீள பெறுமாறும் வேண்டிக் கொண்டார். இவ்வாறு இந்தியாவில் சாதாரண மக்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்கள் இவ் சட்டத்தை பாவித்து தமது தகவல்களை பெற்று வருகின்றனர்.

எமது நாட்டில் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு  ஆண்டு ஒன்றும் கடந்து விட்டது. பல தரப்பட்ட விடயங்கள் கேட்கப்பட்டன. இலங்கையின் தொலைத் தொடர்பு முகவரான ICTA நிறுவனத்தின் உயர் அதிகாரி முகுந்தன் கனகே மாதம் 7 ½ லட்சம் சம்பளம் பெறுகிறார். அதாவது ஒரு நாளைக்கு 25166 ரூபா சம்பாதிக்கிறார். இவரது ஊழல் வெளிகொணரப்பட்டது. அதேபோல் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் எத்தனை பேர் உள்ளனர் என கேட்கப்பட்டு 218 பேர் உள்ளனர் என பதில் அளிக்கப்பட்டது. இவ்வாறு பல விடயங்கள் கேட்கப்பட்டு வருகின்ற படியால் பல சவால்களையும் அரசு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் இச்சட்டம் பற்றி முழுமையான விளக்கங்களை பெற்றால் சில அரச அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் செய்கின்ற ஊழல்களை வெளிக்கொணரமுடியும் இதனால் ஒவ்வொரு கிராமம், பிரதேசம் ஏன் எமது நாடு கூட ஒரு ஊழலற்ற தேசமாக மாறும். இது நடைபெற வேண்டுமானால் மக்கள் விழிப்படைய வேண்டும். இதை எதிர் வரும் காலங்களில் செய்வார்களா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

பானு
நிமிர்வு யூலை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.