நமக்காக நாமே
இனவழிப்பு என்பது அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓர் இனத்தை அழிக்க முற்படுவதாகும். 1933 இல் ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்த நாசிஅரசாங்கத்தால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அம்மக்களை நினைவுகூரும் முகமாக உலகின் பலபாகங்களிலும் இனப்பேரழிவு காட்சியகங்கள் (Holocaust Museum) அமைக்கப்பட்டுள்ளன. இந்தகாட்சியகங்கள் மீண்டும் ஒரு இனப்பேரழிப்பு நடத்தப்படாமல் இருக்க இன்றைய மற்றும் இனிவரும் சந்ததிகளுக்கு பாடம் கற்பிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டன.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யூதர்களுக்காக பாலஸ்தீன மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட இஸ்ரேல் நாடு வல்லரசுகளால் அமைக்கப்பட்டது. இன்று இஸ்ரேல் தனது பழைய வரலாற்றை மறந்து சியோனிச இனவாதத்தை பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டு அம்மக்களை இனவழிப்பு செய்து வருகிறது. அதனை ஒருபுறம் வைத்துவிட்டு, யூத இனப்பேரழிவையும் இந்த காட்சியகங்களின் தாக்கத்தையும் சிறிது நோக்குவோம்.
இந்த காட்சியகங்கள் உலகெங்கும் அவ்வப்போது நடந்த அரச இனவழிப்பு நடவடிக்கைகளை உலகுக்கு பறைசாற்றி வந்தன. அதன் ஓர் அங்கமாக அமெரிக்காவின் தலைநகர் வாஸிங்டனில் உள்ள இனப்பேரழிவு காட்சியகம் சிரிய மக்களுக்காக ஒரு காட்சிக்கூடத்தை மிக அண்மைக்காலத்தில் உருவாக்கியுள்ளது. “சிரியா: எம்மை மறந்துவிடாதீர்கள்” என்ற தலைப்பில் இக்காட்சிக்கூடம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இக்காட்சிக்கூடத்தில் சிரியா இராணுவப் படப்பிடிப்பாளரால் பிடிக்கப்பட்ட 55,000 இற்கும் மேற்பட்டபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிரிய இராணுவத்தின் வலுக்கட்டாயப்படுத்தலுக்குப் பணிந்து அந்த இராணுவத்தால் கொல்லப்பட்ட சிறைக்கைதிகளை இவர் படம்பிடித்துள்ளார். பின்னர் அந்தபடங்களை ஒரு மிகச்சிறிய சேமிப்புக் கருவியில் இட்டு அதனை தனது பாதணிகளுக்குள் செருகி கடத்தி வந்து அப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அவரைத் தவிர, மன்சூர் ஒமாரி என்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒரு வருடமாக சிரிய அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டிருந்தார். அவருடன் இருந்த 82 அரசியல்க்கைதிகள் ஐந்து துண்டுத்துணிகளில் தமது இரத்தத்தைக் கொண்டு தமது பெயர்களை எழுதி கொடுத்துள்ளனர். அவர் விடுதலையான பொழுது அத்துண்டுத்துணிகளை இரகசியமாக கடத்தி வந்துள்ளார். அந்த 82 பேரும் தம்மைப் பற்றிய விபரங்கள் தமது குடும்பங்களுக்கு தெரியவரும் என நம்பினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று உயிருடன் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்கள் குடும்பங்களுக்கு அரசு தெரிவிக்கவில்லை. இந்த துண்டுத்துணிகளும் வாஸிங்டன் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிரிய அரசாங்கம் பெண்கள், பிள்ளைகள், முதியவர் உட்பட ஏறத்தாழ ஒரு இலட்சம் பேரைசிறையில் அடைத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பான எந்தத் தகவலும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என அடையாளப் படுத்தபடுகிறார்கள். கடந்த ஏழாண்டுகளாக நடந்து வரும் யுத்தத்தில் 500,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பதினொரு மில்லியன் மக்கள் தமது வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
எமது கண்முன்னாலேயே ஒர் இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த இனவழிப்பு தொடர்பான மறுக்கமுடியாத ஆதாரங்களை முற்போக்கு சக்திகள் உலகின் முக்கிய தலைநகரில் வைத்து உலகுக்கு முரசறைந்து சொல்லுகிறார்கள். அப்படியிருந்தும் அந்த இனவழிப்பை நிறுத்துவதற்காக உலகின் எந்த அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது அநியாயம் என்று நிதர்சனமாகத் தெரிந்த பொழுதும் எந்த முற்போக்கு அரசாங்கமும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இவற்றைப் பார்க்கும் போது ஓர் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கு இன்றைய உலகில் எந்தவிதமான பொறிமுறைகளிலும் தங்கியிருக்க முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டிய தேவை எழுந்துள்ளது. யூதமக்கள் சந்தித்த இனப்பேரழிவை இனி எந்த ஓரு இனமும் சந்திக்க கூடாது என்ற படிப்பினையை உலகம் மெல்ல மறந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உலக சமாதானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா சபையாகட்டும், அன்று நடந்த யூதமக்களின் இனவழிப்பு தொடர்பாக கற்றுக்கொண்ட படிப்பினைகளாகட்டும் எல்லாமே இன்று பலமிழந்து போய்க்கொண்டு இருப்பதை கண்கூடாக காண்கிறோம்.
இனவாதம் தவறானது என்ற உலகளாவியரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட பல கட்டமைப்புக்கள் இன்று சிறிது சிறிதாக பலமிழந்து கொண்டிருக்கின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மை இனத்தை முதன்மைப்படுத்தி சிறுபான்மை இனங்களை அழிக்கும் முயற்சிகள் வெளிப்படையாகவே நடக்கின்றன. மேலும் பலநாடுகளில் இவை திரைமறைவில் நடக்கின்றன. இஸ்ரேல் தன்னை ஒரு யூதநாடு என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. மியான்மார் ஒரு பௌத்தநாடு எனக்கூறி முஸ்லிம் ரொகிங்கயா மக்களின் குடியுரிமையை வெளிப்படையாகவே பறித்துள்ளது. இலங்கையில் புதிதாக பிரேரிக்கப்பட போவதாக சொல்லப்படும் புதிய யாப்பு சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முதன்மை கொடுப்பதாக தெளிவாகவே சொல்கின்றது.
மறுபுறத்தில் அமெரிக்கா வெள்ளையின மேலாதிக்கத்தை மறைமுகமாக நிறுவமுயற்சிக்கின்றது. பிரித்தானியா பிரெக்சிட் என்ற போர்வையில் சிறுபான்மையினரை வெளியேற்றவும் வெள்ளையின மேலாதிக்கத்தை நிறுவவும் பிரயத்தனப்படுகிறது. இந்தியா இந்துத்துவத்தை முதன்மைப்படுத்தி முஸ்லிம்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் ஒதுக்கப்பட்டவர்களாக்குகிறது. இதனை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சீனாவில் ஏறத்தாழ ஒருமில்லியன் வீகர் (Uygher) இன மக்கள் தடுப்புமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான அநீதிகளுக்கு எதிரான கூப்பாடுகள் சமூகவலைத்தளங்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. அவை எந்தவகையிலும் இந்த அரசாங்கங்களில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. சமூகவலைத்தளங்களினால் ஏற்படக்கூடிய அழுத்தங்களை கையாள இனவாத அரசாங்கங்கள் நன்கு பழகிகொண்டுள்ளன. இதன் ஒரு தொடர்ச்சியகவே, இங்கு ஆரம்பத்தில் சுட்டிகாட்டப்பட்டவாறு, சிரிய இனவழிப்பு காட்சிக்கூடத்தினால் எந்த வகையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருக்கும் நிலையை நாம் நோக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது இலங்கையில் நடத்தப்படும் தமிழ் மக்களின் இனவழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேசத்திடம் முறையிடுவது எந்தவகையிலும் பயனளிக்க போவதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. யூத இனவழிப்புகாட்சி கூடங்கள் போன்ற உலகின் முற்போக்கு மையங்களின் தாக்கங்கள்கூட மங்கிப் போகின்ற நிலையையே காண்கின்றோம்.
சிறுபான்மை இனங்களின் சார்பில் அந்நியநாடுகளில் தலையீடுகளை மேற்கொள்ளும் நாடுகள்கூட அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் அக்கறை காட்டுவதை குறைத்துக் கொண்டுள்ளன. இவ்வாறு தலையிடாமல் இருப்பது நீண்டகாலப் போக்கில் அந்த நாடுகளுக்கு பாதகமாக அமைவதற்கான சாத்தியங்கள் தெளிவாக தெரிந்தாலும் அவை தலையீட்டை தவிர்க்கவே விரும்புகின்றன. இதற்கு முக்கிய காரணமாக அமைவது அந்தந்த அரசாங்கங்களின் உள்நாட்டு அரசியலே. புல தசாப்தங்களாக நடந்த குடிப்பெயர்வு உள்@ர் மக்களின் பலத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் அரசியல் குறுகியதாக உள்நோக்கியதாக திரும்பியுள்ளது.
அரசாங்கங்கள் தமது உள்நாட்டு மக்களின் அன்றைய அபிலாசைகளுக்கு செவிமடுத்து பதவிக்காக தமது நாட்டின் நீண்டகால நலன்களைப் பலியிடுகின்றன. சதாம் ஹசைனை தோற்கடிக்க தம்மோடு தோள்நின்று போரிட்ட குர்திஸ் இன போராளிகளையே ஈராக்கிய இராணுவம் தாக்கியபோது கைகட்டிப் பார்த்து கொண்டிருந்தது அமெரிக்கா என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
இவ்வாறாக அரசாங்கங்கள் தமது உள்நாட்டு அரசியல் நிலைமைகளுக்கேற்ப தமது பதவியைத் தக்கவைப்பதற்காக குறுகிய நோக்கு முடிவுகளை எடுத்து வரும் நிலையில், பூகோளவாதம் என்று பல்வேறு அரசுகளின் நலன்களில் தமிழ் மக்களின் நலன் எவ்வாறு பொருந்த முடியும் என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். மேற்குலக அரசுகள் எமக்கு நடக்கும் இனவழிப்பை பார்த்து தார்மீகமாக எமக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம். இது எந்த அளவுக்கு சரி?
அமெரிக்கா, ஐரோப்பியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற மேற்குலக நாடுகள் தமது பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காக இந்தியாவுடனும் சீனாவுடனும் சம அளவில் உறவுகளை பேணுகின்றன. “இலங்கையைப் பொறுத்த வரையில் ஓர் உறையில் ஒருவாள் தான் இருக்கமுடியும் என்ற விதியை தாண்டி ஓர் உறையில் மூன்று வாள்கள் உள்ளன. அதுமட்டுமல்ல அவை ஒன்றி உறவாடவும் செய்கின்றன.” இவ்வாறாக குறிப்பிடுகிறார் யாழ் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்.
ஆகவே இனியும் சர்வதேசம் எமக்கு நடக்கும் இனவழிப்பை நிறுத்த உதவும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிடுவோம். அதற்காக சர்வதேசத்துடனான எமது உறவுகளை கைவிடுவதாக அர்த்தமில்லை. அதனை முதன்மைப்படுத்துவதை விட்டு விடுவோம். சர்வதேசத்தின் உறுதிமொழிகளைத் தூக்கிக்கொண்டு வந்து அவற்றை முன்வைத்து வாக்குகேட்கும் அரசியல்வாதிகளை புறக்கணிப்போம். மாறாக எவர் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக உறுதிமொழிகொடுக்கிறார்களோ அவர்களை ஆதரிப்போம்.
நமக்காக போராட இன்று எஞ்சியிருப்பவர்கள் நம்மவர்கள் மட்டுமே. இனிமேலும் பல்வேறு அரசாங்கங்களுடன் பேசுவதைவிடுத்து எம் இனத்தவருடன் பேசுமாறு அரசியல் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலமே இனவாத அரசாங்கங்களின் பிரித்தாளும் சதிக்கு தொடர்ந்து பலியாவதை தவிர்க்க முடியும்.
ரஜீவன்
நிமிர்வு ஆவணி 2018 இதழ்
Post a Comment