எங்களின் பனை வளமும் பனைசார்ந்த நிறுவனங்களின் தோற்றமும் வளர்ச்சியும்




அன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு, உறையுள், மற்றும் பாதுகாப்பு வேலி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்றது. அத்தோடு அவர்கள் வளர்க்கும் கால் நடை உணவாகவும் தோட்ட, வயல் நிலங்களிற்கு பசளையாகவும் இருந்து எம் மக்களின் வாழ்விற்கு உறுதுணையாக உயர்ந்து வளர்ந்து மண்ணைப் பற்றிப்பிடித்து மண்ணரிப்பை தடுத்து மண் வளத்தையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்வளத்தையும் உயர்த்தும் தன்மை இந்த பனை மரத்துக்கு இருக்கின்றது.  பனை வளம் தொடர்பில் சிறியஆய்வாக எழுதுவதில் மகிழ்வடைகின்றேன்.

பனையின் இயல்பும் பரவலும்

நீண்டு உயர்ந்து வளரும் தாவரம். மிதமான வரண்ட நிலத்தில் வளரக்கூடியது. தண்டுப்பகுதி கரடு முரடானதாகவும் இலை அங்கையுருவுடையது. ஒரு வித்திலையுடைய ஆண் பெண் என்ற வேறு வேறு தாவரங்களாக காணப்படும் பழமையான இயல்புடைய தாவரமாகும்.  பனம் உணவுகள் தொன்று தொட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் அன்றாட வாழ்வில் இருந்து வந்ததாக அறியப்படுகின்றது.

நமது மூதாதையர்கள் பனை உணவை முக்கியமான உணவாகவும் பனையோடுள்ள தொடர்பினை தமது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகவும் பேணி வந்துள்ளனர். பனை தானே வளர்ந்து எவ்வித பசளையையோ நீரையோ மனிதர்களிடமிடமிருந்து எதிர்பார்க்காமல் மக்களுக்கு உணவு, உறையுள் கல்விக்கு ஏடு, வீடு வேய கூரை,  வேலி, அத்துடன் நார் வேர்களால் நாம் வாழும் பூமியைப்பற்றிப் பிடிப்பதால் மண்ணை மண்ணரிப்பிலிருந்து காப்பாற்றவும் செய்வதால் இதை “கற்பக தரு” என மக்கள் அழைத்து வந்தனர். இதனை கற்பகம் என்றும் தமிழினத்தின் வாழ்க்கையோடிணைந்த  மரம் என்றும் “பஞ்சம் போக்கி” என்றும் அழைத்தனர்.

பனை இருந்தாலும் ஆயிரம், இறந்தாலும் ஆயிரம் என்ற பழமொழி வழங்கப்படுகிறது. பனையிலிருந்து 801 வகையான பயன்கள் பெறப்படுகின்றன. இதன் வயது எல்லை 120-150 ஆண்டுகள் வரை நீண்டு செல்கின்றது. இதிலிருந்து பெறப்படும் பொருட்கள் மிகவும் உறுதியானவையாகவும் நீண்ட காலம் பாவிக்கக்கூடியவையாகவும் உள்ளன.

டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட போது சீனி உற்பத்தியை பனையிலிருந்து பெற்றிருக்கின்றனர். இதனால் பனையை ‘சீனிமரம்’ என்று அழைத்தனர். இன்றும் கம்போடியாவில் பனையை சீனிமரம் என்றே அழைக்கின்றனர். இதனால் யாழ்ப்பாணத்திற்குரிய சின்னமாக பனையைக் குறித்திருக்கின்றார்கள். அவர்களுடைய கொடியில் பனையே சின்னமாகக் குறிக்கப்பட்டிருந்தது.

மூவேந்தர்களில் சேரமன்னரும், மகாவீரருள் பலராமரும் ஞானியருள் பீஸ்மரும் பனையை மதித்து மாலையாகவும் கொடியாகவும் கொண்டனர். மன்னர்களின் பலவகை ஆக்கங்களில் பனை மதிப்புப் பெற்று பெருமையுடன் விளங்கியது.



பனைமரம் ஒரு பருவகாலப்பயிர் என்பர். இருந்தாலும் வடலிப்பருவம் முதல் பயன்தரத் தொடங்குகின்றது. இருந்தாலும் 10-12 வருடங்களின் பின் பூக்கத் தொடங்குகின்றது. இதை பனை பருவம் அடைகிறது எனக் கொள்கின்றனர். தை மாதம்-ஆண்பனை (பாளை) பூக்கத் தொடங்குகின்றது. பங்குனி மாதம் நடுப்பகுதியிலிருந்து பெண்பனை பூக்கத் தொடங்குகின்றது. பங்குனியிலிருந்து ஆவணி வரை பனையின் பருவகாலம் எனக் குறிப்பிடுகின்றனர்.

பதநீர், கள் என்பனவற்றை பெறுவதை அடிப்படையாகக் கொண்டே பனையின் பருவகாலத்தை வகைப்படுத்தியுள்ளனர் எனலாம். ஆவணி முதல் புரட்டாதி வரை பனம்பழம் இதற்கிடைப்பட்ட காலத்தில் நுங்கு கிடைக்கின்றது. நுங்கை மிகவும் ஊட்டச்சத்துள்ள, வெயில் காலச்சூட்டைத் தணிக்கும் ஒரு உணவாக நமது முன்னோர்கள்  பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பனையின் பரம்பல்: ஆண்பனையும், பெண்பனையும்

பனை ஆண், பெண் என ஈரிலிங்கத் தாவரமாக வேறுபடுத்தப்படுகிறது. வளர்ந்து பூக்கத் தொடங்கும் வரை ஆண்பனையோ அன்றி பெண்பனையோ என இனங்காண முடியாது. ஒற்றை விதைப் பழத்தில் விதை ஆண்பனையாகவும், இரட்டை விதைப் பழத்தில் ஒன்று ஆண்பனையும், மற்றையது பெண்பனையும் தரும். மூன்று விதைகள் கொண்ட பழத்தில் ஒன்று பெண்பனையாகவும் மற்றைய இரண்டும் ஆண்பனைகளாவும் முளைவிடும் என அனுபவசாலிகள் கூறுகின்றனர். பனையை நட்டு அபிவிருத்தி செய்யவிரும்புவோர் இரட்டைவிதைப் பழங்களைத் தெரிவு செய்து நடுகை செய்தால் நல்ல பயனை பெறலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்பனைகள் கருக்கொண்டு பாளையீனுவதற்கு ஆண்பனைகள் அயலில் வேண்டுமென்பது நியதியாகும்.

பனையின் மறுபெயர்கள்

ஏடகம், கற்பகதரு, கரும்புறம், தருமவிசாரன், தாலம், துருமேகம். புல்லூதியம் என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது. பனை மரம் இலங்கையின்றி இந்தியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. பனை மரத்தின் ஆதிப்பிறப்பிடம் ஆபிரிக்கா எனச் சிலர் கூறுகின்றனர்.

பனை மரத்தின் தாவரவியற் பெயர் பொறாசஸ்(borassus)
 
எனப்படும். இதனை ஆங்கிலத்தில் பல்மைரா (Palmyrah)
எனவும் சிங்களத்தில் தல் என்றும் அழைப்பர். பனை மரமானது மிகவும் தொன்மை வாய்ந்த பாமே  குடும்பத்தைச் சார்ந்தது. இத்தாவரமானது ஏனைய பூக்கும் தாவரங்களிலும் பார்க்க பழமையானது. 120 மில்லியன் வருடத்திற்கு முன்பு பாமே குடும்பத்தின் சுவடுகள் பதியப்பட்டுள்ளன. இவ் இனங்கள் தமது வளர்ச்சிக்கும் உயிர் வாழ்வதற்கும் மனித முயற்சியில் மிகக் குறைந்தளவு தங்கி நிற்கின்றன.

மக்குறா  (Maccurrahஎன்பவர் 1950 இல் Palm of the World எனும் நூலில் 400 இனங்களை உள்ளடக்கும் 200 சாதிகளை வேறுபடுத்துகின்றார். எனினும் பேர்கிளவ்   (Pureglove)1975 இல் ஒரு வித்திலைத்தாவரங்கள் பற்றிய நூலில் பாமே குடும்பத்திலுள்ள 9 உபகுடும்பங்களில் உள்ள 225 சாதிகளில் ஏறக்குறைய 2600 இனங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. பனை மரமானது 6 சாதிகளையும் 30 இனங்களையும் உள்ளடக்கியுள்ள குடும்பமாகிய  Borassodeoc ஐச் சேர்ந்தது.

பனை மரம் (Borassus) பொறாசஸ் என்னும் சாதிக்குரித்தான அங்கை உருவான விசிறி போன்ற இலைகளைக் கொண்டது. ஆண், பெண், பூக்கள் தனித்தனியான மரங்களில் உருவாதல் ஆகியன இந்தச் சாதியைச் சேர்ந்த தாவரங்களில் வேறுபடுத்தக்கூடிய இயல்புகள் ஆகும். மக்குறா  பொறாசஸ் சாதியின் கீழ் 7 இனங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன

1. இந்திய மலேய இனங்கள்- Borassus flabellebed
2. ஆபிரிக்க இனங்கள்- Borassus petipeum
3. சூடான்- Borassus deleg
4. நியூகினி- Borassus neinea
5. மடகஸ்கார்- Borassus madagas carionsis
6. மடகஸ்கார்- Borassus sambiranensis
7. மலாய - Borassus  machadinis

பனை மரம் பொதுவாக அயன மண்டலத்தில் பரம்பியுள்ளது. எனினும் சில தாழ் அயன மண்டலப் பகுதி இடை வெப்பக் குளிர்வலயத்திலும் பரவியுள்ளது. இலங்கையில் பனைமரமானது தென்னை மரத்தின் முன்பாகவே பரந்து காணப்பட்டது.

பனை சில அமில மண்ணையும் ஈரவலயத்தில் முகில் கூடிய மந்த சுவாத்தியத்தையும் விரும்புவதில்லை. பூப்பதற்கும் இனவிருத்திக்கும் பகலில் குறிப்பிட்ட அளவு பிரகாசமான சூரிய ஒளி அவசியமாகும். எனவே வரண்ட நிலத் தாவரமான பனை எங்கள் பண்பாட்டுச் சின்னம். எங்கள் நாகரீகத்தில் சிறப்பிடம் வகிக்கும் சிறந்த பொருளாதாரப் பயிராகும். வறண்ட வலயப் பொருளாதாரத்தில் பனை வளம் உயர்ந்த வரப்பிரசாதமாக காணப்படுகின்றது. இதற்கு இணையான பொருளாதார பயன் எங்கள் நாட்டில் இல்லையென்றே கூறலாம். இதை உணர்ந்த எமை ஆட்சி செய்த ஆங்கிலேயர் தென்னை மரத்தை இலங்கையின் பணப்பயிரெனக் கணித்ததிற்கு முன் ஒல்லாந்தர் பனையின் பயனை நன்குணர்ந்து அதனைப் பல்லாயிரக்கணக்கில் தறித்து கட்டிடத் தேவைக்கு ஏற்றமதி செய்தனர். எஞ்சி நின்ற பனைகளுக்கு வரியும் விதித்தனர் என்பதை வரலாறுகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எமது வளமான பனை பற்றிய வரலாறு அறிவதில் நாம் பெருமையடைகின்றோம். இது சார்ந்து மென் மென்மேலும் நிறுவனங்கள் தோற்றம் பெற வேண்டியது காலத்தின் நியதி ஆகும்.

                                                                                                  தொடரும் -

தியாகராஜா பன்னீர்செல்வம் 
- பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வுபெற்ற அதிகாரி 
நிமிர்வு ஆவணி 2018 இதழ்





No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.