வடபகுதி கடற்தொழிலின் சமகால நிலவரங்கள்





“இன்றைய அரசியல் சமூக பொருளாதார நிலை என்ன? மாற்றம் வேண்டுமாயின் போக்கென்ன வீச்சென்ன?" என்கிற தலைப்பில் ஆவணி மாதம் 6 ஆம் திகதி  பிற்பகல் 3 மணிக்கு ஒரு கருத்தரங்கு நடந்தது.  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்  எழுத்தாளர் சாந்தன் தலைமையில் இடம்பெற்றது.  “ஆய்வு” நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ‘எம்மால் முடியும்’ கருத்தரங்கத் தொடரின் முதல் நிகழ்வு இது.

இந்நிகழ்வில் பங்கேற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை பேராசிரியர் கலாநிதி சூசைஆனந்தன் “வடபகுதி கடற்தொழிலின் சமகால நிலவரங்கள்” தொடர்பில் ஆற்றிய உரையின் தொகுப்பு வருமாறு:

எங்களுடைய வடக்கு கிழக்கு  பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக அமைவது இந்த கடல் வளமே. விதையாமலே பயன் தருகின்ற மிக பெரிய கடல் வளம் எம்மிடம் உள்ளது. தரையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரம் வரையிலான பிரத்தியேக பொருளாதார வலயம் இருக்கின்றது. இலங்கையினுடைய மொத்த கடல் பரப்பு 5 இலட்சத்து 17000 சதுர கிலோமீற்றர். இதில் கடற்கரையின் நீளம் 1925 கிலோமீற்றர். அதில் மூன்றில் இரண்டு பங்கு எங்களுடைய கடற்கரையோரம்.  அது வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால் கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது.

இந்தக் கடற்கரையோரத்தில் முக்கியமான துறைமுகங்கள் திருகோணமலைத்துறைமுகம், மன்னார் ஒலுவில் மற்றும் பருத்தித்துறை, காங்கேசன்துறை, தலைமன்னார் என எல்லா இடமும் துறைமுகங்கள் உள்ளன. யாழ்ப்பாணம், ஆனையிறவு, மன்னாரில் நிறைய ஏரிகள் உள்ளன. எங்களுடைய கடற்பரப்பில் அதிக தீவுகளும் உள்ளன. ஏழு தீவுகள் உட்பட ஆளில்லாத தீவுகளும் எங்களுடைய கைகளில் இருக்கின்றன. கச்சதீவு, கற்கடதீவு, பாலைதீவு இவற்றில் ஆட்கள் இல்லை. ஆனால் இவை முக்கியமான தீவுகளாகும்.

எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது. உலகப்பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இருக்கின்றது.  பருத்தித்துறையில் இருந்து கிழக்காலை 200 கிலோமீற்றர் முல்லைத்தீவு  வரை நாங்கள் ஆழ்கடல் போகலாம்.

எங்களிடம் நிறைய கடல்வளம் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடலில் கால் வைப்பது என்றால் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் நாங்கள் கால் வைக்க வேண்டும்.  எங்களுடைய கையில் எதுவும் இல்லை. கடல் வளம் சம்பந்தமான கடற்றொழில் அமைச்சு என்பது மத்திய அரசின் கீழ் தான் இருக்கின்றது. வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடி அமைச்சு மட்டும்தான் இருக்கின்றது. கடல் சம்பந்தமான அனுமதி எவருமே செய்யமுடியாத அளவிற்கு முழு கட்டுப்பாடும் மத்திய அரசின் கையில்தான் இருக்கின்றது.  முழு வளமும் அவர்களுடைய கையில் இருப்பதால்  இந்த வளப்பயன்பாடு எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட தென்பகுதி மக்களுக்கும் அந்நிய இந்திய மீனவர்களும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.

எங்களுடைய வளத்தின் பயன்பாட்டை பார்த்தமென்றால் நிறைய பிரச்சனை இருக்கின்றது. அதாவது இதனை மூன்று கட்டங்களாக பார்க்கலாம். போருக்கு முற்பட்டகாலம், போர்க்காலம், போருக்கு பின்னான காலம் என பார்கலாம். போருக்கு முன்னர் அதாவது 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் பார்த்தால் இலங்கையின் உற்பத்தியில் யாழ்ப்பாண மாவட்டம் மட்டும் பார்த்தால் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் உற்பத்தி நடந்திருக்கின்றது. இதே போல மன்னார், முல்லைத்தீவு கடற்கரை அண்டியவை. கிழக்கிலை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை வரும். வடக்கைத்தான் நான் இதிலை முன்னிலைப்படுத்துகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் இருக்கின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் சேர்ந்து ஒரு இலட்சம் பேர் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட எல்லாமாக இரண்டு இலட்சம் பேர் மீன்பிடியோடு சம்பந்தப்பட்டவர்கள். வளமும், ஆளணி வளமும் எங்களுடையில் கையில் இருக்கின்றது. ஆனால் பயன்பாட்டில் தான் பிரச்சனை இருக்கின்றது. யுத்தத்திற்கு முன்னர்  யாழ்ப்பாணம் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாம் சேர்ந்து நிறைய  உற்பத்தியை வடக்கு பகுதிதான் கொடுத்தது. இலங்கையின் மொத்த கடல்வள உற்பத்தியில் தெற்கைவிட  மூன்றில் இரண்டு பகுதியை வடக்கு பகுதிதான் கொடுத்தது. இங்கிருந்து ஏற்றுமதி இடம் பெற்றது. கடலட்டை, சங்கு, இறால், சிங்கஇறால் என இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.  நிறைய அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுத்தது வடக்கு. 

அப்பொழுது இந்திய மீனவர்களுடைய வருகையோ தென்பகுதி மீனவர்களுடைய ஊடுருவலோ இல்லை. ஆனால் போர் தொடங்கிய பின்னர் மிக மோசமாக பாதிக்கப்பட்டது கடல்வளத்துறை தான். இனப்பிரச்சினை தீவிரமடைந்த போது இலங்கையின் கரையோரங்களின் முழுப்பகுதியும இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது. மீனவர்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்தமை, நிறையப்பேர் கடலில் இறந்தார்கள். அப்படி நிறைய பிரச்சனைகள் இருந்தன. கரையோரப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் நிறைய சட்டங்கள் அதாவது பொருளாதார தடை, கடல் வலயத்தடை, இரவில் கடலுக்கு போக முடியாது, இயந்தரப்படகு பாவிக்க முடியாது, குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் போகலாம், பகலில்தான் கடல் தொழிலுக்கு போகலாம் என நிறைய சட்டங்கள் போட்டுத்தான் மீன் பிடிக்க விட்டார்கள். இவை தான் வடபகுதி மீன்வள வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன. 25வீதமாக இருந்த உற்பத்தி 2 தொடக்கம் 3 சதவீதம் வரைக்கும் செங்குத்தாக கீழிறங்கியது.

 சமாதான காலங்களில் கொஞ்சம் கடற்தொழிலுக்கு அனுமதித்தார்கள். பின்னர் இந்தியப் படைகள் இருந்த போது ஓரளவு நன்றாக இருந்தது. யுத்தம் முடிந்து 2009 ற்கு பின்னர் போன தாயக கடல்வளம் மீள கட்டியெழுப்பப்படும், இராணுவத்தினர் கடற்கரையோரங்களை விட்டு  முழுமையாக போவார்கள் என்று தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு மாறாக எங்களுக்கு அவ்வளவு வெற்றி கிடைக்கவில்லை.

 இன்று யாழ்ப்பாணத்தில் பார்த்தால் 15000 -  20000 மெற்றிக்தொன் உற்பத்திதான் இடம் பெறுகின்றது. அன்று இருந்த 50000 மெற்றிக் தொன் அளவை எட்ட முடியாமல் உள்ளது. அதே போல் முல்லைத்தீவு, மன்னாரிலையும் மிக மோசமான நிலையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து உள்ளது. அந்நியர்களின் வடபகுதியை நோக்கிய ஊடுருவல் இடம்பெறுகின்றது. அதாவது தென்பகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய  ஊடுருவல் வடபகுதி மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய பெரும் தடையாக உள்ளது.  கரையோரம் முழுக்க இராணுவ முகாம்கள் உள்ளபடியால் தென்பகுதி மீனவர்கள் இங்கு வந்து இராணுவ முகாம்களுக்கு அருகில் வாடிகளை போட்டுக்கொண்டிருந்து தொழில் செய்து எங்களுடைய வளங்களை சுரண்டுகின்றார்கள். அரசாங்கம் அவர்களுக்கு அனுமதியும் வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பும்  வழங்குகின்றது. கொக்கிளாய், நாயாறு எல்லைப் பிரதேசம் அப்படியே அவர்கள் வசம் போய்விட்டது.

மன்னாரில் முள்ளிக்குளம் என்ற கிராமம் 300ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழுகின்ற தமிழ் கிராமம். அது எல்லைக்கிராமம். எல்லையை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக பாரம்பரியமாக அங்கு வாழ்ந்த தமிழ்மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள்.  யுத்தம் முடிய விடுவோம் என்று  அவர்களாகவே கூறினார்கள். ஆனால் இன்று வரை அம்மக்களை அங்கு விடவேயில்லை. வடமேற்கு கட்டளைச்செயலகம் அக்கிராமத்தில் தான் இருக்கின்றது. அங்கிருக்கும் வீடு, கோயில், விவசாய நிலங்களை அவர்கள் தான் பயன்படுத்துகின்றார்கள். அங்கிருந்த மக்களெல்லாம் மன்னார், மடு என்று இடம்பெயர்ந்து சென்று விட்டார்கள். கொஞ்சப்பேர் 10 கிலோமீற்றர் தள்ளி காட்டுக்குள்ளே இருக்கின்றார்கள். தங்கள் சொந்த ஊருக்கு என்றோ ஒருநாள் திரும்புவோம் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

 தென்பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட காலத்தில் வந்து வாடி அடித்து இருந்து கடற்தொழில் செய்து விட்டு குறிப்பிட காலம் முடிய திரும்ப போய்விடுவார்கள். வாடைக்காற்று நேரம் வந்து வாடியடித்து இருந்து விட்டு சோழக காற்று நேரம் அவர்கள் போய்விடுவார்கள். ஆனால் வாடியெல்லாம் அப்படியே இருக்கும். அதற்கு கடற்படையினர்  காவல் காக்கின்றார்கள். தலைமன்னார் பியர், சவுத்பார்,  சிலாபத்துறை அப்படியே அவர்கள் கையில் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் ஆழ்கடலில் பலநாள் கலங்களை (Multiday Boats) பயன்படுத்துகிறார்கள். ஆழ் கடலில் சென்று மீன் பிடிக்கும் அந்தக் கலம் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதி வரும். அது கடலில் 15 நாள்வரை நின்று மீன் பிடிக்கக் கூடிய வசதி உடையது. தென்னாசியாவில் இலங்கையின் தென்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடியில் முதலிடத்தில்  உள்ளார்கள்.

எங்களுடைய கிழக்குப் பக்கத்தால் வந்து அவர்கள் இந்த கலத்தை  பயன்படுத்தி எங்களுடைய பெறுமதி மிக்க கடல் வளங்களை சுரண்டி செல்கின்றார்கள்.  எங்களுடைய கையில் அவ்வாறான ஒரு படகுகூட கிடையாது. இன்று பருத்தித்துறையில் கொஞ்ச பலநாள் கலங்கள் உள்ளன.  ஆனால் அவை அந்தளவிற்கு பெரியதல்ல. அதில் நாலைந்து நாள் நின்று மீன் பிடிக்ககூடிய வசதி தான் இருக்கின்றது. ஆழ்கடல் வளம் முழுவதும் அவர்கள் தான் பயன்படுத்துகின்றார்கள் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

முல்லைத்தீவில் அட்டை பிடிக்கும் பிரச்சனை பெரும் பிரச்சனை. தென்பகுதி மீனவர்களுக்குத்தான் ஆழ்கடலில் மூழ்கி அட்டை பிடிப்பதற்கான   அனுமதி வழங்கப்படுகின்றது. எங்களுக்கு அவ்வாறு வழங்குவதில்லை. இலாபம் முழுக்க அவர்கள் தான் பெற்றுக்கொள்கின்றார்கள். கடல் அட்டையை பிடித்து மதிப்புக்கூட்டி தென்பகுதி நிறுவனங்களுக்கு ஏற்றுவது வரை அவர்களே பார்க்கின்றார்கள். மன்னாரில் எங்களுடைய ஆட்கள் சிலர் பிடிக்கின்றாரகள். ஒரு அட்டை 50 ரூபாதான். சில அட்டை 20 ரூபா. இரண்டு இன அட்டைதான் இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 300, 400 அட்டை கிடைக்கும் என்கிறார்கள். இதை ஒரு கம்பனி எடுத்துச் சென்று தாங்களே மதிப்புக்கூட்டி  வர்த்தகம் செய்கின்றது. அதனை நாங்கள் செய்வதற்கான வாய்ப்பு எங்களிடம் இல்லை. கடுமையாக உழைத்து அவர்களுக்குத்தான் கொடுக்கின்றமே தவிர வேறொன்றுமில்லை. பெரிய பிரச்சனையாக அட்டைப்பிரச்சனை இருக்கின்றது. அவர்கள் அட்டை பிடிக்கும போது எங்களுடைய வலைகளை  வெட்டிவிடுவார்கள். தென்பகுதி மீனவர்களால் எங்களுக்கு பாரிய பிரச்சனை இருக்கின்றது. இதைப்பற்றி பாராளுமன்றத்திலே யாருமே கதைப்பதில்லை.

அடுத்தது இந்திய மீனவர்களின் பிரச்சினை. வடபகுதி முழுக்க 3000 மேற்பட்ட இந்திய மீனவர்களின் றோலர்கள் நிற்கின்றன.  ஒரு கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் 18 கிலோ மீன் விரயமாகின்றது. ஒரு றோலர் ஒரு நாளைக்கு 25, 30, 50 கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் பாருங்கோ 18 ஆல் 50 பெருக்கும் போது எவ்வளவ மீன் விரையம் ஆகின்றது என்று. இப்படி 3000  றோலர்களுக்கு பார்த்தால் எவ்வளவு போகின்றது. கோடிக்கணக்கில் எங்களுடைய வளம் அழிந்து போவதோடு கோடிக்கணக்கில் அவன் வியாபாரம் செய்கின்றான். அதனால் எங்களுடைய வளம் வரைமுறையின்றி சுரண்டப்படுகின்றது. 3 நாளைக்கு அவர்கள் இங்கு வந்து போகின்றார்கள். அப்பொழுது எங்களுடைய ஆட்கள் தொழிலுக்கு போக முடியாது ஏனென்றால் இங்கத்தைய மீனவர்கள் படுப்பு வலை தான் போடுவார்கள். அதை றோலர் வந்து இழுத்து போட்டு போய்விடும். அதனால் அந்த நேரத்தில் இவர்கள் அங்கு செல்வதில்லை. ஒரு வலை போனால் 3 இலட்சம் 4 இலட்சம் நட்டமாகிவிடும். நிறையப் பேருக்கு அப்படி நடந்திருக்கின்றது. அதனால் அவர்கள் கடலுக்கு போவதில்லை. 3 நாட்கள் தொழில் இழப்பு நட்டஈடும் ஒன்றுமில்லை. றோலர் இழுவை மடி வலைகள் அரசாங்கத்தால்  தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசு அதனை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதில் நிறைய அரசியல் ஓடுகின்றது.

மீன் வளத்தைப் பாதுகாப்பதற்காக இழுவை மடி வலைகள் உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. வடமராட்சியில் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தில் குருநகர் போன்ற இடங்களில்  300, 400 றோலர் நிற்கின்றது. அதனால் வருமானம் இருக்கின்றது. இறால், அட்டை, நண்டு பிடிபடுவதனால் நிறைய வருமானம் இருக்கின்றது. இதனால் நன்மையும் இருக்கின்றது ஆனால் தீமையும் இருக்கின்றது. அதற்கு தீர்வு  என்ன?  இது ஒரு அரசியலாக போய்க் கொண்டிருக்கின்றது. அதற்கு தீர்வு இன்னும் கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கின்றது. றோலர் பயன்பாட்டை நிற்பாட்டினால் இறால் எப்படி பிடிக்க முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். இறால் பிடிப்பதற்கும் றோலர் தான் நல்ல முறை. இதைவிட வேறு முறை இருந்தாலும் றோலராலை பிடிக்கின்ற மாதிரி பிடிக்க முடியாது. டிஸ்க்கோ நெட் ஆலும் இறாலைப் பிடிக்கலாம். சரியான முறையில் இறால் பிடிப்பதற்கான பொறிமுறையை நாங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அதற்கான தொழிநுட்பவியலாளர்கள் இங்கு இல்லை. றோலரை பயன்பாட்டை நிற்பாட்டுவதென்றால் வேறு வழிமுறையை கண்டுபிடித்து கொடுக்கவேண்டும்.

இறால், அட்டை, நண்டு எல்லாவற்றையுன் தென்பகுதியிலிருந்து வரும் கம்பனிகள் தான் கொண்டு போகின்றார்கள். நீல நண்டு 400 தொடக்கம் 450 ரூபா வரை போனது இன்று ஒரு கிலோ நண்டு 1500 ரூபா. முதலிடத்து நண்டு இங்கே வாங்க முடியாது இங்கே சந்தையில் வருவதெல்லாம் மூன்றாம் தரமுடையதுதான் வருகின்றது. பெரிய இறால் எல்லாம் இன்று 2500 ரூபா முதல் 3000 ரூபா வரை விற்பனையாகின்றது. இன்று நாங்கள் அவை எல்லாம் சாப்பிட முடியாத கட்டம். நிறைய அள்ளிச் செல்கின்றார்கள். ஆனால் சம்பாத்தியம் முழுக்க எங்களுக்கு வருவதில்லை. அது தென்பகுதி கம்பனிகள் போன்றவற்றிற்கே சென்றடைகின்றது.

கடல் அட்டை, நண்டு, இறால் போன்றவை வளர்க்கலாம். இங்கு அதற்கு சரியான இடம் இருக்கின்றது. ஆனால்  சரியான ஆளணி இல்லை, முதலீடில்லை, பாதுகாப்பு இல்லை அவ்வாறாக நிறைய பிரச்சனை இருக்கின்றது. அது பற்றிய ஆய்வும் இல்லை அக்கறையும் இல்லை. வடக்கு கிழக்கு கடல் வளத்திற்கு இந்திய மீனவர்களும், தென்பகுதி மீனவர்களும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள். எல்லா துறைமுகங்களும் கடற்படையினரிடமே இருக்கின்றது. துறைமுகங்களை நாங்கள் பயன்படுத்த முடியாது. இன்று மீன்பிடித்துறைமுகம் என்று சொல்லி ஒன்றுமில்லை. மயிலிட்டித்துறைமுகம்தான் கொஞ்சம் விடப்பட்டிருக்கின்றது. கொஞ்சப்பேர் போயிருக்கின்றார்கள். அதிலும் சில இடங்கள் இன்னும் விடவில்லை. முக்கியமான இடங்கள் விடப்படவில்லை. அந்த மக்கள் இன்னமும் முகாமில் இருக்கின்றார்கள். இந்தியாவில் கொஞ்சப்பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கின்றார்கள். அவர்கள் பெரும்பாலும் மீனவர்கள். அவர்கள் இன்னமும் வரவில்லை. வந்து தங்கள் தங்கள் இடத்திற்கு போக வேண்டும். இடப்பெயர்வு, மீளக்குடியேற்றல், தற்கால குடியிருப்பு பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு இரண்டு கண்ணுமில்லை, இரண்டு கைகளுமில்லை. ஒருவருக்கு ஒரு கையில்லை. இவையெல்லாம்  எதனால்? சட்ட விரோதமாக டைனமற் வெடிபொருள் பயன்படுத்தி மீன் பிடித்ததனால் ஆகும்.  பெரிய கடல் பன்றிகளை டைனமற் அடிச்சு பிடிக்கின்றார்கள். இதனால் கடலில் வாழ்கின்ற சிறிய மீன்கள் பெரும் பாதிப்புக்கு  உள்ளாகின்றன. ஏராளமாக செத்து மிதக்கின்றன. கரையோரத்தில் கண்டத்தாவரங்கள் எல்லாம் வெட்டி. கண்டல் தாவரங்கள், மரக்குற்றியை ஏற்றிக்கொண்டு போய்விடுவார்கள். படுப்பு வலை போட்டால் அதிலை சிக்கி வலை எல்லாம் கிழிந்து அழிந்து போய்விடும். வலிச்சல் வலை வழிந்து போனால் தான் மீன் படும். இடையிலை இந்த குற்றிகளில் வலை சிக்கினால் வலை வழியாது. இதனாலை மீன் படாது, வலை சேதமாகும். கண்டல் தாவரம் பாதுகாக்கப் பட்டது. அதனை வெட்ட கூடாது. ஆனால் அதை வெட்டிக்கொண்டு போகிறார்கள். தள்ளாடியிலை வெட்டி மன்னாருக்குள்ளால கொண்டு போகின்றார்கள். ஆற்று முகத்துவாரத்திலை கடற்படையினர்  பரிசோதிப்பார்கள். அவருக்கு ரீலோட் கார்ட ஒன்று கொடுத்தால் அவர் அந்த நேரம் விட்டு விடுவார்.

இப்பொழுது புதிதாக ஒரு நுட்பம் அகலச்சிறகு வலை என்று ஒன்றை பயன்படுத்துகின்றார்கள். கம்புகளுக்குப் பதிலாக அன்ரனா குழாய்கள் போட்டிருக்கிறார்கள். பண்ணைப்பாலத்தால போகும் போது அவற்றைக் காணலாம். பெரிய கம்புக்கு பதிலாக ஒரு வலைக்கு 25 தொடக்கம் 30 அன்ரனா குழாய் கம்பிகளை நடுவாங்கள். அப்படி 100, 200 வலைகள்  இருக்கின்றன. அப்படியென்றால் கரைக்கு மீன் எப்படி வரும். மன்னாரிலை நிறைய இடத்தில் இதனால் பிரச்சனை. இரவில் படகு ஓடினால் அந்த கம்பிகளாலை படகு எல்லாம் உடையுது. படுப்பு வலைகளை அந்த இடங்களில் போடேலாது. இப்பிடியான பிரச்சனைகளை சொன்னால் தீர்ப்பதற்கு ஒருவரும் இல்லை.

 அரசியல்வாதிகள் கூட இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மன்னாரிலை நடந்த தேர்தலில் நான்கு தொகுதியில் மூன்று தொகுதியில் ஐக்கிய தேசியக் கடசி  வென்றது. இவை எல்லாம் மீனவர்களின் வாக்கு. இதனால் அவர்களை எட்டியும் பார்க்காமல், கூட்டமைப்பினர் பழிவாங்குகிறார்கள்.  இவர்கள் ஏதும் முறைப்பாடு சொன்னால் நாங்கள் வரமுடியாது நீங்களே பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கின்றார்கள்.

உற்பத்தி அளவு என்று பார்த்தால் எங்களுடைய பதிவின் படி அரசாங்கப் புள்ளிவிபரம் எல்லாம் பிழை. அவர்கள் கூட்டி காட்டுகின்றார்கள். புள்ளிகள் அப்படி இல்லை. எங்களுடைய ஊரில் கிட்டத்தட்ட 350 வள்ளம் நிற்கின்றது. கடலுக்கு போவது 10, 15 வள்ளம் தான். ஏனென்றால் அந்தளவிற்கு மீன் இல்லை. கறிக்கே மீன் இல்லை. மீனவர்கள் வள்ளத்தை இழுத்து வைத்திட்டு  நிறையப் பேர் முல்லைத்தீவிலை கூலிக்கு அட்டை பிடிக்கிறதற்கு நிற்கிறார்கள்.  இதாலை அங்கே பிரச்சனை. எல்லோரையும் போகச்சொல்லி அவர்கள் துரத்துகிறார்கள். அங்கே அடிபாட்டில் காயங்கள் ஏற்பட்டுமிருக்கிறது. கிழக்கு கரையோரப்பகுதிகளில் ஆட்கள் இல்லாத இடம் இருக்கின்றது. அதில் பருவத்துக்கு ஒரு  பொதுவான மீன்பிடி இடத்தை ஒதுக்கி வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு ஒரு பருவகாலத்தில் அவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்து குறிப்பிட்ட கால முடிய அவர்கள் திரும்ப போககூடியவாறு ஏற்பாடு செய்து கொடுத்தால் நல்லது என நாங்கள் கதைத்தோம். அதற்கு ஒருவரும் ஒத்து வரவில்லை. தென்பகுதி மீனவர்கள் வந்து அந்த இடத்தை பிடிப்பார்கள் அந்த நேரம் யோசிப்பீர்கள் என்று சொல்லியிருக்கின்றோம்.

மன்னாரிலை நிறையப்பேருக்கு தொழில் இல்லாமல் சரியான கஸ்டம். அவர்கள் இன்று அனுமதி பெற்ற முதலாளிகளுக்கு கூலிக்கு நின்றுதான் அட்டை பிடிச்சு கொடுக்கிறாங்கள். அவ்வாறு நிறைய பிரச்சனைகள் போகின்றது. அங்கு துறைசார்ந்த கல்வி இல்லை. பாடசாலைகளில் இது சம்பந்தமான பாடமே இல்லை. ஆனால் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மீன்பிடி தொழில் தொடர்பான பாடம் இருக்கின்றது. நாங்கள் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் சொல்லி கடல்வளப்பயிற்சியை தொடங்கி அதில் படித்த மாணவர்களை வடமாகாணத்தில் அதற்கான ஆசியர்களாக நியமித்து பாடசாலைகளில் படிப்பித்தோம். நான் பரீட்சை தாள் திருத்த போனனான். கரையோர மாணவர்கள் நல்ல ஆர்வத்தோடு இந்தப் பாடத்தை கற்றிருக்கின்றார்கள். இன்று அந்த பாடமே இல்லை. படிப்பிற்கப்படுவதுமில்லை. ஆசிரியர்களும் அதற்கென்று இல்லை. அதில் பயிற்சி பெற்றவர்களும் கிடையாது. சரியான நிபுணத்துவ ஆலோசனை இல்லை. பல்கலைகழக மட்டத்தில் கூட அது குறைவுதான். கடல் தொழில் பீடம் என்ற  ஒன்று வரப்போகின்றது. முல்லைத்தீவிலை அனுமதியெல்லாம் வந்துவிட்டது. அதற்கு யார் மாணவர்களாக இருக்கப் போகின்றார்கள் என்றால் சிங்கள் மாணவர்களாகத்தான் இருப்பார்கள். ஆங்கில மொழியில்தான் வரப்போகின்றது. எங்களுடைய சனம் கடல்தொழில் இழிவு தொழில், மீன் பிடியா  என அதற்கு விண்ணப்பிக்க மாட்டார்கள். சிங்கள மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்குத்தான் கிடைக்கும். இது எப்படி இயங்குமென்று எங்களுக்கு தெரியவில்லை. அப்படி ஆளணிகள் என்று சொல்லி எங்களுக்கு கிடையாது. வளத்திற்கு ஆளில்லை, பாதுகாப்பிற்கு இல்லை. அப்படியிருக்கும் போது எப்படி இந்த தொழிலை முன்னெடுத்து செய்கின்றது.

 கடல் தொழில் வித்தியாசமானது விவசாயம் போன்றதில்லை. ஆளணிப் பிரச்சனை இருக்கின்றது. அரசாங்க கல்வி இல்லை. அடிக்கடி இடம்பெற்ற இடப்பெயர்வு, இந்திய மீனவர்களின் தொல்லை, எங்களுடைய ஆட்களின் ஒழுக்கயீனம் என பல பிரச்சனைகள். நிர்வாக அதிகாரிகள் ஓரளவுக்கு செயற்படுகின்றார்கள். ஆனால் பொலிஸ், இராணுவம்  லஞ்சம் வாங்கிக் கொண்டு  இரவில் பார்ட்டி போட அவர்கள் தங்களுடைய தொழிலை செய்து கொண்டே இருக்கின்றார்கள். எந்தவிதமான பொறுப்பு ஏதும் கிடையாது. இதனால் தான் இன்று கஞ்சாக்கடத்தல் இடம்பெறுகின்றது. இதை யார் கட்டுப்படுத்துவது. இத்துறையில் இருக்கின்ற பிரச்சனைகளை பாராளுமன்றத்துக்கு செல்பவர்கள் கூட கதைப்பதாக தெரியவில்லை.

 எங்களுடைய இடங்களுக்கு மாற்று கட்சிகள் ஊடுருவி எங்களுடைய வாக்குகளை இலகுவாக எடுத்துச் செல்கிறார்கள். ரிஷhத் வந்து எல்லா இடங்களிலும் முஸ்லீம்களுக்கு மின்சார வசதி, வீதி புனரமைப்பு, சின்ன வேலைகள் பெற்றுக்கொடுக்கின்றார். எந்தப்பிரச்சனை என்றாலும் அவரிட்டத்தான் போகவேண்டியிருக்கின்றது.  முந்தியகாலத்தில் “எழுவோம் மீள உறுதி கொள்ளுவோம்” என்று நாலு வசனத்தைப் பேசிறது. இப்ப அதெல்லாம் சரிவராது. சில அரசியல் வாதிகள்  வாக்கு வாங்கிட்டு போய் விடுவார்கள்.  பின்னர் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். சனம் தனக்கு தேவையென்றால் யாரிடம் போகும்?   தன் தேவையை நிறைவெற்றுபவனிட்டதான் போகும். அவன் செய்து கொடுக்கின்றான். நாங்கள் யோசிக்கின்ற மாதிரி அவன் சிந்திக்கமாட்டான். அவன் இதை பயன்படுத்தி இலகுவாக உள்ளே புகுந்திடுறான். இதுதான் பிரச்சனை. ஆகவே நாங்கள் வேற மாதிரி யோசிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. எங்களுடைய கடல்வளங்களை மீன்பிடிக்கு, சுற்றுலாப் பயணத்துறைக்கு வினைத்திறனுடன் எப்போது பயன்படுத்தப் போகின்றோம் நாம்? 

தொகுப்பு - விக்னேஸ்வரி
நிமிர்வு ஆவணி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.