தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசமட்டத்தில் எடுத்துச் செல்லாதது பாரிய குறைபாடு:



ஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ. ஆனால் போராட்ட உணர்வுகளைத் தக்க வைக்க வேண்டிய கடமை எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சர்வதேச மட்டத்திலுள்ள மக்களுக்கு நாங்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்திலுள்ள நியாயத் தன்மைகளை இதுவரை கொண்டு செல்லாததை நான் எங்கள் மத்தியிலுள்ள பாரிய குறைபாடாகக் கருதுகின்றேன்.  அவர்கள் தெரிந்து கொண்டு குரல் கொடுக்கவில்லை என்றால் அது அவர்களின் தவறென நாங்கள் சொல்லலாம். ஆனால், பல செய்திகளை நாங்கள் உரியவாறு கொண்டு சென்று சேர்க்காத நிலையில் தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழுணர்வாளரும், பிரபல ஓவியருமான புகழேந்தி கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஓவியர் புகழேந்தி “நிமிர்வு” மாதாந்த இதழுக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கிய அனுபவங்கள்,  எதிர்காலத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்குத் தமிழ்த்தரப்புக்கள்  கையாள வேண்டிய உத்திகள், இலங்கையில் இறுதியுத்தம் இடம்பெற்ற போது தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி மீது முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள  பொங்குதமிழ் நினைவுத் தூபி திறப்பு மற்றும் தமிழமுதம் நிகழ்வு தொடர்பான கண்ணோட்டம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

கேள்வி:- கடந்த-2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நீங்கள் தற்போது பத்துவருடம் கழித்து மீண்டும் வருகை தந்துள்ளீர்கள். அப்போதும், தற்போதும் தமிழ்ப் பிரதேசங்களின் மாற்றங்களை எவ்வாறு உணருகிறீர்கள்? 

பதில்:- நான் முன்னர் வருகை தந்த போதும் யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வன்னியில் தான் விடுதலைப்புலிகளின் ஆட்சி இருந்தது. தற்போதைய பயணத்தின் போது நான் ஒருமணிநேரம் தான் கிளிநொச்சியில் இருந்தேன். அப்போதே எனக்கு மிகவும் வேதனையாகவிருந்தது. எல்லாமே மாறியிருந்தன. அருமையான வரலாற்றோடும், நினைவுகளுடனும் இருந்த தெருக்கள், கட்டடங்களின் நிலை கண்டு நான் நொருங்கிப் போனேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பெரும் வேறுபாடுகளை அவதானிக்க முடியவில்லை.

கேள்வி:- கடந்த-2009 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும், அங்குள்ள இளைஞர்களுக்கும் ஓவியப் பயிற்சிகளை வழங்கியுள்ளீர்கள்.  இதன் மூலம் நீங்கள் பெற்ற அனுபவங்களைக் கூற முடியுமா? 

பதில்:-  கடந்த-2005 ஆம் ஆண்டு ஓவியக் கண்காட்சி இடம்பெற்ற போது போராளிகளுக்கும் ஓவியப் பயிற்சி வழங்க வேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் என்னைக் கேட்டுக் கொண்டார். இங்கே வரும் போதே போராளிகளுக்கும் ஓவியப் பயிற்சி வழங்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கிருந்த போதும்  தலைவரே இவ்வாறு சொல்லுவாரென நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் நான் உரையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்க வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு ஓவியப் பயிற்சி வழங்கலாம். ஆனால் போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்குவது என்பது சாதாரண விடயமல்ல.

இந்நிலையில் போராளிகளுக்கு நான்கு  கட்டங்களாக ஓவியப் பயிற்சி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கட்டப் பயிற்சி நடாத்தப்பட்டது.  இதில் மூன்று கட்டப் பயிற்சிகள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டன. எனினும், நான்காவது கட்டப் பயிற்சியை போர் காரணமாக வழங்க முடியவில்லை.

மிகப்பெரியளவில் போராளிகளிடம் காணப்படும் ஆற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில் என்னால் வழங்கப்பட்ட ஓவியப் பயிற்சி அமைந்திருந்தது. என்னிடம் பயின்ற பல போராளிகள் இன்று உயிருடனில்லை. மாவீரர்களாகி விட்டனர். சிலபேர் இருக்கிறார்கள். போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கியதை நான் ஒரு வரலாற்றுப் பதிவாகவே கருதுகின்றேன். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு பதிவுகள் காணப்படுகின்றன. அனைத்துப் பதிவுகளுமே ஒவ்வொரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

போராளிகளுக்கு நான் ஓவியப் பயிற்சி வழங்கும் போது அவர்களிடமிருந்த திறன் வியக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது. போரியலில் அவர்கள் தங்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டார்கள். அதேபோன்று ஓவியத் துறையிலும் அவர்கள் தங்களை மிகப் பெரியளவில் வளர்த்துக் கொண்டார்கள்.


கேள்வி:- தற்போதைய காலகட்டத்தில் ஓவியத் துறையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வமுடைய பல மாணவர்கள் இங்கிருக்கிறார்கள். ஆனால், பாடசாலை ரீதியாகவோ அல்லது கல்வியமைச்சுடனோ தொடர்பு கொண்டோ ஒரு ஓவியக் கல்லூரியை ஸ்தாபித்து அதற்கு நீங்கள் பொறுப்பாகவிருந்து செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதற்கு உங்கள் ஆதரவு எவ்வாறானதாக அமையும்? 

பதில்:-  விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் நுண்கலைப்பிரிவிற்கு என்னைப் பொறுப்பெடுக்குமாறு தெரிவித்தார். நீங்கள் ஈழத்துக்கு வந்தால் எங்களுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என்று கூறினார். அருங்காட்சியகங்களை உருவாக்குவதற்கான பொறுப்பை ஒப்படைத்தார். இவ்வாறு பல நிலைகளிலும் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தலைவரின் வேண்டுகோளை ஏற்று அவர் கூறிய அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதற்கு இணங்கியிருந்தேன். ஆனால், காலம் கனியட்டுமெனவும் பதிலளித்திருந்தேன். எதிர்காலத்தில் வாய்ப்பேற்படின் நிச்சயமாக நான் கூறிய அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன்.

கேள்வி:-  ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது ஆயுதங்களால் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்குத் தமிழ்த்தரப்புக்கள் எவ்வாறான உத்திகளைக் கையாள வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்? 

பதில்:- உண்மையில் ஒரு போராட்டம் நூறு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கின்ற போராட்டமெனில் காலத்திற்குக் காலம் அதன் உத்திகள் மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இருந்ததை விட 90 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வேறு உத்திகளைக் கையாண்டது.  1990 களிருந்ததை விட 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல உத்திகளைக் கையாண்டு புதிய பரிணாமம் பெற்றிருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம் இன்னும் நீடித்திருந்தால் அது வெவ்வேறு வகையான புதிய உத்திகளைக் கையாண்டிருக்கும். எதுவுமே நிலைத்ததொரு வடிவமல்ல. அல்லது அந்த வடிவத்தையே பிடித்தவாறு தொங்கிக் கொண்டிருக்க முடியாது.  போராட்ட வரலாற்றில் சில வடிவங்கள் தோற்கும். சிலவடிவங்கள் வெற்றிபெறும். சில வடிவங்கள் வெற்றி பெறுவதற்கு இன்னும் காலமெடுக்கும். அந்த வகையில் ஈழவிடுதலைப் போராட்டம் தற்போது மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்கின்றோமோ இல்லையோ. ஆனால் போராட்ட உணர்வுகளைத் தக்க வைக்க வேண்டிய கடமை எங்கள் ஒவ்வொருவருக்குமிருக்கிறது.

சர்வதேச மட்டத்திலுள்ள மக்களுக்கு நாங்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்திலுள்ள நியாயத் தன்மைகளை இதுவரை கொண்டு செல்லாததை நான் எங்கள் மத்தியிலுள்ள பாரிய குறைபாடாகக் கருதுகின்றேன்.  அவர்கள் தெரிந்து கொண்டு குரல் கொடுக்கவில்லை என்றால் அது அவர்களின் தவறென நாங்கள் சொல்லலாம். ஆனால், பல செய்திகளை நாங்கள் உரியவாறு கொண்டு சென்று சேர்க்காத நிலையில் தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நல்லவேளை, விடுதலைப் போராட்டம் முடிக்கு வந்து விட்டது என்ற மனநிலையுடன் பலரிருக்கிறார்கள். சிலருக்குத் தான் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எண்ணும் போது வலி ஏற்படுகின்றது.

எப்போதும் பெரும்பான்மை அனைத்திற்கும் காரணமாகவிருக்காது. உறுதியான மாற்றத்திற்கு சிறுபான்மை தான் காரணமாகவிருக்கின்றது. சிறுபான்மையாகவிருப்பவர்கள் தான் கூர்மையாகச் சிந்திக்கக் கூடியவர்களாகவிருக்கின்றார்கள். மக்கள் திரள் என்பது சிறுபான்மை சிந்திப்பதை வெளிப்படுத்தும் கூட்டமாகவே காணப்படும். அந்த அடிப்படையில் பார்த்தால் யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. கடந்த ஒன்பது வருடங்களில் உலகத்தமிழர்கள் எவ்வாறான முன்னெடுப்புக்களைச் செய்துள்ளார்கள் என்று நோக்கினால் பூச்சியம் தான் மிஞ்சுகிறது. எந்த இடத்தில் போராட்டம் நிறுத்தப்பட்டதோ அந்த இடத்தில் நின்றால் கூட பரவாயில்லை. ஆனால், அந்த இடத்திலிருந்து கீழே குழி தோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மனித விடுதலையை நேசிப்பவர்கள் என்ற அடிப்படையில்ஒடுக்கு முறைகளை எதிர்ப்பது என்பதும் அவசியமானதொன்றாகவுள்ளது. அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலையை முன்னோக்கி நகர்த்தும் பொறுப்பு ஒவ்வொரு உலகத் தமிழனுக்கும், மனிதனுக்கும் காணப்படுகின்றது.

கேள்வி:- இலங்கையில் இறுதியுத்தம் இடம்பெற்ற போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தை ஆட்சி செய்தார். இந்தக் காலப் பகுதியில் தமிழகத்திலிருந்து தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களால் குரல் கொடுக்க மட்டுமே முடிந்தது. இறுதி யுத்தத்தில் சிக்குண்ட தமிழ்மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. இதனால், கருணாநிதி மீது கூடப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பற்றாளராக, தமிழ் உணர்ச்சி மிக்கவராக இறுதி யுத்தத்தில் தமிழ்மக்களைக் காப்பாற்றவில்லையே என்ற ஒரு குற்ற உணர்ச்சி உங்களிடமிருக்கின்றதா? இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன? 

பதில்:- ஈழத்தில் நடந்த அழிவை யார் நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. ஒரு தனிநபர் சார்ந்து இந்த விடயத்தை நான் பார்க்க விரும்பவில்லை. இன அழிப்பைச் சிங்களம் திட்டமிட்டே செய்தது. ஏதோ ஒரு மாதத்திற்கு முன்னரோ அல்லது இரண்டு மாதத்திற்கு முன்னரோ திட்டமிட்டு இந்த இன அழிப்பு மேற்கொள்ளப்படவில்லை. நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மிகத் தெளிவாக, நுட்பமாகத் திட்டமிடப்பட்டு, உலக நாடுகளுக்கு அந்தத் திட்டத்தை வழங்கி ஒப்புதல் பெற்றுத் தமது திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு எந்தவித இடையூறுமில்லாமல்  செயற்படுத்தி நிறைவேற்றியிருக்கின்றது சிங்களப் பேரினவாதம்.

ஒரு தனிநபர் அல்லது தனிக்கட்சி அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினரால் இதனைத் தடுத்தி நிறுத்திவிட முடியும் என்று நினைத்தால் அது மிகப் பெரிய அறியாமையாகவே அமையும். எனக்கும் பல வருத்தங்கள் பலரிடமுண்டு. இந்தப் போராட்டத்தை அவர்களால் வெல்ல வைக்க முடியும் என்பதல்ல அது. சிலவேளைகளில் போராட்ட உத்திகளை மாற்றி அழிவுகளைப் பெருமளவில் குறைக்க முடியுமென நம்பியவர்களில் நானுமொருவன்.  அந்த அடிப்படையில் நான் கடந்த-2008 ஆம் ஆண்டு பத்திரிகை நேர்காணலில் நான் ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன். கலைஞருக்கு காலம் அருமையான வாய்ப்பைத் தந்திருக்கின்றது. ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி ஆருக்கு முக்கியமான வரலாற்றுப் பதிவிருக்கின்றது. அதேபோன்று கலைஞரும்  ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை காலம் கலைஞருக்குத் தந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் அவரை விரும்புகின்றவர்களும், அவரைப் போற்றுகின்றவர்களும் கலைஞர் குறித்த வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்த வேண்டுமென விரும்பினார்கள். ஆனால், இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சர்  இந்திய அரசினுடைய போக்கையே மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு எனக்கு இருக்கவில்லை.

ஈழத்தில் நடந்து கொண்டிருந்த அழிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றிருந்தது. கடும் குளிரிலும் இலட்சக்கணக்கான மக்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடில்லாமல் வீதிக்கு வந்து போராடியிருக்கின்றார்கள். தமிழகத்திலும் பல உயிர்கள் தீக்குளித்து மடிந்திருக்கின்றன.

இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை நிச்சயம் நிறுத்தியிருக்க முடியுமெனப் பலரும் நம்புகின்றார்கள். எனக்கும் அது ஏற்புடையது தான். ஆனால், இந்தியாவையே கையாளக் கூடிய ஒருவராக கலைஞர் இருந்தாரா? என்ற கேள்வியும் எனக்கிருக்கின்றது. நாங்கள் எல்லோரும் ஒருவரை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பதால் பயனேதுமில்லை. ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமான தேவையாக இருந்தது. அந்த ஒருங்கிணைந்த செயற்பாடு தமிழர்களிடத்தில் இருந்ததா?, பேரழிவை எந்தவகையிலாவது தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா? இவற்றை தற்போது நான் பல்வேறு தடவைகள் நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்.

எத்தனையோ போராட்டங்கள் தொடர்பில் கேள்விப்பட்டிருக்கின்றோம். அனைத்துப் போராட்டங்களும் வெற்றியடைவதில்லை. வெற்றியடைந்த பல போராட்டங்கள் வரலாற்றில் நின்று நிலைத்ததுமில்லை. ஆனால், தோல்வியடைந்த பல்வேறு போராட்டங்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கும். எனினும் தியாகங்கள் வீணாகி விட்டதென நான் கருதமாட்டேன். ஆனால், உடனடியாகவே அதற்கான பலனைப் பெற முடியாமல் போய்விட்டதே என்கின்ற வேதனை எனக்கிருக்கின்றது.

எனினும், ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமென நினைத்த தமிழர்களைப் போல தோல்வியடைய வேண்டுமென நினைத்த தமிழர்களும் பலரிருக்கின்றார்கள். இதனை நான் வெளிப்படையாகவே சொல்கின்றேன். இதிலும் பெரிய அரசியலிருக்கின்றது. பொதுவாக மக்கள் வெற்றியையே கொண்டாடுவார்கள். ஆனால், இங்கு பலர் தோல்வியையும் கொண்டாடினார்கள். எவ்வாறாயினும், ஈழவிடுதலைப் போராட்டம் இன்னமும் தோற்கவில்லை. போர் முடிவடைந்தாலும் போராட்டம் இன்னமும் முடியவில்லை.

அந்த அடிப்படையில் கடந்தகால இழப்புக்களிலிருந்து, வரலாறுகளிருந்து நாம் பாடங்களைக் கற்றிருக்கின்றோமா என்றால் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே பதில். இவ்வாறான தேக்கநிலைக்கு யார் காரணம்என்பது தொடர்பில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நிலைகளிலும் தேக்க நிலையை அடைந்திருப்பதற்கு எல்லோருமே காரணம். அந்த வகையில் கடந்த கால வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தும் நோக்கில் நான் என்னால் முடிந்தவரை செயற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்கின்றேன். இது போன்று நாம் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்தவரை செயற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.


கேள்வி:-  கடந்த-2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முற்றுமுழுதாகத் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகவிருந்தது. இதன் பின்னர் பல்கலைக்கழக சமூகத்தில் ஒரு குழப்பகரமான நிலை காணப்பட்டது. குழப்பகரமானதொரு நிலை ஒருபுறம், அரசாங்கத்தின் நெருக்கடிகள் மறுபுறம் காணப்பட்டன. தற்போது மீண்டும் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான சூழல் யாழ்.பல்கலைக்கழகத்தில் வலுப்பெற்று வரும் நிலையில் பொங்குதமிழ் நினைவுத் தூபி திறப்பும், தமிழமுதம் நிகழ்வும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளை நீங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்? 

பதில்:-  கலை என்பது தமிழர்களின் வரலாற்றில், வாழ்வியலில் மிக முக்கியமானதொன்று. நாம் எங்களுடைய பாரம்பரியத்தையும், எங்களுடைய கலை வடிவத்தையும், எங்களுடைய மொழி ஆளுமையையும் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் சொல்லப் போனால் மற்றவன் அழிப்பதை விட நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம். அந்நியத்தின் மீது மோகம் கொண்டு, இருப்பதனைத்தையும் இழக்கின்றோம். அதற்கு அனுமதிக்கின்றோம். இவ்வாறானதொரு நிலையில் எமது பாரம்பரியக் கலை வடிவங்கள் சில அழிந்து விட்டன. பல அழிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பாரம்பரிய கலைவடிவங்களைக் கையிலெடுக்க வேண்டிய தேவை இளைய சமூதாயத்துக்கு இருக்கின்றது.  எல்லா வகையான வாழ்வியல், வரலாறு, பாரம்பரியம், போராட்டம் ஆகியன இணைந்தது தான் கலை. கலை என்பது தனியானதல்ல. உலகத்திலுள்ள அனைத்து இனங்களையும் விட மூத்த குடி என நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். வரலாற்று ரீதியாகவும் அது நிரூபிக்கப்பட்டதொன்று. அவ்வாறானதொரு இனத்தின் கலை என்பதும், பாரம்பரியம் என்பதும் அனைத்துக் கலை வடிவங்களுக்கும் மூத்ததாகவும், முன்னோடியாகவும் விளங்குகின்றன. அந்த முன்னோடியான வடிவங்களை யார் யாரோ கையிலெடுத்து அதனை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏற்றதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நாம் எங்களுடைய கலை வடிவங்களை அழித்துக் கொண்டிருக்கின்றோம். அழிய அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் வெறுமனவே கலையைப் பாதுகாப்பதல்ல, கலையைக் கையாளுவதல்ல முக்கியம். அந்தக் கலையில் எதனைக் கையாளுகின்றோம் என்பதில் தான் எமது வளர்ச்சி தங்கியிருக்கின்றது. எங்களுடைய கலையை, மொழியைப் பாதுகாப்பதன் மூலம் தமிழர் உரிமைகளையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும். அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த தமிழமுதம் நிகழ்வு சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு. 

பல காலங்கள் கழித்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் நாங்கள் இழந்து கொண்டிருக்கும் விடயங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு மாணவர்களால் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சில விடயங்களை நாங்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. சில செய்திகளை நாம் எப்படிச் சொல்ல முடியுமோ அவ்வாறு தான் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லுகின்ற போது எமது உணர்வுகளைத் தக்க வைக்க முடியும். நம்முடைய சிந்தனைகளை வெளிப்படுத்த முடியும். இதன் மூலம் அனைவரையும் சிந்திக்க வைத்து செயற்படுத்த முடியும். இதற்கான முன்னெடுப்பாக தமிழமுதம் நிகழ்வை நான் கருதுகின்றேன். இந்த நிகழ்வு முக்கியமானதொரு காலகட்டத்தில் அறிவுபூர்வமானதொரு செயற்பாடாக, எழுச்சிபூர்வமானதொரு நிகழ்வாக நான் கருதுகின்றேன்.

கேள்வி:- தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியம் சார்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட ஈடுபாடு எவ்வாறுள்ளது? தொடர்ந்தும் தமிழ்மக்களின் கலை, பண்பாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் மாணவர்கள் ஆர்வமாகவிருக்கின்றார்களா? பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான பயணத்தில் தொடர்ந்தும் எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

பதில்:- பொதுவாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வேகம் காணப்படுகின்றது.  ஆனால், செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் போதுமான விவேகமும் அவசியம் தேவை. எப்போதும் அதீத உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. அறிவுத் தளத்தில் சிந்திப்பது தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.உணர்ச்சி மேலீட்டால் செய்கின்ற செயல்கள் எல்லாமே வெற்றி பெறாது. ஆனால், அறிவுச் செயற்பாட்டால் செய்கின்ற செயல்கள் காலமெடுக்கும். ஆனால், வெற்றி பெறும். அந்த அடிப்படையில் மாணவர்கள், இளைஞர்கள் தங்களை அறிவு ரீதியாக வளர்த்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும்.

எங்களுடைய கடந்த கால வரலாறுகளைப் படிக்க முன்வர வேண்டும். வரலாறுகளைப் படிப்பதன் மூலம் அதிலுள்ள சரி, பிழைகளை உணர வேண்டும். சரியானவற்றிலிருந்தும், பிழையானவற்றிலிருந்தும் பாடங்கள் கற்கலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல தமிழர் வரலாற்றிலேயே அதிக பாடங்களிருக்கின்றன. உலகத்தில் நடந்த புரட்சிகளை, போராட்டங்களைப் படிக்க வேண்டும். அதன் ஊடாக எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, உரிமைப் போராட்டத்தை நோக்க வேண்டும். தமிழ்த்தேசியத்தை நோக்க வேண்டும். உலகளவில் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவது முக்கியமானதொன்றாகவிருக்கின்றது. இதற்காக நாம் பாடுபட வேண்டும்.

எமது அடுத்த கட்டச் செயற்பாடுகளில் ஆக்கபூர்வமான உத்திகளைக் கையாள வேண்டும். அந்த அடிப்படையில் தேடித் தேடி உலகத்தில் நடந்த புரட்சிகள், போராட்டங்களைப் படியுங்கள் என இளைய சமூதாயத்திடம் அன்பான கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றேன்.

எங்கள் மத்தியில் இன்னொரு குறைபாடுண்டு. எந்த வரலாற்றையும் நாங்கள் பதிவு செய்வது கிடையாது. நாம் இளைஞர்களைத் தேடச் சொல்லுகின்றோம். ஆனால், நாம் அரைகுறை வரலாறாகத் தான் ஆக்கி வைத்திருக்கின்றோம். வரலாறுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இன்னும் பல்வேறு வரலாறுகள் எழுதப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்காலத்தில் எமது இளைய சமூதாயத்தை வழிப்படுத்த முடியுமென நம்புகின்றேன்.

இதன் மூலம் அவர்கள் அடுத்த நிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கும், எமது இனத்தை வழிப்படுத்துவதற்கும் முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட சில துடிப்பு மிகு சில இளைஞர்களையும் நான் பார்த்துக் கொண்டு தானிருக்கின்றேன் என்றார்.


நேர்காணல்:- செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.