தங்கங்கள் வரலாம்
சொல்வதைத் திருப்பிச் சொல்லும்…
எழுதியதைப் பார்த்து எழுதும்…
படித்ததைப் பாடம் பண்ணும்…
பயிற்றுவித்த கேள்விக்கு விடை எழுதும்…
கூடியதாய் மதிப்(பு)பெண் பெறும்…
-இன்றைய சிறார்கள், நாளைய தலைவர்கள் -
நன்றாய் கேளிக்கை பழகும்…
மற்றவரைக் கேலி பேசும்…
கொதிப்புடன் கொடிபிடிக்கச் சேரும்…
பட்டங்கள் வாங்கும்…
உத்தியோகத்தில போய்ச் சேரும்…
-மீண்டும் பழையபடி முதலில இருந்து,
திரும்பச் செய்யும்..!
-இன்றைய இளையோர், நாட்டின் வருங்காலத் தலைவர்கள் -
எங்கே போய் வாங்குவது தலைமைத்துவம்…
அடிமைகள் சமூகத்தில் கூட
தலைவர்கள் தோன்றுவார்கள்..
ஏனெனில் அவர்களுக்குத் தெரியும்,
தாங்கள் அடிமைகளாய் ஒடுக்கப்பட்டோம் என்று.
தாங்கள் எங்கிருக்கிறோம் - உண்மையான
தமது திறன்கள் என்ன என்பதையும் உணராது,
போலிப்பகட்டில் உச்சி குளிர்ந்துள்ள – சமூகத்தில்
உடம்பில் தலை இருப்பதே அதிஷ்டம் தான்.
இல்லையென்று அறிந்தவன் தேடுவான்
இல்லையை இருக்கு என நம்புபவன்
ஏற்றம் காண வழியேதும் இல்லை…
இனியாவதுவிழிக்கலாம்…
தங்களைத் தரமிடலாம்…
தங்கங்கள் தோன்ற வழிகாட்டலாம்…
நெம்பு
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்
Post a Comment