மாற்று வழி என்ன? பாகம்-2
சத்தியாக்கிரக வழியில் போராடிப் பார்த்து விட்டோம். தரைப்படை, கடற்படை, விமானப்படை என அத்தனை பலமாக இருந்த புலிகளாலேயே எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை. உணவாகாரம் நீராகாரம் எதுவுமே அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த திலீபனாலேயே எதையும் பெற முடியவில்லை. இந்த நிலையில் எமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழி இருந்தால் சொல்லுங்கள் என தியாக தீபம் திலீபனின் 31ஆம் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான பேச்சாளர் ம. சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்வியின் கனதி பற்றியும் நிகழ்காலத்தில் அந்தக் கேள்விக்கு வித்திட்ட கூட்டமைப்பின் வங்குரோத்து அரசியலையும் நாம் கடந்த இதழில் பார்த்தோம்.
மாற்று வழி என்பது சிங்கள இனவாதத்துக்கு எதிராக என்ன மாற்று வழியில் போராடுவது என்பதாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு வரையறுத்துக் கொள்வோமானால் தெற்கில் உள்ள இரு பிரதான கட்சிகளும், ஏன் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கூட, ஒரு தரப்பு தான். தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்ய இந்த ஒரு தரப்புக்கு எதிராக போராடுவதற்கு மாற்று வழி என்ன என்பதே இன்றுள்ள கேள்வி.
இந்தக் கேள்வியின் முன்னால் “நாம் மைத்திரி-ரணிலின் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார்” என்ற அரசியற் கோட்பாடு அடிபட்டுப் போகிறது. ஏனெனில் தமிழ் மக்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் மைத்திரி, ரணில், மகிந்தா, அனுர எல்லோருமே சிங்கள இனவாதத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். அதில் ஒரு தூணைப் பாதுகாத்து அதற்கு கைமாறாக அந்தத் தூணிடமிருந்து தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பது அறியாமையே. அண்மையில் தெற்கில் நடந்த பிரதம மந்திரி மாற்றம் இதனை எமது முகத்தில் அறைந்து சொல்லி நிற்கிறது.
ஆகவே தமிழ் மக்களின் உண்மையான எதிரி சிங்கள பௌத்த இனவாதம். காலம் காலமாக கட்டியமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ள சிங்கள பௌத்த இனவாதமே தமிழ் மக்களின் எதிரி. இதனைத் தலைமை தாங்கி நிற்பவர்கள் பௌத்த சங்கத்தினர். அவர்கள் வளர்த்துப் பாதுகாக்கும் இந்த சிங்கள இனவாதத்தை தமது சொந்த பொருளாதார மேம்பாட்டுக்காக சிங்கள அரசியல்வாதிகள் தூக்கிப் பிடித்துள்ளனர். இந்தப் பின்னணியில் இந்த அரசியல்வாதிகளூடாக சிங்கள பௌத்த சங்கத்தினருடன் பேசி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியே மாற்று வழி என்ன என்பதற்கான விடை.
மைத்திரி ரணில் மகிந்தா எவருமே தமிழ் மக்களின் நண்பர்கள் அல்ல. இந்த நிலையில் அவர்களுக்கிடையில் நடக்கும் பொருளாதாரப் போட்டியில் எமது நலனை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு முதலாவது விடை சிங்கள அரசியல்வாதிகள் எவரையும் நம்புவதை விட்டுவிடவேண்டும். “அவரில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. இம்முறை நிலமைகள் வேறு. அவர் சொன்னவற்றை செய்வார்” என்று தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களுக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.
அடுத்து, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளுடனும் பேசுவதற்கு தமிழ்த்தலைவர்கள் திறந்த மனத்துடனும் தயாராகவும் இருக்க வேண்டும். இதற்கான தயாரிப்பு முக்கியம். அறிவுத்தளத்தில் உள்நாட்டில் உள்ள முற்போக்காளர்களுடனும் சர்வதேசத்துடனும் பரந்த கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்குள் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்வாங்க வேண்டும். அந்த அறிவுத்தளத்தில் எட்டப்படும் விடயங்களை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஒரு வெகுஜன அமைப்பைக் கட்ட வேண்டும். அந்த வெகுஜன அமைப்பின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் ஒரு அமைப்பாக அரசியல் கட்சிகள் தொழிற்பட வேண்டும். இவ்வாறான ஒரு கட்டமைப்பு இருக்குமிடத்தில் தான் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அதன் மூலம் தான் தமிழ் மக்களாக நாங்கள் சில பிடிகளை வைத்திருக்கலாம்.
இது ஏறத்தாழ சிங்கள பௌத்த சங்கத்தினர் சிங்கள அரசியல் கட்சிகள் மீது வைத்திருக்கும் பிடியைப் போன்றது. ஆனால் நாம் இங்கே பிரேரிக்கும் பிடி ஜனநாயத்தின் பாற்பட்டது. இங்கு வெகுஜன அமைப்பின் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவர். அவர்களின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டது. அவர்களின் மதமோ அல்லது அந்தஸ்த்தோ அவர்களின் தகுதியை தீர்மானிக்கப் போவதில்லை.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ம. சுமந்திரன் கனடாவின் TET தொலைக்காட்சிக்கு 2018 தை மாதத்தில் அளித்த பேட்டியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசையில் அமரும் பொழுது எவ்வாறு சிங்கள இனவாதிகளால் தமக்கு அழுத்தம் இருக்கிறதோ அவ்வாறே தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் இருக்கிறது என்று சிங்கள அரசியல்வாதிகள் உணரவேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை இவ்வாறான அழுத்தங்கள் தமிழ் இனவாதத்துக்கு வழிவகுத்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் சக்திகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகமொத்தத்தில், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் இருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதம பேச்சாளரே ஒத்துக் கொள்கிறார். ஆனால் அதை நடைமுறைச் சாத்தியமாக்கும் முயற்சிகளை அவர் எடுக்கவில்லை. இன்று நடப்பதோ தலைகீழ். எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் கூட்டமைப்பு தனக்கு சரியென்று பட்டவற்றை செய்கிறது. பின்கதவால் இந்தியாவுடன் பேசுகிறது. அமெரிக்காவுடன் பேசுகிறது. சீனாவுடன் பேசுகிறது. மஹிந்தவுடனும் பேசுகிறது. ஆனால் அப்பேச்சுவார்த்தைகளால் அடையப்பட்ட உறுதியான நிலைப்பாடுகள் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு சொல்ல மறுக்கிறது. அவை தொடர்பான மக்களின் அபிப்பிராயங்களை கேட்க முயலாமால் இருக்கிறது. தெற்கு அரசியல் ஸ்தம்பித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வரலாற்றில் என்றுமில்லாத அளவு பேரம் பேசும் ஆற்றல் பெரிய அளவில் வந்துள்ளது. ஆனால் அதனைக் கூட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பது பற்றி ஒருவருக்கும் தெளிவு இல்லை. எல்லாம் முடிந்த பின் தாம் செய்தவற்றை நியாயப்படுத்த கூட்டங்கள் வைப்பார்கள். மாற்று வழி என்ன என்று கேட்பார்கள்.
இனப்பிரச்சனைத் தீர்வு ஒரு புறம் இருக்க இன்று நமது இனத்தின் இருப்பைப் பாதுகாக்கக் கூடிய உரிமைகளை வென்றெடுப்பது முக்கியம். “இதற்காக மகிந்தவுடனும் பேசலாமா ? ஒரு இனப்படுகொலையையே நடத்திய அவருடன் பேசுவது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?” எனக் கேள்விகள் எழுவது கேட்கிறது. இங்கு நாம் முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டியது மகிந்த தனித்து இனப்படுகொலையை நடத்தவில்லை. மகிந்தவுடன் மைத்திரியும் ரணிலும் இணைந்தே இனப்படுகொலையை நடத்தினர். சிங்கள இனவாதமே இனப்படுகொலையை நடத்தியது. இந்தியா அமெரிக்கா சீனா உட்பட பல சர்வதேச நாடுகளுடன் இணைந்தே சிங்கள இனவாதம் இனப்படுகொலையை நடத்தியது.
ஒரு சில சிங்கள முற்போக்காளர்களைத் தவிர இனப்படுகொலை நடத்திய அரசாங்கத்தை உற்சாகப்படுத்தியவர்களும் அதனை அமைதியாக ஆமோதித்தவர்களும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தவர்களுமே சிங்கள மக்கள் மத்தியில் அதிகம். புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் தமது நாட்டுமக்களையே ஓர் இராணுவம் கண்மூடித்தனமாக கொன்றொழிப்பது மனிதத்துக்கே விரோதமானது என்பதை உணரவிடாது சிங்கள பௌத்த இனவாதம் அவர்களை வளர்த்திருந்தது. அந்த இனவாதத்தை தூக்கி நிற்கும் எந்த அரசியல்வாதியுடன் பேசுவதில் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.
மேலும், இந்திய இராணுவத்துக்கு எதிரான போரில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இருப்பைப் பாதுகாக்க அப்பொழுது தெற்கில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேசினர். சிங்கள இனவாதத்தின் ஆதரவைத் தனக்கு சார்பாக திருப்புவதற்காக இந்திய எதிர்ப்புவாதத்தை கையில் எடுத்திருந்தார் பிரேமதாச. அவருடன் புலிகள் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இந்திய இராணுவத்துக்கு எதிரான போரில் பிரேமதாசவை ஒரு கடந்து போகும் கருவியாகவே அவர்கள் பார்த்தனர். ஏனெனில் இந்திய இராணுவம் விலகிய பின் பிரேமதாசவை ஆட்டுவித்துக் கொண்டிருந்த சிங்கள இனவாதம் மீண்டும் தலைவிரித்து ஆடும் என அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.
இந்த அனுபவங்களின் பின்னணியிலேயே நாம் தென்னிலங்கை அரசியல்வாதிகளைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கிடையில் நடக்கும் பொருளாதாரப் போட்டியில் சிங்கள பௌத்த இனவாதத்தை எவ்வாறு தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த முரண்பாடுகளை எவ்வாறு நமது பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆராயவேண்டும். அதிலிருந்து அடுத்த கட்டமாக எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான மாற்று வழியைத் தேட வேண்டும்.
பௌத்த சிங்கள இனவாத அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுடன் பேசியோ அல்லது தானாக உணர்ந்தோ எந்தவித உரிமைகளையும் தமிழ் மக்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்கியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக மாகாணசபை, மேற்கு நாடுகளின் நெருக்குவாரத்தால் புதிய அரசியல் யாப்பு பிரேரணை என சிங்கள அரசு அதனைவிட ஒரு பலமான சக்திக்கே பணியும் என உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன. மாற்று வழி என்பது இந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே மேற்குலகத்துடன் சேர்ந்து கொண்டு புதிய அரசியல் யாப்பை உருவாக்க கூட்டமைப்பு முனைந்தது. ஆனால் அந்த ஒரு வழியில் மட்டுமே தங்கியிருந்தது கூட்டமைப்பு விட்ட தவறு. அந்த முயற்சிகளுக்கு சமாந்தரமாக எமது சமூகம் சார்ந்த ஓர் உள்ளக கட்டமைப்பை அது கட்டத் தவறி விட்டது.
சிங்கள அரசு அதனைவிட ஒரு பலமான சக்திக்கே பணியும் என்றால் எமது இனத்தின் பலத்தை எவ்வாறு அதிகரிப்பது? தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்தும் ஏறத்தாள 75 மில்லியன் மக்கள் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்களவரோ 14 மில்லியன் அளவானவரே உள்ளனர். இதுவே எம்மைப் பலமாக்கும் வழி. தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் பிரச்சனை என்று இலங்கையில் நடப்பவற்றை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல் சர்வதேச ரீதியாக தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பேச வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுடனும் வெகுஜனக் கட்சிகளுடனும் ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வுடனாகிலும் இணைந்து செயற்திட்டங்களைத் தீட்ட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலேசியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என பரந்து வாழும் தமிழருடன் இணைப்புகளை ஏற்படுத்தி ஒரு அகண்ட தமிழ் இன அடையாளத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதனூடக சிங்கள அரசுக்கு மட்டுமல்ல சர்வதேச அரசுகளுக்கும் இந்த அடையாளத்தினூடாக அழுத்தம் கொடுக்கலாம்.
இது தமிழரை ஒரு சமூகரீதியில் பலமாக்குவதற்கான பிரேரணை. அதேவேளை தமிழ் மக்கள் பொருளாதார ரீதியிலும் தம்மைப் பலமாக்கிக் கொள்ள திட்டங்களை மாற்று வழியில் தீட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் சிங்கள அரசின் மீதும் அதைத் தாங்கி நிற்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மீதும் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். இதற்கான ஓர் உத்தேச திட்டத்தை சட்ட வல்லுனர் குமாரவடிவேல் குருபரன் அவர்கள் பிரேரித்துள்ளார். அதனை இவ்விதழின் இன்னுமொரு கட்டுரையில் காணலாம்.
அடுத்து மாற்று வழியில் நாம் உள்ளடக்க வேண்டியது சமூக மாற்றம். இது தொடர்பான பிரேரணைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.
நிமிர்வின் பார்வை
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்
Post a Comment