தொடரும் நெருக்கடி




இன்றைய இலங்கையின் நிலையை சுருக்கமாக பார்த்தால் நீதி மீறப்படுகிறது, சட்டம் கேலிப் பொருளாகிறது,  அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது, மக்களின் ஆணை அவமதிப்புக்குள்ளாகி உள்ளது. 

மைத்திரிபால சிறீசேனா நல்லாட்சி வேடத்தை அதிரடியாக கலைத்து  திடீர் பிரதமராக ராஜபக்சவைக்கொண்டு வந்ததில் இருந்து கொழும்பு அரசியல் தடுமாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது. தேர்தலை நடாத்துங்கள் என்கிறார் மஹிந்த. அரசியலமைப்பின் படி நடவுங்கள் என்கிறார் ரணில். குட்டையை குழப்பி விட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் மைத்திரி. இந்த இடைவெளியில் இலங்கையை எவ்வாறெல்லாம் பங்கு போடலாம் என காத்திருக்கின்றன சர்வதேச நாடுகள்.

நாடாளுமன்றில் எத்தனையோ நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பும் மஹிந்தவுக்கு இன்னும் பெரும்பான்மை வராததால் “ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு" என்பது போல் அரசமைப்புக்கும் கொள்ளிக் கட்டை வைத்துவிட்டு  காத்திருக்கிறார் மைத்திரிபால.  இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளும் பணத்துக்காக கட்சித்தாவல்களும் அவ்வுறுப்பினர்களுக்கு வாக்களித்த மக்களின் முகத்தில் சேறுபூசியுள்ளன. 

இலங்கையின் உயர் ஜனநாயகம் பேணும் இடமான நாடாளுமன்றம் இன்று உலகின் கண்களுக்கு கேலிப் பொருளாகி விட்டது. எங்கள் மக்கள் பிரதிநிதிகளது கத்திச் சண்டையையும், மிளகாய்த்தூள் விசிறலையும்  வேடிக்கை பார்க்கின்றனர் பொதுமக்கள்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணை போதும் என்ற நிலைக்கு ஆதரவளித்தவர்கள் இன்று அந்த ஜனாதிபதி அரசமைப்பையே தூக்கி குப்பைக் கூடைக்குள் விசிறிய பின்பும் ஏதாவது அதிசயம் நடக்கும் என்று காத்திருக்கின்றார்கள். சிங்கள தேசத்தில் என்னவும் நடக்கலாம் என்கிற நிலை தான் இப்போது உள்ளது.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து அன்றாடப் பிரச்சினைகள் வரை தீர்க்கப்படாமலிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவை வழங்கியமை ஏன் என பொதுமக்கள் கேள்வி  எழுப்பி வருகின்றனர்.

பௌத்த சிங்கள இனவாதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிங்களக் கட்சிகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு ஓர் அரசியற்தீர்வு கிடைக்காது என்பது கடந்த 70 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இன்று நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னரும் அவர்கள் தீர்வு தருவார்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம் இல்லையா?

தமது அரசமைப்பையே தூக்கி எறிந்த தேசத்திடம் இருந்தது நீதியை எப்படி எதிர்பார்ப்பது?

நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.