ஆசிரியர் பார்வை
ஆவணப்படுத்தல் பிரதானமானது
முறையான ஆவணப்படுத்தல் இல்லாமல் அடையாளம் தெரியாமல் போய் விடுவோமா நாம் என்கிற பயம் இப்போது எம் இனத்துக்கு வந்துவிட்டது. எல்லாவற்றையும் கடந்து போய் விட பழகி விட்டிருக்கிறோம். தனிமனித வாழ்விலும் சரி, ஒரு சமூக அளவிலும் சரி, ஒட்டுமொத்த இனத்தின், அடையாளத்தின் எதிர்காலத்தை, உறுதி செய்வது வரலாற்று ஆவணங்களும், ஆவணப்படுத்தலுமே ஆகும். வரலாற்றை மறந்த எந்த ஓர் இனமும் நிலைத்தாக சரித்திரம் இல்லை.
சுருக்கமாக சொன்னால் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் அரசியல், சமூக கலந்துரையாடல்களில் இருந்து நூல்வெளியீடுகள், சமூகவிழாக்கள் வரை முறையாக ஆவணப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது. சுருக்கமாக சொன்னால் இங்கு இடம்பெறும் 95 வீதமான விடயங்கள் முறையாக ஆவணப்படுத்தப்படுவதில்லை என்றே கூறலாம்.
கடந்த காலங்களில் வெளிவந்த நூல்கள், பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் எல்லாமே ஆவணப்படுத்தப்பட வேண்டியவை தான். ஆனால் யாழ்.பொதுநூலகம் நம் கண் முன்னே கொழுத்தப்பட்ட பிறகு நூலக நிறுவனமானது (http://www.noolaham.org) டிஜிட்டல் முறையில் ஏராளமான ஆவணப்படுத்தல்களை செய்துள்ளமை கவனிக்கப்பட வேண்டியது. அதே போல் நூலக நிறுவனத்தின் ஆவணகம் (http://aavanaham.org/) திட்டத்தின் ஊடாக தனிநபர் சேகரங்கள், கையெழுத்து ஆவணங்கள், காணொளிகள், ஒலிச் சேகரம், வாய்மொழி மூலவரலாறு, கட்டுரைப் பட்டியல் என ஆவணப்படுத்தும் பரப்பு அகன்று செல்கின்றது. இதனையும் தாண்டி நூலக நிறுவனமானது பழைய ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை தற்போது முன்னெடுத்து வருகின்றது. அழிவடையும் நிலையில் இருக்கின்ற அரிய பொக்கிசங்களான ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் மயப்படுத்துகிறது. இந்தப் பணிகள் எல்லாவற்றையுமே ஒரு தன்னார்வ குழு அமைப்பே செய்கின்றது. இந்த முயற்சிகளுக்கு நாம் அனைவரும் இயன்றவரை ஆதரவளிக்க வேண்டும்.
இதற்கு முன் ஆவண ஞானி குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களும் தனிநபராக பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், புகைப்படங்கள் என பலவற்றையும் ஆவணப்படுத்தி இருந்தார். கீரிமலையில் உள்ள சிவபூமி இல்லத்தில் கலாநிதி ஆறுதிருமுருகனின் முயற்சியால் தமிழர் பண்பாடு புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாவற்குழியிலும் ஆவணப்படுத்தும் பணி இவரால் தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மேல் நிகழ்த்திய இனப்படுகொலைகள் ஆண்டு, மாதம், திகதி வாரியாக ஆவணப்படுத்தி உள்ளோமா? அவற்றை ஆண்டாண்டு நினைவு கூருகிறோமா? அந்த நிகழ்வுகளை இன்றைய தலைமுறைக்கு கடத்தி இருக்கின்றோமா? இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தாமல் நாம் அடுத்த கட்டம் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம்.
வியப்பாக இல்லையா?
செ. கிரிசாந்-
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்
Post a Comment