ஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' ?
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும்  உலகில்  16 நாட்கள்  அனுஷ்டிக்கப் படுகின்றது. அந்த 16 நாட்கள் குறித்து பெண்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையம் – JSAC ''எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்'' என்ற தொனிப்பொருளில் முன்னெடுத்துள்ள செயற்பாட்டின் அடிப்படையிலான கட்டுரை இது.

 பெண்களுக்கு சம உரிமை வேண்டும், அவர்களை மதிக்க வேண்டும், அவர்களும் இந்த சமூகத்தின் ஆணிவேர், என்று பெண்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.  ஆனால் “பெண்களுக்கு தானே சுதந்திரம் கிடைத்து விட்டதே!  அவர்களுக்கு என்ன குறை? அவர்கள் நன்றாகத் தானே இருக்கின்றனர். பெண்கள்  இந்த நாட்டின் கண்கள்!” என்றெல்லாம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அலங்கரிக்கப்பட்ட சில பல மேடைகளில் பல பொருத்தமற்ற ஆண் குரல்கள்  வருடாவருடம் ஓங்கி  முழங்குவதை நாம்  காணலாம்.     ஆனால்  பெண்களாகிய  நாம் எப்படி வாழவேண்டும், எந்த முறையில் வாழவேண்டும், எவ்வாறு வாழவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும்  எமக்கு  உண்டு  என்பதனை சிந்திக்க தவறி விடுகின்றோம் .

  குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பெண்கள்  பல்வேறு துறை சார்ந்து  முன்நோக்கி  சென்றுள்ளனர். பட்டப்படிப்புகள் மட்டுமன்றி  வெளிநாடுகளுக்கும் தம் ஆளுமை  சார்ந்து சென்றுள்ளனர்.   பல்வேறு துறை சார்ந்து தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். சாதனைபடைத்துள்ளனர்! அரசியல் செயற்பாடுகளில், விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். அத்துடன்  பல்வேறு துறைகளில் தலைமைத்துவப் பணிகளிலும் உள்ளனர். இவ்வாறு நாம் குறிப்பிடுகின்ற போதும் அவற்றில் பெண்களின் பங்கு பற்றுதல் என்பது தன்னிச்சையான முடிவுகளுக்கும் தெரிவுகளுக்கும் அப்பால் ஆணாதிக்க அதிகார மையத்தின் பிடியில் அதிகாரத்திற்குட்பட்டே  உள்ளது.


 குடும்பம் வீடு என்ற சூழலில் பெண்கள் 

' எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே --அது
நல்லது ஆவதும் தீயது ஆவதும்
அன்னை வளர் ப்பினிலே ''

என்ற திரைப் பாடல் நினைவூட்டுவதை நாம்  புரிந்து கொள்வோமானால் ஒரு சமூக உருவாக்கத்துக்கும் தேச உருவாக்கத்துக்கும் பெண்களின் பொறுப்பு எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் அல்ல, அவளும் இந்த சமூகத்தின் பங்காளி, என்பதை  சில பெண்களும் மறந்து விடுகின்றனர்.  ஆரம்ப கால அடக்குதல்களும் ஒடுக்குதல்களும் பெண்ணை தீட்டாகவும், தீண்டத்தகாதவளாகவும், ஆணின் சேவகியாகவும், பிள்ளை  பேற்று இயந்திரமாகவும் உருவகித்திருந்தன.  மேலும்  அப்பா, சகோதரன், கணவன், மகன் என்ற பாத்திரங்கள்  பெண்ணின்  காவலர்களாகவே முன்னிலைப் படுத்தி  வரும்  தமிழ் மரபும் உள்ளது. இன்று வரை எத்தனையோ  மாற்றங்கள், வளர்ச்சிகள்  சமூகத்தில்  உருவான பின்னும் இந்தப் பழைமையான கோட்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன.  பெண்கள் தொடர்பாக சமூகத்தில் நியாயமான மாற்றத்தை விரும்புகின்றதும்  புரிந்து கொள்கின்றதுமான நிலைமை இழுபறியாகவே உள்ளது.

 இந்நிலைக்கு  பெண்களே  பெரிதும் காரணியாகவும், அவர்களே பெரிதும் பாதிக்கப்படுபவர்களாகவும்  உள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

ஆண் மையச் சூழலில் பெண்கள் தமது சிந்தனைகளையும் ஆண்களுக்கு தாரைவார்த்து கொடுத்தவர்களாகவே உள்ளனர். இவற்றில் இருந்து விடுதலை பெற விரும்பும் பெண்கள்  வெளியில் வந்ததும் அவளின் நியாயங்களை அலசி ஆராய்வதை விடுத்து அவதூறு விமர்சனங்களை முன் வைப்பவர்களாக  ஆண்கள்  மட்டுமன்றி பெண்களும் உள்ளனர்.

 குடும்பங்களில்  கணவன் மனைவி என்ற உறவு நிலைகளின் புரிதல், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய வளர்ப்பு முறை, வழிகாட்டல்  என்பன சீரான  நிலையில் இருக்குமாயின் குடும்ப வன்முறைகளை பெரும்பாலும் தவிர்க்க முடியும். குடும்பங்களில் மகிழ்வான சூழலை  உருவாக்க முடியும். அன்பு அரவணைப்பு,  பாதுக்காப்பு,  புரிந்துணர்வு, சமூகப் பிணைப்பு, ஒன்றிணைவு,  ஒருவருக்கு ஒருவர் உதவுதல்,  துன்ப துயர்களில் உடனிருத்தல் நட்பு ஆகியவற்றை உருவாக்க முடியும்

 எமது சமூகத்தில் தற்போது  புலம்பெயர் தேசங்களில் இருந்து வரும்  பணத்தில் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் போட்டி, பொறாமை என்பவை  குடும்பங்களின் நிம்மதியைக் குறைத்துள்ளன.  சமூக வலைத்தள பாவனை, தொலைபேசி பாவனை அதிகரித்த நிலையில் பெற்றோருக்கும் பிள்ளைக்குமான தொடர்பாடல், மற்றும்  கணவனுக்கும் மனைவிக்குமான தொடர்பாடல்  நிலை அருகி வருகின்றது. பெற்றோர்களே வழி  தவறும் நிலைக்கு சென்றால் பிள்ளைகளை  எப்படி  வழிப்படுத்த முடியும்?

தற்போது தமிழ் சமூகத்தித்தைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளின் பின்னணியிலேயே  அச்சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி பற்றிப் பார்க்க வேண்டி உள்ளது.  குறிப்பாக ,
1.பொருளாதார நெருக்கடி
2.வறுமை நிலை
3.பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலநிலை.
4. கணவனின்றிய நிலை - கடத்தல், காணாமல் போதல், கொல்லப்பட்டமை 
5. போர்ப்பாதிப்புக்கள்  (மாற்றுத்திறனாளிகள், அவயங்கள் இழந்த நிலை)
6. விவாகரத்து
7. குடும்பச் சிதைவுகள். (முறையற்ற உறவுநிலைகள் , பலதார மணம் , வாள்வெட்டுக்  குழு ) என்பன  பெண்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன
இவற்றை அடிப்படையாகக்  கொண்டு

1. பெண்களைப்  பாலியல் தொல்லைக்கு உட்படுத்தல்
2. கடனாளிகளாக்குதல் .
3  அவர்களின் பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்தல்
4. ஏமாற்றுதல்.

போன்ற  செயற்பாடுகள்  இடம்பெற்று வருகின்றன. உதவியும் ஒத்துழைப்பும் பொருளாதாரமும் இல்லாத சூழல் அவர்களை இவ்வாறான நிலைக்கு கொண்டு செல்கின்றது. இந்த நிலைமைகளை ஆண்கள் சாதகமாக்கிக் கொள்ள  பெண்கள் இடமளிக்கக் கூடாது.  எவ்வளவு தூரம் பாதுகாப்பையும் சுய பொருளாதார தேடலையும் ஏற்படுத்த முடியுமோ  அவற்றுக்கு உரிய  வழிகளை  உருவாக்க வேண்டும். அல்லது துறைசார்ந்த வழிகாட்டிகளைக் கண்டுபிடித்து அவர்களின் வழிகாட்டலுடன் பயணிக்க வேண்டும். ஒரு போதும் ஆண்களின்  இச்சைகளுக்கு  இசைந்து போகும்  சூழலுக்கு பெண்கள் தம்மைத் தள்ளக்  கூடாது .

தொழிற் சூழலில் பெண்கள் 

 கைத்தொழில்  பேட்டைகள், சுயஉற்பத்திக் குழுக்கள்,  பெரிய வணிக நிறுவனங்கள்,  சிறு  சிறு வியாபார தளங்கள்என பல நிறுவனங்களில் பெண்கள் பணி புரிகின்றனர். மேலும், தாதியர், சுத்திகரிப்பு  தொழிலாளிகள்,  நோயுற்றோர்  பராமரிப்பாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள்,   கூலித்தொழிலாளர்கள்  என்று   நீளும் பட்டியலில் பெண்கள் பல துறைகளில் பணி  புரிந்து வருகின்றனர் .

   தமது பொருளாதார நிலை, குடும்ப வறுமை மற்றும் கல்வி அறிவின் அடைப்படை என்பன பெண்கள் எந்த தொழிலில்   இணைந்து கொள்கின்றனர் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆயினும் அத்தொழில் துறைகளில்
1. ஆண்களை போன்று போதிய அளவு சம்பளம் அல்லது சம சம்பளம் வழங்கப்படுவதில்லை.
2. வேலை வாங்கும் நேரம் அதிகமாகவும் கொடுக்கும் சம்பளம் குறைவாகவும் உள்ளன.
3. இங்கு ஊழியர் சேமலாபா நிதியம்இ ஊழியர் நம்பிக்கை நிதியம், மருத்துவ கொடுப்பனவுகள் எதுவும்  வழங்கப்படுவது  இல்லை.
4.   8 மணத்தியாலயத்திற்கு  மேலாகவும் கட்டாய வேலை
5. குறிப்பிடும்  லீவு நாளில்  மேலதிக சேவை செய்யும் நிர்ப்பந்தம்
6. மேலதிக லீவுகள் நிராகரிப்பு.
7. சம்பள முரண்பாடு.
8. உணவு, தங்குமிடம், போக்குவரத்து பிரச்சனை .
9.பாலியல் சீண்டல்கள், வன்முறைகள், துஸ்பிரயோகங்கள். மிரட்டல்கள் , தண்டனைகள் , அவமதிப்புக்கள் , பழிவாங்கல்கள், நிராகரிப்புக்கள்                      ஜ (நேரடியாக  / மறைமுகமாக )
ஆகிய நெருக்குதல்களைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர்.  பெரும்பாலான நிறுவனங்களில்  இச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

பெண்களால்  இந்நிலைமையில் இருந்து விடுதலை பெறும்  வகையில் எந்தவொரு  வழிகாட்டலையும் சமூகம் கொடுக்கவில்லை.

அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம், புடைவை கடைகள், பாத்திரக் கடைகள், புத்தகக் கடைகள், சமையல் கடைகள், சிற்றுண்டி தொழிற்சாலைகள்,  வீட்டுப் பணிப் பெண்கள், சுகாதார சேவையாளர்கள், துப்பரவு பணியாளர்கள் தையல் நிறுவனங்கள் என்பன பெரும்பாலும் பெண்களின்  இரத்தத்தை  உறிஞ்சும் இடங்களாகவே உள்ள அதேவேளை அவை பெண்களின் ஆத்மாக்களை கொல்லும் இடங்களாகவும் உள்ளன.

பெரும் முதலாளிகளுக்கு பெண்களின் இவ்வுழைப்பு தான் தீனி போடுகின்றது என்பது தெரிந்தும் அவர்களை தமக்கு கீழ் இறுகக் கட்டி வைத்துள்ளனர் முதலாளிகள். மேலும், அவர்களுக்கான சுதந்திரம், ஓய்வு, பொருத்தமான இருப்பிடம், சுத்தமான மலசலகூடம், குடி தண்ணீர் என்பன வழங்கப் படாத நிலைமைகள் அதிகம் உள்ளன. இவற்றை சுட்டிக் காட்டினால் அவர்கள் தண்டனைக்குள்ளாவதும், மிரட்டப் படுவதும் இடம்பெற்று வருகின்றன. தவிர தென்னிலங்கையில் இருந்து வரும் பெண்கள் ''சுமைதாங்கி வியாபாரிகளாக'' அமர்த்தப் படுகின்றனர். கையில் பரிதாபத்துக்குரிய வகையில் குழந்தைகளை சுமக்கும் இவர்கள் வடபகுதிக்கு வெளியில் இருந்து வந்து  சந்தனக்குச்சி, கற்பூரம், சிறுவர் நூல்கள், சலவைத் தூள் போன்றவற்றின் விற்பனையாளர்களாக இருக்கின்றனர். தலைமறைவு முதலாளிகளின் தொழில் முகவர்களாக இப்பெண்கள் உள்ளனர். கிழிந்த ஆடைகளும்  விரிந்த அல்லது சுருண்ட  தலைமுடியும் காய்ந்து கருகிய வதனமும் சிவந்த வாயும், செருப்பற்ற காலும் ஒட்டி உலர்ந்த உடலும் வயிற்றிலும் கையிலும் குழந்தைகளை சுமந்த உருவமாகவே அவர்கள் வீதிகள் தோறும் பயணிக்கின்றனர். இப்பெண்கள் குறித்து சமூகத்தில் நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர்களைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. வீதிஓரங்களையும்  பஸ் தரிப்பு  இடங்களையும் தங்குமிடமாகவும் தீர்மானிக்கும் இவர்களின் உடல் உளம் சார்ந்து யாரும்  அக்கறைகொள்வதாகவும் தெரியவில்லை.

இதே போன்று அண்மைக் காலமாக சில தனியார் நிறுவனங்கள் வீட்டுப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்கும்   வியாபாரத்தை  ஆரம்பித்து உள்ளனர். இவ்வாறான தெரு வழி வியாபார சேவைக்கு இளைஞர் யுவதிகளை பயன்படுத்துவதுடன்  மாவட்டத்துக்கு மாவட்டம் தொழிலாளிகளை  பரிமாற்றம் செய்வதும் இடம்பெற்று வருகின்றது . குறிப்பாக மலையகம் மற்றும் தென்னிலங்கை பிள்ளைகளை யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணப் பிள்ளைகளை  வெளி மாவட்டம் அனுப்புவதும் நடக்கிறது. இவர்கள்  கொண்டு செல்லும் பொருட்களை எவ்வாறு எதெல்லாம் சொல்லி விற்க முடியுமோ அவ்வாறு விற்கும் திறனை வளர்ப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் விற்கும் பொருட்களின் அளவே அவர்களுக்கான மாதாந்த சம்பளத்தை தீர்மானிக்கிறது. இதனால் அவர்கள் பெறுனரை  வற்புறுத்தி  பொருள் வாங்க வைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்கள் பெற்றோருக்கும் சரி தமது பாதுகாவலருக்கு ம் சரி  தாம் உயர்ந்த நிறுவனத்தில் தொழில் புரிவதாகவும், பெரும் சம்பளத்தின் வருகைக்காக காத்திருப்பதாகவும், புரமோஷன் ஊடாக மாவட்டங்களுக்கு மாற்றம் பெறுவதாகவும் பல்வேறு பொய்களையும் கூறி  குறைந்த சம்பளத்தில் வருட ஒப்பந்தங்களுக்குள்  அகப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களை இதில் இருந்து விடுவிக்க முடியாதவாறு வருட ஒப்பந்தங்களை அந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.


 கல்வி நிறுவன சூழலில் பெண்கள்

பெண்கள் பங்களிக்கும் கல்வி நிறுவனங்கள் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், உயர்தர நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், எனப் பட்டியல் நீளும். இங்கும்  கல்வியைப் பெறுபவர்களாக பெண்கள் அதிகம்  உள்ளனர். ஆனால் அதிகாரத்தில் ஆண்கள்தான் அதிகம்  உள்ளனர்.

பாரபட்சம், ஆசிரியர் மாணவர் உறவுநிலை பாதிப்பு, ஆசிரியர் அதிபர் உறவு நிலை பாதிப்பு என்பன பல்வேறு காரணிகளால் இடம்பெற்று வருகின்றன.

1. மாணவிகளின் புள்ளிகளைக் குறைத்தல்
 2. தனி வகுப்பு  என்று கூறி  மாணவிகளை வீட்டுக்கு அழைப்பது
3. மாணவிக்கு ஊடாக தாயை வீட்டுக்கு அழைப்பது
4 தன்னுடைய வீட்டு வேலைகளை  செய்ய பணிப்பது
5 பாலியல் தேவைக்கு பயன்படுத்துவது
6 ஆபாசமாக கதையாடுவது
7. ஆபாச படங்களைஇ கதையாடலை பகிர்வது
போன்ற விடயங்கள்  ஆசிரியர் மாணவிக்கு இடையே பெரும் நெருடலை உருவாக்குகின்றன.

அதே நேரம் அதிகாரம் கொண்ட ஆண்கள் தமக்கு கீழ்  பணிபுரியும் பெண்களுக்கு மோசமான காரியங்களை செய்கின்றனர். திருமணமான பெண், திருமணமற்ற பெண், என்ற வயது வித்தியாசம் எதுவுமின்றி அது நிகழ்கிறது.

அது  தனியே பெண்களையும்  அவள் சார்ந்த குடும்பத்தையும் சிக்கலுக்குள் தள்ளி விடுகின்றது. பல்கலைக்கழகங்களிலும் கல்வியியற்கல்லூரிகளிலும்  இவ்வாறான நிலையினை  அவதானிக்கலாம். ஏனெனில் பல பெண்கள் இன்னும் புரிதலற்ற  வெறும் புத்தகப் பூச்சிகளாக உள்ளனர். வாழ்க்கை கல்வியை விட்டு விட்டு போட்டிக் கல்விக்காக வெறும் சடங்களாக இயங்குகின்றனர். புள்ளிகளுக்காக அதிகாரம் மிக்கவர்கள் அழைக்கும் இடங்களுக்கு செல்வதும் சேவகம் செய்வதுமாக உள்ளனர். குனிந்தும் வளைந்தும் குறுக்கியவர்களாகவும் உள்ளனர். துணிவற்ற மனநிலையில் எதனையும் உறுதியுடன் முகங்கொடுக்கும்  ஸ்திரம் அற்றவர்களாக  சின்னச் சின்ன ஆசைகளுக்கு போட்டி போடுபவர்களாக பல பெண்களை அவதானிக்க முடிகின்றது. கல்வி சார்ந்த  நிறுவனங்களும் எதிர்கால சமூக பிரஜைகளை சிறந்த சமூகமாக உருவாக்க தவறி விடுகின்றனர். அவர்கள் விடும் அதே தவறுகள் வழிகாட்டல்  இன்றி தவறும் நிலைகளாகவே தொடர்கின்றன.

உயர் அரச பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் தமக்கு கீழ் நிலையில் உள்ள பெண் ஆசிரியர்கள், மற்றும் தொழில் புரியும் பெண்களுக்கும் விதிக்கப் படும் நிபந்தனைகள்  அதிகாரம்  மிக்க தன்னிச்சை செயல்களாகும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வு, பொருத்தமற்ற  மற்றும்   திடீர்  இடமாற்றம் போன்ற காரணங்களால் இந்த சூழல் உருவாக்கப்படுகின்றது. குறித்த பெண்களை அவதூறு செய்யும் வகையில் கதை கட்டி விடுவது, ஆபாச இணையத் தளங்களில் அவதூறு பரப்புவது, மொட்டைக்கடிதம் அனுப்புவது, வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று பிரபல விடுதிகளில் தங்கி இருந்து  உல்லாசம் அனுபவிப்பது, முரண் நிலை ஏற்படும்  போது  மிரட்டுவது அச்சுறுத்துவது, போன்ற சம்பவங்கள் படித்த மற்றும் மேல்நிலை அதிகாரத்துவத்தின் மத்தியில் நிகழ்கின்றன. இவற்றைத் தடுக்க வேண்டுமாயின் பெண்கள் குழந்தைகள் மீதான துஸ்பிரயோகங்கள் நிகழும் போது  1929  அல்லது அவசர அழைப்பு 119  இலக்கங்களில் போலீசை அழைத்து பாதுகாப்பைத் தேடும் துணிவை பெண்கள் உருவாக்க வேண்டும் .

இது குறித்து '' சாப்பாட்டுக் கடையில் வேலை செய்யும்  பெயர் குறிப்பிட விரும்பாத  பெண் ஒருவர்   குறிப்பிடுகையில்  '' எனது கணவர்  2009 இல் காணாமல் போயிட்டார்.  எனக்கும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்  அவர்கள் படிக்கின்றனர். எனக்கும் பெரிசா படிப்பு இல்லை.  யாரையும் எதிர்பார்க்கும் நிலையில் உதவிகள் இல்லை. புருசன்ர   ஆட்களிட்ட கேட்டு புடைவைக் கடைக்கு  வேலைக்கு போனான்.   முதலில்  கொஞ்ச நாளுக்கு  வாங்கோ பிறகு தான் எழுத்து மூலம் சம்மதம் வாங்குவோம் என்று  கடையில் சேர்த்தார் . அவருக்கு 60 வயசு இருக்கும் ஆனால் வயது காட்டாது குறைஞ்ச வயசுக்கு காரன் மாதிரி தான் இருப்பார்.   பிறகு பிறகு தொடர்ந்து என்னை அங்கையே  வேலைக்கு எடுத்திட்டார்.  சரியான சின்னக் கடை தான்.   சுதந்திரமாக ஓடி திரிஞ்சு வேலை செய்ய முடியல. முதலாளியை முட்டிக் கொண்டு  தொட்டுக் கொண்டு தான் போய் வர வேணும் அடிக்கடி நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வியாபாரத்தில்   கவனம் செலுத்த  எனக்கு அது இடைஞ்சலாய் இருந்தது. கஷ்டமாயும் இருந்தது. வீடு போனால்  ஒரே குழப்பம் . பிள்ளை கேப்பாள்  என்னம்மா  ஒரு மாதிரியா இருக்கிறீங்க எண்டு.   நான் வேலை அதிகம் களைப்பாய் இருக்கு, எண்டு  பொய் சொல்லுவன்.இரவு நேரம்  குடும்ப நிலையை நினைச்சு அழுவன்.பிள்ளைகளுக்கு அது தெரியாது அரைச் சம்பளம்  எண்டாலும்  நாள் சம்பளம் தரச்சொல்லி  தான் கேட்டனான். அதிலை குறை விடல. அவரின்ட செயல்கள், கதைக்கும்  விதம் எனக்கு பயமாய் இருக்கும். கடைக்கு ஆட்கள் வந்தால் தான் எனக்கு உயிர் வந்த மாதிரி நிம்மதி வரும். சனம் வராத நேரம் என்னை அறியாமல் பயம் வரும். அந்த நேரங்களில அவரின் செயற்பாடுகள் இயல்பிற்கு  மாறி இருக்கும். மாதவிடாய் நேரம் ஏலாது எண்டு தெரிஞ்சால்  அதைபற்றி  கேட்டு கேட்டு மனசை உளைச்சல்   செய்வார். அதனால் அந்த நாளில் நான்  லீவு சொல்லுவன். ஏனெண்டால்  கோவில் உடுப்புகளும் விற்கும்  இடம்   தெரிஞ்சு  கொண்டு போறது மனசுக்கு கஷ்டமாய் இருக்கும் .பாத்ரூம் வசதி இல்லை. பொது மலசல கூடம் தான் போகவேணும் . நல்ல சம்பளம் எண்டு பயந்து பயந்து  வேலை செய்து வருத்தக்காரி ஆகினால்  பிள்ளைகளிண்ட  எதிர்கால நிலை என்ன என்று நினைச்சு  உபத்திரவம் தாங்க முடியாமல்  நான் வேலையை விட்டிட்டன்.  அது பரவாயில்லை 'என்ர  பிள்ளை மாதிரிதானே  நீ   வேலை செய் உனக்கு என்ன வேணுமோ செய்து தாறன்  வா வா எண்டு  கூப்பிடுவார். இரவிலையும் நேரம் கெட்ட நேரத்தில் போன் அடிப்பார். நான் இரவில  ஆன்சர் பண்றது இல்லை.அப்பிடியே வேலையை விட்டிட்டன்

பிறகு வேற  சாப்பாட்டு கடை ஒன்றுக்கு  வேலைக்கு போனான் . அங்கை  சாப்பாடு பரிமாறவேணும், தேநீர் போட வேணும், மேசை துடைக்க வேணும் இதுப்பரவு செய்ய வேணும்   வேலை முடிய சட்டி பானை கழுவ வேணும்  இப்படி வேலை இருக்கும். காலையில் தொடக்கி  இரவு 6 அல்லது 7 மணி வரை வேலை இருக்கும்.கிழமையில் ஒரு நாள்  லீவு. 25.000 சம்பளம் வரும். 3 நேரம் சாப்பாடும் வரும். மேலதிக சாப்பாடு இருந்தால்   பிள்ளைகளுக்கும் தருவினம்.  ஓய்வு எண்டதே இருக்காது. அவசர லீவு தவிர வேற லீவு இல்லை.சனம் அதிகமாக வரும் நேரம் சரியான கஷ்டமாய் இருக்கும். அந்த நேரம் முதலாளி இல்லாட்டியும்  மனேஜர் பயங்கரமாய்  பேசுவார். ஆக்கள் பார்க்காமல் பொருத்தமில்லாமல் பேசுவார், சாப்பிடக் கூட விடமாட்டார்.

அவர் சந்தோசமான நிலையில் இருக்கும் பொது வழிஞ்சு  வழிஞ்சு கதைப்பார், நக்கலாக  ஆபாசமாக கதைப்பார், நாங்கள் அலங்காரமாக வடிவாக  நல்ல உடுப்பு போட்டு வந்தால் பிடிக்காது. இங்க அழகு ராணி போட்டி  நடக்கிறதில்லை. என்று மனம் நோகக் கதைப்பார்.  நாங்கள் திருப்பி கதைத்தால்    வேலை எண்டால்   அப்பிடித்  தான் விரும்பினால் வேலை செய் அல்லாட்டி வேலையை விட்டுட்டு  போ  என்டுவார் . வீட்டில இருந்து அவசரம் என்று போன் வந்தால் கதைக்க முடியாது. சொந்த பந்தம் வந்து சந்திக்க முடியாது.

 ஆனால் ஒரு நாள்  முழுமையாக முடியாமல்  ஒரு மாத சம்பளம்  தரமாட்டினம். அதால முழுசாக  மாதத்தை முடிச்சிட்டு  வேலையால நின்றுவிட்டன். ஆனாலும் சம்பளம் முழுக்க தரவில்லை. .  பொய்க்கு  கள்ள  பட்டம் கட்டி அரைச் சம்பளம் தான் தந்தவர். திரும்பி கேட்ட போது  ''பிறகு வா பிறகு வா ''என்று   கடி நாய் மாதிரி அலைக்கழிச்சார் அதோட பிறகு நான் போகாமல் விட்டிட்டன் .

 பெண் ஊடகவியலாளர்  ஒருவர் கருத்து தெரிவிக்கையில்  'பெண்கள் தமது மனம் சந்தோஷிக்கின்ற வகையில்  வேலை செய்யும் வகையில்  வேலைத்தளங்கள் இல்லை என்பது உண்மை தான். அவர்கள்  சுயமாக உருவாக்கிய தமது வேலைத்தளங்களில் சுதந்திரத்தையும் மன விடுதலையையும் திருப்தியையும் பெற்றுக் கொள்கின்றார்கள்.ஆனால்  தலைமைப் பீடங்களாக ஆண்கள்  உள்ள இடங்களில் அந்த நிலை மிக மிக அரிது .   பெண்கள்  எப்போதும் தம்முடைய தொழில்  உரிமை, கடமை சார்ந்து  எடுத்த பொறுப்பினை தெளிவாக புரிந்து கொண்டு  இயங்க வேண்டும் இன்னொருவரின் வற்புறுத்தலில்  பணியொழுங்கை மீறி ஒரு போதும் பணி புரிய முடியாது. இந்நிலையில்   சில பெண்கள் தம்முடைய அதிகாரிகளிடமிருந்து நல்லுறவைப் பேணவும் இ நன்மதிப்பையும் நலன்களை  பேணவும் தமது சுய ஒழுங்கு   கட்டுப்பாட்டை விட்டுக் கொடுப்பவர்களாகவும்  சமரசத்தித்திற்கு உடன்படுபவராகவும்  பேரம் பேசுபவர்களாகவும் உள்ளனர். இங்கு அவர்கள் தம்முடைய ஊதியத்தினையும்  அதிகாரியின் பவரையும்  பலத்தினையும் பெற்றுக் கொள்பவராக உள்ளார். இந்த மனநிலை  அதே நிறுவனத்தில் பணி புரியும்  ஏனைய பெண்களையும்  பாதிக்கச் செய்கிறது .

சமரச உடன் பாட்டிற்கு  சம்மதிக்காத  பெண்ணை  பழிவாங்கும் வகையில் அதிக வேலைச்சுமையை  கொடுப்பது . கொடுத்த பொறுப்புக்களை  மற்றும் தீர்மானிக்கப்பட்ட வளங்களை மாற்றம் செய்வது அல்லது பொறுப்புக்களை நீக்கி தனிமைப்படுத்துவது,  சக ஊழியர் முன்னிலையில் வசை பாடுவது அல்லது அவர்களுடன் முரண்பாடுகளை தோற்றுவிப்பது, சம்பளத்தினை  இடை நிறுத்துவது அல்லது தேக்கி வைப்பது, விருதுகள், புலைமைப் பரிசில்களை   நிராகரிப்பது, மருத்துவக்கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை நிறுத்துவது, குடும்பம் மற்றும் பின்னணி சார்ந்து விமர்சிப்பது,  அவதூறுகளை பரப்புவது , வலைத்தளங்களை  பயன்படுத்தி  எச்சரிக்கை செய்வது, அச்சுறுத்தல் விடுப்பது, ஆபாசப் படுத்துவது , மேலதிக  பொறுப்புக்களை சம்பந்தம் அற்ற வகையில் ஒப்படைப்பது, குறித்த நபரின் கருத்துக்களை புறக்கணித்து அலட்சியப்படுத்துவது, பல்வேறுபட்ட இலக்கங்களில் இருந்து தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுப்பது அல்லது  தவறிய அழைப்பில் தொல்லை கொடுப்பது, விபத்தினை ஏற்படுத்துவது, பணியில் இருந்து வெளியேறும் வகையில் மனஉளைச்சலைக் கொடுப்பது அல்லது பணியில் இருந்து  நிறுத்துவதுடன் நற்சான்றிதழ் மற்றும் அனுபவச்சான்றிதழ்  நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளால் பெண்கள் பழிவாங்கப் படுகிறார்கள்.  மேலும் போதிய சம்பளம் இன்மை, தகுதிக்கு உரிய சம்பளம்  இன்மை, குறிப்பாக பெண்களுக்கு என்று  மலசல கூட வசதி இன்மை, மாத விடாய்க் காலத்தில் பொருத்தமான வசதிகள் மற்றும் லீவுகள் இன்மை, சம  ஆண் பணியாளருக்கு  வழங்கும் அதே சம்பளம் பெண் பணியாளருக்கு வழங்காமை    போன்றவையும்  ஊடக நிறுவனங்களில்  இடம்பெற்று வருகின்றன.  இவற்றினை சுட்டிக் காட்டியோ தட்டிக் கேட்டாலோ அதற்கான தீர்வாக அவர்கள் தருவது நாம் அந்த பணியில் இருந்து விலகிக் கொள்வது மட்டுமே. சமுதாய மாற்றம் கருதி  நாட்டின் நலம் கருதி செயற்பட வேண்டிய ஊடகங்கள் பெண்கள் நிலை சார்ந்து உரிய கவனம் கொள்ள தயாராக இல்லை. ஊடக அறம் சார்ந்து  பெண்களின் ஆளுமை சார்ந்து   கவனம் கொள்ள ஆணாதிக்க ஊடகங்களுக்குத் தெரியவில்லை. பெண்களை, சேவகியாகவும், கவர்ச்சியாளராகவும், விற்பனைப் பண்டமாகவும் சித்தரிக்கவும் பயன்படுத்தவும் முயல்கின்றனரே தவிர அவளையும் இந்த சமூகத்தின் தூணாக கருத தயாரில்லை.

உதாரணமாக கடந்த 2015 இல்  இடம்பெற்ற  பாராளுமன்ற தேர்தலின் போது  பெண் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்துக்கு தேவை என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கும்படி யாழ்ப்பாண பத்திரிகையின் ஆசிரியர் ஒருவரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அந்த வேளை ''பாராளுமன்றத்துக்கு பெண்கள் போய் என்ன செய்யப் போகின்றனர்? ஆண்களால் செய்ய முடியாததையா அவர்கள் செய்யப் போகின்றனர்? அவர்களால் என்ன செய்ய முடியும்? '' என்று அவர் பதிலளித்தார். இந்த  மனநிலையில் ஒரு ஊடகத்தின் ஆசிரியர் இருக்கும் போது  இந்த ஊடக நிறுவனத்தில்  எவ்வாறு அவரால் பெண்களை பணிக்கு அமர்த்த முடியும்? பாராளுமன்றம் போய்  செயலாளியாக ஆளுமையாளராக இந்த சமூகத்தில்  பெண்களை உருவாகுவதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத  அதிகாரம் பெண்களை கூலி ஆட்களாகவே  வைத்திருக்க விரும்புகின்றது. அதன் பின் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் போதும் பெண் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டது. 2018 உள்ளுராட்சி சபை  தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் கட் டாயமாக்கப்பட்டதும்  முன் பின் ஆராய்தலின்றி  அனுமதியின்றி அரசியல் கட்சிகள் யாவும் பெண்களின் வீடுகளையும் வாசல்களையும் தேடிப்  பேரம் பேசவும் கெஞ்சவும்  தொடங்கினார்கள்.  இது பெண்களின் ஆளுமைக்கும் சமூக விடுதலைக்கும் மிகப் பெரும் களமாகவும் சவாலாகவும் அமைந்துள்ளது என்கிறார்.

 மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் பெண்களுக்கான வன்முறையின் வடிவங்களாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான சந்தோசமான சுயாதீனமான  மனநிலையினை கொடுக்கும் களங்களாக இல்லை என்றே சொல்ல முடியும். தொழில் விடயமன்றி வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களுடன் கதையாடுவதே பல தொழில்  நிறுவனங்களில்  தடைசெய்யப் பட்டு உள்ளது. தொழிலாளிகளுக்குள் பரஸ்பரம் உரையாடுதல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தமக்கான முழு உரிமையுடனும் கடமையுடனும் பொறுப்புடனும் தங்கள் பணியை  நிறைவேற்ற திணறுகின்றனர். ஒரு கடை வாசலில்  அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெண்ணை இன்னொரு ஆண்  ஊழியன் சீண்டினாலும் அவள் அதில் தனது எதிர்ப்பை காட்ட முடியாதவளாய் தான் உள்ளாள். தன்னுடைய முதலாளியின் எதிர்பார்ப்புக்கு கட்டளைக்கும் உட்பட்டு அவள் வெளிப் பார்வையில் தன்னை மகிழ்ச்சி கரமாக காட்டிக் கொள்கின்றாள். அதன் பின்னால் அவளிடம் ஆயிரம் துயரங்களும் வலிகளும் தேங்கிப் போய் நீள்கின்றன.

தொன்மையும் பண்பாட்டுச் செழுமையும்  மிக்க ஒரு தேசிய இனம் நமது தமிழ் இனம். இன அழிப்புக்குட்பட்டு  எமது இனம்  பாரிய பண்பாட்டுச் சிதைவை எதிர்நோக்குகின்றது .தமிழ் சமூகத்தை  மீளக் கட்டி எழுப்பி  தமிழ்த் தேசத்தை நிர்மாணிக்கும் பெரும் பணியில்  நாம் முன் செல்ல வேண்டும். இப் பணியை  நாம் மிகுந்த அவதானத்தோடும்  கெட்டித் தனத்துடனும், கற்பனையுடனும், செய்ய வேண்டும். இந்தப் பணியில்  நமது சமூகத்தில் பாதிப்பகுதியினராக விளங்கும் பெண்களின் பங்கு இன்றியமையாதது. ஆகவே அப்பணியில் பெண்களையும் உள்வாங்குவது அவசியமாகும்.  சமூக மாற்றப் பணியில் பெண்களின் சக்தியை மீளக் கட்டி எழுப்புவது என்பது  அத்தியாவசியம் ஆகும்.  பாரம்பரிய சமூக நியமங்களின் காரணமாக ஒடுக்கப் பட்டு, வெட்கம் பயம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டு வாழ்ந்த பெண்கள்   தமது வெட்கம், பயம் நீங்கப் பெற்று  ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெற்று தமது ஆற்றலை உணர்ந்து கொண்டார்களாக . உருவாக வேண்டும்.  ஆயுதப் போராட்டக் காலங்களில் எமது பெண்கள் இவ்வாறான வளர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.  ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும் அவர்களை மீண்டும் பழைய கட்டுப்பாட்டுக்குள் சமூகம் தள்ள முற்படுவது எமது தேசத்தின் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு பாதகமாகவே முடியும். 
 
இன்று நம் சமூகத்தில்  பெண்கள் பாதுகாப்பற்று வாழ்வது  பெரும் பிரச்சனையாக உள்ளது . பல இடங்களில் பாலியல்  துஸ்பிரயோகம்  எனும் பெரும்  சீரழிவை எதிர் நோக்குகின்றார்கள். தாய்மார் தமது பெண் பிள்ளைகளின்  பாதுகாப்பு பற்றி பெரும் அச்சத்துடன் சீவிக்கின்றார்கள். இன அழிப்பின் காரணமாக  எம் மத்தியில் 90,000 அளவிலான  பெண் தலைமைக் குடும்பங்கள்  மனச் சுமைகளோடு  தமது எதிர் காலத்தை  மீளக் கட்டி அமைக்க முடியாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள். ஆனால்
 இவற்றை எண்ணி சோர்ந்து போகும் தருணம் அல்ல இது. மெல்ல மெல்லமாக போரினால்  பாதிக்கப் பட்ட பெண்களுடன். அவர்களை ஆற்றுப் படுத்தும் வேலைகளை   திட்டங்களை செய்ய வேண்டும்
  .
 வீடுகளில் நிகழும் வன்முறைகள், பாடசாலைகளில் நிகழும் துஸ்பிரயோகங்கள், போக்குவரத்தில் உருவாகும் இம்சைகள், அலுவலகங்களின்  மாயை வலையில் இருக்கும் பாலியல் சீண்டல்கள், சுரண்டல்கள், இலஞ்சங்கள், என்பவற்றுக்கு ஆதரவானவர்களாக இருக்கப் போகின்றோமா? அல்லது இவற்றுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுப்பவர்களாக எம் சமூகத்தை  சுகாதாரம் மிக்க, ஆரோக்கியமான வளர்ச்சிமிக்க சமூகமாக உருவாக்கும் சமூக மாற்றத்துக்கான நலன் விரும்பியாக இருக்க போகின்றோமா?.  என்பதை நாம்   சிந்திக்க வேண்டியது அவசியம் .

சமூகத்தில் பெண் தனக்கான சகல உரிமையிலும் கடமையிலும் பொறுப்புடன் இருக்க வேண்டும். அப்போது தான் அவள் தன்  மீது வீசப்படும் ஒவ்வொரு எறிகணைக்கும் பதில் தாக்குதல் புரிபவளாக மாற முடியும் .

யாழ்.தர்மினி பத்மநாதன்  
வருகை விரிவுரையாளர், ஊடகத்துறை
நிமிர்வு மார்கழி 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.