ஆசிரியர் பார்வை
தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் தமிழ் மக்கள்
மீண்டும் ஒரு தடவை சர்வதேச முன்றலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். சர்வதேச விசாரணை கோரியும், காலநீடிப்பு வழங்க வேண்டாம் என வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் பெருமளவு மக்கள் திரண்டு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தினார்கள். ஐ.நா மனிதவுரிமைக் கவுன்சில் வழமைபோல தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
“பொறுப்புக்கூறலில் இலங்கை மெதுவாக செயற்படுகிறது.வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும், உள்ளக நீதிப்பொறிமுறையில் உரிய நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.” என ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் இந்த 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து பகிரங்கமாகவே சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கு பதிலடியாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறைக்கு ஒருபோதும் ஏற்க மாட்டோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனீவாவில் வைத்து கூறியிருக்கிறார். சர்வதேசத்தின் கோரிக்கைகள் எவற்றுக்கும் இலங்கை செவிசாய்க்கப் போவதில்லை என்பது இதன்மூலம் அப்பட்டமாக தெரிகிறது.
அதேவேளை இக்கூட்டத் தொடருக்கு முன்னதாக சிறீலங்கா அதில் பங்கு பற்றக் கூடாதெனவும் அங்கு கொண்டு வரப்படும் பிரகடனத்துக்கு இணைஅனுசரணை வழங்கக்கூடாதெனவும் தெற்கில் பல குரல்கள் ஒலித்தன. இந்த ஆண்டு சிறீலங்காவுக்கு மேலும் ஒரு வருடம் காலநீடிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அடுத்த வருடம் அரசாங்கம் இதில் பங்கு பற்றுமா என்பது கேள்விக்குறியே. அப்படி நிகழுமானால் ஐ.நா.ஊடாக சிறீலங்காஙவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சிறீலங்காவின் நட்பு நாடுகள் உடன்படுமா என்பதுவும் கேள்விக்குறியே.
தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழிக்க சிறீலங்கா அரசாங்கத்துக்கு உதவிய நாடுகளிடம் எமக்கு நீதியைப் பெற்றுத்தாருங்கள் என்று கேட்கும் நிலையில் நாம் இருப்பது தான் வேதனையானது. அந்த நாடுகள் இப்போது நல்ல வேடம் போடுகின்றன. தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் மாறி மாறி வருகின்ற சிங்கள ஆட்சியாளர்களும் ஒரே கொள்கையினையே பின்பற்றி வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து தமிழ்மக்களின் நீதி கேட்கும் குரல்களைப் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார்கள்.
இருந்தாலும், இவர்கள் எல்லோருக்கும் கேட்கும் படியாக எமது கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் உரத்துச் சொல்வோம். எமக்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடர வேண்டியது அவசியம். அதற்கான பொது முன்னணி ஒன்றை த.தே.கூட்டமைப்பு உட்பட்ட முக்கிய அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் உருவாக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் எமது பிரச்சினைகள் பேசப்படும் போது அது சர்வதேசத்தில் இயங்கும் முற்போக்கு சக்திகளிடம் போய்ச் சேரும். அதனூடாக அவர்களுடன் அணியமைத்துக் கொண்டு எமக்கான தீர்வை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்வோம்.
செ.கிரிசாந்-
நிமிர்வு பங்குனி 2019 இதழ்
Post a Comment