தனிமனித அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி




இன்றைய நவீன சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தைத் தூண்டும்  முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நின்று அரசியல், சமூக, பொருளாதார ,கலாச்சார மாற்றங்களைத் தூண்டும் நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது. தனிமனிதர்களின் நடத்தை, செயற்படும் விதம், வெளிப்படுத்தும் திறமை என்பவை சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். தனி மனிதனின் விருத்தியும், முன்னேற்றமும் மாற்றமும், கொள்கைகளும், அறிவியலும் பிரதிபலிக்கும் இடம் சமூகம் ஆகும். எனவே தான் மனிதர்கள் தனித்து வாழ்வதை விட்டு சமூகத்தில் நிலைத்து வாழ தலைப்பட்டுள்ளனர்.

காலம் செல்ல  செல்ல தனிமனிதனின் தேவைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் பல்வேறு தொழில்களைத் தேடி  சமூக நிறுவனங்களை நாடினான். அவை தனிமனிதனுக்கு உயர் அந்தஸ்தை வழங்கின. மேலும்,  என்ற கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டோட்டில் “மனிதன் ஒரு சமூக பிராணி” என எடுத்து கூறினார். தனிமனிதர்களின் அபிவிருத்தியே சமூக அபிவிருத்தி ஆகும்.

மனிதனானவன் தனது வாழ்வில் அடைந்த முன்னேற்றங்களுக்கும், அறிவியல் சார் பரிமாண வளர்ச்சிக்கும் பிரதான காரணம் கல்வி ஆகும். அந்த வகையில் கல்வி என்பது அறிவை மட்டும் அல்லாமல் மாணவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதைப் பற்றி கற்க உதவுகின்றது.  வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவுகின்ற விழுமியங்களை கற்க உதவுகின்றது.  சவால்களை எதிர்கொள்ளும் தன்மையை வளர்க்க உதவுகின்றது.  மனிதன் அவற்றை சமூகத்தில் பயன்படுத்த எத்தனிக்கும் போது அது சமூக வளர்ச்சியாக உருமாறுகின்றது.

அடுத்து தனிமனிதனது தேவை என்பது மிகப்பெரியது. அதனை நிறைவேற்ற மனிதன் பல்வேறு வளங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு தனிமனித தேவையை போன்றே ஒரு நாட்டினதும், பிரதேசத்தினதும் தேவையும் மிக பெரியது. எனவே இதனை  தனிமனிதன் நிறைவேற்றும் போது நாட்டின் தேவையும் நிறைவேற்றப்படுகின்றது.

மேலும் ஒரு தனியாள் வருமானம் அதிகரிக்கும் போது அது ஒரு நாட்டின் தேசிய வருமானத்திலும் செல்வாக்கு செலுத்தும். தனிமனிதனின் வருமானத்தை ஆதாரமாகக் கொண்டு தான் ஒரு நாடு “பொருளாதார வளர்ச்சியடைந்த நாடு” என்ற பெயர் பெறுகின்றது. உலக பொருளாதாரம் நாடுகளுக்கிடையில் போட்டி மிக்கதாகவும் நாடுகளிடையே பல வகையிலும் இணைப்புற்றதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் தொழிற் பயிற்சி மிக்கவர்களாக இருப்பதன் மூலமே ஒரு நாடு பொருளாதாரத்தில் வெற்றி காண முடியும். இதனால் தொழிலாளர்களின் உழைக்கும் சக்தி அதிகரிப்பதோடு அவர்களது  வாழ்க்கைத்தரம் உயர்கிறது. மேலும், வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.

ஒரு தனியாள் சமூகத்தோடு இணைந்து  வாழ்வதற்கு தேவையான சமூக, சமய, கலாச்சார, பண்பாடுகள், ஒழுக்க கோவைகள் மற்றும் சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களைக் கற்று தானும் ஒரு அங்கத்தவனாக வாழ்வதற்கு  முயலும் செயன்முறையே “சமூகமயமாக்கல்” எனப்படும்.

எனவே ஒரு தனிமனிதனை சமூகமயமாக்குவதில் சமூக நிறுவனங்களான பாடசாலை, குடும்பம், ஊடகம்,சகபாடிகள், கல்வி நிலையங்கள், ஆலயங்கள் என்பன அளப்பரிய பணியை செய்கின்றன. எனவே ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வு சமூகமயப்படுத்தும் போது தான் ஆரோக்கியமான சமூகம் உருவாகின்றது. தனிமனிதனின் நற்பழக்கங்கள், நடத்தை கோலங்கள்,  சடங்கு சம்பிரதாயங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்மைகள், சமூகத்தோடு இணைந்து வாழும் நடைமுறைகள், சிந்திக்கும்ஆற்றல் என்பவை சமூக அபிவிருத்தியைத் தீர்மானிக்கின்றன. எனவே சிறந்த சமூகத்தை நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு காத்திரமாக அமைய வேண்டியுள்ளது.

ஒரு சமூகம் அரசியல், பொருளாதாரம், கலை கலாச்சாரம், குடிப்பரம்பல், பௌதீகவியல், உற்பத்தி,  வர்த்தகம், நுகர்வு, என்பனவற்றில் கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து செயற்படும் போது  வளர்சியை தொடுகின்றது. இன்றைய காலத்தில் தொழிநுட்பம் சமூக அபிவிருத்தியில் பெரும் பங்கெடுக்கின்றது. அதாவது நிலாவை பார்த்து  உணவுண்ட மனிதன் இன்று நிலாவுக்கே சென்று கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளான். மற்றும் மருத்துவ துறையில் நோய்ச்சிகிச்சை, சந்திரசிகிச்சை,  என்பவற்றில் புதிய  தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றது.

அடுத்து ஒரு தனிமனிதன் தனிப்பட்ட முயற்சியால் பொருளாதார, அரசியல், கல்வியியல், சட்டத்துறையில் அடையப்படும் வெற்றி, அறிவு பெருமை என்பன ஏதோ ஒரு வகையில்  ஒரு சமூகத்தின் விருத்தியை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் சில எடுத்துக்காட்டுக்களை நோக்குவோம். பாகிஸ்தானைச் சேர்ந்த மாலாலா என்ற முஸ்லிம் மாணவி பெண்கல்விக்காகப் போராடி பல வெற்றிகளை அடைந்துள்ளார். டாக்டர் அப்துல்கலாம், இந்தியாவின் ஜனாதிபதியாகவும், உலகின் விஞ்ஞானியாகவும், மற்றவர்களுக்கு சிறந்த  எடுத்துக்காட்டாளராகவும் திகழ்ந்தார்.  இவர்கள் ஒவ்வொரு தனிநபர் முயற்சியும் சமூகத்தில் வளர்ச்சியாக மாறும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்.

எனவே தனிமனிதனது செயற்பாடு ஒரு சமூகத்திலும் ஒரு சமூகத்தின் செயற்பாடு ஒரு தனிமனிதனிலும் எந்தளவு செல்வாக்கு செலுத்தியுள்ளது  என்பதை  எம்மால் ஊகித்து பார்க்க முடிகின்றது. எனவே ஒரு தனிமனிதனால் எய்தப்படுகின்ற வெற்றிகள் மற்றும் மாற்றங்கள், அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்தும் நிச்சயம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கி.சிவரஞ்சினி,
கல்வி பிள்ளை நலத்துறை (சிறப்பு கற்கை), கிழக்குப்பல்கலைக்கழகம்.
நிமிர்வு பங்குனி 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.