கிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்
இலங்கையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமலை ஆகும். கிழக்கு மாகாணத்தின் பெரிய தலைநகரமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. வடக்கே வடமாகாண எல்லையிலிருந்து தெற்கே தென்மாகாண எல்லை வரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது. இம் மாகாணத்தினுடைய அதிகார பூர்வமான மொழிகளாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகியவை காணப்படுகின்றன. இலங்கையில் புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழரின் பல முக்கிய வரலாற்று தடங்களை தன்னிடம் கொண்டதாக கிழக்குமாகாணம் காணப்படுகிறது. இத்துடன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என பல் சமூக பண்பாட்டுப் பின்புலத்தை கொண்டதாகவும் விளங்குகிறது.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் போரும் அதனுடைய தாக்கவன்மை மிக்க செயற்பாடுகளும் அதனை வெகுவாக பாதித்தமை முக்கியமான விடயமாகும். அதன் பின்னரான தமிழர் அரசியல் மற்றும் இலங்கையின் பூகோள அரசியல் தாக்கங்களும் கிழக்கு மாகாணத்தையும் அதனுடைய மக்களையும் வெகுவாக பாதித்தன. தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் துரிதகதியில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டதும், ஏற்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை கட்டமைப்புகளிலும் அதனுடைய பொருளாதார மற்றும் மனித வளங்கள் மீதும் பல மாற்றங்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட்டன.
இந்தவகையில் போரினது இறுக்கமான கட்டுக்குள்ளும் போரியல் காரணிகளின் தாக்கங்களுக்குள்ளும் ஒரு குறுகலான நெருக்கடிமிக்க பாலத்தின் ஊடாக பயணித்த மக்கள் கூட்டம் விரிவடைந்த புதிய கட்டமைப்பினுடாகவும் உலகமயமாக்கல் சிந்தனைகளுக்குள்ளாகவும் புதிய பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களுக்கு ஊடாகவும் பல வர்த்தக பொருண்மீய திட்டங்களையும் கடந்து பயணிக்க வேண்டிய தேவைப்பாடு தோன்றியது. இதனைக் காரணங்களாகக் கொண்டு நவநாகரீக சிந்தனைவாத அடிப்படையில் அமைந்த பண்பாட்டியல் மாற்றங்கள் பல்வேறு ஊக்கிகளின் மூலமாக மக்கள் மத்தியில் விதைக்கபட்டது முக்கிய அம்சமாகும்.
இதில் முதலாவதும் முக்கியமானதுமாக விளங்குவது, தொ(ல்)லைக்காட்சி இதனுடைய வரவு என்பது போருக்கு முற்பட்ட காலத்திலே அமைந்திருப்பினும் கேபிள் (Cable Tv) இணைப்புக்கள் மற்றும் செயற்கைக்கோள் (Dish Antenna) இணைப்புகள் போரின் பின்னரே பெருமளவுக்கு ஏற்பட்டது. இதிலும் அதிகமாக இந்திய தொ(ல்)லைக்காட்சி அலைவரிசைகளின் மூலமாக ஒளிபரப்பப்படும் தொடர் நாடகங்களும் (Tele-Drama) சில மெய்மை நிகழ்ச்சிகளும் (Reality Show) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.அவற்றின் மூலமாக போதிக்கப்படும் பேதமையான கருத்தாடல்களும், போலித்தனமான ஆடம்பரங்களும், பகட்டான வாழ்வியல் சித்தரிப்புக்களும், தவறான காதல் கோட்பாடுகளும், முறையற்ற மனித வாழ்வியல் நடத்தைப் போக்குகளும் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டன. அவற்றின் ஊடாக மக்களின் மனோவியல்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அடிப்படையான பூர்வீக வாழ்வியலின் மீதான பற்றுதலை விட்டு விலகி அவர்களைப் பயணிக்க வைத்துள்ளது எனலாம்.
தொடர் நாடகங்களிலும் (Tele-Drama) பிரபலமான மெய்மை நிகழ்ச்சிகளிலும் (Reality Show) காண்பிக்கப்படும் நிகழ்வுகளும் செயற்ப்பாடுகளும் கவர்ச்சி மிக்கதாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் தமது வாழ்வியலையும் அவற்றைப் போன்று அமைத்து கொள்ள தூண்டும் அளவுக்கு மக்கள் மத்தியில் கருத்தியலை ஆழமாக வேரூன்ற வைத்திருப்பதைக் காணமுடிகிறது. இதன் மூலமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகளும் வன்முறைப்போக்கான வாழ்வியல் முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் பிரகாரம் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. இதில் 16 முதல் 30 வயது வரையிலான இளைஞர் யுவதிகளே அதிகமாக தற்கொலைகளில் மரணிப்பதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான பொருளாதார நிலமையும் ஒரு காரணமாகின்றது. கிழக்கு மாகாணமானது கடல் வளத்தினையும், நன்நீர் வாவிகளையும், பசுமையான வயல்நிலங்களையும், மேய்ச்சல் நிலங்களையும், கால்நடைகளையும் கொண்டிருக்கின்ற பொழுதும் பொருளாதார ரீதியான வீழ்ச்சி அடைந்துள்ளது. இது எவ்வாறு சாத்தியம் ஆகும்என்ற கேள்வியானது அனைவரது மனங்களிலும் எழுவது இயல்பானது தான். இதற்குப் பல காரணிகள் பின்புலத்தில் காணப்படுவதை உன்னிப்பாக நோக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். தமிழர் மரபுவழி பண்பாடுகளையும் கலைகலாச்சார அம்சங்களையும் பல பூர்வீக வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களையும் தன்னகத்தேகொண்ட கிழக்குமண் கடந்த சில காலங்களாக எதிர்கொள்ளும் “தற்கொலை’’ என்ற சிக்கல் நிலமை விரிவாக நோக்கப்பட வேண்டியதும், இவை தொடர்பான தெளிவுபடுத்தல் சார்ந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.
இலங்கை அரசாங்கத்தினுடைய 2017ஆம் ஆண்டின் தரவு அறிக்கையின் படி 2016ஆம் ஆண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.4 மில்லியன் மெற்றிக்தொன் நெல் உற்பத்தியில் 1.1 மில்லியன் மெற்றிக்தொன் நெல் கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக நாட்டினுடைய மீன்பிடியின் மொத்த உற்பத்தியில் 20சதவீதமான உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் இருந்தே கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் உள்ள கிராமப் பகுதிகள் அரசியல் கொள்கை வகுப்பாளர்களினால் ஆரம்பகாலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஒதுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன, வருகின்றன. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற பொழுது கிழக்கினுடைய நிலை என்பது பொருளாதார ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் மோசமான நிலையில் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாகும். நவீனமயப்படுத்தப்பட்ட வீதிகளும், உணவு விடுதிகளும், நவீன பல்பொருள் அங்காடிகளும், வணிகவங்கிகளும், வர்த்தக முதலீட்டு நிதிநிறுவனங்களும் தோற்றம் பெறுவது என்பது மாத்திரம் நிலையான அபிவிருத்தியோ, முன்னேற்றமோ அல்ல. மாறாக மக்களுடையதும், விவசாயிகள், மீனவர்கள் அனைவருடையதும் வாழ்வாதார, பொருளாதார அடிப்படையிலான உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாடு என்பவையும், தனிமனித அபிவிருத்தி தொடர்பான தேவைகளும் அபிலாசைகளும் எப்பொழுது பூர்த்தி செய்யப்படும் வகையில் முழுமையான நிலையான அபிவிருத்தி மேற்கொள்ளபடுகிறதோ அதுவே உண்மையான அபிவிருத்தியாகும். இதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பும் ஆகும். அரசாங்கம் எத்தனையோ திட்டங்களை பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான தீர்வாக முன்வைக்கின்ற போதிலும் அந்த திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பதும், மக்கள் மத்தியில் எந்தளவு தூரம் சென்றடைகின்றன என்பது இன்று வரை விடை தெரியாத வினாக்களாகவே இருந்து வருகின்றன.
இலங்கையினுடைய பொருளாதார உற்பத்தியில் குறிப்பிட்ட அளவில் பங்குவகிக்கின்ற அரிசி, பால், மீன் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற பிராந்தியமொன்று அதிகமான வறுமையையும் போசாக்கு குறைபாட்டினையும் கொண்டிருப்பது என்பது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இவற்றுடன் அரசினுடைய 2016 இன் வீட்டு வருமானம் மற்றும் செலவுக்கணக்கெடுப்பின் படி கிழக்கு மாகாணத்தினுடைய வறுமையின் அளவு 7.3 சதவீதமாக காணப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வறுமையின் அளவு 11.3சதவீதம் 10சதவீதம் என்ற வகையிலாக காணப்படுகின்றது.
இவற்றுடன் பாடசாலை செல்லாத சிறுவர்கள், மந்த போசணையுள்ளோர்கள் என்பவற்றின் அளவு அதிகமாக காணப்படுவதும் இப் பிரதேசத்திலேயே ஆகும். அத்துடன் மட்டக்களப்பின் மேற்குப்பிரதேசத்தில் அமைந்துள்ள படுவான்கரை பகுதியில் ஆறு பிரதேச செயலகப்பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த பிராந்தியங்களிலேயே பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்களும் மந்தபோசணை பிரச்சனை உள்ளவர்களும் அதிகமாக காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில் போரும் போருக்குப்பின்னரான பாதிப்பு நிலமைகளும் மீள்குடியமர்வு செயற்பாடுகளும் சமூக அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்களும் முழுமையான வகையில் பூர்த்திசெய்யபடவில்லை எனலாம்.
அத்துடன் 2016ஆம் ஆண்டு 97தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 2017ஆம் ஆண்டு 116தற்கொலை மரணங்களும் 2018ஆம் ஆண்டு 76வரையான தற்கொலை மரணங்களும் இடம்பெற்றதாக வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல.
இவை தொடர்பாக உளவளத்துணையாளரும் யோகா பயிற்றுவிப்பாளருமான சர்வதேச உள ஆற்றுப்படுத்தல் கல்லூரியைச் சேர்ந்த மதுரநாயகம் நேசராஜ் அவர்களுடன் கலந்துரையாடிய பொழுது அவர் பல முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார். பொதுவாக கிழக்கு மாகாணம் என்ற வரையறைக்குள் மாத்திரம் அல்லாது அனைத்து தமிழ்மக்களுக்கும் பொதுவான பல பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றிற்குரிய தீர்வுகளைப்பற்றியும் பல ஆரோக்கியமான விடயங்களை முன்வைத்தார்.
பொதுவாக இளையோர் மத்தியிலும் சிறுவர் உளவியலிலும் பல்வேறு விடயங்கள் மற்றும் காரணிகள் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். அதாவது புலமைப்பரிசில் பரீட்சை என்ற போட்டிக்கல்வி முறையில் இந்த விடயம் முதலில் ஆரம்பிக்கிறது. ஆரோக்கியமாகவும் மனத்துணிவுடனும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் சவால்களையும் கண்டு அச்சமடைகின்ற போக்கினையும் மன நிலையினையும் இளையோர் மத்தியில் இது ஏற்படுத்துகிறது. இந்த நிலையைக் களைய வேண்டியது அனைவரது கைகளிலும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
தற்கால இளையோர் சமூகமானது ஆரோக்கியமானதும் முன்னேற்றகரமான சூழலிலும் தமது பயணத்தை ஒரு புறமாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் உலகமயமாதலின் தாக்கத்தினால் பிழையான நெறிபிறழ்வான வாழ்வியல் உந்தல்களுக்கூடாகவும் இளையோர் சமூகம் பயணிப்பதென்பது மறுக்கமுடியாத ஒன்றேயாகும். “ஆடம்பரமான மோட்டார் சைக்கிள்களை பெற்றோர் வாங்கித்தரவில்லை”, “ஆசைப்பட்ட கைப்பேசியை பெற்றோர் வாங்கித் தரவில்லை”, “புதிய சேலையைக் கணவன் வாங்கித்தரவில்லை”, “காதல் விடயங்களில் சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை” என்பது போன்ற பிரச்சினைகளும் “எடுத்த லோன் (கடனை) செலுத்த முடியவில்லை” என்பதும் பலரது தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.
இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு ஆரோக்கியமான வகையில் கையாள்வதற்கும், இவற்றுக்கான முறையான வழிபடுத்தல்களும், ஆற்றுபடுத்தல்களும், உளவியல் ஆற்றுபடுத்தல் திட்டங்களும் பரவலாக முன்னெடுக்கப்படுகின்ற பொழுதும் அது “நத்தை வேகத்திலேயே” முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். ஊருக்குள் திடீரென அறிமுகப்படுத்தபடும் கடன் திட்டங்கள் தொடர்பான முறையான விழிப்புணர்வும், தெளிவுபடுத்தல்களும் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய முறையான செயல்ப்பாடுகள் இடம்பெறவேண்டும். அத்துடன் கடன் தொடர்பான ஒப்பந்த படிவங்கள், அதில் கையெழுத்திடுதல் கடன் திட்டங்கள் மற்றும் சாதக பாதகங்கள், அவற்றின் விதிகள், நிபந்தனைகள் என்பன பற்றிய தெளிவான கருத்தியல் மக்கள் மத்தியில் விதைக்கப்படவேண்டும்.
இவற்றுடன் பாடசாலைகளிலும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க “உளவளத்துணையாளர்கள்” நியமிக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாக கிழக்கு மாகாணத்தில் உருவெடுத்துள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களுக்கும், இளையோர்களுக்கும் பலமான மனோதிடத்துக்கான அடித்தளம் இடப்படும் வேளை அவர்கள் தம்மை தாமே ஆற்றுப்படுத்தும் சிறந்த ஆளுமை மிக்க எதிர்கால சந்ததியாக உருவாகி முன்னோடிகளாக செயற்படுபவர் என்பது திண்ணம்.
மனிதன் என்பவன் தான், தன்னை சுற்றியுள்ள சூழல், அதிலுள்ள சக மனிதர்கள், தனது சமூகம் என்பவை மீதான கரிசனையும் அக்கறையும் கொள்வதோடு சுயநலமானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை கைவிடுகின்ற பொழுதில் மாத்திரமே ஆரோக்கியமான மனித சமூதாயத்தினையும் மனோதிடம் மிக்க எதிர்கால சந்ததினரையும் உருவாக்க முடியும். மதுரநாயகம் நேசராஜ் அவர்கள் மேலும் கூறுகையில் இளைஞனோ யுவதியோ தற்கொலையில் ஈடுபட்டு மரணிக்கின்ற பொழுது அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் அதற்குப் பொறுப்பாளிகளாகவே இருக்கின்றார்கள். மாறிவரும் நவீன யுகத்தின் உலகமயமாகிய வாழ்வியல் முறைகளாலும் மின்னல் வேக மாற்றங்களாலும் அருகில் இருப்பவரோடு பரிவாக ஒரு வார்த்தை பேசுகின்ற மனிதர்களும், எதிர்வீட்டிலோ அயலவர்களுடனோ ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபடும் மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருகிறார்கள். கைக்குள் அடக்கமான கைபேசிகளுக்குள்ளே மனிதர்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் அடங்கிக் கிடப்பதும் வேதனையான விடயமாகும். இறுதியாக மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை என்பது இளையோர் சமுதாயத்தில் காணப்படும் பாரதுரமானதும் சிக்கலானதுமான பிரச்சினையாகும்.
நவநாகரீக பண்பாட்டு மாற்றங்கள், கலாச்சாரப் பிறழ்வான நடத்தைகள், தென்னிந்திய திரைப்படங்களின்ஆரோக்கியமற்ற கதாநாயகத்தனமான (Heroism) செயற்பாடுகள், மேலைத்தேய தாக்கங்கள் போன்றவை தொடர்பான புரிதல்கள் ஏற்படவேண்டும். இவற்றிலிருந்து இளையோரை மீட்டெடுக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்வதோடு அவை துரிதகதியில் பரவலாக முன்னெடுக்கப்படுவதும் காலத்தின் தேவையாகும்.
தற்கொலை என்பதும் அவை சம்பந்தமான எண்ணப்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமெனின் பலமானதும் திடமானதுமான மன வலுப்படுத்தல்களும், உளவள ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.பாரம்பரிய கலைகள், பண்பாடுகளிலும் ஆக்கபூர்வமான விடயங்களிலும் இளையோரை ஈடுபடுத்த வேண்டும். நிலைபேறானதும் முன்னேற்றகரமானதுமான உட்கட்டமைப்பு, வாழ்வாதார அபிருத்தி ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தபட வேண்டும். போதைப் பொருளற்ற சமூகத்தின் உருவாக்கம் ஊக்குவிக்கப் படவேண்டும். இவற்றின் ஊடாக தற்கொலைகள் அற்ற சுபீட்சமான கிழக்கினை கட்டியெழுப்ப முடியும்.
சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்.
(தற்காலிக போதனாசிரியர்)
நடன நாடகத்துறை,
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
Post a Comment