அரசியல்கைதிகள் விவகாரம் மனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்தது




எங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நின்றவர்கள், எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எங்களுடைய பாதுகாப்பிற்காகத் தற்போது சிறைகளில் வாடிக் கொண்டிருப்பவர்கள் தான் அரசியல்கைதிகள். எனவே தான் அரசியல்கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டாமென எங்களுடைய அமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. பொது மன்னிப்பு என்பது குற்றவாளிகளுக்குரியது. ஆனால், அரசியல்கைதிகள் என்பவர்கள் குற்றவாளிகளல்லர். அரசியல்கைதிகளினுடைய பிரச்சினை என்பது மனிதவுரிமை சார்ந்தது மட்டுமல்ல அது  அரசியல் சார்ந்த பிரச்சினை. அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கான அரசியல்த் தீர்வை நாம் தேடிப் பார்க்க வேண்டும் என அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

"ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனித உரிமை நகர்வும்" எனும் தலைப்பிலான கருத்தரங்கு இந்த மாதம்-06 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் சட்ட ரீதியாகவும், யாப்பு ரீதியாகவும் தமிழ்மக்கள் தூரப்படுத்தப்பட்டார்கள். எங்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் துணிவற்றவர்கள் சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். அதேபோன்று யாப்புக்கள் ஊடாகத் தங்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொண்டு ஆயுதங்கள் ஊடாக எங்களுக்குப் பதில் கொடுக்க முனைந்தார்கள். இவ்வாறான நிலையில் தான் நாங்கள் எங்களுடைய பாதுகாப்பிற்காக எழுந்து நிற்க வேண்டிய தேவையேற்பட்டது.

எங்களுடைய அரசியல், நிலம்,மொழி, கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கிய தேசியத்தை அழிப்பதற்கு முனைப்புக் காட்டப்படும் போதே அதனை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் தான் கடந்த- 1979 ஆம் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டமே ஒரு பயங்கரமானது.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பன்முகங் கொண்டதொரு கொடிய மிருகமென நான் அடையாளப்படுத்துகின்றேன். நாகரீகமடைந்த  எந்தவொரு நாட்டினதும் சட்டப் புத்தகத்தில் இதுவொரு கறையாகவே  பதியப்படுகின்றது. இவ்வாறு தான் சட்ட வல்லுனர்களும் கூறுகிறார்கள்.

என்னுடைய பார்வையில் தெற்கின் இனவாத அரசுகள் தாங்கள் யாரென்பதை இந்தச் சட்டப் புத்தகத்தின் ஊடாக நிரூபித்துள்ளனர். இந்தச் சட்டப் புத்தகத்தின் ஊடாக அரச பயங்கரவாதம் என்றால் என்ன, அந்த அரச பயங்கரவாதத்திற்குத் துணை நிற்கின்ற இராணுவம் எப்படிப்பட்டது, அந்த அரச பயங்கரவாதத்திக்குத் துணை நிற்கின்ற கட்சிகள், ஆட்சியாளர்கள் தங்களைப் பாதுகாக்கின்ற விதமெல்லாம் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ளது.

கடந்த கால அனுபவங்களால் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தான் இந்தச் சட்டத்தை மாற்றுமாறு சர்வதேசமும் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துள்ள போதும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மாற்றப்படாதது மாத்திரமல்லாமல் இதனை விடப் பயங்கரமானதொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு தற்போது ஆட்சியாளர்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் புதிய சட்டத்தின் படி நீக்கப்பட்டாலும் கூட அரசியல்கைதிகளைப் பொறுத்தவரை இந்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டதன் பின்னர் தான் அந்தச் சட்டம் அகற்றப்படும். எனவே, அரசியல்கைதிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பது தான் இந்த அரசின் நோக்கமாக அமைந்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் படி எந்தவொரு நபரையும், எந்த வேளையும் கைது செய்யலாம். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாட்சியங்களைப் பின்னர் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு கைது செய்வதற்கு சாட்சியங்கள் தேவையில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது வழக்கு முடியும் வரை அல்லது தண்டனை முடியும் வரை பிணை வழங்கப்படமாட்டாது.

சாதாரணதொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படடவர்கள் அவர்களுடைய விசாரணைக் காலம் முடிவடைந்த பின்னர் தண்டனை பெற்று வெளியே வரலாம். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் தான் வெளியே வர முடியும்.

இதன்காரணமாக 15 வருடம், 20 வருடம் அல்லது அதற்கு அதிகமான காலங்கள் கூட அரசியற் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக இன்றைய அரசாங்கம், கடந்த கால ஆட்சியாளர்கள் எதிர்பார்த்த விடயம் தமிழ் இளைஞர்கள் அரசியலிலிருந்து தூரமாக வேண்டுமென்பது தான்.

தற்போது அரசியல்க்கைதிகளாக சிறைகளில் வாடுபவர்கள் கூட தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகி தாம் வெளியே வர வேண்டுமென்பதற்காகப் பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .

பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளான அரசியல் கைதிகள்

 எங்களுடைய தேசியத்தை, எங்களுடைய இனத்தை, மொழியை, கலாசாரத்தை, மக்களைப் பாதுகாப்பதற்காக எழுந்துநின்றவர்கள் தான் தற்போது அரசியல்கைதிகளாகவுள்ளனர்.

அரசியல்கைதிகள் கைது செய்யப்பட்ட விடயத்தில், அவர்கள் விசாரிக்கப்பட்ட விடயத்தில், அவர்களுடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்.  செய்யாத குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஒருவர் மீது எட்டு அல்லது ஒன்பது வழக்குகள் கூடப் புனையப்பட்டுள்ளன. பல்வேறு சித்திரவதைகளுக்குப் பின்னர் தெரியாத மொழியில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை விசாரிக்க எடுக்கின்ற காலங்கள் மிக நீண்டகாலமாகக் காணப்படுவதால் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைக்கிறார்கள். இதன் காரணமாக அரசியல்கைதியொருவருடைய வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்குச் செல்கின்ற காலமாகவும், சிறைச்சாலையிலேயே தங்கியிருக்க வேண்டிய காலமாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக குற்றவாளிககளாக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகள்  குற்றங்களை ஏற்றுக் கொண்டு வெளியே வருவோமென நினைக்கிறார்கள்.

சிறைகளில் வாடும் அரசியல்கைதிகளின் குடும்பங்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பலருடைய மனைவிமார்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர். பெற்றோர்களும் பல்வேறு நோய்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகளுடைய எதிர்காலத்தை நினைத்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுவதுடன் பலர் இறந்துமிருக்கிறார்கள்.

அரசியல் கைதிகள் விவகாரமும் கட்சிகளும்

 அரசியல்கைதிகளை விடுவிப்பதற்காக அரசியல்த் தீர்வை தேடிப் பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் யாரெல்லாம் எங்களுடன் காணப்படுகிறார்கள் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த-2018 ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்குவதற்காகப் பத்துக் கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் ஒரு கோரிக்கை அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அமைந்திருந்தது.

கடந்த வருடம் யூலை மாதம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சம்பந்தனைச் சந்திக்கச் சென்ற போது வெளிநாட்டுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி இன்னும் இரண்டு கிழமைகளில் வந்து விடுவார்.  நாங்கள் அவருடன் அரசியல்கைதிகளின் விவகாரம் தொடர்பில் உரையாடவுள்ளோம் எனக் கூறினார். ஆனால், எத்தகைய முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை என்பதே உண்மை.

கடந்த ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற அரசியல் சதி நடவடிக்கையின் போது கூட அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் ஒரு கட்டத்தில் உச்ச நிலையை அடைந்தது. இவ்வாறான நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அரசியல்க்கைதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். இதற்கென நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வியாழேந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய உப குழுவொன்றும்  அமைக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் எங்களால் ஒதுக்கப்பட்டவர்கள்.

இவ்வாறானவர்களைத் தான் அரசியல்கைதிகளை சந்திப்பதற்காக அனுப்புகின்றார்கள்.அரசியற் கைதிகள் எங்களுக்குச் செய்தி அனுப்புகிறார்கள். மகிந்த ராஜபக்சவுக்கு சம்பந்தன் ஆதரவளிக்க வேண்டுமென்பதே அந்தச் செய்தி. அதற்குப் பதிலாக நான் அனுப்பிய செய்தியில் நாமல் ராஜபக்சவை என்னுடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தேன். ஆனால், அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த தீபாவளி தினத்தன்று அலரி மாளிகையில் நடந்த தீபாவளிப் பண்டிகையின் போது அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான மானியங்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இதுதொடர்பாக கதைத்துக் கொண்டிருக்கின்றோம் எனத் தற்போதைய ஜனாதிபதி கூறினார். ஆனால், கடந்த மார்கழி  மாதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியைக் கையளிக்கும் போது  அரசியல்க்கைதிகளை விடுதலை செய்ய மாட்டோம் எனக் கூறினார்.

ஆகவே, தங்களுடைய அரசியல் நலன்களுக்காகவே இவ்வாறெல்லாம் எங்கள் அரசியல்கைதிகள் விவகாரத்தைக் கையாளுகிறார்கள்.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கூட தங்களுடைய அரசியலுக்காகத் தான் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கையாள நினைக்கின்றார்கள். இதன்காரணமாக எங்களால் தூரமாக்கப்பட்ட நிலையில் தான் இவர்கள் தற்போது தங்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்களுடைய அரசியல்வாதிகளெனில் அரசியல் தீர்மானமெடுத்து, எந்தவித நிபந்தனையுமின்றி அரசியல்கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையையே முன்வைக்க வேண்டும்.

ஆனால், பொது மன்னிப்பின் அடிப்படையில் அரசியல்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் அரசியல் வாதிகள் பலரும் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் எங்களுடைய அரசியல்வாதிகள் கிடையாது. அவ்வாறு அவர்கள் கூறுவதன் மூலம் அரசாங்கம், நீதிமன்றம் என்பன குற்றவாளிகள் எனத் தீர்ப்பெழுதுவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் என இவர்கள் முடிவு செய்கிறார்கள். இவர்களைத் தான் நாம் சிறையிலடைக்க வேண்டும். இவர்களுக்கு மக்களாகிய நாம் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். அது ஜனநாயகத் தீர்ப்பாகவே அமைய வேண்டும்.

இதுதான் மனிதவுரிமையா?

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மகிந்த, மைத்திரி மட்டுமல்ல ஐ. நாவும் தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

 அதுமட்டுமல்ல இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடுகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதேபோன்று இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இவர்கள் அனைவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஐ. நா ஆயத்தமாகவிருக்கின்றதா? இந்தச் சந்தர்ப்பத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்ப விரும்புகின்றேன்.

தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய சாட்சிகள் தற்போது ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கின்றார்கள்.  இவ்வாறான சாட்சிகள் மறைய வேண்டுமென்பது தான் ஐ. நாவின் தேவையாகவுள்ளதா? இதுதான் மனிதவுரிமையா?

எனவே, அரசியல்கைதிகளினுடைய பிரச்சினை என்பது மனிதவுரிமை சார்ந்தது மட்டுமல்ல அரசியல் சார்ந்த பிரச்சினை. இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை சரியாக அணுக வேண்டுமானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சியாளர்கள் முற்படுத்தப்பட வேண்டும்.

அந்தக் குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்ப்பு வரட்டும். அந்தத் தீர்ப்பின் ஊடாக எங்களுடைய இறைமை, ஆளுமை, எங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்பவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்புக் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.

எமக்கான பாதுகாப்பு என்பது சுயநிர்ணய உரிமை ஊடான எமது பிரதேசத்தை நாமே ஆளுகின்றதொரு ஆட்சி முறை. இதன் மூலமே எங்களுடைய பாதுகாப்பு சாத்தியப்படும். மிகப் பெரிய இன அழிப்பிற்கு நாங்கள் முகம் கொடுத்துள்ளமையால் இதனைப் பெற்றுக் கொள்வதற்கான முழு உரிமையும் எங்களுக்கிருக்கிறது என்றார்.

தொகுப்பு:- செல்வநாயகம் ரவிசாந்
நிமிர்வு பங்குனி 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.