பனை சார் உற்பத்திகளின் வளர்ச்சி




நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் வடபகுதியில் வாழ்ந்த மக்களின் சமூக பொருளாதாரத்தில் முக்கியபங்கு வகித்தது பனை என்பது மிகையாகாது. அக்காலத்தில் உணவை பெற்றுக் கொள்வது மிகவும் சவாலாக அமைந்திருந்தமை யாவரும் அறிந்ததே. பனங்கள் உற்பத்தியை மேம்படுத்த பாரிய வடிசாலையாக திக்கம் வடிசாலையும் வலிகாமம் கொத்தணியின் கீழும் வடமராட்சிக் கொத்தணியின் கீழும் இயங்கிய பானை வடிசாலைகள்  (pot still )  தமது செயற்பாட்டைத் திறம்படச் செய்து இயங்கி வந்தன.

பனையின் பருவகாலத்தில்  வெல்ல உற்பத்தியும்  சிறப்பாக இடம்பெற்று வந்தமைகுறிப்பிடத்தக்கது.அச்சுவேலி, பருத்தித்துறை, கட்டைவேலி, பண்டத்தரிப்பு, மானிப்பாய் போன்ற தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், பனை வெல்லம், பனம்பாணி, பனங்கற்கண்டு போன்ற உற்பத்திகளையும் உற்பத்தி செய்து விற்பனவு செய்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அனேகமான சங்கங்களும் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டு அப்போதைய சீனித்தேவைக்கு பெரும்பங்காற்றினர். அதோடு மட்டுமல்ல பனம்பழக்காலத்தில் பனங்களியிலிருந்து பனாட்டு, பாணிப்பனாட்டு என்பன உற்பத்தி செய்தனர். அதை மக்களின் பாவனைக்கும் விற்பனவு செய்தனர்.

பனை அபிவிருத்திச்சபை பனங்களியினை பதப்படுத்தி புட்டிகளில் அடைத்து விற்பனவு செய்ததுடன் ஒருவருடம் பாதுகாத்து வைத்து பாவிக்கும் முறையினைப் பயன்படுத்தி பனங்களி இல்லாத காலங்களிலும் பனங்காய்ப் பலகாரம், பனம்பானம் என்பவற்றை உற்பத்தி செய்து விற்பனவு செய்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் சங்கங்கள் பனங்கிழங்கு உற்பத்தி செய்து புழுக்கொடியல் மா, ஒடியல் மா, என்பன உற்பத்தி செய்து மக்களின் தேவைக்கேற்ப விற்பனவு செய்தனர். இதுமட்டுமல்ல பனைஅபிவிருத்திச் சபை பனங்கிழங்கு சார் உற்பத்திகளைச் செய்த  மக்களை ஊக்குவித்து அவர்களிடமிருந்து உற்பத்திகளைப் பெற்று அவர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கும் ஊக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது. 1990 ஆம் ஆண்டில் பனையின் உற்பத்திகளை கணிசமான அளவிற்கு மக்கள் பாவித்து அக்காலத்திலேற்பட்ட உணவுத்தட்டுப்பாட்டிலிருந்து ஓரளவிற்கேனும் தப்பிக்கொண்டது மறக்க முடியாது.

கள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கங்கள் என ஆரம்பிக்கப்பட்டு, தெங்குபனம் பொருள் கூ.சங்கம் எனப் பெயர்பெற்று, பின்னர் 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து பனை தென்னை வளஅபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம் என்ற பெயருடன் இச்சங்கம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. Palm Development  COOP Society  என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுச் செயற்பட்டு வரும் சங்கம் யாழ்மாவட்டம், கிளிநொச்சிமாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம் என வியாபித்து மேற்படி பெயருடன் மிளிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திக்கத்தில் வடிசாலை அமைந்ததினால் திக்கம் என்ற பெயரையும் பிரபல்யப்படுத்திய பெருமை பனையினையே சாரும் என்பது மிகையாகாது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலத்தில் உணவுப் பொருட்கள், மற்றும் சவற்காரத்தட்டுப்பாடுகள் ஏற்பட்ட காலங்களில் கற்பகதரு என்ற பெயருக்கேற்றற்போல் பனை அதை நம்பி வாழ்ந்த மக்களிற்கு பட்டினியின்றி வாழ உணவு, உடைகளைச் சுத்தம் செய்வதற்கு அழுக்கு நீக்கியாகவும் அதாவது பனங்களியினைக் கொண்டு ஆடைகளைச் சுத்தம் செய்யவும் உதவியது எனக் குறிப்பிட்டால் மிகையாகாது.

அக்காலங்களில் வெல்லத் தேவையை பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி என்பவற்றை பனை தென்னை வள உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்து மக்களின் மேற்படி தேவையை பூர்த்தி செய்த சக்தியாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. பனங்கற்கண்டு வெல்லத் தேவையை பூர்த்தி செய்வது. உற்பத்தியின் போது கிடைக்கும் பாணி புகையிலைக்கு பாணி போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. 

பனை அபிவிருத்திச்சபை வடிசாலை யாழ் மாவட்டத்தில் மட்டமன்றி, முல்லைத்தீவு,  தீவகம், வவுனியா மாவட்டங்களிலிருந்தும் பனங்கள்ளு, செறிவு குறைந்த மதுசாரம் என்பவற்றை பெற்று தரமான மதுசாரம் உற்பத்தி செய்து மரத்தொட்டிகளில் (Wooden Vat)  இல் சேமித்து சாராய உற்பத்தியைச் செய்து விற்று வருமானம் பெற்றது.

பனை அபிவிருத்திச்சபை வடிசாலையில் பணியாற்றிய ஊழியர்களின் உழைப்பு மிகவும் அர்ப்பணிப்புடனான சேவையாகக் காணப்பட்டது. இதனால் அத்தொழிலாளர்களின் வருமானமும் அதிகரித்தது. தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்ததினால் தொழிலாளர்களும் நம்பிக்கையுடன் கடமையிலீடுபட்டனர். வடிசாலை பணியாளர்களிற்கு வருடமுடிவில் ஊக்கத்தொகை (bonus) வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

திக்கம் வடிசாலை மற்றும் வலிகாமம் கொத்தணி வடிசாலை, தென்மராட்சிக் கொத்தணி வடிசாலை ஆகியவற்றின் உற்பத்திகள் சந்தை வாய்ப்பை பெற்றதினால் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள் நம்பிக்கையுடன் இத்தொழிற்சாலைகளுக்கு காத்திரமான ஆதரவை வழங்கினர். அத்தோடுமட்டுமல்ல, பனாட்டு, பனைவெல்லம், பனங்களி போன்ற உற்பத்திகளுடன் கைப்பணி உற்பத்திகளையும் மகளிர்குழுக்களை அமைத்து அவற்றின் மூலம் செயற்படுத்தினர்.

 பனை அபிவிருத்திச் சபை இலங்கை முழுவதும் தமது பிராந்தியக் காரியாலயங்களை அமைத்திருந்தது. வெளிநாட்டிலிருந்து வரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பனையின் பயன்பாடுகளை எடுத்துக்கூறி உற்பத்திகளின் விற்பனவுக்கு வழிசமைத்துக் கொடுப்பதில் முனைப்பாக இருந்து. தனியார் துறையினர் சிலர் தொழிற்சாலையமைத்து வெல்ல உற்பத்தியிலீடுபட்டதனூடாக அவர்களும் வருமானம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் தமக்குக் கிடைத்த வளத்தை சரியான முறையில் பயன்படுத்தும் வாய்ப்பை நாட்டின் அசாதாரண சூழல் ஏற்படுத்தியது எனக்கூறலாம்.

திக்கம் வடிசாலையைத் தவிர ஏனைய இரண்டு வடிசாலைகளும் கொத்தணிகளினால் நடாத்தப்பட்டு வந்தன. திக்கம் வடிசாலை மட்டும் பனை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்டு வந்தது. அக்காலப்பகுதியில் அரசாங்கம் மதுவரிச் சலுகையை அளித்தது.  இதனால் மதுவரிக்குச் செலுத்தும் பணம் வடிசாலையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்காக வடிசாலை நிர்வாகம் அதை சேமித்து வைத்து வடிசாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை நவீன மயப்படுத்தத் திட்டமிட்டனர்.

பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாச நிர்வாக சபைக் கூட்டம் மாதந்தம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வடிசாலைக்கு மூலப்பொருள் ப.தெ.வ.கூ.சங்கங்கள் தான் வழங்கி வருகின்றன. சங்கங்கள் சமாசத்தில் அங்கம் வகிக்கின்றன. வடிசாலையின் வளர்ச்சியைக் கண்டு சமாச நிர்வாகம் இவ்வடிசாலையை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர தீர்மானித்தது.

1993 ஆம் ஆண்டு பங்குனி மாதம் திக்கம் வடிசாலை ப.தெ.வ.கூ.சங்கங்களின் சமாசத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போதைய சமாசத்தின் தலைவராக திரு.க.சிவப்பிரகாசம், பொதுமுகாமையாளராக திரு.க.சிவநேசன் அவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பனை அபிவிருத்திச்சபை வடிசாலையின் பணியாளர்களை எவ்வித ஒழுங்குகளுமின்றி நட்டாற்றில் விட்டது. இதனால் அங்கு பணியாற்றிய வடிகலன் இயக்குனர், கொதிகலன் இயக்குனர் இருவரும் பனை அபிவிருத்திச்சபையுடன் போராடி தம்மை அந்தச் சபையில் உள்வாங்கிக் கொண்டனர். அவ்வாறு இணைந்து கொண்டாலும் வடிசாலையில் இவர்களிருவருக்கும் தேவையிருந்தது. பனை அபிவிருத்திச் சபையுடன் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவ்விரு பணியாளர்களையும் வடிசாலை நிர்வாகம் அவ்வப்போது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டது.

இக்காலப்பகுதிகளில் பாரிய தொழிற்சாலை என்ற அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பனை அபிவிருத்திச்சபை என்பன மிகவும் கரிசனையுடன் திக்கம் வடிசாலையின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை வழங்கி வந்தன. அக்காலப்பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்போது உற்பத்தித் தடங்கல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஒரு மின் பிறப்பாக்கியினைக் கொள்வனவு செய்வதற்கு உறுதுணையாக பனை அபிவிருத்திச்சபை இருந்தது.

 யாழ் பல்கலைக்கழகம் விஞ்ஞான மாணவர்கள், விவசாய விஞ்ஞான மாணவர்களின் கல்விச்சுற்றுலாவின் போது வடிசாலை, மற்றும் பனைசார் உற்பத்தி நிலையங்களிற்கு மாணவர்களை அனுப்பி அது தொடர்பான சில ஆராய்ச்சிகளையும் செய்வதற்கு மாணவர்களிற்கு அறிவுறுத்தியது. கண்காட்சிகள் வைக்கும் போது வடிசாலைகளின் மாதிரிகள் அமைத்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் பனை உற்பத்திகள் தொடர்பான செய்முறை விளக்கங்களை மக்கள் மத்தியில் பரப்புதல் போன்ற காத்திரமான உதவிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பனை அபிவிருத்திச்சபை கொழும்பின் பல பாகங்களிலும் கண்காட்சிகள் வைத்து பனையின் உற்பத்திகள் மற்றும் வடிசாலைகள் பற்றிய செய்முறை விளக்கங்களையும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜா பன்னீர்செல்வம் 
பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வுபெற்ற அதிகாரி 
நிமிர்வு சித்திரை 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.