கிழக்கின் வாசிப்பும் பத்திரிகைகளின் நிலையும்தமிழ் ஊடகத்துறையின் எதிர்காலமும் சவால்களும் என்ற தலைப்பில் கருத்தமர்வு ஒன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் யூ.எஸ் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் இணைந்து நடாத்திய மேற்படி கருத்தமர்வில் ஊடகவியலாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இருந்தனர்.

பி.பி.சியின் முன்னாள் செய்தியாளரும், அரங்கம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான  பூபாலரட்ணம் சீவகன்   கிழக்கு மாகாணத்தில் இன்றைய ஊடக நிலவரம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பில் உரையாற்றினார். அதிலிருந்து முக்கிய சில பகுதிகள்:

ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்தது போன்ற ஊடக ஏற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் இருந்ததில்லை. தொடர்ச்சியாக அங்கு பத்திரிகைகள் வெளிவரவுமில்லை. ஆனால், அங்கு தொடர்ச்சியாக பத்திரிகை, இதழ்கள் வெளியிடும் முயற்சிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஊடக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.

போர் முடிவடைந்த பிற்பாடு 2010 இல் இருந்து ஒரு விடயத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. யாழ்ப்பாணம் போரால் அடிப்பட்ட நிலம் வன்னி முழுமையாக போரால் அழிவுண்ட நிலம். ஆனால், கிழக்கில் நிலைமை வித்தியாசமானது.  அங்கு மூன்று இனங்கள் வாழும் போது ஒரு இனம் மட்டும் மிகவும் மோசமாக அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த மக்களுக்கு பலவிதமான தேவைகள் இருக்கின்றன. எங்கள் குடும்பத்திலிருந்த அங்கத்தவர்களை அடித்து உதைத்து கொன்றவர்கள். இப்போதும் அங்கே இருக்கின்றார்கள். நாங்கள் பேச முடியாது.  அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.

எங்களின் பிள்ளைகளை பஸ்ஸில் ஏற்றி விட்டால் கொழும்புக்கு பிரச்சினையில்லாமல் போய் வருகிறார்கள் தானே. அந்த சூழ்நிலையே எங்களுக்கு போதும் என்கிற நிலையில் இன்றும் அங்கு எம் சமூகம் உள்ளது.  இந்த மக்களுக்கு பலவிதமான தேவைகள் இருக்கின்றன. அதனால் வடக்கின் உதவியோடு கிழக்கு தமிழ் மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. அது அரசியல் ரீதியாக இருக்கலாம். பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம்.

பல பக்கங்களிலும் அடிபட்டு போயுள்ள ஒரு சமூகத்துக்கு அவர்களைப் பற்றி தனித்துவமாக பேசக் கூடிய ஊடகம் என்பது மிகவும் தேவையாக உள்ளது. ஒன்றில் தேசியப் பத்திரிகைகள் அங்கே வர வேண்டும்,அல்லது நாங்கள் எங்களுக்கென்று ஒரு ஊடகத்தை நடத்த வேண்டும். 24 பக்கங்கள் உள்ள ஒரு தேசிய பத்திரிகையில் மாவட்டத்துக்கு ஒரு பக்கம் ஒதுக்கினாலே தேசிய பத்திரிகையினால் மட்டக்களப்புக்கோ, திருகோணமலைக்கோ ஒரு பக்கத்தை தான் ஒதுக்க வேண்டும். ஆனால், அங்கே பேச வேண்டிய விடயங்கள் 24 பக்கத்துக்கு இருக்கின்றன. அதனை எப்படிப் பேசுவது என்பது தான் இன்று கிழக்கினுடைய தேவையாக இருக்கின்றது. இதனால் தான் அரங்கம் என்கிற வாரப்பத்திரிகையை கிழக்கில் கொண்டு வந்தோம்.

ஆரம்பம் தொட்டே கிழக்கில் வாசிப்பு என்பது ரொம்பவும் குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான். யாழில் ஆயிரக்கணக்கில் பத்திரிகைகள் விற்கின்றன. அங்கே வாங்கி வாசிப்பதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள்.  அரங்கம் பத்திரிகைக்கூடாக கிழக்கின் நிலையை சொல்வது எனக்கு எளிதாக இருக்கும். முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த படுவான்கரைக்கு எந்த தேசியப்பத்திரிகையும் விற்பனைக்கு போவதில்லை.  அங்கே காசு கொடுத்து வாங்கவும் மாட்டார்கள். வாசிக்கவும் மாட்டார்கள். ஆனால் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டிய கடமை தேசியப்பத்திரிகைகளுக்கு உள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை விற்பனை செய்து வரும் போது வாசிப்பு குறைந்த இவ்வாறான பிரதேச மக்களின் சிறப்புக் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்பு இந்தப் பத்திரிகைகளுக்கு உள்ளது. வாசிப்பை ஊக்குவிக்க அந்தப் பகுதிகளுக்கு பத்திரிகைகளை யாரும் இலவசமாக அனுப்பவில்லை. ஆம், அப்படியான இடங்களுக்கு தான் எங்களின் அரங்கம் பத்திரிக்கை இலவசமாகவே செல்கின்றது.

படுவான்கரை போன்ற வாசிப்பு குறைந்த இடங்களில் பத்திரிகையை கொண்டு போய் இலவசமாக கொடுக்கும் போது அவர்கள் ஆர்வமுடன் வாங்கி வாசிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு ஊக்குவித்தால் தான் அங்கே ஒரு நல்ல வாசிப்பு வரும். போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இன்றும் பயத்துடன் தான் வாழ்ந்து  வருகின்றார்கள். 98 பேர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த ஊர் அது. அங்கிருந்த ஒருவர் இன்று வரைக்கும் தான் இயக்கத்தில் இருந்த ஒருவருடைய மனைவி என தன்னை வெளிப்படுத்தி கதைக்க மறுக்கும் சூழல் தான் உள்ளது.

இப்பொழுது கணனி ஊடகங்கள் (digital media) வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலத்தில் படுவான்கரை போன்ற பிரதேசங்களில் கைபேசியில் கூட இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. ஏனெனில் இங்கே இணையத்தை பயன்படுத்துவதற்கான தரவுச்சேவையின் (data plan) விலை அதிகமாகும்.  இவ்வாறான நிலையில் அங்கே பேஸ்புக், யூரியூப் ஊடாக கூட செய்திகளை கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளது. 

கடந்த ஒருவருடமாக படுவான்கரைக்கு வான் பிடித்து கொண்டுபோய் தான் அரங்கம் பத்திரிகையை விநியோகித்து வந்தோம். ஆனால், இன்று மாற்றம் நடந்துள்ளது. இன்று நான் அங்கு பத்திரிகையை கொண்டு போவதில்லை. அந்த இளைஞர்கள் எங்களிடம் வந்து தங்களுக்கு தேவையான பத்திரிக்கைகளை வாங்கி இலவசமாக விநியோகம் செய்யும் பொறுப்பை எடுத்து சிறப்பாக செய்கின்றனர். இது தான் எங்களின் வெற்றி. சில சமுர்த்தி அதிகாரிகள் கூட எங்கள் அலுவலகம் வந்து பத்திரிகைகளை வாங்கி விநியோகம் செய்கின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டி உள்ளது.

இங்கே பேசப்பட வேண்டிய அரசியல், சமூகப் பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. உதாரணமாக தற்கொலைகள், எல்லைக்கிராம பிரச்சினைகள்  அதிகரித்துள்ளன. இவற்றையெல்லாம் ஆழமாக பேசவேண்டியுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் நடேசனை சுட்டார்கள். இரா துரைரத்தினம் போன்றோர் நாட்டை விட்டு சென்றார்கள். இப்படி பல மூத்த ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதனால் கிழக்கு ஊடகப்பரப்பில் நீண்ட தலைமுறை இடைவெளியொன்று உருவானது. இதன் பிற்பாடு கடுமையான போரின் பின்னர்  உருவான செய்தியாளர்கள் பெரும்பாலும் சம்பவத்தை மட்டுமே எழுதி பழகி விட்டார்கள். செய்திகளின் தொடர்ச்சிகளைப் பார்ப்பதில்லை. செய்தியின் பல பக்கங்களையும் ஆழமாக பார்ப்பதில் குறைபாடுகள் ஏற்பட்டன. அங்கே ஊடக பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் முறைப்படுத்தப்பட்டு இல்லாதமையும் ஒரு பெரும் குறைபாடாகும். எனக்கு இந்த நோய் இருக்கிறது இதற்கு மருத்துவம் தேவை என்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது இலகு. ஆனால், நான் பத்து வருடங்களாக ஊடகத்துறையில் இருக்கிறேன். எனக்கு எந்தப் பயிற்சிகளும் தேவையில்லை என்பவர்களுக்கு என்ன சொல்வது?

அரங்கம் பத்திரிகையை இப்போது நடத்தி வந்தாலும் கணனி ஊடக முறைக்குள் எப்படி போவது என்பது பற்றி தான் நாங்களும் யோசித்து வருகின்றோம். எல்லோரும் கைபேசி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு செய்தி வீடியோவை முழுவதுமாக பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை. ஏனெனில் தரவுச்சேவையின் விலை உயர்வே இதற்கு காரணமாகும்.  ஆனாலும் கணனி ஊடக உலகத்துக்குள் போய்த்தான் ஆக வேண்டும்.

அமுது 
நிமிர்வு சித்திரை 2019 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.