ஆசிரியர் பார்வை




கண்ணீர் அஞ்சலிகள்

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் உல்லாச விடுதிகளிலும் கொடூரத்தாக்குதலால் பலியான ஆத்மாக்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம்.  அவ்வாத்மாக்களைப் பறிகொடுத்து அலறித் தேம்பும் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.

இத்தாக்குதல்கள் நடந்த விதம், தாக்குதலை நடத்தியவர்கள், பலியாகிய மக்களின் இனப்பரம்பல் தொடர்பாக பல கருத்துக்கள் நிலவுகின்றன.  தாக்குதல்களுக்கு பல நாட்களுக்கு முன்னமேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும் அரச இயந்திரம் எதற்கு அலட்சியம் காட்டியது என்பது இன்று பெரும் கேள்வியாக உள்ளது. 

இதே நேரம் தாக்குதல் இலக்கு புத்த கோவில்கள் அல்லது, கொழும்பிலுள்ள அரசின் முக்கிய மையங்கள் என்றால் அரசு பாதுகாப்பு விடயத்தில் இவ்வளவு மெத்தனப்போக்கை காட்டியிருக்குமா என்ற கேள்வியும் உள்ளது.

தாக்குதலை நடத்தியவர்களுக்கு அந்நிய உதவிகள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.  ஆனால் அவர்களுக்கு உள்ளூர் உதவிகளும் இருந்தன என்பதை ஊகிக்காமல் இருக்க முடியாது.  கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் காத்தான்குடியில் முஸ்லீம் அமைப்பு ஒன்று மோட்டார் சைக்கிளில் குண்டை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்திருந்தது.   அந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் உரிய புலன்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தால் இவ்வாறான அனர்த்தத்தை தவிர்த்திருக்கலாம். இந்தப் புலன்விசாரணைகளை தடுக்குமளவுக்கு அரச இயந்திரத்துள் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

தென்னிலங்கையில் அரசாங்கத்தை விட எதிர்க்கட்சியே இத்தாக்குதல்களால் பயனடையப்  போகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேவேளை இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த இனவாத மகாசங்கங்கள் எதுவும் இறந்த கிறிஸ்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவோ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததாகவோ தகவல் இல்லை.

கடந்த சில தசாப்தங்களாக தென்னிலங்கை அரசியல் தமிழ்ப் பிரிவினைவாதம் என்ற பூதத்தைக்காட்டியே நடத்தப்பட்டு வந்தது. இந்தப் பூதத்தை சாட்டாக வைத்து தமிழ் மக்கள் மீது இன்னமும் அடக்குமுறைகள் தொடர்கின்றன.  அந்தப் பூதத்தின் வலு சிறிது சிறிதாக தென்னிலங்கை அரசியலில் மங்கி வருகிறது. ஆகவே இன்று இன்னொரு பூச்சாண்டியைக் கொண்டு வந்து சிங்கள மக்களை உசுப்பேத்தி வைத்திருக்க வேண்டிய நிலை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு உள்ளது.   அதற்காக அவர்கள் பயன்படுத்தவிருப்பதுதான் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதம்.  பிரிவினைவாதப் பூதம் வலுவிழந்தது போல இந்த அடிப்படைவாதம் இலகுவாக வலுவிழந்து போகாது. அதற்கு சர்வதேச சக்தி உள்ளது.  எனவே இந்தப் பூச்சாண்டியை நீண்டகாலம் பயன்படுத்தலாம்.  தமிழர் முஸ்லிம்கள் என இரு தரப்பினரையும் அடக்கி ஆள இந்தப் பூச்சாண்டி நன்றாகவே பயன்படும்.

மீளவும் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் சாதாரண முஸ்லீம் மக்களையும் ஒடுக்க வாய்ப்புக்கள் உண்டு. இது தமிழ் மக்கள் ஏற்கனவே பட்டுணர்ந்தது. அதேவேளை இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ்  தமிழ்மக்களின் நிலை மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எமது அரசியல் தலைமைகள் எதிர்காலத்தைப் முன்னுணர்ந்து ஆழமான முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் இது.


செ.கிரிசாந்-
நிமிர்வு சித்திரை 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.