ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனிதவுரிமை நகர்வும்
“ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனிதவுரிமை நகர்வும்" எனும் தலைப்பில் அமைந்த கருத்தரங்கு 16.03.2019 அன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய யாழ் பல்கலை சட்டத் துறைத் தலைவரான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் "தற்பொழுது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நடைபெறுவது என்ன? அதனை தமிழர்கள் எவ்வாறு கையாள வேண்டும்?" என்பது தொடர்பில் உரையாற்றினார். அவர் அங்கு தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இடம்பெற்று வரும் ஐ.நா மனிதஉரிமை பேரவையினுடைய கூட்டத்தொடரிலே இலங்கை தொடர்பாக வரக்கூடிய பிரேரணையினுடைய நகல் வடிவம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த நகல் வடிவத்திலே என்ன இருக்கின்றது என்பதனை சொல்வதற்கு முன்பதாக அந்த நகலை முன் வைத்திருப்பது யார் என்பதனை நாங்கள் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. இலங்கை தொடர்பாக இலங்கையினுடைய மனிதஉரிமை பொறுப்புக் கூறல்நிலைமை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமை பேரவையிலே தற்போது செயற்பட்டு வரக்கூடிய கருக்கூட்டம் (core group) இணைந்த ஒரு கூட்டம் இந்த நகல் பிரேரணையை முன் வைத்துள்ளது.
ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரனீகரோ, வட மசிடோனியா ஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட குழுமம் இந்தப் பிரேரணையை தயாரித்துள்ளது. இதுவரை இந்த விடயங்களிலே செயற்பட்டு வந்த ஐக்கிய அமெரிக்க நாடுகள் தற்பொழுது அந்த குழுமத்தில் இல்லை. அதற்கான காரணம் ஜனாதிபதி டிரம்ப் ஐக்கிய அமெரிக்க நாடுகளினுடைய ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையிலிருந்து விலகுவது என்ற தீர்மானத்தை எடுத்தார். இதனால் ஐக்கிய அமெரிக்க நாடுகள் தற்பொழுது ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இல்லை. அதன் காரணமாக அந்த பேரவையிலே முன் வைக்ககூடிய பிரேரணையின் செயற்பாடுகளில் நேரடியாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஈடுபடுவதில்லை. ஆனால் இன்று வந்திருக்கக் கூடிய பிரேரணையிலே ஐக்கிய அமெரிக்க நாடுகளுடைய பங்கும் இருக்கின்றது என்பதனையும் சொல்லத்தான் வேண்டும். நேரடியாக இம்முறை பங்களிப்பு இல்லாவிட்டாலும் பின்புலமாக அவர்கள் இந்த நகல் பிரேரணையிலே தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்பதனை அறியக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளை அண்மையில் சந்தித்த சில மேற்குலக இராஜதந்திரிகள் குறிப்பிட்டதை வைத்துக்கொண்டு பார்க்கும் பொழுது, மேற்குலகத்திலே மனிதஉரிமை விடயங்களிலே தீவிரமாக இலங்கை விவகாரத்தை பார்க்க கூடியவர்களைத் தவிர்த்து இம்முறை நகல் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை அரசாங்கத்தோடு நெருக்கமாக உறவை பாராட்ட விரும்புகின்ற நாடுகளினுடைய தீர்மானங்களின் அடிப்படையிலே தற்போது பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த நகல் பிரேரணையிலே என்ன இருக்கின்றது. முகவுரை பந்திகள் முழுவதுமாக இலங்கை அரசாங்கத்தை பாராட்டுகின்ற தன்மையாக இருக்கின்றன. உதாரணமாக ஏழாம் பந்தி இலங்கையினுடைய ஜனநாயக நிறுவனங்கள் அண்மைக்காலத்திலே மீள தம்மை நிலைநாட்டியுள்ளன குறிப்பாக அரசியலமைப்புக்கு முரணாக இடம்பெற இருந்த ஆட்சி மாற்றத்தை முறியடித்து இலங்கை ஜனநாயக நிறுவனங்கள் மீள தமது வலிமையை நிரூபித்துள்ளன என்பதனைப் பாராட்டுகின்றது. அதற்கு முந்திய பந்திகள் கூட இலங்கையினுடைய ஆட்புல ஒற்றுமை பற்றியும் இலங்கையினுடைய இறைமை பற்றியும் பாராட்டிப் பேசுகின்றன.
எட்டாம் பந்தி காணாமலாக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை பாராட்டி வரவேற்கின்ற ஒரு பந்தி. ஒன்பதாம் பந்தி ஐ.நா அலுவலகர்கள் அண்மைக்காலத்தில் இலங்கை வந்துபோவதற்கு இலங்கை அனுமத்தித்தமைக்கு இலங்கைக்கு நன்றி சொல்லும் பந்தி. பத்தாம் பந்தி அண்மைக்காலத்தில் சில தனியார் காணிகளை விடுவித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவிப்பதற்கும் இது தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதை அவர்களை ஊக்கப்படுத்துகின்றதற்குமான பந்தி. பதினோராம் பந்தி அண்மையில் இழப்பீடு தொடர்பாக ஒரு அலுவலகம் நியமிக்கப்பட்டதற்கு பாராட்டுகின்ற பந்தி. இன்னொன்று உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஒரு ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான எண்ணத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தி அதற்கான நகல் வரைபை உருவாக்கியிருக்கின்றது என்பதனை பாராட்டுகின்ற பந்தி.
அடுத்து விரைவில் பழைய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்படுகின்றமையை வரவேற்கின்ற ஒரு பந்தி. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக வரப்போகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பாதகங்கள் பற்றி அருட்பணி சக்திவேல் இங்கே பேசினார். புதிய சட்டத்தில் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதனை தென்னிலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கூட வலியுறுத்தியிருந்தமை இங்கே கவனிக்கத்தக்கத்து.. இந்த பாராட்டு முகவுரை பந்திகள் முடிந்ததன் பின்னதாக நான்கு பந்திகள் வருகின்றன.
இந்த நான்கு பந்திகளில் முதலாவதில் வருகின்ற வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு செயற்பட்டிருக்கின்றது என ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் ஒரு அறிக்கையை அளிக்கவுள்ளார் என உள்ளது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இந்த அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கடப்பாடு ஐ.நா பேரவையின் ஆணையாளருக்கு விதிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பந்தியில் ஐக்கியநாடுகள் சபை மனிதவுரிமை ஆணையாளரோடு இலங்கை அரசாங்கம் நட்புறவு பாராட்டுவதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றது. மூன்றாவதும் அதே பந்திதான். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் இந்த நாட்டிற்கு வந்த போது அவர்களை அழைத்து தேநீர் குடித்திருந்ததற்கு நன்றி சொல்லுகின்ற பந்தி.
நான்காவது பந்தி தான் இதில் நாங்கள் பார்க்க வேண்டிய பந்தி. இது மீள இலங்கைக்கு இரண்டு வருடங்கள் காலஅவகாசம் கொடுக்கின்ற ஒரு பந்தி. இப்பொழுது நடப்பது நாற்பதாவது கூட்டத்தொடர் ஒருவருடத்திலே மூன்று கூட்டத்தொடர்கள் ஐ.நா மனிதஉரிமை பேரவையிலே நடைபெறும். 2021 ஆம் ஆண்டு மார்ச் மீள இலங்கை என்ன செய்திருக்கின்றது என்று பார்ப்பார்கள். மீளவும் காலஅவகாசம் கொடுக்கின்ற ஒரு தீர்மானம் 2021ஆம் ஆண்டு வந்தாலும் வரலாம் என நான் நினைக்கின்றேன்.
2017 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். சுவிஸ்லாந்தினுடைய தூதுவர் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களை சந்தித்து பேசுகின்ற பொழுது எங்களுடைய மாணவர் ஒருவர் அவரிடத்தில் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார். நீங்கள் இரண்டு வருடகாலம் காலஅவகாசம் கொடுக்கின்றீர்கள் நல்ல விடயம் கொடுங்கள். ஆனால் இரண்டு வருடகாலம் முடிவடைந்ததன் பின்னர் மேலும் கால அவகாசம் கேட்டால் மீள கொடுப்பீர்களா என்ற கேள்வியை கேட்க அதற்கு அவர் பதில் சொல்லமுடியாத இடத்தில் இருந்தார்.
ஆனால் இன்று நடைபெறுகின்றது என்னவென்றால் தங்களுக்கு தோதான தங்களுக்கு தேவையான அரசாங்கம் இருக்கின்ற இடத்து அந்த அரசாங்கத்திற்கு காலஅவகாசம் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்ககூடிய ஒரு செயற்பாடுதான் உள்ளது. காலஅவகாசம் என்பது அடிப்படையிலேயே பிழையானதா என்ற கேள்வி முன்னிறுத்தப்படுகின்றது. காலஅவகாசம் வழங்குவது என்பது பற்றி 2017 ஆம் ஆண்டும் நாங்கள் இதையேதான் சொன்னோம். ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்கு அரசியல் விருப்புள்ள ஒருவரிடம் போய் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் தந்தால் இதை வடிவாக முடித்து தருவீங்களோ என்று கேட்கலாம். அதற்கான அரசியல் விருப்பு அதை செய்வோம் என்ற மனப்பக்குவம் அதை செய்யவேண்டும் என்கின்ற அரசியல் நாகரிகம் நாங்கள் சர்வதேச சமூகத்திடம் எதனை செய்வோம் என்று சொன்னோமோ அதை செய்வோம் என்கிற அரசியல் நிலைப்பாடு உள்ளவர்களிடம் போய் காலஅவகாசம் வேண்டுமா? என்று கேட்டு காலஅவகாசத்தை கொடுக்கலாம்.
இதிலே முக்கிய பண்பு காலஅவகாசம் கேட்பது அவர்களாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் எங்களுக்கு காலஅவகாசம் தா என்று கேட்க வேண்டும். கேட்காதவர்களுக்கு காலஅவகாசம் கொடுக்க முடியாது. க.பொ.த.உயர்தரத்தில் இன்னொரு தடவை பரீட்சை எழுதப்போகின்றியோ என்று கேட்டு எழுத விரும்பாதவனுக்கும் போய் இல்லையில்லை எழுது உனக்காக நான் விண்ணப்பம் போடுகின்றேன் என்று போடஇயலாது. இங்கு நடப்பது இதுதான். ஏனென்றால் இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் வந்ததன் பின்னராக உடனடியாக அந்த ஜனாதிபதி அந்த தீர்மானத்திலிருந்து தன்னை வேறுபடுத்திகாட்டியிருந்தார். அந்த தீர்மானத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார். பிரதமமந்திரி ரணில்விக்ரமசிங்க குறிப்பாக வெளிநாட்டு நீதிபதிகளையும் வெளிநாட்டு வழக்கு தொடுநர்களையும் உள்ளடக்கி அமைக்க கூடிய ஒரு நீதிபொறிமுறைக்கு தான் எதிரானவர் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியும் அந்த நிலைப்பாட்டை எடுத்தது. மகிந்தராஜபக்ஸவும் அந்த நிலைப்பாட்டை எடுத்தார். இங்கே யார் காலஅவகாசத்தைக் கேட்பது, யார் காலஅவகாசத்தை வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது.
காலஅவகாசத்தை வழங்க வேண்டிய தேவை ஏன் வருகின்றது என்பதனை சற்று வெளியில் வந்து சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஐ.நா மனிதஉரிமை பேரவையாக இருக்கலாம், ஐ.நா மனிதவுரிமை ஆணையாளருடைய அலுவலகமாக இருக்கலாம் அரசியல் ரீதியாக நாங்கள் பார்க்கின்ற பொழுது இவை ஒரு தாராளவாத அரசியல் ஒழுங்கிற்குள் வரக்கூடிய அமைப்புக்கள். அவை தனிமனித உரிமைகளை பார்ப்பது, தனிமனித உரிமைமீறல்கள் நடைபெற்றிருக்கின்றதா என்பதை பார்ப்பது, அதற்கான ஆணையகங்கள் அமைப்பது, அதற்கான விசாரணை அறிக்கைகளை கோருவது என்பவற்றுக்கு அப்பால் செயற்பட முடியாத ஒரு தன்மையைக் கொண்டவை. அதாவது இனப்படுகொலை போன்ற அடிப்படையான கட்டமைப்புச் சார்ந்த அநியாயங்கள் இடம்பெற்றிருக்க கூடிய சூழலிலே அவற்றை மறுத்து அவற்றை தனிநபர் உரிமைசார் பிரச்சனைகளாக மீள்வாசிப்பு செய்யக்கூடிய ஒரு தாராண்மைவாத உலக ஒழுங்கிற்குரியவை இந்த அமைப்புக்கள்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளாக இருக்கலாம் ஐக்கிய இராச்சியமாக இருக்கலாம் கனடாவாக இருக்கலாம் ஜேர்மனியாக இருக்கலாம் அவையை பொறுத்தவரைக்கும் இந்த அரசியல் ஒழுங்கிற்குள் இலங்கையையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே தமிழர் இனப்படுகொலைக்காக விசாரணை வேண்டும் என்று சொல்லும் போது அது அவர்களை பொறுத்தவரைக்கும் தராளவாத அரசியல் ஒழுங்கிற்கு முரணாக இருக்கும். தமிழர்கள் காலஅவகாசம் வேண்டாம் என்று சொல்லும்போதோ அல்லது எங்களுக்குத் தேவை இனப்படுகொலை விசாரணை என்று சொல்லும் போதோ அல்லது இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குத்தான் போகவேண்டும் என்று சொல்லும் போதோ அவர்களது தாராளவாத உலக அரசியல் ஒழுங்கை ஒருக்கால் அசைத்து பார்க்கிறோம். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த இடத்தில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத் தலைமைத்துவம் என்ன செய்கின்றது? அவர்களுக்கும் இந்த தாராளவாத அரசியல் ஒழுங்கிற்குள் செயற்படத் தான் தெரியும். அதற்கு வெளியில் செயற்படத் தெரியாது. ஏனென்றால் இவர்களுடைய முதலாளிகளும் அவர்கள்தான். இந்த ஒழுங்கிற்கு வெளியே எங்களுடைய பாராளுமன்ற தலைமைத்துவம் செயற்படுமாக இருந்தால் அந்த பாராளுமன்ற தலைமைத்துவத்தை கணக்கில் எடுக்கமாட்டோம் என்று அவர்கள் சொல்லுகின்றார்கள். எங்களுடைய பாராளுமன்ற தலைமைத்துவங்களும் இந்த ஒழுங்கிற்குள் நாங்கள் வேலை செய்வதுதான் பொருத்தமானது என்று சிந்திக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் வரைக்கும் காலஅவகாசத்தைக் கோருகின்ற பொழுது அந்த காலஅவகாசத்தைக் கொடுக்கலாம் என்று கையுயர்த்துகின்ற எங்களுடைய பாராளுமன்றத் தலைமைத்துவத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாது.
ஏன், தேர்தல்காலத்தில் தமிழ் மக்களுக்கு சொல்லப் படுகின்ற செய்தியும் அதுதானே. அமெரிக்கா எங்களோட இருக்கின்றது. இந்தியா எங்களோடு இருக்கின்றது. இராஜதந்திரத்தை கையாள தெரிந்த தரப்பிற்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சொல்ல வருவதென்ன? தமிழர்கள் இந்த தாராளவாத அரசியல் ஒழுக்கிற்குள் நின்றுகொண்டு அந்த ஒழுங்கை சிதைக்காத வண்ணம் ஒழுங்கை குழப்பாத வண்ணம் எங்களுடைய கோரிக்கைகளை முன்வையுங்கள். நீங்கள் இனப்படுகொலை என்று பேசுவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று பேசுவதெல்லாம் இந்த ஒழுங்கை குழப்புவதாக அமையும் என்பதை சொல்லாமல் சொல்வதாக தான் இது இருக்கின்றது. தமிழர்களுடைய அரசியல் போக்கிலும் அரசியல் கலாசாரத்திலும் அண்மைக்காலமாக இது மிக உயர்ந்த தன்மையாக இருக்கின்றது. எதைப்பார்த்தாலும் நாங்கள் இராஜதந்திரமாக அரசியலை நகர்த்த வேண்டும். இந்த இராஜதந்திரம் என்ற பெயரானது உண்மையில் தாராளவாத அரசியல் ஒழுங்கிற்குள் நின்று கொண்டு உங்களுடைய அரசியல் கோரிக்கைகளை முன் வைக்க பழகுங்கள் என்பதுதான். ஆகவே நாங்கள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனையை விளங்கிக்கொண்டு அந்த பிரச்சனைக்கு எது தீர்வாக அமையும் என்று சுயமாக சிந்தித்து எங்களுடைய கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று சொல்லுகின்றார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்தான் வேண்டும் என்று நாங்கள் சொல்லுகின்ற பொழுது என்ன நடக்கின்றது? எங்களுக்கு சர்வதேச சட்டம் விளங்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
ஐக்கிய நாடுகளினுடைய பாதுகாப்புச் சபை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தினால்த்தான் விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு போகும். அப்படியிருக்க நீங்கள் சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தை கோருவது எவ்வாறு பொருத்தம் என்று கேட்கின்றார்கள். இங்கு யதார்த்தம் என்ற ஒரு ஆயுதம் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்கு போகுமாறு கோரி ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு இந்த விவகாரத்தை நாங்கள் கொண்டுபோனால் சீனாவோ, ரஷ்யாவோ இதனை வீற்றோ செய்துவிடும். ஆகவே நீங்கள் எவ்வாறு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுபோகப்போகின்றீர்கள் என்று அவர்கள் சட்டாம்பித்தனம் பேசுகின்றார்கள். ஆனால் இதற்கு பதிலாகஐக்கிய நாடுகள் மனிதஉரிமைச்சபையில் இவ்வளவு காலமும்இந்த தாராளவாத அரசியல் ஒழுங்கிற்குள் நின்றதன் பிரயோசனமாக எங்களுக்கு கிடைத்தது என்ன என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும். இந்த இராஜதந்திர அரசியல்தான் எங்களுடைய விடிவுக்கான ஆரம்பமும் முடிவுப்புள்ளியும் என்று சொல்வதன் மூலமாக எங்களை அந்த ஒழுங்கிற்குள் வைத்திருக்கின்ற முயற்சியிலிருந்து நாங்கள் வெளியே வராவிட்டால் எங்களுக்கு மீள்ச்சியில்லை. இன்னொரு வார்த்தையில் சொன்னால் இந்த மேற்கத்தேய நாடுகளுடைய தாராளவாதம் எமக்குரிய தீர்வைத் தரும் என்ற பார்வையிலிருந்து நாங்கள் விலகி சுயமாக சிந்திக்கத் தொடங்காவிட்டால் எங்களுக்கு மீள்ச்சியில்லை.
ஆகவே ஒவ்வொரு ஜெனிவா கூட்டதொடர் வருகின்ற பொழுதும் ஜெனிவாவுக்கு காவடி எடுப்பதும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் தூதுவர்களை அங்கே சந்திப்பதும் சுவிஸ் தூதரகத்துக்கு போவதும் யூகே தூதரகத்துக்கு போவதும் கனடா தூதரகத்துக்கு போவதும் அதனை மீள மீளச் செய்வதும் எங்களுக்கு தீர்வுகளை தரும் என நாங்கள் யோசித்தோமாக இருந்தால் அது நடக்கப்போவதில்லை. ஏனென்றால் அந்த அரசியல் ஒழுங்கை அந்த அரசியல் ஒழுங்கிற்குள் நின்றுகொண்டு மாற்ற முடியாது. அதற்காக நீங்கள் போகவேண்டாம் என்று சொல்லவில்லை. 2014 ஆம் ஆண்டு நானும் போனேன். அந்த நேரத்திலே தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எழுதுகின்றவர்களோடு கதைத்து வந்த படிப்பினையிலிருந்து நான் இந்த விடயத்தை சொல்லுகின்றேன். அந்த அரசியல் ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தாதுவிட்டால் உங்களை அவர்கள் திரும்பி பார்க்க போவதில்லை. உங்களை பயன்படுத்துவார்கள். இதை நாங்கள் எவ்வாறு புத்திசாதுரியமாக செய்யப்போகின்றோம் என்ற கேள்வி இருக்கின்றது. சர்வதேசத்தை நோக்கிய காத்திருப்பு அல்லது தாராளவாத அரசியல் ஒழுங்கு எங்களுக்கு ஏதாவது தீர்வை தரும் என்ற காத்திருப்பு என்பது பிழை என்று நான் சொல்லுகின்றேன். அதேநேரம் தாராளவாத அரசியல் ஒழுங்குக்குரியவர்களோடு நாங்கள் பேசவேண்டாம் அவர்களை ஒதுக்கி நடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவர்களை தவிர்த்துவிட்டு இந்தப் பிரச்சனையை நாங்கள்பார்க்கலாம் என்றும் நான் சொல்லவில்லை.
மாமனிதர் சிவராம் அவர்கள் எவ்வாறு நாம் அந்த அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். எங்களுடைய ஒழுங்கிலிருந்து கொண்டு எங்களுடைய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு வரும் என்று எங்களுடைய சுயஅறிவிலிருந்து அந்த சுயஅறிவின் பாற்பட்டு நாங்கள் வைக்கின்ற தீர்வுகளின் அடிப்படையிலிருந்து அவர்களோடு பேசுங்கள். அதை விடுத்து ஒரு ஒழுங்கிற்குள் நின்று கொண்டு அந்த ஒழுங்குக்குப் பொருந்துகின்ற தீர்வுகள் எது என்று நாங்கள் சிந்தித்து செயற்படுகின்ற பொழுது தீர்வுகள் ஒருபோதும் வராது. அந்த இடத்திலிருந்துதான் இந்த நகல் பிரேரணையை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கையை விசாரிப்பதற்கான காலம் கனிந்துவரவில்லை என்பது அரசியல் ரீதியாக பார்த்தால் உண்மை. அது வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றதா என்று பார்த்தால் வெளிப்படையாக சொல்வதாக இருந்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழர்களுடைய கட்டமைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான அறிகுறியாவது மனிதஉரிமை பேரவையில் இருக்குமாக இருந்தால் அதுவுமில்லை. அப்படியாக இரண்டுமே பிரயோசனம் இல்லை என்று இருக்குமாக இருந்தால் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் முன்வைக்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். தீர்வுகள் எட்டப்படக்கூடியனவா என்பதை மட்டும் பார்க்கப்போகிறோமா அல்லது கோரிக்கை ஏன் முன்வைக்கப்படுகின்றது என்ற விடயத்தை நாங்கள் வலிதாக எடுத்தாளப் போகின்றோமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இந்த விடயம் கொண்டு செல்லவேண்டும் என்று நாங்கள் சொல்வதற்கான காரணம் உண்மையாக பொறுப்புக்கூறல். அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடைமுறை மூலமாகத் தான் சாத்தியமாகும். ஆகவே தமிழர்களை தயவு செய்து பேக்காட்ட வேண்டாம். மனிதஉரிமை பேரவையூடாக பேரவையினுடைய செயற்பாடுகள் மூலமாக தீர்மானங்கள் மூலமாக பொறுப்புக் கூறல் நடைபெறும் என்று தயவுசெய்து எங்கள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டாம். எங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரியும். அதற்கு எப்படி நியாயாதிக்கம் வரும் என்றும் தெரியும். அதற்குரிய பாதுகாப்பு பேரவையின் பங்கு என்னவென்றெல்லாம் தெரியும். எதுவும் தெரியாமல் நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கோரவில்லை. ஆனால் நாங்கள் கோருவதற்கான காரணம் என்ன? எங்களுக்கும் சர்வதேச சட்டம் தெரியும் எங்களுக்கும் சர்வதேச ஒழுங்கு தெரியும். உண்மையில் நீங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குகின்ற பொழுது அதனுடைய நோக்கங்களாக நினைத்தவை எய்தப்படவேண்டும் என்று கருதினால் இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பாருங்கள். யாருடைய வழக்குகள் அங்கு கூட இருக்கின்றன? ஆப்ரிக்க நாடுகளினுடைய வழக்குகள் தான் கூட இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி ஆபிரிக்க நாட்டவர்கள் “சர்வதேச நீதிமன்றமா ஆபிரிக்க குற்றவியல் நீதிமன்றமா” என கேட்கின்றனர். ஏன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் செய்த குற்றங்கள் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. ஆசியாவில் இலங்கையில், மியான்மாரில் நடைபெற்ற குற்றங்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை என ஆபிரிக்க நாடுகள் கேட்கின்றன. ஆகவே உலகெங்கிலும் எங்கு நடந்தாலும் தோல் நிறத்தை பார்க்காது குற்றங்கள் குற்றங்களாக பார்க்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டுமாக இருந்தால் அந்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் ரீதியாக முக்கியத்துவமானது.
சர்வதேச உலக ஒழுங்கை தட்டிப்பார்க்கின்ற கேள்வி அது. தராகி சிவராம் அவர்கள் சொல்லுவார் உங்களுடைய போராட்டங்களை நீங்கள் நடாத்துகின்ற பொழுது வெறுமனே உங்களுடைய பிரச்சனை என்று பார்க்காதீர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அவர்கள் சார்பில் முன்வைக்கப்படுகின்ற குரலாக அதனோடு இணைந்த ஒரு சகோதரத்துவ குரலாக உங்களுடைய போராட்டத்தை முன்வையுங்கள். உங்கள் கோரிக்கைகளை முன் வையுங்கள் என்று அவர் சொல்லுகின்றார். இந்த இடத்திலே நாங்கள் ஆசியாவிலே நடக்கக் கூடிய குற்றங்கள், இனப்படுகொலைகள் மறைக்கப்படக்கூடாது அவையும் விசாரிக்கப்பட வேண்டும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் சார்பு, அல்லது ரஸ்யா சார்பு, அல்லது சீன சார்பு என்ற அடிப்படையில் கோரிக்கைகள் இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்ளாத மாதிரியான ஒரு கோரிக்கையாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையுடைய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் எங்களுக்கு வேண்டும். அந்த கோரிக்கையைத் தான் நாங்கள் முன் வைப்போம். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கோருபவர்கள் சர்வதேச சட்டமோ சர்வதேச அரசியலோ விளங்கிக் கொள்ளாதவர்கள் அல்ல. தமிழர்களுடைய அரசியல் கோரிக்கைகள் எங்களுடைய சுயஅனுபவத்தின் பாற்பட்டு வைக்கப்படல் வேண்டும். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான தீர்வு என்ன அடிப்படையில் வர வேண்டும் என சுய விளங்கிக்கொள்ளலிருந்து வைக்கப்படும் கோரிக்கையாக அவை காணப்படுகிறதா என் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே அடுத்த முறை நீங்கள் சர்வதேச குற்றவில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் என்ன என்று கேட்போரிடம் ஜெனிவாவில் இலங்கை விவகாரத்தை தொடர்ந்து காலஅவகாசம் கொடுத்து வைப்பதில் இருக்கக்கூடிய நன்மை என்ன என்று மறுதலிப்பாகக் கேளுங்கள்.
இறுதியாக ஒருவிடயத்தை சொல்லுகின்றேன். இது தொடர்பாக சில சலசலப்புக்கள் இருப்பதனால் இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனிதஉரிமை ஆணையாளர் அவர்களுக்கு நாங்கள் சிவில் அமைப்புக்கள் இணைந்து (தமிழ்சிவில் சமூக அமையம், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்) உட்பட பல்வேறு அமைப்புக்கள் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தன. அதிலே எங்களுடைய கோரிக்கையில் முதலாவது கோரிக்கையாக ஐக்கியநாடுகள் சபை மனிதஉரிமை ஆணையாளரானவர் இலங்கையில் தொடர்ந்து பொறுப்புக்கூறல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவை முதன் முதலாக இந்த வெள்ளிக்கிழமை அறிக்கையில் சொல்லப்பட வேண்டும் என்று சொன்னோம்.
சர்வதேச சட்டத்திலே ஒரு ஏற்பாடு இருக்கின்றது. சர்வதேசம் ஒரு விடயத்திற்கான பொறுப்புக்கூறல் உள்ளூரிலே நடைபெற முடியாது என திருப்திப்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆகவே மனிதஉரிமை ஆணையாளர் அந்த விடயத்தை அறிக்கையிடல் வேண்டும். அதைத் தொடர்ந்து நீங்கள் இதை உரிய அரங்கிற்கு அனுப்ப வேண்டும். அது ஐ.நா பொதுச்சபையாக இருக்கலாம், அல்லது பாதுகாப்புச்சபையாக இருக்கலாம் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கலாம். இரண்டாவதாக மனிதஉரிமை பேரவையிலே இலங்கை விவகாரம் இருக்க வேண்டுமா அல்லது ஜெனிவாவிலே இலங்கை விவகாரத்தை மூடவேண்டுமா? இந்த இடத்திலே நாங்கள் கேட்கிறோம், இலங்கை தொடர்பான விடயம் வருகின்றபொழுது மனிதஉரிமை பேரவையினால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன?
நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டு வந்தோம். 2013 ஆம், 2014 ஆம் ஆண்டிலிருந்தே சொல்லிக்கொண்டு வந்திருக்கின்றோம். மனிதஉரிமை பேரவை வெறும் விசாரணை அறிக்கைகளை மட்டும் செய்யக்கூடிய ஒரு பேரவை என்று. அது 2014 ஆம் ஆண்டு தீர்மானத்திலே மனிதஉரிமை ஆணையாளர் இங்கே என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணையை நடாத்தி அறிக்கை தரவேண்டும் எனக் கூறப்பட்டது. அந்த அறிக்கைக்குப் பின்னர் சில முன்மொழிவுகள் வைக்கப்பட்டு அந்த முன்மொழிவுகளை வைத்துக்கொண்டு 2015 ஆம் ஆண்டு தீர்மானம் வந்தது. அதன் பிறகு நாங்கள் தொடர்ந்து காலஅவகாசம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அதற்கு மேலாக உண்மையாக மனிதஉரிமைபேரவையியால் என்ன செய்யமுடியும்? ஏனென்றால் மனிதஉரிமைபேரவைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுபோவதற்கான அருகதை இல்லை. அந்த இடத்தில் தான் நாங்கள் சொல்லுகின்றோம் இலங்கையில் ஒரு பிடிப்பை வைத்திருப்பதற்காக சில விடயங்கள் தேவை. குறிப்பாக இலங்கை தொடர்பான ஒரு விசேட அறிக்கையாளர் எங்களுக்குத் தேவை என்று சொல்லுகின்றோம். இலங்கையில் நடைபெறுவது என்ன என்பது தொடர்பாக இலங்கை மனிதஉரிமை பேரவைக்கும் பொதுச்சபைக்கும் அறிக்கையிடுவதற்காக விசேடஅறிக்கையாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.
மியான்மாருக்கு செய்திருந்தார்கள், சிரியாக்கு செய்திருந்தார்கள். இவ்வாறாக யுத்தங்கள் நிகழ்கின்ற ஏனைய நாடுகளுக்குச் செய்திருந்தார்கள். ஏன் இலங்கைக்கு செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். அதை தவிர ஐக்கிய நாடுகள் சபைகளினுடைய மனிதவுரிமை ஆணையாளருக்கு வடக்கு கிழக்கில் நிரந்தரமான ஒரு அலுவலகம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இலங்கை அரசாங்கமானது ஏற்கனவே செய்த நடவடிக்கை உண்மையான நடவடிக்கை இல்லை. இந்த இரண்டு விடயங்களையும் உள்ளடக்கி இலங்கை அரசாங்கம் இன்னும் குறிப்பிட்ட காலத்தை கேட்குமாக இருந்தால் கொடுக்கலாமே தவிர வேறு அடிப்படையில் கொடுக்கேலாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தனாங்கள். அதற்கு காரணம் மனிதஉரிமைபேரவையிலும் முழுமையாக இலங்கை விவகாரம் மூடப்படுமாக இருந்தால் இந்த விவகாரம் பேசுவதற்கான வெளி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. இந்த அச்சம் உண்மையில் சர்வதேசத்தை பார்த்து காத்திருக்கின்ற மனநிலையிலிருந்து வருவதுதான் அதிலிருந்து உடனடியாக வெளியில் வரமுடியாத நிலை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது மாறுகின்ற சூழல்களிலே இப்படியான கோரிக்கைகளும் மாறலாம் என்று நினைக்கின்றேன்.
இறுதியாக காணாமல்ஆக்கப்பட்ட மக்களுடைய விவகாரம் தொடர்பாக ஒரு வசனத்தை மட்டும் சொல்லிவிட்டு இலங்கை அரசாங்கம் செய்கின்ற விடயத்தை சர்வதேசம் பாராட்டுவதில் இருக்கக்கூடிய மிகவும் ஒரு மலினமான அணுகுமுறையை விமர்சிக்கலாம் என நினைக்கின்றேன். சென்றவாரம் திங்கட்கிழமை 1996 ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 24 பேரில் மூவருடைய மனுக்கள் விசாரணைக்காக மேல்நீதிமன்றத்திற்கு வந்தது. மேல்நீதிமன்றத்திற்கு வந்த இடத்திலே ஒரு கட்டத்திலே அரச தரப்பினர் பூர்வாங்க ஆட்சேபனை எடுக்கின்றார்கள். நீங்கள் 21 வருடம் பிந்தி வருகின்றீர்கள் என்றார்கள். நாங்கள் சொன்னோம், 2003 ஆம் ஆண்டு சட்டத்தரணி யோகேஸ்வரன் அவர்கள் இது தொடர்பான வழக்குகளை போட்டார்.அந்த வழக்குகளிலே அப்பொழுது லெப்டினண்ட் கேணலாக இருந்து, காலாட்படை பணிப்பாளர் நாயகமாக இருந்து பின்னதாக பதவியுயர்த்தப்பட்டுள்ள ஹெப்பட்டிக்கொலாவா தான் இதற்கு பொறுப்பானவர் என்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் கண்டது. பின்னதாக மீள உயர்நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு வர இருந்த காலப்பகுதியிலே கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலே இந்த வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அந்த நேரம் அவர்கள் சொன்ன வாதம் அரச சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து போவதற்கு பாதுகாப்பில்லை என்பதாகும். அதாவது 1996ஆம் ஆண்டிலிருந்து இராணுவக் கட்டுப்பாடிலிருந்த யாழ்ப்பாணத்திலே 2007ஆம் ஆண்டு அரச சட்டத்தரணிகள் தோன்றி வாதிப்பதற்கு பாதுகாப்பில்லை என்று அரச சட்டத்தரணிகள் சொல்லியிருந்தார்கள். இப்பொழுது எங்களை வந்து கேட்கிறார்கள் 21 வருடங்களுக்குப்பிறகு வழக்கு ஏன் வைக்கிறீர்கள் என்று. ஒரு கட்டத்தில் நீதிபதி கேட்டார் நீங்கள் எதற்காக இந்த வழக்கை போட்டிருக்கின்றீர்கள் என்று. நான் சொன்னேன் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளோடை நீங்கள் கதைத்தீர்கள் என்றால் தங்களுடைய பிள்ளைகள் உயிரோடு இருக்கின்றார்களா, இல்லையா என்ற ஏக்கத்திலேயே பல வருடங்கள் பலதசாப்தங்கள் அவர்கள் வாழுகின்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும். அதற்கு முதல் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா, இல்லையா என்ற கேள்விக்கு விடை வேண்டும்.
சர்வதேச நீதிமன்றத்திலே சேர்பியாக்கும் குரோசியாவுக்கும் நடந்த யுத்தத்தில் சேர்பியாவால் செய்யப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஒரு வழக்கிலே சென்ற வருடம் பேராசிரியர் பிலிப் சான்ஸ் எடுத்துக்கொண்ட ஒரு நிலைப்பாடு முக்கியமானது. நீண்டகாலமாக காணாமலாக்கப்பட்ட மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு முன்வைக்காமல் இருப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உளவளப்பாதிப்பு என்பது இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஒரு அங்கம் என்று அவர் வாதிடுகின்றார். அதாவது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தொடர்ந்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் இருப்பதே இனப்படுகொலைக்கான அடிப்படையில் ஒன்று என் வாதிடுகின்றார். நாங்கள் இதை சொல்ல உங்களுக்கு முடிவுதான் வேண்டுமென்றால் நீங்கள் ஏன் இறப்புச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்ககூடாது என்று பிரதிமன்றாடியார் நாயகம் கேட்டார்.
ஜெனிவாவில் என்ன சொல்லப்படுகிறது? காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினூடாக காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்கப் போகின்றோம் என்று. சர்வதேசம் இதனைப் பாராட்டுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சட்ட விவகாரத்திற்கு பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளூர்நீதிமன்றங்களில் என்ன சொல்லுகின்றது? இறப்புச்சான்றிதழுக்கு விண்ணப்பி, நாங்கள் தேடி கண்டுபிடித்து தரமுடியாது என்று. இந்த இரட்டைத் தனத்திற்கு காலஅவகாசம் கொடுப்பது என்பது மிக அடிப்படையாக முரணானது. அடிப்படையாக அறம் அற்றது. இந்த காலஅவகாசத்திற்கு நிச்சயமாக கையுயர்த்துபவர்கள் அரசியல் அறம் அற்றவர்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
சர்வதேசத்தால் பாராட்டப்படும் அந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் சட்டவிவகாரத்திற்கு பொறுப்பாக இருந்த பணிப்பாளரும் ஒரு உறுப்பினர்தான். சிலர் நல்லவர்கள் அங்கு இருக்கலாம். உதாரணமாக அதனுடைய தலைவர் சாலிய பீரிஸ். இப்படியாக காலதாமதமாக மனுக்கள் நீதிமன்றத்திற்கு வருவற்கு சட்டமாஅதிபர் திணைக்களம் தடை போடக்கூடாது என்று அவருடைய இடைக்கால அறிக்கையிலே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லிறதை கேட்பார் இல்லை.
ஓ.எம்.பி அரசாங்கத்தினுடைய நிறுவனம் சட்டமாஅதிபர் திணைக்களம் அரசாங்கத்தினுடைய நிறுவனம். ஆனால் சட்டமாஅதிபர் திணைக்களம் ஓ.எம்.பி சொல்லுவதை கேட்காது. சர்வதேசத்திற்கு கணக்கு காட்டுவதற்கு மட்டும்தான் ஓ.எம்.பி. கணக்கு காட்டப்பட்டுவிட்டது என்பதற்கு இந்த பிரேரணை ஒரு உதாரணம். இந்த பாராட்டுக்களுக்கு மட்டுமாகவே உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் இவை. இழப்பீட்டுச் சட்டத்திற்காக ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றதாம். இழப்பீட்டுச்சட்டத்தின் மூலமாக வழங்கக்கூடிய இழப்பீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்தால் தான் இழப்பீடு வழங்க முடியுமாம். இதனால் இழப்பீடு சட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கின்ற அலுவலகத்திற்கு சுயாதீனம் இல்லை என்று தென்னிலங்கை சிவில் சமூக ஆர்வலர்கள் சொல்லுகிறார்கள் சொல்லுகிறார்கள்.
நான் இந்த இடத்தில் தென்னிலங்கை சிவில் சமூகத்தவர்களையும் குறை சொல்லுகின்றேன். இதில் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் எங்களுடைய பாராளுமன்ற தலைமைத்துவத்திற்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்று தாராளவாத அரசியல் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை, இன்னொன்று சிறிலங்காவின் அரசியல் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை. இந்த இரண்டும் இணைந்ததுதான் தமிழ்தேசியக் கூட்டமைப்பினுடையதும் கொழும்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்களினுடைய மனநிலையின் ஒருங்கமைப்பு என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் சர்வதேச விசாரணையை கேட்டால் நாங்கள் இலங்கையையே விட்டுக்கொடுத்த மாதிரி, இலங்கையை காட்டிகொடுத்த மாதிரி என்ற உணர்வு. இது தான் பிரச்சனை. நாங்கள் இந்த மனநிலையிலிருந்து வெளி வரவேண்டும். வெளி வரக்கூடிய அரசியல் பண்புநிலை மாற்றம் வேண்டும்.
சிறிலங்காவினுடைய அரசியல் ஒழுங்கை தட்டிப் பார்க்கக்கூடாது, அது பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று இலங்கை அரசாங்கமும் சிவில் சமூகத்தவர்களும் சொல்லுகிறார்கள். இதை மேற்குலகமும் சொல்லுகிறது. இன்னொரு பக்கம் தாராள வாத பௌத்த ஒழுங்கை தட்டிப்பார்க்க கூடாது என்று சிங்கள பௌத்த சிந்தனையாளர்கள் சொல்லுகிறார்கள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து நிற்கின்றன. இந்த இரண்டு அரசியல் ஒழுங்குகளுக்கும் இடையில் இலக்குகள் ஒற்றுமையாக இருக்கின்றன. இந்த ஒற்றுமைக்குள் நாங்கள் ஜெனிவாவில் வைத்து பழிவாங்கப்படுகின்றோம், பலியிடப்படுகின்றோம். அந்த விளக்கம்,அந்த விடயம் எங்களுக்கு விளங்கினால் நாங்கள் மாற்றுத்தீர்வுகளை நோக்கி போவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
நிமிர்வு சித்திரை 2019 இதழ்
Post a Comment