நச்சுக் குழுமம்
எந்த நிறுவனங்கள் இரசாயன பூச்சிகொல்லிகளையும் களைகொல்லிகளையும் உற்பத்தி செய்கின்றனவோ அதே நிறுவனங்களே அவ்விரசாயனங்களால் எமக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளையும் உற்பத்தி செய்கின்றன. உணவுற்பத்திக்கு உதவும் இரசாயன உற்பத்தி நிறுவனங்களுக்கும் மருத்துவ நிறுவனங்களுக்கும் உள்ள இறுக்கமான பிணைப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த பிரபல சூழலியலாளர் வந்தனா சிவா. இந்த நிறுவனங்களின் கூட்டத்தை “நச்சுக் குழுமம்” (Poison Cartel) என்று அழைக்கிறார்.
இந்தக் குழுமத்திலுள்ள நிறுவனங்களே எமது பூச்சிகளையும், வண்ணாத்திகளையும், தேனீக்களையும் முழு அழிவுக்கு தள்ளுகின்ற நச்சு இரசாயனங்களைக் கண்டுபிடித்தன. இந்நிறுவனங்களே எமது தாவரங்களின் பன்முகத்தன்மையை (biodiversity) அழித்தும் எமக்கு புற்றுநோய் சிறுநீரகநோய் என்பவற்றை உண்டாக்கும் களைபொசேற் (Glyphosate) களைநாசினிகளை கண்டுபிடித்தன. இந்த நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் இரசாயனங்களை விற்று பெருலாபம் ஈட்டும் அதே வேளை, அவ்விரசாயனங்களால் ஏற்படும் நோய்களினூடாகவும் பெருவருவாய்களை ஈட்டுகின்றன. எவ்வாறெனில் இந்நிறுவனங்களே புற்றுநோய் போன்ற நோய்களுக்கு பரிகார மருந்துகளையும் தயாரிக்கின்றன.
இதனால் தான் இந்த நச்சுக் குழுமத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். இந்தப் பூமியின் விடுதலைக்கும் அதன் ஆரோக்கியத்துக்கும் நாம் விடுதலை பெற வேண்டும். எல்லா மக்களின் விடுதலைக்கும் நாம் நோய்களிலிருந்து விடுதலைபெறவும் இந்த நச்சுக் குழுமத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். நச்சுக்குழுமத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.
இரண்டு உலக யுத்தங்களின் போதும் வெடிமருந்துகளை உற்பத்தி செய்த டூபோன்ற் (Dupont), முன்னர் ஐஜி பார்பென் (IG Farben) என்ற பெயரில் நாசிகளுடன் வேலை செய்த பாயர் (Bayer) ஆகியவை இந்த குழுமத்தின் அங்கத்தவர்கள். அப்பாவி யூதமக்களை கூண்டுகளில் அடைத்து கொன்ற சைக்லோன் பி (Zyklon B) போன்ற நச்சுவாயுக்களை உற்பத்தி செய்தவர்கள் இவர்கள். வியற்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க இராணுவத்தால் பயன் படுத்தப்பட்ட ஏஜன்ற் ஒரேஞ் (Agent Orange) எனும் மரங்கொல்லி மருந்தை உற்பத்தி செய்த மொன்சான்ரோ (Monsanto) நிறுவனமும் இதன் அங்கத்தவர்.
மொன்சான்ரோ பாயருடன் இணைந்து விட்டது; சைஜன்ரா (Sygenta) கெம்சைனா (ChemChina) உடன் இணைந்து விட்டது. டௌ கெமிக்கல்ஸ் (Dow Chemicals) டூபோன்ற்றுடன் இணைந்து விட்டது. ஆகமொத்தம் இந்து மூன்று இணைநிறுவனங்களும் சேர்ந்து உலகத்தின் விதை மற்றும் பூச்சிகொல்லிச் சந்தையின் 60 சதவிகிதத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்துள்ளன.
உலகமக்கள் எல்லோரும் தாம் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உலக மக்கட்தொகையில் ஒரு விகிதத்தினரே பில்லியனர்களாகவும் ற்ரில்லியனர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் இளையவர்கள் “எமது எதிர்காலத்தை எமது கைகளில் எடுக்கவேண்டும்” என எழுந்து கொண்டிருக்கிறார்கள்.
உணவு எல்லாருக்குமாகப் படைக்கப்பட்டது. நாம் எல்லோரும் உணவால் பிணைக்கப்பட்டுள்ளோம். ஆனால் ஒரு பில்லயன் மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். உணவு சத்தளிப்பதாகவும் ஆரோக்கயம் தருவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் 75 விகிதமான நோய்கள், நீடித்த வியாதிகள், புற்று நோய்கள், மூளை வியாதிகள், உடற்பருமன் பிரச்சனைகள் எல்லாமே உணவு சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. இவை யாவும் இந்த நஞ்சுகளையும், இரசாயனங்களையும், பூச்சி கொல்லிகளையும் தொடர்புடையனவாகவே உள்ளன. இவையே எமது வண்ணாத்திகளையும் தேனீக்களையும் மீளமுடியா அழிவுக்குத் தள்ளுகின்றன. சூழல் மாசடைவை ஏற்படுத்துகின்றன.
இந்தப் பூமித்தாயைக் குணப்படுத்தும் கடமை எமது கைகளில் உள்ளது. எமது உடல்களை குணப்படுத்துவது எமது கைகளில் உள்ளது. செத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் கடமை எமது கைகளில் உள்ளது. இதனாற்தான் நஞ்சற்ற விவசாயத்துக்கான செயற்பாட்டை நாம் ஆரம்பித்துள்ளோம்.
ஏழ்மை என்பது பணமின்மை என்பதை விடுத்து ஏழ்மை என்பது சமூகத்தை முன்னேற்றுவதற்கான வழியின்மை என்ற உண்மையை உணரும் சமூகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் கைகோர்ப்பதன் மூலம் நஞ்சற்ற விவசாக் கூட்டுச் சமூகங்களை உருவாக்குவோம். இதன் மூலம் எல்லோருக்கும் நல்ல உணவு கிடைக்கச் செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல உணவு கிடைக்கச் செய்வோம். எமது வண்ணாத்திகளுக்கு நல்ல உணவு கிடைக்கச் செய்வோம். அவை கொல்லப் படாமலிருக்கச் செய்வோம்.
நன்றி: Florian Thomas (Brut, C40 Cities)
நிமிர்வு சித்திரை 2019 இதழ்
Post a Comment